search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.
    • காலசம்ஹாரமூர்த்தி பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் புகழ்பெற்றதாகும்.

    புராண காலத்தில், பக்தர் மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது மார்க்கண்டேயர் உயிர் பிழைக்க சிவலிங்கத்தை கட்டியணைத்தார்.

    அப்போது, இறைவன் காலசம்ஹாரமூர்த்தியாக தோன்றி எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமா தேவியின் வேண்டு கோளுக்கு இணங்க எமனை சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார்.

    மார்கண்டேயருக்கு என்றும் 16 என்று சிரஞ்சீவி என்ற வரத்தை இறைவன் தந்ததால் இவ்வாலயத்தில் ஆயுள்விருத்தி வேண்டி ஆயூள் ஹோமம் செய்து 60 வயது முதல் வயதான தம்பதிகள் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடம் 365 நாட்களும் திருமணங்கள் நடைபெறும் ஒரே தலம் இத்தலம் தான். இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு காலசம்ஹாரவிழா என்றழைக்கப்படும் எமசம்ஹாரம் கடந்த 25 ஆம்தேதி கொடி யேற்றத்துடன் தொ டங்கி நடைபெற்றுவருகிறது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

    இதனையொட்டி காலசம்ஹாரமூர்த்தி பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார்.

    பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனதால் பூமியின் பாரத்தை தாங்கமுடியாத பூமாதேவி தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்து மீண்டும் எமனை உயிர்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகாதீபா ரதனை செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் விடிய விடிய வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதீனம், கனேசன் குருக்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
    • தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தஞ்சை மட்டும் அல்லாது, தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சினடியார்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    உலக பாரம்பரிய சின்னம்

    தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் 1987-ம் ஆண்டு யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறவிக்கப்பட்டது. இந்த கோவில் தமிழர்களின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரியகோவில் பெயர்க்காரணம்

    தஞ்சை பெரிய கோவில், பெருவுயைடார் கோவில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் ராஜராஜேஸ்வர கோவில் என்றும் ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொடக்க காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்று பின்னர் தஞ்சை பெருவுடையார் கோவில் என்றும், 17, 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

    1000 ரூபாய் நோட்டு, தபால்தலை வெளியீடு

    தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் தஞ்சை பெரிய கோவிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

    1995-ம் ஆண்டில் மத்திய அரசு மாமன்னன் ராஜராஜசோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையும் வெளியிடப்பட்டது. மேலும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் உருவம் பொறித்த நாணயமும் வெளியிடப்பட்டது.

    தஞ்சை பெரியகோவில்விழாக்கள்

    தஞ்சை பெரியகோவிலில் பிரம்மோற்சவம், மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி, தேரோட்டம் ஆகியவை கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    ஓவியங்கள்

    தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன், விஜயராகவ நாயக்கர், 2-ம் சரபோஜி, அவர் மகன் சிவாஜி ஆகியோர் காலத்து ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள அறையில் ராஜராஜன் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் வழிபடுதல். சுந்தரரும், சேரமான் பெருமாளும் யானையிலும், குதிரையிலும் கயிலை செல்லுதல், இந்த இருவரும் கயிலையில் சிவபெருமான், உமாதேவியோடு நாட்டியம் காணுதல், கயிலையைப் பெயர்க்கும் ராவணன் போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஒவியங்களையும் இந்த கோவிலில் காணலாம்.

    பெரியகோவில் தேரோட்டம் பற்றி மோடி ஆவண குறிப்பு

    சித்திரை தேரோட்டம் பற்றிய குறிப்புகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவண குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன. இதன்மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பெரியகோவிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கி தந்தது மட்டுமல்லாமல் 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார். தஞ்சையில் கி.பி. 1776-ம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து தேர் உலா வந்ததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1818-ம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காக பல வட்டங்களில் இருந்து 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2,800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் என தேருக்காக 26,494 பேரும், வாகனங்களை தூக்குவதற்காக திருவையாறில் இருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவண குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    • ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.
    • இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது, தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்தும் விடுதலைத் தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த பிரபஞ்சத்தை, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு பேரும்தான், அனைத்து நாகங்களுக்கும் தலைமையானவர்கள்.

    இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும், வலிமை, தலைமைப்பதவி, தீர்க்காயுள் ஆகிய வரங்கள் வேண்டி, பூமியில் இருந்த சிவாலயங்கள் பலவற்றுக்குச் சென்று சிவலிங்க பூஜை செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த எட்டு சர்ப்பங்களும் ஒன்றாக சேர்ந்து, தன் இனத்தவர்களான சர்ப்பங்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி வழிபட்டது இந்த ஆலயம் என்கிறது, ஆலய தல வரலாறு.

    பழங்காலத்தில் தச்சூர் என்ற இந்த இடம், வாசனை மிகுந்த முல்லை வகையைச் சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனமாக இருந்தது. இந்த வனத்திற்குள்தான் சுயம்புவாக தோன்றிய பிச்சீஸ்வரர் இருந்தார். அவரை அனுதினமும், எட்டு சர்ப்பங்களும் பிச்சி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அந்த எட்டு சர்ப்பங்களின் முன்பாகவும் தோன்றி, உலகில் உள்ள அனைத்து சர்ப்பங்களின் பாவங்களையும், சாபங்களையும் போக்கி, அவர்களுக்கு என்று தனி உலகத்தை (நாகலோகம்) ஏற்படுத்திக் கொடுத்து அருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த எட்டு நாகங்களும் இன்றும், இத்தல ஈசனை வழிபாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது. பல நாகங்கள் இந்தப் பகுதியில் உலாவுவதை, இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர்.

    சதா சர்வ காலமும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவர், அகப்பேய் சித்தர். இவர் தினமும் அருவமாக இத்தலத்திற்கு வந்து, அரவங்கள் (பாம்புகள்) வழிபட்ட இவ்வாலய சிவனை வழிபட்டுச் செல்வதாக அகத்தியர் நாடி சொல்கிறது. அப்படி அகப்பேய்ச் சித்தர் வழிபடும் சமயம், சில அபூர்வ நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதாக இந்த ஊர் மக்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.

    சோழர் காலத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்திருந்தது. ஒருவரின் கனவில் இங்கு சிவலிங்கம் இருப்பதாக தெரியவர, இந்த புற்று அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கடப்பாரை, புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் பட்டு ரத்தம் வந்ததாகவும், ஈச்சம் கீற்றுகளைக் கொண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் தைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தையலூர் என்று அறியப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது 'தச்சூர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தை முதலாம் பராந்தகச் சோழன் கட்டியிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டிடம் பல்வேறு காரணங்களால் வழிபாடு இல்லாமல் சிதைவை சந்தித்தது. இதனால் ஊர் மக்கள் நன்கொடையால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. தச்சூர் ஊரின் வடகிழக்கு திசையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தின் தென்புற வாசலில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும்.

    ஆலயத்திற்குள் நுழைந்ததும் முதலில் நிருதி மூலையில் இருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அடுத்ததாக வள்ளி-தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானை வணங்கலாம். ஆலயத்தின் மேற்கு தாழ்வாரத்தில் வீரபத்திரரும், அவருக்கு அருகாமையில் சர்ப்ப ராஜாவும் காட்சி தருகின்றனர். அழகிய சிற்பங்களுடன் கூடிய 21 தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான முன்மண்டபம், ஸ்தாபன மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் மூலஸ்தானம் இருக்கிறது.

    ஆலய கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், பிச்சீஸ்வரர். சிவலிங்கத்தின் இடப்பக்கம் கடப்பாரையால் வெட்டுப்பட்டத் தழும்பு பள்ளமாக உள்ளது. சீரற்ற சொரசொரப்பான லிங்கத்திருமேனியாக, இத்தல இறைவன் காட்சியளிக்கிறார். இந்த அபூர்வமான லிங்க மூர்த்திதான், தினந்தோறும் அகப்பேய் சித்தரால் வழிபடப்படும் இறைவன் ஆவார். அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன. ஆலயத்தை வலம் வரும் போது, வாமபாகத்தில் தனியாக சன்னிதி கொண்டு வீற்றிருந்து அருள்புரிகிறார், அன்னை பிரகன்நாயகி.

    ஆலயத்தின் ஈசான திசையில் நவக்கிரகங்களும், காலபைரவரும் வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயத்தில் பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நடத்தப்படும், அனைத்து அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பிச்சி மரமும், தீர்த்தமாக, கார்கோடக தீர்த்தம் இருக்கிறது.

    சர்ப்ப சாபம், சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத் திற்கு வருகை தந்து, பிச்சீஸ்வரரையும், பிரகன்நாயகி அம்மனையும் வழிபாடு செய்கின்றனர். மேலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்வதுடன், முல்லை மலர்களால் அர்ச்சித்தும், பால் பாயசம், அக்காரவடிசல் படைத்தும் வழிபட்டால், அனைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்குவதாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசிக்க முடியும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர்.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை முதல் 3 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி, நாளை மாலை 7 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30-ந் ேததி காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் ெபாங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு திருமஞ்சன திருவீதி உலா, பூங்கரகம், அக்னி கரகம், சக்தி கரகம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு மேல், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு கும்ப பூஜை செய்யப்பட்டு, இசக்கி அம்மன் குழந்தையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    மே 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர். 

    • வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில்‌ ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
    • இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில் ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஓங்காளியம்மன்,ஸ்ரீ மகா கணபதி, ஹீ சப்த கன்னிகள், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது 2 கருடன்கள் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தன. கும்பாபிசேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மண்டல அபிஷேகம் தொடங்கியது.

    • கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
    • வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது. செல்லப்ப சர்மா பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை நடத்தினர். நேற்று காலை 7.45 மணியளவில் மஹா பூர்ணாகுதி பூஜை செய்து கடம் புறப்பாடானது. பாராயணம் படித்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கிராம பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வணங்கினர், அம்மச்சியாபுரம் கிராம மக்கள், விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • 2½ உயரம் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது.

    கரூர் பஸ்நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. காமதேனு வழிபட்டதால் 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் 2½ உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

    நூறுகால் மண்டபம்

    இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளையும், 7 கலசங்களையும் கொண்டுள்ளது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தல விருட்சம் வஞ்சி மரம் ஆகும்.

    கோவிலில் உள்ள நூறுகால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச்சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கரூருக்கு உண்டு.

    எறிபத்த நாயனார்

    கல்யாண பசுபதீஸ்வரருக்கு சிவகாமி ஆண்டார் முனிவர் சாமிக்கு சாற்ற பூக்கள் கொண்டு வரும் போது புகழ் சோழர் அரசனுக்கு சொந்தமான பட்டத்து யானை, முனிவர் கையில் இருந்த பூக்குடலையை தட்டி விட்டது. இதனை கண்ட அங்கிருந்த எறிபத்த நாயனார், தன் கையில் இருந்த வாளால் பட்டத்து யானையின் தும்பிக்கையை வெட்டினார். மேலும் யானையுடன் வந்த பாகனையும், அரச வீரர்களையும், யானையையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு காரணமாக அமைந்த தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள் செய்தார்.

    பிரம்மனின் கர்வம் நீங்கியது

    இதேபோல் பிரம்மனுக்கு தன் படைப்பு திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, "புற்று ஒன்றுக்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு" என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது.

    இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், "நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்", என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்பு தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்து கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

    கருவூர் சித்தர்

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டபெருமை பெற்றது இந்த கோவில். 18 சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

    கல்யாண பசுபதீஸ்வரரை வணங்கினால் மனத்துயரம் நீங்கும், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். சில பக்தர்கள் தாலி, ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    -பாரதி, கரூர்.

    • 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம்.
    • எங்கள் நிலங்களை அடமானம் வைத்து குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமாக ஏராள மான நிலங்கள் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலை சுற்றியுள்ள களப்பாகுளம், சீவலராயனேந்தல், ராம நாதபுரம், ஆட்கொண்டார் குளம், வடக்குபுதூர், செந்தட்டி, வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு உரியவை என அறிவிப்பு வெளியானது.

    மேலும் இந்த நிலங்களில் பத்திர பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது என சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், சங்கரன் கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அவர்களும் பத்திரப்பதிவை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே அந்த நிலங்களில் பல ஆண்டு களாக வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் தெற்கு சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவில் துணை ஆணையர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:-

    நாங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம். இது எங்களுக்கு பாரம்பரியமாக சொந்தமாக உள்ளது. எங்களுக்கு பணம் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் எங்கள் நிலங்களை அடமானம் வைத்து அதன் மூலம் திருமணம், குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

    இந்த நிலங்களின் பெயரில் எந்தவித ஆதாரம் இன்றி அனுபவமின்றி கோவில் நிலங்கள் என ஆட்சேபனை தெரிவித்து பத்திரப்பதிவு நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.
    • பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ளது, கூத்தாண்டவர் கோவில். திருநங்கைகள், இக்கோவிலில் உள்ள கூத்தாண்டவரை தங்களின் குலதெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    கூத்தாண்டவர் வரலாறு

    ஒரு திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு என்றால், அது கூத்தாண்டவர் திருவிழாதான். அந்தளவிற்கு திருநங்கைகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய சடங்கு அது. திருநங்கைகளின் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு.

    மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், போருக்கு முன்பாக யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகன் வேண்டும். இதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே.

    அர்ச்சுனனும், கிருஷ்ணனும்தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியாக்க முடிவு செய்யப்பட்டது. அர்ச்சுனனும், கிருஷ்ணனும் அரவானிடம் இதுபற்றி பேசினர். அரவானும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே பலிக்களம் புகுவேன்" எனக்கூறுகிறார். ஆனால் அரவானை கணவனாக ஏற்க, வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை. விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள்.

    இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். ஓர் இரவு இல்லற வாழ்விற்கு பிறகு மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை மணமுடித்த மோகினி, விதவைக்கோலம் பூணுகிறாள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வரலாறு. இந்த கதையின் அடிப்படையில் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக உணரும் திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இருக்கிறது. இதனாலேயே இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.

    ஆண்டுதோறும் அரவானை வழிபட புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள். அரவான் களப்பலியை நினைவுபடுத்தும் விதமாக இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கும். 18 நாள் திருவிழாவில், இது முக்கியமான நிகழ்வு. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிவார்கள்.

    பின்னர் கோவில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக்கொள்வர். கை நிறைய வளையல், தலைநிறைய பூ சூடி திருநங்கைகள், கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். தொடர்ந்து, அன்று இரவு முழுவதும் அவர்கள் கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

    மறுநாள் பொழுது விடிந்ததும், கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கப்படும். அதனை தொடர்ந்து ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்படும். அப்போது திருநங்கைகள், சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். 108 தேங்காய், ஆயிரத்து எட்டு தேங்காய் என சூரைத் தேங்காய் அடிப்பார்கள். இதற்கிடையே கோவிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் புரி சுற்றப்படும். இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாகும்.

    பின்னர் கீரிமேட்டில் இருந்து மக்கள் பூஜை செய்து அரவானின் புஜங்கள், மார்பு பதக்கம் எடுத்து வருவார்கள். சிவலியாங்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடை கொண்டு வரப்படும். நத்தம் கிராமத்தில் இருந்து பாதம், கைகள், புஜங்கள் எடுத்து வருவார்கள். தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி கொண்டு வருவார்கள். இவை அனைத்தையும் வைக்கோல் புரி மீது பொருத்தி அரவான் திருவுருவம் அமைக்கப்படும். அதன் பின் தேரோட்டம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்குவார்கள்.

    அது மட்டுமின்றி 20 அடி நீள பூமாலைகளையும், வள்ளவாட்டுகளையும் (நீண்ட துண்டுகள்) அரவான் மீது வீசி பயபக்தியுடன் வணங்குவார்கள். திருநங்கைகளும், பக்தர்களும் பூக்களை பந்துகளாக செய்தும், நீண்ட மாலைகளையும் அரவான் மீது வீசுவார்கள். அவ்வாறு வீசிய மலர்களால் வைக்கோல் புரி மறைக்கப்படும். தேர் ஊர்வலமாக வரும்போது திருநங்கைகள் குவியல், குவியலாக கற்பூரம் ஏற்றி சுற்றி வந்து கும்மியடித்து பாட்டுப்பாடி மகிழ்வார்கள். இவ்வாறு கும்மியடித்து பாடுவது காதுக்கு இனிமை சேர்க்கும். தேர் ஊர்வலம் புறப்பட்டு வந்த பின்னர், தேர் அழிகளம் நோக்கி புறப்படும். அப்போது புதுமணப் பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள், தேர் அழிகளம் புறப்பட்டவுடன் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டபடி தேரை பின் தொடருவார்கள்.

    அங்கு அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது திருநங்கைகள், தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவார்கள். நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழிப்பார்கள். பூசாரிகள், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை அறுத்தெறிவார்கள். தங்கத்தாலிகளை திருநங்கைகள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுப்பார்கள்.

    அப்போது திருநங்கைகள் அழுது புலம்பி ஒப்பாரி வைப்பது உருகாத நெஞ்சத்தையும் உருக்கும். சொந்த கணவன்மார்களை இழந்தவர்கள்கூட இவ்வளவு உணர்வுப்பூர்வமாக அழுவார்களா? என ஐயப்படும்படியாக இருக்கும். பின்னர் திருநங்கைகள் அனைவரும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தலைமூழ்கி வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.

    வேண்டுதல் நிறைவேற தாலி கட்டிக்கொள்ளும் பக்தர்கள்

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ளும் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பக்தர்கள், தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றும் கூத்தாண்டவரிடம் மனமுருக வேண்டிக்கொள்வார்கள். இந்த வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சித்திரை திருவிழாவின்போது இக்கோவிலுக்கு வந்து திருநங்கைகளைப்போல் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் மறுநாள் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகளைப்போல் மற்ற பக்தர்களும் தாலியை, பூசாரி கையால் அறுத்துக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இங்கு சடங்காக இருந்து வருகிறது.

    சுப நிகழ்ச்சியை தவிர்க்கும் கிராம மக்கள்

    மகாபாரதப் போரில், அரவான் களப்பலி கொடுக்கப்படுவதை நினைவுபடுத்தும் வகையில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழாவின் 16-வது நாளில் அழிகளம் நிகழ்ச்சி நடக்கிறது. இதன் காரணமாக கூவாகம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த 18 நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்து விடுவார்கள்.

    உறுமை சோறு

    கூவாகம் கிராமத்தில் பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பலி சாதம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் உப்பு, புளி, மிளகாய் எல்லாம் ஒன்றாக சேர்த்து சமைத்த உணவு படைக்கப்படும். இதனை 'உறுமை சோறு' என்பார்கள். இந்த உறுமை சோறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. எனவே மக்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த உறுமை சோறு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

    கூத்தாண்டவர் கோவில்கள்

    இந்தியாவில் உள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கி வருவது கூத்தாண்டவர் கோவில். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தவிர விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அருணாபுரம், வானூர் தாலுகா தைலாபுரம், கடலூர் மாவட்டம் கொத்தட்டை, தேவனாம்பட்டினம், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம், மடுகரை ஆகிய இடங்களிலும் கூத்தாண்டவர் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளை ஊர் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், திருநடை திறப்பு, மாலை 6 மணிக்கு நையாண்டிமேளம், 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு பூஜை, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.

    26-ந்தேதி காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 8.30 மணிக்கு சிங்காரி மேளம், 9.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு வெள்ளை மாரியம்மன், மஞ்சள் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மனுக்கு பூப்படைப்பு, அலங்கார பூஜை, அதிகாலை 2 மணிக்கு செங்கிடாகாரசாமி, வழி வேட்டைக்காரசாமிக்கு பூஜை, அதிகாலை 5 மணிக்கு பிரம்ம சக்தி, சுடலை மாடசாமிக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

    இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • 3 முறை கோவிலை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
    • குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தா னத்தைச் சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    புண்ணிய நகராகிய துவாரகையில் எம் பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களை கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன் தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தன் பால்ய நண்பன் கிருஷ்ணரை காணச் சென்றார். கிருஷ்ணன் குசேலனை அன்பொழுக தழுவி வரவேற்று உபசரித்து விருந்து அளித்து மகிழ்வுடன் பேசி தனக்கு கொடுக்க கந்தல் துணியில் முடிந்த அவலை கேட்டு வாங்கி முகம் மலர்ச்சியுடன் இரண்டு கைப்பிடி உண்டவும் குசேலன் குடிசை விண்ணை தொடும் மாளிகை ஆனது. துவாரைக்கு நிகராக செல்வம் நிரம்பி வழியும் பெயர் பெற்ற நாள் அட்சய திருதியை என்று மக்களால் நம்பப்படுகிறது.

    அன்றைய தினம் இக்கோவிலில் பக்தர்கள் அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அளவு அவலை புது துணியில் அல்லது துண்டில் முடிந்து மூன்று முறை கோவிலை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். செல்வம் வளம் ஏற்படும். குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.அதன்படி இன்று காலை சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாரா தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அவல் முடிச்சு ஏந்தி மூன்று முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் அவல் முடிச்சு சமர்ப்பித்து தரிசனம் செய்தனர். சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அட்சய திருதியை வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

    ×