search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.

    விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.

    மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் பலர் ஏழுமலையான் கோவிலுக்கு காய்கறிகள், மலர்கள், வாழை இலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான மலர்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். அந்த மலர்கள் திருமலைக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் திருச்செங்கோடு பக்தர்கள் இளநீர், மா இலைகள், 10 ஆயிரம் ரோஜா செடிகளை மலர்களுடன் காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் புஷ்ப கைங்கர்ய சபை சார்பில் மருதுசாமி என்பவர் பல்வேறு வகையான மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து 10 டன் மலர்கள் திரு மலைக்கு காணிக்கையாக வந்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நவராத்திரி கொலு ஆஸ்தானம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

    15-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை புஷ்ப வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை தங்கத் தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா மற்றும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

    இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து 19-ந்தேதி திருமலை அருகே உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி? என்பதை பற்றி திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி? எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன் கிழமை) நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, இரவு இரு வேளைகள் வாகன வீதிஉலா நடக்கிறது. இந்த வாகன வீதிஉலா காலையில் 9 மணிக்கு தொடங்கி 11 மணிவரையிலும், இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிவரையிலும் நடக்கிறது. கருட சேவை அன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் பிரம்மோற்சவ விழா நடந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் போருக்குப் புறப்படும் மன்னர் கள் ஏழுமலையானை வழி பட்டுச் செல்வார்கள். போரில் வெற்றி பெற்றால், ஏழுமலையான் கோவிலுக்கு வந்து விழா நடத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவ்வாறாக ஓராண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

    பல்லவ ராணி வழங்கிய வெள்ளி விக்ரகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், முதல் முறையாக 614-ம் ஆண்டு பல்லவ பேரரசின் ராணியாக திகழ்ந்த சாமவாய் பெருந்தேவியார் என்பவர் வெள்ளியால் தயார் செய்யப்பட்ட மணவாள பெருமாள் என்கிற போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த விக்ரகம் தற்போது ஏழுமலையான் கோவிலில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி கள் தொடங்குவதற்கு முன்பாக போக சீனிவாசமூர்த்தியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதன் பின்னரே பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் மற்றும் வாகன சேவைகள் தொடங்கி நடந்துள்ளன.

    அதைத்தொடர்ந்து ஆடி திருநாள், மாசி திருநாள் என்றும் அச்சுதராய பிரம்மோற்சவம் என்ற பெயரிலும் விழா நடந்துள்ளன. அது, 1254-ம் ஆண்டு பல்லவ மன்னரான விஜயகண்டா கோபாலதேவுடு என்பவர் சித்திரை மாதத்தில் நடத்தி உள்ளார். 1328-ம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆடி திருநாள் என்ற பெயரில் திருபுவன சக்கரவர்த்தி, திருவேங்கடநாத யாதவ ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது.

    1429-ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மன்னர் வீரபிரதாப ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது. 1446-ம் ஆண்டு மாசி திருநாள் என்ற பெயரில் மன்னர் ஹரிஹரராயலு பிரம்மோற்சவ விழாவை நடத்தி உள்ளார். 1530-ம் ஆண்டு அச்சுதராய பிரம்மோற்சவத்தை அச்சுதராயலு என்ற மன்னர் நடத்தி உள்ளார். 1583-ம் ஆண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன.

    அதன் பிறகு ‘லீப்’ வருடத்தில் அதிக நாட்கள் வந்ததால் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா என்றும், மற்றொன்று நவராத்திரி பிரம்மோற்சவ விழா என்றும் அழைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தது. அந்த நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது. மற்ற அனைத்து வாகன சேவைகளும் வழக்கம்போல் நடக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 18-ந்தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதியான விஸ்வசேனரை ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்துக்கு அர்ச்சகர்கள் கொண்டு வருகிறார்கள். அத்துடன் புற்று மண் சேகரித்து வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு விஸ்வசேனருக்கும், புற்று மண்ணுக்கும் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.

    பின்னர் விஸ்வசேனர், புற்று மண்ணை வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்து வந்து ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள யாக சாலையில் வைக்கிறார்கள். அந்தப் புற்று மண் நவராத்திரி பிரம்மோற்சவ விழா முடியும் வரை யாக சாலையிலேயே இருக்கும். அந்தப் புற்று மண்ணில் நவ தானியங்கள் தூவப்படுகின்றன.

    அந்த நவ தானியங்கள் முளையிட்டு வளர்ந்ததும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் எடுத்துச் சென்று, திருமலையில் உள்ள புனித தீர்த்தத்தில் போடப்படுகிறது.

    அங்குரார்ப்பணத்தையொட்டி இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை (புதன் கிழமை) காலை நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை, இரவு என இருவேளைகளில் திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் உலா வருகிறார். விழா நடைபெறும் நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும். இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    11-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை ஹம்ச வாகனத்திலும், 12-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சிம்ம வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வருகிறார்.

    தொடர்ந்து 13-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 14-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை பல்லக்கு வாகனத்திலும் மோகினி அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை இரவு 7 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது. இதில் கருட வாகனத்திலும் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    15-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவரான மலையப்பசாமி அனுமந்த வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை கஜவாகனத்திலும், 16-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை சூரியபிரபை வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பசாமி மாடவீதியில் வீதிஉலா நடக்கிறது.

    7-ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார்.

    18-ந்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கரஸ்நானம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமை, நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகியவற்றையொட்டி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனம், டைம் ஸ்லாட் தரிசனத்தில் டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். #tirupati
    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11 முறை ஒரேநாளில் லட்சம் பக்தர்களுக்குமேல் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 29-ந்தேதி அன்று ஒரேநாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 278 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    புரட்டாசி மாதம் நடப்பதால் சனிக்கிழமையையொட்டி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்ற பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலவச தரிசனத்தில் சாதாரண பக்தர்கள் வழிபட அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. அன்று 300 ரூபாய் டிக்கெட்டில் 5 ஆயிரம் பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டைம் ஸ்லாட் முறையில் சென்ற இலவச தரிசன பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் ஆகியோர் தனித்தனி வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதே நடைமுறையை கூட்டம் அதிகமாக இருக்கும்போதும் நடைமுறை படுத்தப்பட உள்ளது.

    பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி மற்றும் கோடைக்கால விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுப்ப முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புரட்டாசி மாதத்தில் இன்னும் 2 சனிக்கிழமை இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. எனவே வருகிற 6, 7, 13, 14, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அத்துடன் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று ஏழுமலையானை வழிபடலாம்.

    300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வரும் வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர், மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்படும். கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் 120 உதவி அதிகாரிகள் நியமித்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.#tirupati
    திருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கம் இருந்த நிலையில், ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருமலை:

    திருப்பதி பகுதியில், ‘ஸ்வைன் புளு’ என்கிற பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. திருப்பதியை சுற்றியுள்ள பகுதியில் 7 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கம் இருந்தது.

    அதில் 3 பேர் திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டது.

    அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் திருப்பதி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் உதவி மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வரும் ஒரு டாக்டருக்கும் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக திருப்பதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிம்ஸ் ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருப்பதி ரெயில் நிலைய மேலாளர் சுபோத்மித்ரா கூறுகையில், ‘‘திருப்பதி வழியாக பல்வேறு ரெயில்களில் பல மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்வதால், பலருக்கு பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் நெருங்கி பழகும்போதும், பேசும்போதும் ஒருவரின் எச்சில் மற்றவர் மீது படக்கூடாது. கைக்குலுக்கும்போதும் பன்றி காய்ச்சல் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது.

    ரெயிலில் பயணம் செய்து விட்டும், வெளியில் சென்று வந்தாலும், மற்றவர்களுக்கு அடிக்கடி கைக் குலுக்கினாலும் உடனே கையை கழுவ வேண்டும். தும்மல் வந்தால் கைக்குட்டையால் மூக்கை மூடி கொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். #Swineflu #Swinefludeath

    திருப்பதியில் நிறுத்தியிருக்கும் பக்தர்களின் கார்களை உடைத்து பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் திருட்டு, வழிப்பறி நடப்பதாகவும், பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் செல்போன்கள், கேமராக்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகவும் போலீசாருக்குப் புகார்கள் வந்தன.

    திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.பாஸ்கர்ரெட்டி தலைமையில் போலீசார் திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பதி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஊற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இருவரும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தொண்டமநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சிவாவேலுபிள்ளை (வயது 40) என்றும், ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் யாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனு என்கிற ருத்ர‌ஷசீனு (23) எனத் தெரிய வந்தது.

    இருவரும் கூட்டாக சேர்ந்து திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் செல்போன்களை திருடியதாக கூறினர். பக்தர்களின் கார் கண்ணாடிகளை உடைத்து, அதில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்கள், கேமராக்கள், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி வந்துள்ளனர். கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இருவரும் கூட்டாக சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த 30 செல்போன்கள், 3 கேமராக்கள், 93 கிராம் எடையிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் திருப்பதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #arrest

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு பவுர்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி இரவு தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் நடைபெறும் கருட சேவையை திருமலைக்கு வந்துகாண முடியாத பக்தர்கள் பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது.

    கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவ மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



    ஏழுமலையான் கோவில் மட்டுமின்றி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வஸ்திரங்கள் அடுத்த மாதம் 4-ந்தேதி இணைய தளம் மூலம் ஏலம் விடப்பட உள்ளன.

    இதில் புதிய, பழைய, சிறிது பழுதடைந்த வஸ்திரங்கள் 226 லாட்கள் உள்ளன. அவற்றில் பட்டுச் சேலைகள், பட்டு உத்திரியங்கள், பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், உத்திரியங்கள், டர்க்கி டவல் துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை பிரிப்புகள், தலையணை உறைகள், ஆயத்த ஆடைகள், உண்டியலுக்கு சுற்றப்படும் துணிகள், ரவிக்கைத் துணிகள் ஆகியவை அடங்கும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், திருப்பதியில் உள்ள தேவஸ்தான சந்தை அலுவலகத்தை 0877-2264429 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூவில் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. #TirupatiTemple #VenkaiahNaidu
    திருமலை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    வி.ஐ.பி.க்கள் வரும்போது பாதுகாப்பு கருதி அவர்களை மகாதுவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய வழியனுப்பி வைப்பார்கள். ஆனால், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பொதுமக்கள் சர்வ தரிசனம் செய்யும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக நடந்து வந்து திருப்பதி பெருமாளை தரிசித்தார்.
     


    விஐபி ஒருவர் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக வந்து சாமியை தரிசித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்தார். #TirupatiTemple #VenkaiahNaidu
    ×