search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தற்போது நொய்யலில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடி கொடிகள், ஆகாயத்தாமரைகள், முட்செடிகள், போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 

    இதுகுறித்து அக்ரஹாரப்புத்தூர் பகுதி பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சிக்கி இருந்த ஆகாயத்தாமரை, செடி கொடிகள், முட்செடிகள் போன்றவை அகற்றப்பட்டது.
    கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    பெரம்பூர்:

    கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மொத்தம் 94 கடைகள் உள்ளன.

    வியாபாரிகள் சிலர் கடையை நடத்தாமல் முத்தமிழ்நகர் மெயின் ரோட்டில், சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் வணிக வளாகத்தில் எடுத்த கடைக்கு முறையாக வாடகை மற்றும் வரி செலுத்தாமல் இருந்தனர்.

    இதுபற்றி ஏராளமான புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்தன. இதையடுத்து இன்று காலை அதிகாரிகள் மங்களாராம சுப்பிரமணியன், காமராஜ், திருநாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் முத்தமிழ் நகரில் உள்ள வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை இடித்து அகற்றினர். மேலும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து வியாபாரிகள் தங்களது வாடகை, வரி பாக்கியை உடனடியாக அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்களுக்கு அந்த இடத்திலேயே ரசீது வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சம் வரை வசூலானது.

    வணிக வளாகத்தில் கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு முன்பு இதே போல 2 முறை சாலையோர கடைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Diwali #Crackers
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றியிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்துவிடுவார்கள். அதனை மாநகராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள்.

    அந்தவகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (மாலை 5.30 மணி வரை) 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.

    இந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் கடந்த ஆண்டு 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
    தொட்டகாஜனூரில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு மெட்டல்வாடி ரோட்டோரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழ் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தொட்டகாஜனூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதேபோல் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதேபோல் அந்த குடிநீர் தொட்டியின் அருகில்தான் அங்கன்வாடி மையம், மக்கள் நலவாழ்வு மையமும் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.

    அதனால் மெட்டல்வாடி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    தினத்தந்தி செய்தி எதிரொலியாக இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தியில் நேற்று முன் தினம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.

    இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரி வித்தனர். மேலும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைக்காரர் களால் ரோட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    பண்ருட்டியில் இன்று ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகளை இடித்து அதிகாரிகள் அகற்றம் செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள கடலூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் செட்டிபட்டறை ஏரி அமைந்துள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் மேடான பகுதியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 24-ந் தேதிக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் இடங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து செட்டிபட்டறை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள், ஏரியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகள் இடிக்கப்படும்.எனவே வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்று அங்கு வசிக்கும் மக்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை.

    இதையடுத்து இன்று காலை பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் அதிகாரிகள் செட்டிபட்டறைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை கேட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து 3 பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதை பார்த்து பெண்கள் கதறி அழுதனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கரூரில் தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை அகற்றி கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
    கரூர்:

    கரூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக ஒலி எழுப்பும் வகையிலான காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதால் இரைச்சல் அதிகமாகி ஒலிமாசு ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.

    அதன்பேரில் நேற்று காலை கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், தனசேகரன், மீனாட்சி, ரவிசந்திரன், கரூர் நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் கரூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த தனியார் பஸ்களின் ஒலிப்பான்களை இயக்க செய்து சோதனையிட்டனர். அதில் பலதரப்பட்ட மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 30 தனியார் பஸ்களில் இருந்து காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன. மேலும் விதிகளை மீறி பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் அலங்கார விளக்குகள் தொங்கபட்டிருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் இருந்து பாதுகாப்பு கருதி அலங்கார விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அங்குள்ள கரூர் மினி பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 25 காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன.

    இதுபோன்ற ஒலிப்பான்களால் இரைச்சல் அதிகமாகி சுற்றுப்புறத்தில் ஒலிமாசு ஏற்படுகிறது. 85 டெசிபல் ஒலி அளவு வரை தான் காற்றொலிப்பான் இருக்க வேண்டும். ஆனால் அகற்றப்பட்டவை அனைத்தும் கூடுதலாக ஒலி எழுப்பக்கூடியவை ஆகும். இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்ற ஒலி சத்தத்தின் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிலர் இந்த காற்றொலிப்பான் சத்தத்திற்கு பயந்து போய் வாகன கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    எனவே இது பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் தனியார் பஸ், மினிபஸ் உரிமையாளர்கள் ஈடுபட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நிருபர் களிடம் தெரிவித்தார். 
    சென்னை பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தின் தடுப்புச் சுவரை ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை பரங்கிமலையில் கடந்த மாதம் மின்சார ரெயிலில் படியில் பயணம் செய்தவர்கள் ரெயில்வே தடுப்புகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளையும் கண்டனங்களையும் உருவாக்கியது. மேலும், ரெயில்வே தடுப்புகளை அகற்றுமாறு ரெயில்வே துறை அதிகாரிகாளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



    இந்நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், பழவந்தாங்கல் ரெயில்நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில், பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பரங்கிமலை விபத்து உண்டான அந்த தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பக்கவாட்டு தடுப்புச் சுவரும் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். #JayaDeath #JudgeArumugasamy
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று ஆஜரானார். முதல்-அமைச்சரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உளவுப்பிரிவு போலீசார் தான் மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது முதல் அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் நடந்தது குறித்து நீதிபதி மற்றும் ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.



    விசாரணையின் போது, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உளவுப்பிரிவு போலீசார் உடன் சென்றார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று சத்தியமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘செப்டம்பர் 21-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி நீங்கள் தானே கண்டறிய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டது தெரியும். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது’ என்று பதில் அளித்தார்.

    விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது தெரியுமா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஆமாம். சொன்னார்கள்’ என்று பதில் அளித்துள்ளார். ‘பாதுகாப்பு கருதி உங்களது அறிவுரையின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேட்டதற்கு, ‘நான் எதுவும் சொல்லவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது என்பது தெரியாது’ என்று அவர் பதில் அளித்தார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று நீங்கள் அறிவுறுத்தினீர்களா?, இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் உங்களிடம் ஆலோசனை நடத்தினார்களா?, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் யாரை விடக்கூடாது என்ற கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? என்று ஆணையத்தின் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவை மருத்துவமனையில் நான் சந்திக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை பார்க்க யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விவரம் தன்னிடம் இல்லை.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அவர்கள் பாதுகாப்புக்கு வரவில்லை என்பது தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. 
    ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வெளிபட்டினம் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று அந்த இடத்தை காலி செய்ய நகரசபை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன்படி நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரசபை அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளையும், ஜே.சி.பி. எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய அவகாசம் வழங்கிய அதிகாரிகள் திங்கட்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்து சென்றனர்.

    இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் கோவில் நிலத்தில் கோவிலுக்கு வாடகை செலுத்தி முறையாக குடியிருந்து வருவதாகவும், சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் தெரிவித்து வாதிட்டனர். அதற்கு நகரசபை அதிகாரிகள், அலுவலக பதிவேடுகளின்படி மேற்கண்ட இடங்கள் ஊருணி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று இருப்பதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 
    ×