search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • இந்த கோவிலில் வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    • இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோவில்கள் வரிசையில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக செம்பனார்கோவில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் உள்ளது.

    மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் செம்பனார்கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உப்புச்சந்தை என்ற கீழையூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் ஊரின் பெயரை கொண்டு உப்புச்சந்தை மாாியம்மன் என அழைக்கப்படுகிறார். மழையின்றி உலகம் இல்லை. மாரி இல்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஊர்தோறும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மேலப்பாதி கிராமத்துக்கும், கீழையூர் கிராமத்துக்கும் இடையே இக்கோவில் உள்ளது.

    தற்போது கோவில் உள்ள இந்த பகுதி முற்காலத்தில் மிகப்பெரிய காடாக இருந்தது. இங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்புகார் கடற்கரை உள்ளது. பூம்புகார் பகுதியில் உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்புகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து இந்த இடத்தில் குவித்து ஏலம் விடுவது வழக்கம். உப்பு ஏலம் தொடா்ந்து இந்த பகுதியில் நடந்ததால் இந்த ஊர் உப்புச்சந்தை என்று அழைக்கப்படுகிறது.

    தலவரலாறு

    பழங்காலத்தில் மன்னர்கள் பூம்புகார் கடற்கரைக்கு சென்று தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வது வழக்கம். இவ்வாறு மன்னர்கள் செல்லும்போது சேவர்களும் உடன் செல்வர். இந்த ்நிலையில் தஞ்சை மன்னரிடம் பணிபுரிந்த ஒருவர் தனது குடும்பத்துடன் பூம்புகார் சென்று விட்டு திரும்பி வரும்போது, கீழையூர் என்ற பகுதியில் அவரது பெண் குழந்தை இறந்து விட்டது.

    உடனே அந்த இடத்தில் இறந்த சிறுமியை அடக்கம் செய்துவிட்டு திரும்பி விட்டனர். சிறுமி அடக்கம் செய்த இடத்தில் அதாவது தற்போது மாரியம்மன் கோவில் முன்பு உள்ள இடத்தில் அப்பகுதி சிறுமிகள் தினமும் விளையாடுவது வழக்கம்.

    கூழ் கேட்ட சிறுமி

    அந்த சிறுமிகளுடன் புதிதாக ஒரு சிறுமி தினமும் விளையாடி விட்டு மாலை நேரத்தில் மறைந்து விடுவாள் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை பற்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகள் ஊருக்குள் சென்று கூறினர். இந்நிலையில் ஒரு நாள், உப்புச்சந்தைக்கு அருகில் உள்ள திருச்சம்பள்ளி கிராமத்துக்கு அந்த சிறுமி வீடு, வீடாக சென்று பால் கேட்டாள். அவளுக்கு யாரும் பால் கொடுக்க மறுத்து விட்டனர்.

    ஒரு வீட்டிற்கு சென்று சிறுமி கூழ் கேட்டிருக்கிறார். உடனே அந்த வீட்டுப் பெண் சிறுமிக்கு கூழ் கொண்டு வந்து கொடுத்து உள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளாள்.

    தரையில் கொட்டிய பால்

    கூழையும், தண்ணீரையும் குடித்து அந்த சிறுமி அந்த பெண்ணை பார்த்து படுக்க இடம் கொடு என்று கேட்க, வீட்டிற்கு பின்புறம் சென்று படுத்துக்கொள் என்று கூறுகிறார். அந்த சிறுமியும் கொல்லைப்புறத்துக்கு சென்று படுத்துக் கொள்கிறாள். அந்த நேரத்தில் சிறுமிக்கு பால் தர மறுத்த வீடுகளில் பானை உடைந்து பால் தரையில் கொட்டுகிறது.

    அனைவரும் பயந்துபோய், சிறுமிக்கு கூழ் கொடுத்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமியை காணவில்லை. அதற்கு மாறாக சிறுமி படுத்திருந்த இடம் புற்றாக மாறியதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்தது அம்மன் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் தவறை மன்னிக்குமாறு அம்மனிடம் வேண்டினர்.

    ராஜகோபுரம்

    இதற்கிடையில் திருச்சம்பள்ளியில் ஒரு செல்வந்தரிடம் எனக்கு இருக்க ஒரு கொட்டகை கட்டித்தர வேண்டும் என அசரீரியாக சிறுமி வடிவில் இருந்த அம்மன் கேட்க அதன்படியே திருச்சம்பள்ளியில் கொட்டகை கட்டி தரப்பட்டது.

    முதலில் உப்புச்சந்தை மாரியம்மன் கோவில் சுரங்கத்திற்குள் இருந்தது. நாளடைவில் சிறிய கொட்டகை அமைத்து, சுரங்கத்தில் இருந்து வெளியே அம்மனை கொண்டு வந்தனர். பின்னர் திருப்பணிகள் நடந்து தற்போது 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக மாரியம்மன் கோவில் காட்சி அளிக்கிறது.

    முக்கிய விழாக்கள்

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று பால்குடம், காவடி விழா, ஆடி மற்றும் தை மாதத்தில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை, வைகாசி மாதம் 9 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும்.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. மாணவ, மாணவிகள், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வு நாளில் உப்புச் சந்தை மாரியம்மன் மற்றும்(சீதளாபரமேஸ்வரி) சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்ட பிறகே தேர்வு எழுத செல்வர். மேலும் நோய் தீர்க்கும் தலமாக உள்ள இந்த கோவிலில் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நோய்கள் நீங்க வேண்டி வழிபட்டால் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    நடை திறப்பு

    கோவிலில் நுழைந்த உடன் இடது புறத்தில் விநாயகர், வலது புறத்தில் முருகன் காட்சி அளிக்கிறார்கள். கோவிலுக்குள் பேச்சியம்மன், மதுரை வீரன், கோவிலின் பின் பக்கம் சரஸ்வதி ஆகிய சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இந்த கோவிலில் தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும். இக்கோவிலில் நடை காலை 7.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

    பகல் நேரத்தில் நடை திறந்து இருப்பது வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எந்த நேரத்திலும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதால் பகல் நேரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் 12 கி.மீ்ட்டர் பயணித்து கீழையூருக்கு சென்று உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலை அடையலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலுக்கு வர விரும்புபவர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • 11 வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேர்த்திக்கடனை செலுத்தி பூக்குழி இறங்குவார்கள். இந்த வருடமும் மார்ச் 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி பூக்குழி திருவிழா நடந்தது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு இன்று முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் பெரிய கடை வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் நடைபெற்றது.

    இதில் உறவின்முறை தலைவர் காமராஜர், செயலாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், பள்ளிச் செயலாளர்கள் மணி முருகன், செல்வம், சவுந்திரபாண்டி, குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோதண்டராமர் வில்-அம்பு இன்றி, கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
    • மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது.

    கோதண்டராமர் என்ற திருநாமத்தில், மகாவிஷ்ணு பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பொதுவாக கோதண்டராமர் என்றாலே, வில் அம்போடுதான் காட்சி தருவார். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். இத்தல இறைவனுக்கு 'சதுர்புஜ கோதண்டராமர்' என்று பெயர்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக்காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    தர்மதிஷ்டர் என்ற மகான், ஒரு சமயம் சாபத்தின் காரணமாக தோல் வியாதியால் பாதிப்படைந்தார். அந்த நோய் நீங்குவதற்காக அவர் இத்தலத்து கோதண்டராமரை வழிபட்டார். இதையடுத்து தர்மதிஷ்டரின் நோயை போக்கி அருளினார், கோதண்டராமர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனான கோதண்டராமருக்கு துளசி மாலை அணிவித்து கல்கண்டு படைத்து வேண்டிக்கொண்டால், தோல் வியாதிகள் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து திருமணக் கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் சீதாதேவி சமேத சதுர்புஜ கோதண்டராமரை தரிசித்து வணங்கினால், விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

    ராஜகோபுரம் இல்லாமல் காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், விளக்குத் தூண், பலிபீடம், கொடிமரம் முதலானவை காணப்படுகின்றன. அடுத்ததாக வழக்கமான இடத்தில் பெரிய திருவடி, ஒரு சிறு சன்னிதியில் சதுர்புஜ கோதண்டராமரை பார்த்த வண்ணம் வீற்றிருக்கிறார். முன்மண்டபத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறையில் புஷ்பக விமானத்தின் கீழ் சதுர்புஜ கோதண்டராமர் அமர்ந்த திருக்கோலத்தில், இடதுகாலை மடித்து வைத்த நிலையிலும் வலதுகால் திருப்பாதத்தை பூமியை நோக்கி வைத்தவாறும் கிழக்குதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். வலதுபுறத்தில் சீதாதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார். கோதண்டராமருக்கு அருகில் லட்சுமணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறைக்குள் சீதாதேவியை நோக்கி, அனுமன் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.

    பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி என்கிறார்கள்.

    இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம். ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.

    தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்திற்குள், 'சேஷதீர்த்தம்' என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
    • இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி யில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    முதலில் விநாயகர், 2-வதாக சோமேஸ்வரர், சவுந்தரவல்லி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. 3-வதாக பெரிய தேரில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி னார்.

    தேரோட்டத்தை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று மாலை தொடங்கிய தேரோட்டம், தாரமங்கலம் பிரிவு சாலையில் சென்று நிலை நிறுத்தப்பட்டது.

    2-வது நாளான இன்று மாலை தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து நங்கவள்ளி பஸ் நிலையம் வரையிலும், நாளை 8-ந் தேதி பஸ் நிலையத்தில் இருந்து நங்கவள்ளி பேரூராட்சி அலுவலகம் வரையிலும், நாளை மறுநாள் 9-ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு பிரிவு தோப்பு தெரு பிரிவு வரையிலும், 10ம் தேதி தோப்பு தெரு பிரிவிலிருந்து கோவில் முன்பு தேர் நிலை சேர்கிறது.

    இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கொடி யேற்றுதல் மற்றும் பூச்சாற்று தல், நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    4-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து முப்போடு அழைத்தல், 5-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தாங்களாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை காவிரி ஆற்றில் இருந்து அக்னி கிரகம், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை பூ மிதித்தல் மற்றும் சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா குப்புசாமி தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.
    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு கிராமத்தில் திருவள்ளூர்- செங்குன்றம் சாலையோரம் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகருமாரியம்மன் கோவில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கோவிலை அகற்றுவதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில் அகற்றப்படாமால் நெடுஞ்சாலை ஓரத்திலேயே இருந்து பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் முன்பு புற்று ஒன்றும் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெங்காயம் லோடு ஏற்றிய லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக செங்குன்றம் நோக்கிச் சென்றது. ஒதிக்காடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலைேயாரம் இருந்த பழமையான ஸ்ரீகருமாரி அம்மன்கோவில் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் கோவிலின் முன்பகுதி முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கோவில் முன்பு இருந்த புற்றும் இடிந்தது. மேலும் லாரியின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாக ஓடியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் விஜயகுமார் உயிர் தப்பினார். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் இடிந்ததால் பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர். திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கூட கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அப்படியே இருந்த நிலையில் லாரி மோதியதில் தற்போது சேதம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அடைந்த கோவிலை உடனடியாக சீரமைக்க கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.

    • கருமலை சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் கருமலை சாத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி 3 நாட்கள் சிறப்பு ஹோமம் நடந்தது.

    பின்னர் பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீப ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார் ராமசாமி தலைமையில் கடம் புறப்பாடகி, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் பூங்குன்ற நாட்டு அம்பலம் சண்முகம், கொன்னத்தான்பட்டி ஊர் அம்பலம், பழனியப்பா தேவர் என்ற விஜய், ஊராட்சித்மன்ற தலைவர் அழகு பாண்டியன், சின்ன அம்பலம் முத்தையா தேவர், பூசாரி கருப்பையா, சோலைமணி தேசிகர், கணேச வேளாளர், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சாத்தூர் அருகே கோவில் உண்டியல் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நாரணம்மாள் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் காலையில் கோவிலுக்கு சென்ற போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது.

    அவர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உண்டியலை பார்த்த போது பணம் திருடப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.40 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருச்சுழி தாலுகா வீரக்குடி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அங்குள்ள முருகய்யனார் கோவில் அர்ச்சகராக உள்ளார். சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு சென்ற போது கிரில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் சில கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. மர்ம நபர்கள் யாரோ கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி கோவிலில் அன்னதானம் நடந்தது.
    • குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை கரட்டில் பாலதண்டாயு தபாணி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


    இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி முன்னாள் மாநிலத்தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி வழங்கினார். இதேபோல் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.
    • இந்த கோவிலில் வழிபட்டால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். 'மச்சம்' என்றால் 'மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது. இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில்.

    இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    தல வரலாறு

    ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டினார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான்.

    ஒரு முறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது. அந்த மீன் மன்னனிடம், 'மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்' என்றது. மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது.

    அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான். என்னே அதிசயம்! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான்.

    'பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?' என்றான். அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, 'மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன்.

    அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்' என்று கூறிவிட்டு மறைந்தார். மகாவிஷ்ணு கூறியபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.

    • மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர்.
    • நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவில், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டதாகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமூகத்தினர், சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் தேடி நிலக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த சமயத்தில், நிலக்கோட்டை பகுதியில் வசித்த மக்கள் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நாடார் சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள், இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நிலக்கோட்டையில் மிக சிறிய அளவில் மாரியம்மனுக்கு கோவிலை கட்டினர். கோவிலின் அருகே தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து, பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். இதன் எதிரொலியாக, நிலக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட நோய் தாக்குதல்கள் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால் தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நாடார் சமூகத்தினர் நம்பினர். அதன்பிறகு கடந்த 1912-ம் ஆண்டில், இந்த கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும், நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் கூடிய பல்வேறு வேலைபாடுகளுடன் திருப்பணிகள் நடத்தி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து, மிக பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், பைரவர், லிங்கோத்துபவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வேண்டி வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தெய்வமாக மாரியம்மன் வீற்றிருக்கிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    வாழைப்பழம் சூறையிட்டு வழிபாடு

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல் வாழைப்பழ சூறையிடும் நிகழ்ச்சி திருவிழாவில் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

    மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர். இதற்காக கோவில் முன்பு வாழைப்பழங்களை குவியலாக வைத்து, சூறையிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த வேண்டுதல் நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கரும்புத்தொட்டில் சுமக்கும் தம்பதிகள்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அவர்களது கோரிக்கையை அம்மன் நிறைவேற்றுவார். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதிகள் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதன் மூலம் கரும்புகளில் தொட்டில் கட்டுவார்கள். குழந்தையை அதில் படுக்க வைத்து நிலக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து, பின்பு கோவிலை 3 முறை சுற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    அதன் பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் விழாவில் கரும்பு தொட்டில்களில் நேர்த்தி கடன் செலுத்தும் தம்பதிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருக்கிறது.

    நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது. பல்வேறு நோய்களும் தீர்ந்து வருகிறது. கோடைக்காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் பல்வேறு கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்கள் தீர அம்மனை மனதார வேண்டி கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிலில் வழங்கப்படுகிற தீர்த்தத்தை 3 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதேபோல் பிற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இக்கோவிலின் தீர்த்தம் உள்ளது.

    • கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.

    மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.

    ×