search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி"

    • பஞ்சாமிர்தம் விற்பனை 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.
    • இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 29-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை திரு ஊடல் வைபவம் நேற்று நடைபெற்றது.

    புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமார சாமி எழுந்தருளி வடக்கு ரத வீதி அருகே உலா வரும் போது வள்ளியை திருமணம் செய்து கொண்ட செய்தி அறிந்து தெய்வானை கோபித்துக் கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து கோவிலுக்கு வந்து நடையை பூட்டிக் கொண்டார்.

    இதையடுத்து கோவிலுக்கு திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீரபாகுவை தூது அனுப்பி தெய்வானையை சமாதானம் செய்து கோவில் நடையை திறக்க வைக்கும் திரு ஊடல் வைபவம் தூது பாடல்கள் பாடி நடைபெற்றது.

    அதன் பிறகு முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானை சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவில் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தெப்பத்தின் நடுவில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதரருடன் முத்துக்குமார சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி எழுந்தருளினார். அதன் பின் வானவேடிக்கைகள் முழங்க தெப்பத்தேர் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து விரதமிருந்து மாலை அணிந்த பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரையாக பழனிக்கு வந்தனர். கடந்த 4, 5-ந் தேதி தைப்பூசத்தையொட்டி இங்கு வந்த பக்தர்களால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது. தைப்பூசம் முடிந்த பிறகும் கூட பக்தர்கள் வருகை குறையாமல் உள்ளது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் மலைக்கோவிலில் மட்டும் 4.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பழனி கோவில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனையும் 1 லட்சம் டப்பாவில் இருந்து 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம் கிடைத்தது.
    பழனி :

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் பணியில் பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 வருவாயாக கிடைத்தது.

    மேலும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 150 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,453 கிராம், வெள்ளி 15 கிலோ (14,995 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முழுமையாக நடைபெறவில்லை. மாலையில் நேரம் ஆனதால் பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138-ம் இருந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்தது.
    யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    7 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று முன்தினம் சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதி முன்பு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    7-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 6.40 மணிக்கு விளாபூஜையும், 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது.

    மதியம் 2 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

    இதையடுத்து யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு மலைக்கோவில் உச்சியில் தீப ஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    சொக்கப்பனை எரிந்த பின்பு அதில் கிடைக்கும் ‘அஞ்சன மை' மூலவர் சன்னதியில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சின்னக்குமாரருக்கு ‘அஞ்சன மை' வைத்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி மதியம் 2 மணிக்கு பிறகு மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் 2 மணிக்கு முன்பு கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அதிகாலையிலேயே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் தரிசன வழிகள், வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளிப்பிரகாரம் முன்பு தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில், பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் சின்ன குமாரருக்கு சண்முக அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
    அறுபடை வீடுகளில் 3-ம்படைவீடான பழனி முருகன் கோவிலில், கார்த்திகை திருவிழா கடந்த 14-ந்தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் சின்ன குமாரருக்கு சண்முக அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று மாலை 4.45 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுவார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் திருஆவினன்குடி கோவில், பெரிய நாயகி அம்மன் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (சனிக்கிழமை) காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (சனிக்கிழமை) காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 18-ந் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    7-ம் திருநாளான 19-ந்தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருக்கார்த்திகை அன்று மதியம் 2 மணி வரை மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே 2 மணியில் இருந்து 6 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தப்படுவதோடு படிப்பாதையும் அடைக்கப்படும்.

    மேலும் திருவிழாவில் மண்டகப்படி அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும். திருக்கார்த்திகை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில், சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அசுரர்களான தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் முருகப்பெருமான் வதம் செய்வார்.

    இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. பழனியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 தலைமுறைகளாக பொம்மை செய்யும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன், அவை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த பொம்மைகள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு அசுரர்கள் தலை, கால், கை அடங்கிய பொம்மைகள் விசுவ பிராமண மகாஜன சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மீண்டும் அதை தயார் செய்தவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதற்காக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று கிரிவீதிகளில் பக்தர்கள் வருவதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட உள்ளது.

    தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பழனிக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. குறிப்பாக கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களிலும், தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டாவது பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடந்த கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்கள் அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.

    பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி பராசக்தி அம்மனிடம் வேல் பெற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பழனி கிரிவீதியில் நடைபெறும். மறுநாள் 10-ம் தேதியன்று மலைக்கோவிலில் முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    கந்த சஷ்டி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோவிலில் நிறைவுநாளன்று தங்கள் விரதத்தை முடித்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்வது வழக்கம் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் ராஜஅலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக திருமணமேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்ரமணியபூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்புயாகம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறைபாராயணம், வாத்திய கோ‌ஷம் முழங்க மகாதீபாராதனை நடந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    வைகாசி விசாக நாளான இன்று பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் முருக பக்தர்கள் வந்திருந்தார்கள். பக்தர்கள் பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்திருந்தனர். வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 10.45 மணிக்கு திருத்தேரேற்றம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

    இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னமனூர், போடி, பழனி பகுதியில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை சுற்றுலா தலம் உள்ளது. தற்போது இங்கு குளுகுளு சீசன் நிலவி வருகிறது. சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    மதுரை எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ரோகித்சஞ்சய் (வயது21) தனது நண்பர்களுடன் மேகமலைக்கு சுற்றுலா வந்தார். மேகமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மகராஜமெட்டு மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது ரோகித்சஞ்சய் நண்பர்களுடன் பந்தயம் கட்டி அணையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதுபற்றி ஹைவேவிஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

    நிலைய அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் ரோகித்சஞ்சையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை நேரமாகி விட்டதால் இன்று காலை தேடும் பணி நடந்தது. வெகுநேர தேடுதலுக்கு பின்னர் மாணவர் ரோகித்சஞ்சய் கிடைக்காததால் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அருகே உள்ள சத்திரப்பட்டியை அடுத்த மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விவேக் (19). இவர் பட்டிவீரன்பட்டியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வத்தலக்குண்டு அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விவேக் தனது நண்பர்களுடன் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றனர். அருவிக்கு கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான யானை பள்ளத்தில் அவர்கள் குளித்தபோது விவேக்குக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவருடைய நண்பர்கள் விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஜெங்கால்.கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாட்டு சாணம் பொறுக்கச் சென்றான். அப்போது அங்குள்ள திருமலைநம்பி கல்குவாரியில் சேறு சகதி நிறைந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் உடலை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

    முறையான அனுமதியின்றி அரசு அனுமதித்த அளவை காட்டிலும் 2 மடங்கு பள்ளங்கள் தோண்டி கல்குவாரி நடத்தியதோடு அவற்றை முறையாக பராமரித்து தண்ணீர் கிடங்குகளை மூடாமல் அலட்சியமாக விட்டதால் மாணவன் பலியானதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மேலும் அரசின் விதிகளை மதிக்காமல் முறைகேடாக கல் குவாரி நடத்தி வரும் திருமலைநம்பி குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    கலியுக கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழா. உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதேபோல் மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டும் நடக்கிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 17-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அதையடுத்து வெள்ளிரதத்தில் சுவாமி திருவுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    7-ம் நாளான வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 10.45 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளன்று திருவிழா நிறைவு பெற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்படி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பங்குனி மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி ஆண்டுதோறும், அதேநாளில் வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. இதனையடுத்து காலை 10.30 மணி அளவில் மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் தங்கசப்பரத்தில் 9 கலசங்கள் வைத்து சுப்ரமணியர் கலச பூஜை நடைபெற்றது.

    முன்னதாக விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் கலசங்கள், உட்பிரகாரம் வலம் வந்து உச்சி காலபூஜையில் மூலவருக்கு கலச அபிஷேகமும், 16 வகை அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான மகிசாசூரவர்த்தினி அம்மன் கோவில், வனத்துர்க்கையம்மன் கோவில், பாதவிநாயகர் கோவில், கோசலவிநாயகர் கோவில், உத்திரவிநாயகர் கோவில், அபரஞ்சி விநாயகர் கோவில்களிலும் வருடாபிஷேக விழா நடந்தது. வருடாபிஷேக விழா பூஜைகளை பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×