search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.
    திருப்பரங்குன்றம்:

    விருதுநகர் லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் செல்வமுருகன் (வயது 21). இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அங்கு உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு அதிகாலை கல்லூரிக்கு புறப்பட்டு வந்தார். திருப்பரங்குன்றம் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் செல்வமுருகன் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதேபோல் பேரையூரை சேர்ந்த போஸ் என்பவரது மனைவி திருமேனி அம்மாள்(63) என்பவரும் திருப்பரங்குன்றத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார். இவ்வாறு ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப் பாதையில் இருந்து வெயிலுகந்த அம்மன் கோவில் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிர் பலி ஆவது தொடர் கதையாக உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    பொதுமக்கள் சுரங்கப் பாதையின் வழியே சென்று வருவதற்கு வசதியாக சுரங்கப் பாதைக்குள் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுரங்க பாதைக்குள் மின் விளக்கு வசதி, சுழலும் நவீன கேமரா வசதி செய்ய வேண்டும். விபத்து நடக்கும் அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சிதம்பரம் அருகே இன்று காலை மினிலாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்திரன்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் காசியம்மாள் (வயது 54) மற்றும் அமுதா (53). இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர்.

    இன்று காலை அகரநல்லூர் கிராமத்தில் வயலில் வேலை செய்ய காசியம்மாள், அமுதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் ஒரு மினிலாரியில் புறப்பட்டனர். மினிலாரியை வல்லம் பகுதியை சேர்ந்த ரெங்கபாட்ஷா ஓட்டி சென்றார். இந்த மினிலாரி சிதம்பரம் புறவழிச்சாலையில் கூத்தங்கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினிலாரியின் இடிபாடுக்குள் சிக்கி காசியம்மாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அமுதா, அலமேலு, குமுதவள்ளி, வசந்தா உள்பட 21 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதா இறந்தார். காயம் அடைந்த 20 பெண்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரெங்கபாட்ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிதம்பரம் புறவழிச்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சேத்திரன்கிள்ளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி ஜக தாம்பிகை என்ற பெண், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா (30) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ் சாலையி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு பெரம்பலூரில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றது. அப்போது எதிரே திட்டக்குடி நோக்கி வந்த வந்த லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கவிழ்ந்ததால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

    மும்பையில் கலம்பொலி பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சோஹன் பாபன் கட்கே என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #cylinderblast
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்பொலி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் இன்று காலை சமைப்பதற்காக ஒரு பெண் எரிவாயு சிலிண்டரை பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரிந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் சோஹன் பாபன் கட்கே (வயது 5) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #cylinderblast
    பாவூர்சத்திரத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவரும் கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த சுடலைமணி (50) என்பவரும் நேற்று மாலை தென்காசி சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பைக் பாவூர்சத்திரம் பள்ளி அருகில் வந்த போது இவர்களது பைக் முன்னால் சென்ற பாவூர்சத்திரம் வடக்கு தெருவை சேர்ந்த திராவிடமணி (36) என்பவர் பைக் மீது மோதியதாம்.

    இதில் சிவகுமார், சுடலைமணி ஆகியோருக்கு பலத்த காயமும், திராவிடமணிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அருகே கோவில் திருவிழா தொடர்பான மோதலில் கல்வீசி தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே, குடவாசல் காவல் சரகம் காப்பணாமங்கலத்தில் பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடத்துவது தொடர்பாக அவ்வூரை சேர்ந்த இருதரப்பினரிடையே தகராறு இருந்து வருகிறது.

    இதில் ஒரு தரப்பை சேர்ந்த ஊர் பெரியவர்கள் திருவிழாவை அனைவரும் சேர்ந்து ஒருசேர நடத்துவோம் என்றும், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் தனித்தனியாகவே நடத்த வேண்டும் என்றும் கூறி வருவதால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்த ஆசைமணி என்பவர் மோட்டார் சைக்கிளில் நேற்று வந்தபோது, மற்றொரு தரப்பை சேர்ந்த குமார் என்பவர் மீது மோதி விட்டாராம். இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமாருக்கு ஆதரவாக விஜயகுமார், இளவழகன், தசரதன், கார்த்தி ஆகியோர் ஆசைமணியிடம் தகராறு செய்துள்ளனர்.

    இதனால் ஆசைமணி தனது தரப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜா ராமன், கதிர், அருண் ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்தார். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த தாக்குதலில் விஜயகுமார், குமார், ஆசைமணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்னர்.

    இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தின் போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் குமார் தரப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமாக பால் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் முன்புறம் இருந்த சிறிய கீற்று கொட்டகைக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை மக்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கு காரணம் மற்றொரு தரப்பினர் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து குடவாசல் போலீசார் குமார் தரப்பை சேர்ந்த இளவழகன், தசரதன், கார்த்தி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆசைமணி தரப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜா ராமன், கதிர், அருண் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோஷ்டி மோதலில் 4 பைக்குகள் சேதப்படுத்தப்பட்டதோடு 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்து 5 பேர் படு காயம் அடைந்தனர்.
    ஊட்டி:

    மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 15 பேர் தங்களது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18-ந் தேதி வந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் 15 பேர் மைசூருக்கு இயக்கப்படும் சொகுசு பஸ்சில் நேற்று ஊட்டியில் இருந்து கோலாப்பூர் செல்வதற்காக புறப்பட்டனர். அந்த சொகுசு பஸ் ஊட்டி, தலைகுந்தா, பைக்காரா வழியாக கூடலூர் சென்று மைசூருக்கு செல்கிறது.



    பெங்களூருவை சேர்ந்த டிரைவர் மதுக்குமார் (வயது 45) பஸ்சை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு அருகே சொகுசு பஸ் சென்ற போது, ஒரு வளைவில் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சதாசிவ், ஆஷாராணி, கனஉதானி, ராய்ப்பாகி, சிவநாயக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த 5 பேருக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சுற்றுலா பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
    பெரம்பலூர்:

    புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியது. தொடர்ந்து பஸ் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல் ஓடி தடுப்புகம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக் கிடையே சிக்கி தவித்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    மதுரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் தலையாரி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கீதா (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம்,காளையார் கோவிலில் தலையாரியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று கீதா தனது மொபட்டில் மேலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் கீதா படுகாயம் அடைந்தார். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை அருகே அரசு பஸ் மீது பாய்ந்து விழுந்த மோட்டார் சைக்கிளால் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல்லில் இருந்து அறந்தாங்கிக்கு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை குன்னக்குடியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    வடமதுரை அருகே நேற்று இரவு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக பைக்கை திருப்பினார்.

    எதிர்பாராதவிதமாக பைக் சினிமா காட்சிகளில் வருவதைப் போல பறந்து வந்து பஸ்சின் முன் பக்க கண்ணாடியில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஊராளிப் பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (வயது 30) என்பவர் படுகாயமடைந்தார். இவர் போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.

    படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் சேதமடையவே அதில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோட்டில் இருந்து அலுமினிய பீடிங் வேலை செய்யும் நாகராஜ் (வயது 50) என்பவர் சரத்குமார் (22) என்பவருடன் மொபட்டில் ஆப்பக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    மொபட்டை நாகராஜ் ஓட்டினார். கவுந்தப்பாடி அருகே வளையக்காரபாளையம் குட்டை பக்கம் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், நாகராஜ் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளையக்கார பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (35), நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரத்குமாருக்கு கால் முறிந்தது. ராமச்சந்திரனின் மகன் அருணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை பலனின்றி நாகராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×