search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95494"

    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 12-ந் தேதி இரவு குழிக்கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 19-ந் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நேற்று முன்தினம் காலை பண்ணாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மனை மலர் பல்லக்கில் வைத்து மாட்டு வண்டி மூலம் கோவிலை சுற்றி வீதி உலாவாக கொண்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் குழிக்கம்பத்தில் எரியும் நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழியில் வாழை மரம் நடப்பட்டது. பின்னர் கோவில் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்த்து அந்த வாழை மரத்தில் கட்டினார்கள். இதையடுத்து வாழை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு அந்த வாழை மரத்தை பிடுங்கி மேள, தாளம் முழங்க பக்தர்கள் தோளில் சுமந்தபடி அங்குள்ள தெப்பக்குளத்தில் கொண்டு சென்று போட்டார்கள். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது.
    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நாளை(வியாழக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
    அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா, சாத்தான் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள். குடும்பத்தில் எந்தவொரு நல்ல காரியம் என்றாலும், குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி விட்டுதான் அதனை தொடங்குவார்கள்.

    குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். அவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலிபூதத்தார், அக்கினி மாடசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடி மாடசாமி, முண்டசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை, உதிரமாடசாமி, தளவாய் மாடசாமி, முன்னோடி மாடசாமி, கழு மாடசாமி, பலவேசகாரன், பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா, தூசி மாடன், கசமாடன், மாசானமூர்த்தி, மந்திரமூர்த்தி, கருத்தப்பாண்டி சுடலை, கட்டேரியாடும்பெருமாள், பொன்னூருவி, சிவனணைந்தபெருமாள், காலசாமி, எமகாலதூதராஜா, அருமசண்டாளன், இருளப்பன், லாடகுருசன்னியாசி ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கும்.

    பக்தர்கள் முதலில் சாஸ்தாவுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு, அவருக்கு எதிரே உள்ள காவல் தெய்வங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்வார்கள்.

    பங்குனி உத்திர திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை காலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள்.

    நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள். 
    சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.
    சிவகிரி அருகே கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாட்கள் நடைபெறும். 5-ம் திருநாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு கோவில் வசந்த மண்டபத்தில் இருந்து முத்துக்குமாரசுவாமி பல்லக்கில் வருதல், சிறப்பு தீபாராதனை, மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி அண்டரண்டபஷி வாகனத்தில் புறப்பாடு ஆகியவை நடந்தது.

    நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தேவஸ்தானத்தில் இருந்து அம்மன் பல்லக்கில் வருதல், மதியம் ஞானப்பால் நிகழ்ச்சி, மாலை சுவாமி அழைப்பு, இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சகம் வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெப்பத்திருவிழா நடக்கிறது. 
    குமாரவயலூர் பிரச்சித்தி பெற்ற முருகன் கோவிலில் நாளை மறுநாள் பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த குமாரவயலூரில் பிரச்சித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. முருகன் தன் வேலினால் சக்தி தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானை வணங்கி வழிபட்ட தலமாகும். அருணகிரி நாதருக்கு காட்சி தந்து திருப்புகழ் பாட அருள் வழங்கிய பெருமை பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரவிழாவானது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான வியாழக்கிழமை அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    காலை முதல் பக்தர்கள் பால்காவடி எடுத்து வருவார்கள். பின்னர் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணி அளவில் சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். 22-ந்தேதி உபய அபிஷேகமும், 23-ந்தேதி இரவு 8 மணிக்கு வள்ளி நாயகியின் தினைப்புனம் காத்தல் விழாவும் நடைபெறும்.

    24-ந்தேதி முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், அதன்பின் யானை விரட்டல் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பங்குனி உத்திரவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியான வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் தேவாரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடந்தது. 11 மணிக்கு இணை ஆணையர் அன்புமணி, தேவசம் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீகாரியம் கண்ணதாசன், மேல்சாந்திகள் கிருஷ்ணன் பட்டர், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், பக்தர்கள் சேவா சங்க ஆலோசகர்கள் ஆறுமுக பிள்ளை, ஈஸ்வர பிள்ளை, கணபதியா பிள்ளை, வெள்ளாளர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் முத்துச்சாமி, பக்தர்கள் சங்க செயலாளர் பெருமாள், துணை தலைவர் விநாயகம், துணை செயலாளர் தம்புரான்குட்டி, பொருளாளர் ராக்கோடியான், சங்கரலிங்கம், முத்துராமன், தாணுபிள்ளை, முத்துசாமி, ஆனையப்பன், முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள், வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பக்தர்கள் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்குகிறார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தம்புரான் விளையாட்டு நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், சாஸ்தா அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    பாளையங்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அதில் கொடியேற்றப்பட்டது.

    பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 22-ந் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அய்யனார் மற்றும் ராஜகோபாலன் பஜனை குழுவினர் செய்துள்ளனர். 
    மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்குகிறது. 20-ந் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
    மதுரை நேதாஜி ரோட்டில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. கி.மு. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தொண்டர் தொகை பாடி சைவம் தழைக்க வழி செய்த தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், இங்குள்ள தண்டாயுதபாணி சாமியை வழிபட்டதால் இந்த தலம் பழங்காலத்தில் சுந்தரர் மடம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகப்பெருமானுடைய திருவுருவம் முந்தைய காலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பழனி மலைக்கு எழுந்தருளி, அங்கே வழிபாடுகள் செய்யப்பட்டு சகல மரியாதையும் பெற்று திரும்பவும் இந்த கோவிலில் எழுந்தருளுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் இக்கோவிலுக்கு பழனியாண்டவர் கோவில் என்ற பெயரும் உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர பெருவிழா நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை காலை 5 மணிக்கு கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகா அபிஷேகம் நடந்து தங்க கவசம் சாத்துப்படி செய்யப்படும். மாலை 4 மணிக்கு மூலவருக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் தொடங்கி வைக்கிறார்.

    விழா நடைபெறும் 7 நாட்களும் தினமும் காலை 5 மணிக்கு கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகா அபிஷேக ஆராதனை நடந்து சுவாமிக்கு தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்படும். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவருக்கு பூக்கூடாரும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். வருகிற 17-ந் தேதி காலை 6 மணிக்கு மூலவருக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வருவார்கள். அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. முக்கிய விழாவான பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து தங்கக்கவசம் சாத்துப்படி செய்யப்படும். பின்னர் இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில் தண்டாயுதபாணி சாமி எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருவையாறு அருகே கண்டியூரில் அரசாப விமோசன பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அரசாப விமோசன பெருமான் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் அரசாப விமோசன பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் வருகிற 16-ந் தேதி கருட சேவை நடை பெறுகிறது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், 21-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டத்தின்போது கமலவள்ளி தாயாருடன், அரசாப விமோசன பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து தீர்த்தவாரி உற்சவமும், 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி பழனிவேல், தக்கார் அரவிந்தன், கோவில் எழுத்தர்கள் ஜெகதீசன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 
    பணகுடி அருகே பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரில் அமைந்துள்ள ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடைபெற்றது. பின்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு தீபாராதனை பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் கும்பாபிஷேகம், சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.
    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள முனியப்பர் சன்னதியில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மனுவாக எழுதி கட்டினால், 90 நாட்களில் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக சித்திவிநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருள, சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓதி கொடியேற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கிருத்திகை மற்றும் சஷ்டி தினம் என்பதால் கொளஞ்சியப்பருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் தினசரி கொளஞ்சியப்பர், சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 20-ந்தேதி காலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பங்குனி உத்திரமான 21-ந்தேதி அதிகாலையில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால் மற்றும் மயில் காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அன்றைய தினம் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 
    பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையில் குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு கொடிபட்டத்தை மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வந்தனர். 9.20 மணியளவில் மாத்தூர்மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடி ஏற்றினார். தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோவில் ஸ்ரீகாரியம் ஹரிபத்மநாபன், பறக்கை கூட்டுறவு சங்க தலைவர் கோசலை, மதுசூதனபெருமாள் சேவா சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் வாகன பவனி, பக்தி பஜனை, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 20-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகமும், சேவா சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற சிவன் தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன்தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி விநாயகர், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் வருகிற 20-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ×