search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95766"

    • மகளிருக்கான டி20 போட்டி முதல்முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

    இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய ஐந்து அணிகள் முதல் சீசனில் விளையாடியது.

    ஐபிஎல் போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.

    இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரை அடுத்தாண்டு முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் சுழற்சி முறையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுப்பு.
    • போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது.

    ஐ.பி.எல்- பிளே ஆப் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் ரன் எடுக்கப்படாத ஒவ்வொரு பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
    • ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

    இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது.

    இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

    இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

    • இவ்விரு அணிகள் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.
    • இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை.

    மும்பை:

    இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007-ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி , நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது.

    இந்த நிலையில் இந்த செய்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ ) தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்கள் எதிர்காலத்திலோ அல்லது வரவிருக்கும் நாட்களிலோ நடத்த எந்த திட்டமும் இல்லை. பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பிசிசிஐ தரப்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு 6 மடங்கு வருவாய் கிடைக்கிறது.
    • வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் கிரிக்கெட்டுக்கு அதிகமான மவுசு இருக்கிறது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அதிக வருவாயை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஈட்டி தருகிறது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாயை ஈட்டி கொடுக்கின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐ.சி.சி. சமமான அளவில் வருவாயை பகிர்ந்து அளித்து வந்தது.

    இந்த நிலையில் 2024 முதல் 2027 வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவுக்கு பெரும் அளவில் வருவாய் கிடைக்கிறது. ஐ.சி.சி. வருமானத்தில் இந்தியாதான் மிகப்பெரிய பங்கு வகிப்பதால் அதிக வருவாய் கிடைக்கிறது.

    ஆண்டுக்கு ரூ.1,894 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 38.5 சதவீதம் கிடைக்கும். ஐ.சி.சி.யின் ஆண்டு வருமானம் ரூ.4919 கோடியாக இருக் கும் என்று கருதப்படுகிறது.

    இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.338 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது ஐ.சி.சி. வருவாயில் 6.89 சத வீதம் கிடைக்கும்.

    இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு 6 மடங்கு வருவாய் கிடைக்கிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் கிரிக்கெட்டுக்கு அதிகமான மவுசு இருக்கிறது. இதனால் ஸ்பான்சர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரங்களை கொடுக்கிறார்கள். இதனால் பி.சி.சி.ஐ. மூலம் ஐ.சி.சி.க்கு வருமானம் மிகவும் அதிக மாக வருகிறது.

    ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு ரூ.307 கோடி வருவாய் கிடைக்கும். அதாவது 6.25 சதவீதம் வருமானம் கிடைக்கும்.

    அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.282 கோடி (5.73 சதவீதம்) கிடைக்கும். நியூசிலாந்து (4.73 சதவீதம்), வெஸ்ட்இண்டீஸ்,(4.58), இலங்கை, (4.52), வங்காளதேசம் (4.46 ), தென் ஆப்பிரிக்கா (4.37), அயர்லாந்து (3.01), ஜிம்பாம்பே (2.94), ஆப்கானிஸ்தான் (2.94 ) ஆகிய நாடுகளுக்கு முறையே வருமானம் கிடைக்கும். மீதியுள்ள 11.19 சதவீத அசோசியேட் உறுப்பு நாடுகளுக்கு கிடைக்கும்.

    • லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
    • 'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார். அடுத்த மாதம் (ஜூன்) 7-ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்த நிலையில் அதிலிருந்தும் அவர் விலகினார்.

    இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    • கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா இடம் பெற்றுள்ளனர்.
    • கடந்த முறை கிரேட் ஏ-வில் இடம்பெற்றிருந்த பூனம் யாதவ், இந்த முறை ஒப்பந்த பட்டியலிலேயே இல்லை.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், 2022-2023-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் மட்டுமே ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    கிரேட் ஏ பிரிவு தான் அதிகபட்சமாக ரூ.50 லட்சத்தை ஊதியமாக கொண்ட பிரிவு. கிரேட் பி பிரிவில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும்.

    இந்த ஆண்டு கிரேட் ஏ பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா ஆகியோருடன் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏவிற்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை கிரேட் ஏ-வில் இடம்பெற்றிருந்த பூனம் யாதவ், இந்த முறை ஒப்பந்த பட்டியலிலேயே இல்லை.

    கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா

    கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ராஜேஷ்வரி கெய்க்வாட்

    கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேகனா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், யஸ்டிகா பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ்.
    • சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.

    மும்பை:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ்.ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின்போது, முகமது சிராஜை ஒரு நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ். மேலும், சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
    • மும்பையுடன் ஆமதாபாத், டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய இடங்களிலும் ஆட்டங்கள் நடக்கும் என்று தெரிகிறது.

    மும்பை:

    மகளிர் ஐ.பி.எல். எனப்படும் மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டபிள்யூ.பி.எல்.) கடந்த மாதம் மும்பையில் இரு மைதானங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    5 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    அடுத்த சீசனில் இந்த போட்டியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதன்படி மும்பையுடன் ஆமதாபாத், டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய இடங்களிலும் ஆட்டங்கள் நடக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்த போட்டி பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த போட்டியை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடுமுழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை, கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களையும் நாங்கள் வழிநடத்தியுள்ளோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியம்.

    கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 25,587 பேர் தொற்று பாதிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மராட்டியம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளர்.

    நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகின்றன.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஐபிஎல் சீசன்கள் பயோ - பபூள் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது.
    • மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது.

    இந்தூர் பிட்ச்சை படுமோசம் என்ற ஐசிசி-யின் மதிப்பீட்டை எதிர்த்து பிசிசிஐ செய்த அப்பீலை அடுத்து, அதை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல் இந்தூர் பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று கூறியுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. வெறும் 2 நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் அந்த போட்டி முடிவடைந்தது. இதையடுத்து அந்த ஆடுகளத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.

    இந்நிலையில், இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்தூர் ஆடுகளத்தை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல், ஏற்கனவே வழங்கப்பட்ட மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது. அதனால் டீமெரிட் புள்ளிகள் 3-லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
    • ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது.

    பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    பிரிவு ஏ-வில் ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    பிரிவு பி-யில் செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    அதேபோல் பிரிவு சி-யில், உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிவு ஏ+ ( ரூ. 7 கோடி) - ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா.

    பிரிவு ஏ (ரூ. 5 கோடி) - ஹர்த்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்.

    பிரிவு பி (ரூ. 3 கோடி) - செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன கில். பிரிவு சி (ரூ. 1 கோடி) - உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ் பரத்.

    ×