search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், மாலையில் சமய சொற்பொழிவு, இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.

    8-ம் நாள் இரவில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. 10-ம் நாளான நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து மாலையில் அம்மன் தேரில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
    திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது.
    திருச்சி அருகே வயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதவத்தூரில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கி நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பாடு நடைபெறுகிறது.

    நாளை(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் பால்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி, எல்லை கட்டுதல் நடந்தது. தொடர்ந்து வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மனுக்கு தேரடி வீதியில் சிறப்பு பூஜைகளும், பிடாரி அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம, பல்லக்குகள், பூத வாகனத்தில் பாடலீஸ்வரர் வீதிஉலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காமதேனு, கற்பக விருட்சம், நாக வாகனத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது இளைஞர்கள், முதியவர்கள் சிலம்பம் ஆடியப்படி ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து அதிகாரநந்தி கோபுர தரிசனமும், தெருவடைச்சான் உற்சவமும் நடந்தது. அதையடுத்து யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று கோபுர தரிசனமும், மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) காலையில் குதிரை வாகனம், இரவு தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

    அதை தொடர்ந்து அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். தேர் மாலையில் நிலையை வந்தடை யும். இதையொட்டி கடலூர் தேரடி தெருவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம், 20-ந்தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
    சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோவிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    காலை 9.50 மணியளவில், வடபழனி முருகன் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...’ என்று பக்தி கோஷம் எழுப்பி மனமுருக வழிபட்டனர்.

    கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது. பின்னர் வடபழனி கோவில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோவில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    தேரோட்டம் முடிந்த பிறகு, நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடத்தப்பட்டது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவில் வளாகத்திலேயே முருகனை ஆடிப்பாடி உலா வர செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ல.ஆதிமூலம், உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது.

    பின்னர் தேர் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் கலந்து தேர் மீது இறைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    விழாவில் தாசில்தார்கள் டி.பி.சாந்தி, ரமாநந்தினி, நகராட்சி பொறியாளர் ஜி.உமாமகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மூர்த்தி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ்.முருகன், திருமகள்விஜயகுமார், பி.மோகன், எம்.என்.பாஸ்கரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பல இடங்களில் பக்தர்கள் அன்னதானம், கூழ், மோர் வழங்கினர்.

    இன்று (புதன்கிழமை) கெங்கையம்மன் சிரசு பெருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவெறும்பூரில், மலைமேல் எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 17-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி, கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே, மாநகராட்சி நிர்வாகம் கோவிலில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    இருப்பு கிராமத்தில் பிடாரி அரசியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் இரவு அம்மன் வீதிஉலாவும் நடந்தது. விழாவில் கடந்த 27-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் செடல் உற்சவமும், தேரோட்டமும் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் செடல் குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

    பின்னர் மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதே போல் மற்றொரு தேரில் விநாயகர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு விநாயகரை தேரை ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து அரசியம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

    விழாவில் நேற்று அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா அறிவின் சிகரம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    கொடும்பப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கொடும்பப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 21-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று முன்தினம் பால்குடம், அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேரில் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மனை எழுந்தருள செய்தனர். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது தேரின் பின் பகுதியில் சென்ற பெண்கள் தரையில் படுத்து சாமி கும்பிட்டுக் கொண்டே சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) புரவி எடுப்பு விழா, பாரிவேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சீரமைக்கப்பட்ட தங்கத் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத் தேர் அமைக்கப்பட்டது. இந்த தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இழுக்கப்படாமல் இருந்தது.

    இதையடுத்து தங்கத் தேர் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.4 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் செய்யப்பட்டது.

    இந்த தங்கத் தேர் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, விசேஷ நாட்கள் மற்றும் விழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் தான் தங்கத் தேர் இழுக்கப்படும். இந்த தேரை நேர்த்தி கடனாக இழுப்பதற்கு கோவில் நிர்வாகத்தில் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலையில் பக்தர்கள் மூலம் தங்கத் தேர் இழுக்கப்பட்டது. அப்போது நிலையில் இருந்து தேர் புறப்பட்ட சிறிது தொலைவில் தேரின் விமானம் உள்ள மேல் பீடம் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து தேர் 3-ம் பிரகாரம் சுற்றி இழுக்கப்பட்டு தங்கத் தேர் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் உடனடியாக தங்கத் தேர் சீரமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று காலை தங்கத் தேரை இழுத்து 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் செய்தார்.

    முன்னதாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் உற்சவ சிலை பக்தர்களுடன் கலெக்டர் கந்தசாமி தோளில் சுமந்தவாறு தங்கத் தேருக்கு கொண்டு வந்தார்.

    பின்னர் கலெக்டர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், போலீசார் மற்றும் பணியாளர்கள் தங்கத் தேரை 3-ம் பிரகாரம் சுற்றி இழுத்து வந்து நிலையில் நிறுத்தினர்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத் தேரின் விமானம் உள்ள மேல் பீடம் சரிந்து விழுந்தது. தற்போது தேர் சீரமைக்கப்பட்டு, பிரகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனை சோதனை செய்யும் வகையில் பக்தர்களை போல கோவிலில் பணம் கட்டி தங்கத் தேரை இழுத்தேன்’ என்றார்.
    ஈரோட்டில் மகிமாலீசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    ஈரோட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான மகிமாலீசுவரர் கோவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் திருவேங்கடசாமி வீதியில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்பரடிகள் திருஅவதாரம், அப்பர் நீற்றரையில் இருந்து மீளுதல், பல்லவன் சரணாகதி விழா, தண்ணீர் பந்தல் திருநாள், சிறப்பு கட்டமுது திருநாள் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் மகிமாலீசுவரருக்கும், மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    தேர்த்திருவிழாவையொட்டி நேற்று காலை அப்பரடிகள் குரு வழிபாடு நடைபெற்றது. பின்னர் மங்களாம்பிகை உடனமர் மகிமாலீசுவரர் உற்சவ சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    மகிமாலீசுவரரின் தேர் அசைந்தாடி செல்ல தொடர்ந்து அப்பர் எழுந்தருளிய தேரும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரும் சென்றது. கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி வழியாக மணிக்கூண்டு வரை சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் மீண்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி வழியாக வந்து கோவிலில் நிலை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் வழிநெடுக நின்று மகிமாலீசுவரரை தரிசனம் செய்தனர்.

    தேரோட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பெண்கள் சுற்றி நின்றுகொண்டு ஆன்மிக பாடல்களை பாடினார்கள். அப்போது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் உள்பட 12 திருமுறை பாடல்களை கரவோசை எழுப்பி பாடினர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மூவர் தேவார தமிழிசை விழா நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. இதில் கூத்தபெருமான் (மகிமாலீசுவரர்) தங்க சப்பரத்திலும், சிவகாமி அம்மன் வெள்ளி சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். வருகிற 2-ந் தேதி காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி மாலை 6.30 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலமும் நடைபெறுகிறது.

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
    மிகவும் பழமையான கோவில்களில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்து வருகிறது. தினமும் காலையில் சுவாமி வெள்ளி பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

    கடந்த 22-ந் தேதி இரவு பெருமாள் கருட வாகனத்திலும், 23-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 24-ந் தேதி மாலையில் இந்திர விமான வாகனத்திலும், இரவு புன்னை மர வாகனத்திலும், நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார்.

    பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரதவீதிகளிலும் இலவச மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தாமிரபரணி நதியில் உள்ள வீரராகவ தீர்த்தகட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
    தொட்டியம் அருகே ஓலை பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஓலை பிடாரி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலை பனை ஓலையால் வடிவமைக்கப்பட்ட பிடாரி காளியம்மன் 29 அடி உயரம் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் நடந்த திருத்தேர் வீதிஉலாவில் பக்தர்கள் தேரை தலையில் சுமந்து கொண்டு கிடாரம், மேலூர், குண்டாங்கல் பாளையம், அய்யம்பாளையம், சூரம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்றனர்.

    அந்தந்த கிராமங்களுக்கு செல்லும்போது ஊர் பொதுமக்களும், பக்தர்களும் மாவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியும் கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது. நேற்று திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவிற்காக மீண்டும் திருத்தேர் வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி களும், பொதுமக்களும் செய்திருந்தனர். 
    ×