search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95766"

    • ரோகித் சர்மாவுக்கு 35 வயதும், விராட் கோலிக்கு 33 வயதும் ஆகிறது
    • கேப்டன் பதவிக்கு பாண்ட்யா, ராகுல், பண்ட் ஆகியோரில் ஒருவரை நியமிக்க திட்டம்

    ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது. மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.

    ஆகவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப்பின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளதாக செய்தி நிறுவனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

    அந்த செய்தியில் வெளியான தகவல் பின்வருமாறு:-

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் விரிவாக கலந்துரையாடுவார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள்.

    ஆனால், அவர்கள் இருவரும் 35 வயதை தொடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள். தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவை. ஆனால், ஒரு கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது.

    டி20-யில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பதவிக்கு தயாராகும்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

    அதேபோல் விராட் கோலியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும்.

    பிசிசிஐ-யின் திட்டம்

    1. ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடரமாட்டார்.

    2. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார்.

    3. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல், பண்ட் ஆகியோர் 2024 வரை கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    5. காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை.

    6. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் வளர்க்கபட்டு வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களால் கவர்ந்துள்ளார்.

    7. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். கே.எல். ராகுலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

    8. ஆனால், அனைத்து மாற்றங்கள் குறித்தும் 2023 உலகக் கோப்பைக்குபின் பேசப்படும்.

    விராட் கோலி

    1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது.

    2. தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டும் தேர்வு செய்வார்கள்.

    3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அதிக அளவில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுவார்.

    2023-ல் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், தேர்வுக்குழு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. ஒருநாள் போட்டியில் வீரர்கள் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்களா? என்று சோதிக்கலாம். அதன்பின் 2024-ல் டி20 உலகக் கோப்பை வருவதால் மீண்டும் டி20 முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு அந்த செய்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    • நியூசிலாந்து, வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

    மும்பை:

    டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

    அதேபோல் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா இந்த தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்

    டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

    • இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
    • கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

    பெர்த்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணி மட்டுமே 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக விராட் கோலி செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.

    இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.

    விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது. அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.

    இந்திய அணி தனது அடுத்த போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பெர்த் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதிலும் விராட் கோலியின் இன்னிங்ஸ் தான் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
    • ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

    • இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
    • பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,

    இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்றார்.

    • இந்தியா வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
    • காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
    • கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.

    முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

    கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.

    நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

    கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

    இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள்..
    • நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

    இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். ஒருபக்கம் ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.

    அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் இருந்த சவுரவ் கங்குலி தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார்.

    இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்து கங்குலி பரபரப்பாக பேசியதாவது:-

    பிசிசிஐ-யில் நான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்தேன். இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருக்கிறேன். நீங்கள் எப்போதும் வீரராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டு பணிகளையும் செய்தது நன்றாக இருந்தது.

    வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள். நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    அது போன்ற உயரத்திற்கு செல்வதற்கு நீங்கள் வருட கணக்கில் உழைக்க வேண்டும். ராகுல் டிராவிட் ஒரு நாள் அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். விளையாட்டை பொறுத்தவரை நான் அடித்த ரன்களையும் கடந்து , பலர் மற்ற விஷயங்களையும் நினைவில் கொள்கிறார்கள். உங்கள் அணியினருக்காக நீங்கள் ஒரு தலைவராக என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
    • 1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (வயது 67) இன்று மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ரோஜர் பின்னியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

    இதேபோல் தற்போதைய செயலாளர் ஜெய் ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு ஆஷிஷ் ஷேலார், இணை செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு தலைவர் பதவிக்கு அருண் துமால், உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் டால்மியா, கைருல் ஜமால் மஜூம்தார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்போதைக்கு இவர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார்.

    ரோஜர் பின்னி, 2019-ஆம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 1979ம் ஆண்டு முதல் 1987 வரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980 முதல் 1987 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 830 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார்.

    1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம் பெற்றார்.
    • பி.சி.சி.ஐ. செயலாளர் பதவிக்கு மீண்டும் ஜெய்ஷா போட்டியிட முடிவு.

    மும்பை:

    பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்த பதவிகளுக்கான தேர்தல் பணிளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை 13 ஆம் தேதி நடைபெறு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். என்றும் அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்த முறை கங்குலி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும்  போட்டியிட ஜெய்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கங்குலி போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ரோஜர் பின்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றவர். பின்னி தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் அலுவலக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார்.
    • பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் பிசிசிஐ ஆலோசனை.

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பயிற்சின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

    இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார். மேலும், உலகக்கோப்பை டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பி.சி.சி.ஐ. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

    • இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம்.
    • பிற அணிகளுடனான தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும்.

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி அந்நாட்டுடனான நேரடி கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பிறகு இதுவரை இரண்டு அணிகளும் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை.

    இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், பேசியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில்

    இது குறித்து பதில் அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் சொந்த வணிக ஆதாயங்களுக்காக இந்த வாய்ப்பை வழங்கினாலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    எனினுமி, பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது என்றும், அது மத்திய அரசின் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது, இந்திய அணி வெளிநாடுகளில் பிற அணிகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×