search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • இந்தக் கோவிலை ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    • இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

    இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுவந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை 1½ அடி உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

    3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

    அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பஞ்சபூத தலம்

    பவுர்ணமி அம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவீரமாகாளியம்மன் கோவில் பஞ்சபூத தலத்தை உள்ளடக்கியது. இந்தக் கோவிலின் முன்புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் கோவிலுக்கும், விநாயகர் சன்னிதிக்கும் இடையில் குளம் (நீர்) உள்ளது. கோவில் இயற்கை சூழ வயல்வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதில் 'புற்று' நிலம் என்றும், அம்மன் 'நெருப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோவில் பகுதியில் (காற்று) எப்போதும் சிலு, சிலுவென்று காற்று வீசிக்கொண்டே இருக்கும். கோவில் திறந்த வெளியில் (ஆகாயம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்றுடன் கூடிய பசு சிலை

    பாபவிமோசனம், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வகையில் கன்றுடன் கூடிய பசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்துள்ள பீடம் 3 அடி உயரமும், சிலை அமைப்பு 3½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகே புற்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த புற்றுக்கு தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. விநாயகருக்கு தல விருட்சமாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ளது. இந்த இரண்டு மரங்களுக்கும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டுள்ளது. வீரமாகாளியம்மனுக்கு தலவிருட்சமாக புளியமரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    -வெண்ணிலா, பள்ளியூர்.

    • இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
    • அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.

    வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.

    மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.

    அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.

    ஆஞ்சநேயருக்கு கோவில்

    கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள்

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.

    • இந்த கோவில் கேதுவின் அம்சமாக விளங்குகிறது.
    • நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது.

    தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் செய்து தேவர்பிரானாக மகா விஷ்ணுவின் காட்சி பெற்ற முந்தைய வரலாறு நாம் அறிந்ததே. அந்த தேவர்பிரானை அம் முனிவர் தினமும் யாரும் முகர்ந்து பார்க்காத அழகிய பெரிய செம்மை நிறம் கொண்ட தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வருகிறார்.

    இதற்காக இக்கோவிலின் வடக்கு புறம் உள்ள ஓரு பொய்கையில் தினமும் சென்று அந்த செந்தாமரை மலர்களை பறித்து வருகிறார். இந்த வழிபாட்டினால் பேரானந்தம் அடைந்த மகா விஷ்ணு ஒரு நாள் அந்த செந்தாமரை மலர்களை பறிக்க சென்ற முனிவரை பின் தொடர்ந்து செல்கிறார். அவர் பொய்கையில் செந்தாமரை மலர்களை பறித்து திரும்பும் போது தனக்கு பின் ஒருவர் நிற்பதை கண்டு அதிசயித்த முனிவருக்கு பெருமாள் தன் சுய உருவில் காட்சியளித்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த முனிவர் தனக்கு காட்சியளித்த கோலத்திலேயே அங்கு நித்ய வாசம் புரிய வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த பெருமாளும் நான் செந்தாமரை மலர்களை விரும்பி இங்கு வந்ததால் அரவிந்தலோசனன் என்னும் திருநாமத்தில் அங்கேயே நிரந்தரமாக காட்சியளிப்பதாக கூறி முனிவருக்கு அருள்புரிந்தார்.

    அசுவினி குமாரர்களுக்கு அருள் செய்த வரலாறு:

    முற்காலத்தில் அசுவினி குமாரர்கள் என்னும் இரண்டு தேவ சகோதரர்கள் வைத்திய சாத்திரங்களுக்கு அதிபதியாக விளங்கி வந்தார்கள். அவர்கள் பூ உலகில் நடைபெறும் யாகங்களில் இருந்து அவர்களின் பங்கிற்குரிய அவிர்ப்பாகம் பெற்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களுக்கு வர வேண்டிய அவிர்ப்பாகம் தடைபட்டது. அதற்குரிய காரணத்தை பிரம்மனிடம் கேட்க, பிரம்மதேவனோ பூ உலகில் வைத்திய சாத்திரம் கற்ற வைத்தியர்கள் செய்த பாவத்தினால் உங்களுக்கு வர வேண்டிய அவிர் பாகம் தடைபட்டுள்ளது, அதனை சரி செய்ய நீங்கள் பூ உலகம் சென்று தாமிரபரணி நதிக்கரையில் உறையும் அரவிந்த லோசனனை நினைத்து தவமியற்றினால் பயன் பெறலாம் எனக் கூறினார்.

    அதன்படி அந்த அசுவினி குமாரர்கள் இருவரும் பூ உலகம் வந்து இத்தல அரவிந்தலோசனரை வழிபட்டு வந்ததன் பலனாக, பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து வேண்டும் வரம் தருவதாய் வாக்களிக்க, அசுவினி குமாரர்களோ யாகங்களில் இருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் முறைப்படி கிடைக்க வேண்டும் என வேண்டிட, பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். அந்த அசுவினி குமாரர்கள் இங்கு நீராடிய தீர்த்தமே அசுவினி தீர்த்தம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

    விபிதனின் குஷ்ட நோய் தீர்த்த வரலாறு:

    முற்காலத்தில் அங்கமங்கலம் என்னும் ஊரில் சத்தியசீலன் என்னும் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரிய விஷ்ணு பக்தர் ஆவார். அவருக்கு வன்னிசாரன், விபிதகன், சொர்ணகேது என மூன்று மகன்கள் இருந்தனர். இதில் விபிதகன் என்பவன் முற்பிறவி வினைப் பயனால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட, அது கண்டு வருந்திய சத்தியசீலரிடம், நாரதர் மகிரிஷி வந்து உன் மகன் முற்பிறவியில் தன் குருவுக்கு நிந்தனை செய்த காரணத்தினால் தான் இப்பிறவியில் குஷ்ட நோய் பீடித்துள்ளது என்றும் அதனை போக்க தாமிரபரணி கரையில் உள்ள அசுவினி தீர்த்தத்தில் நீராடி, அரவிந்தலோசனருக்கு செந்தாமரை மலர்களால் அர்சித்து வழிபட்டு வர நோய் நீங்கும் என கூறுகிறார்.

    அதன்படி விபிதகனும் இங்கு வந்து அசுவினி தீர்த்தத்தில் நீராடி, செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்சித்து வழிபட அவனை பீடித்திருந்த குஷ்ட நோய் நீங்கியதாகவும் கூறப்படுகிறது.

    மூலவர் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள்:

    கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில், தன் இரு தேவியர்களோடு காட்சியளிக்கிறார் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயம் வரதம் காட்டியும், அருள்பாலிக்கிறார். இங்குள்ள உபய நாச்சியாரான தாயார் கருத்தடங்கண்ணி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். அதாவது கரிய நிறமுடைய கண்களை கொண்டவள் என்பது அந்த திருநாமத்தின் பொருள் ஆகும்.

    உற்சவர் செந்தாமரைக்கண்ணன் சிறப்பு:

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு செந்தாமரை கண்ணனாக ஸ்ரீ தேவி, பூதேவி உடன் அருள்பாலிக்கிறார். இவர் செம்மை நிறமுடைய தாமரை மலர்களை ஏற்று அருள்புரிவதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை 1008 செந்தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு எழுந்தருளி உள்ள துலைவில்லி தாயார் இத்தலத்தின் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்று விளங்குகிறாள்.

    நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    • இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

    திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலும் ஒன்று. திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோவிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.

    கோவில் வரலாறும் திருவிழாவும்:

    நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோவிலுக்கு "குட்டி குடி திருவிழா" என்று நடத்தப் படுகிறது.

    கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து)

    ஆபத்தான ஆறுகள்:

    இந்த கோவில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோவிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோவிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.

    கோவில் அமைந்துள்ள இடம்:

    திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    • இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது.
    • இந்த கோவில் ராகுவின் அம்சமாக விளங்குகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலை வில்லிமங்கலம்" தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    மூலவர் பெயர்: சீனிவாச பெருமாள்.

    உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள்.

    தாயார்: அலர்மேல் மங்கை தாயார், பத்மாவதி தாயார்.

    விமானம்: குமுத விமானம்.

    தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி.

    கோவில் விருட்சம்: விளா மரம்.

    கோவில் வரலாறு:

    முற்காலத்தில் சுப்பரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். அவருக்கு ஒரு முறை பெரும் யாகம் செய்ய ஆசை ஏற்பட்டது. அந்த யாகத்தை நடத்துவதற்கு தகுந்த இடம் தேடி அலைகிறார் முனிவர். அந்த வேளையில் தான் தாமிரபரணியின் கரையில் தென்றல் தவழ்ந்து, அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிய சோலையாக திகழ்ந்த ஒரு இடத்தை கண்டு அதனை யாகம் செய்ய ஏற்ற இடமாக தேர்வு செய்கிறார் சுப்பரர். அவர் மனது மகிழ்ச்சியடையும் படியே அனைத்து சிறப்புக்களையும் கொண்டு திகழ்ந்த அந்த இடத்தில் முதலில் தான் தங்குவதற்கு ஒரு குடில் அமைத்தார்.

    பின்னர் வேள்விச்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கொத்தி சீர் செய்தார். அப்போது ஓர் இடத்தில் மண்ணை கொத்திய போது, அங்கு ஓர் தராசும், வில்லும் கிடைக்கிறது. அதனை தன் கைகளால் முனிவர் வெளியே எடுக்க, அப்போது அந்த தராசு ஓர் அழகிய ஆண் மகனாகவும், வில் ஓர் அழகிய பெண் மகளாகவும் மாறிட, முனிவரோ அதிசயித்து நின்றார். அப்போது அந்த ஆணும், பெண்ணும் தம்பதியாக முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி நிற்கின்றனர். அவர்களை ஆசிர்வதித்த முனிவர், அவர்களிடம் தாங்கள் யார்? எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஆண் மகனாக இருந்தவர் தான் ஒரு தேவகுமாரன் என்றும் தன் பெயர் வித்யாதரன், இந்த பெண் என் மனைவி, நாங்கள் இருவரும் தேவலோகத்தில் மகிழ்ச்சியாக இருந்த போது அங்கு வந்த குபேரனை மதிக்காமல் அவமரியாதை செய்த காரணத்தால், அவரால் சபிக்கப்பட்டு இந்த பூ உலகில் தராசாகவும், வில்லாகவும் மாறி வீழ்ந்தோம் என்றும், பின் தங்கள் தவற்றை உணர்ந்து குபேரனிடம் மன்றாடியதன் பலனாக, அவர் மனம் இறங்கி நீங்கள் இருக்கும் பூ உலகில் ஒரு தவ முனிவர் வருவார், அவர் கைகளால் நீங்கள் தீண்டப்படும் போது சாப விமோசனம் பெற்று சுய உருவை பெறுவீர்கள் என அருளினார் என்றும் அதன்படி தாங்கள் எங்களை தொட்டு தீண்டியதால் விமோசனம் பெற்றோம் எனக்கூறி முடித்தார்.

    இதனைக் கேட்ட முனிவர் அகம் மகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, அந்த இடத்தில் முறைப்படி வேள்விச் சாலை அமைத்து, பல்வேறு யாகங்களை மேற்கொண்டார். யாகத்தில் இருந்து தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் முறைப்படி அவர்களுக்கு பகிர்ந்து அளித்த அந்த முனிவரின் யாகத்தின் பலனாக இறுதியில் மகாவிஷ்ணு சீனிவாசனாக காட்சி அளித்து அந்த முனிவருக்கு அருளை வாரி வழங்கினார்.அந்த யாகத்தில் தேவர்களின் சார்பாக இருந்து அவிர்பாகங்களை ஏற்று பகிர்ந்து அளித்ததால் இத்தல பெருமாள் தேவர்பிரான் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.

    மூலவர் சீனிவாச பெருமாள்:

    கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் சீனிவாச பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார்.இங்கு தாயார்களுக்கென தனி சன்னதி இல்லை. அலர்மேல் மங்கை தாயார் மற்றும் பத்மாவதி தாயார் தனி உற்சவத் திருமேனிகளாகவே இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.

    உற்சவர் தேவர்பிரான் சிறப்பு:

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு தேவர்பிரானாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.

    கோவில் அமைப்பு:

    தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான தேவர்பிரான் கோவில் அமையப்பெற்றுள்ளது. இது இரட்டை திருப்பதி என வழங்கப்படும் இரண்டு கோவில்களுள் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்ச வராகிய தேவர்பிரான் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் நின்ற கோலத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி கிடையாது. வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.

    கோவில் சிறப்புக்கள்:

    இங்கு பத்மாவதி தாயார் தன் மார்பில் மகா விஷ்ணுவை தாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த கோவிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது தீராத பல நோய்களையும் தீர்த்து வைப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இரட்டைத் திருப்பதி என வழங்கிவரும் இங்கு ஒரே இடத்தில் அருகருகே இரண்டு தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளது. அதில் இக்கோவில் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    துலை எனப்படும் தராசும், வில்லும் இங்கு சாப விமோசனம் பெற்றதால் துலைவில்லிமங்கலம் என்ற பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக் கோவிலின் புராணப் பெயர் திருத்தொலைவில்லிமங்கலம் ஆகும்.

    முக்கிய திருவிழாக்கள்:

    கார்த்திகை மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல தேவர்பிரான் பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார். இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம்:

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று, அங்கிருந்து தனியார் வாகனங்களில் இக்கோவிலை சென்றடையலாம்.

    • சோழவந்தான் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் செய்தனர். சுவாமியும்-அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து ''சிவாய நமக... சிவாய நமக...'' என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்-எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம்.தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசவரர் கோவிலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பேரூர்,

    பேரூர் அருகே பச்சாபாளையத்தில், புலிவீரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, மார்ச் 1-ந் தேதி நிலமகள் வழிபாடு, முதல் நிலை வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து மாலை, முதல் கால வழிபாடும், மார்ச் 2-ந் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு 2ம் கால வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து, மாலை 3ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 4-ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேல், விநாயகர், குப்புலட்சுமி தாயார், புலிவீரய்யன் ஆகிய கோவில் விமான கலசங்களுக்கும், தெய்வ த்திரு மேனிகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை, ஓதுவா மூர்த்திகள் ஜெயபிரகாச நாராயணன், பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்க ப்பட்டது.இதில், திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் நாகராஜ், செயலாளர் தனபால், பொருளாளர் வேலுச்சாமி, திருப்பணி குழுத்தலைவர் போலீஸ் வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் குப்புசாமி, கோபால், நாகராஜ் உள்பட ஊமத்தகுல ஆண் மக்களும், பெண் மக்களும் செய்திருந்தனர்.

    • சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
    • இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.

    கோ" என்றால் பசு, அதே போல் "சே" என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும்

    "மாட்டூர் அரவா" என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம்.

    சோழர்களின் புகழ்பெற்ற அரசன் "கரிகாலன்" தான் இழந்த சோழநாட்டை சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை(கோனாட்டை) கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.

    இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.

    வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை எக்காலத்திலும் வென்றவன். இராவணனோ எமனை வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி. மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான்.

    அவனை இருவரும் துரத்தி சென்ற போது வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து "தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்" என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.

    வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான், ஆனால் அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம் சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர் நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும் அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம் அனைத்தும் நீங்கும் என்று அருளினார்.

    அது போல வலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும் என்றும் உபதேசம் செய்தனர். அவ்வாறு வாலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவரை கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். அதுமட்டுமில்லாமல் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம் திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறியலாம்.

    • கும்பகோணத்தில் நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.
    • கும்பகோணத்தில் எந்த பிரச்சனை தீர எந்த கோவிலை வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    தமிழ்நாட்டில் ஆலயங்கள் கொண்ட நகரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் காஞ்சிபுரமும், கும்பகோணமும் முக்கியமானவை. இந்த இரண்டு நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றிலும் கும்பகோணம் தோஷங்களைப் போக்கும் ஆலயங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இங்கு நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. குழந்தைப் பிறப்பு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய கும்பகோணத்தில் கோவில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி

    கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்

    நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்

    ஞானம் பெற - சுவாமிமலை

    கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்

    எடுத்த காரியம் வெற்றி பெற - பட்டீஸ்வரம்

    உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோவில்

    செல்வம் பெறுவதற்கு - உப்பிலியப்பன் கோவில்

    கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்

    இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

    பெண்களுக்கு ருது பிரச்சினை தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)

    திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி

    நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் உடனாய மங்களாம்பிகை

    மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி

    பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி

    கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்

    பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்

    எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்

    நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்

    • மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம்.
    • ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.

    ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக, தானாகத் தோன்றுபவை. இவை மனிதனால் உருவாக்கப்படாத அதிசயங்கள். ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. பூஜிப்பவர்களுக்கு ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்மஞான தத்துவத்தை சூட்சுமமாக உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள் இவை.

    பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கம் உருவாகியது. அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் அமைந்திருக்கும் சென்னப்பமலைத் திருத்தலத்தில் 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் அருளால் 'ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்' ஜோதிர்லிங்கம் பூமியிலிருந்து தானாக தோன்றியது. பல யுகங்களாகத் தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் இது 13-வது ஜோதிர்லிங்கமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம்.

    தோற்றத்தில் நமக்குப் பழக்கப்பட்ட லிங்கத்தைப் போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோற்றம் கொள்பவை. ஏற்கனவே உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தால் இந்த உண்மை தெரியும். ஜோதி வடிவில் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உலகம் தோன்றிய நாள் முதல் கொண்டு இந்தியாவில் ஏற்கனவே பன்னிரெண்டு திருத்தலங்களில் ஜோதிர்லிங்கங்கள் தோன்றியுள்ளன.

    பாற்கடலை தேவர்களும் அசுரர்களும், வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வெளிவந்த அமிர்தத்தை, அசுரர்கள் பறித்துச்சென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தந்த ஸ்தல புராணங்கள் ஜோதிர்லிங்கங்களின் பெருமைகளை பறைசாற்றினாலும், அவற்றில் பல ரகசியங்களும் மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக உள்ளது.

    இத்தகைய அதிசய ஜோதிர்லிங்கம்தான் இந்த பூவுலகின் 13-வது ஜோதிர்லிங்கமாக சென்னப்பமலையில் 2002-ம் ஆண்டு உருவாகியது. இயற்கையாக, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட புண்ணிய திதியில், சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, சூட்சும ரூபத்தில் முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க, பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, விண்ணும் மண்ணும் ஜோதியாக இணைந்து, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, பூமியிலிருந்து மேலெழுந்து ஜோதிர்லிங்கமாக வெளிவந்தது. இதை 'லிங்கோத்பவம்' என்கிறோம்.

    ஸ்ரீ பொன்முடி சூர்யநந்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இந்த ஜோதிர்லிங்கம், ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ஆத்ம லிங்கம் இது. முடிவேயில்லாத ஆனந்தத்தையும், எல்லையில்லாத அமைதியையும், பிறவிப் பயன்தரும் பிரம்மஞானத்தையும் அள்ளித்தரும் கோடிலிங்கம். ஜென்ம ஸாபல்யம் தரும் அமிர்தலிங்கம். இந்த தெய்வீக அனுபவத்தை அனைவரும் இங்கே உணரலாம்.

    தல வரலாறு

    பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி (அம்பிகை) முன்னொரு காலத்தில், 'தென் கைலாயம்' என்று போற்றப்படும் பனங்காட்டு பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலை திருத்தலத்தில் தவமிருந்தாள். சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கும், இந்த பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலை திருத்தலத்தில் அருள்பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.

    அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மகா சிவராத்திரி அன்று 'தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து உயிரினங்களும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்' என்று பரமன் வரம் அருளினார் என்று தலபுராணம் கூறுகிறது.

    அதன்படி 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இத்தல ஜோதிர்லிங்கமாக தோன்றி, அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் தலமாக மாறியது. அனைத்து உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்து சாப விமோசனம் அளிப்பது இந்த தலத்துக்கு மேலும் சிறப்பு.

    ஒவ்வொரு ஜோதிர்லிங்க திருவாலயமும் அதன் தலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பு வழிபாட்டு முறைகள், நியதிகள் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கே உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், கற்றவன்-கல்லாதவன், ஆண்-பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று 'நாளும், பொழுதும்' வளமும் பெற இறைவன் வரம் தரும் திருத்தலம் இது. மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.

    ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, வித்யா (கல்வி, தொழில்) பாக்கியம், மாங்கல்ய (திருமணம்) பாக்கியம், சந்தான (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.

    -வெ.நாராயணமூர்த்தி, வேலூர்.

    • இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை உள்ளது.
    • வன்மீக நாதசாமி கோவிலின் தல விருட்சம் நெல்லி மரம்.

    சிவாலயங்களுக்கு பிரசித்தி பெற்ற தஞ்சை மாவட்டத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையோரம் நீங்கா புகழுடன் பக்தர்கள் மனதில் நிலையாக இடம் பிடித்துள்ள கோவில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவில்.

    தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்தபோது பல பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றை கட்டி அதற்கு வழிபடும் முறைகளையும் வகுத்தனா்.

    பண்டைய சோழ மன்னர்களும் அவர்களோடு இணைந்த வேத ஆராய்ச்சியாளர்களும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன சிறப்புகள் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் கோவில்களை அமைத்து அவற்றை சிறப்பாக பராமரித்து பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தனர்.

    அந்த வகையில் கட்டப்பட்டிருந்த பல்வேறு கோவில்கள் சிதிலம் அடைந்திருந்த போதிலும், பின்னர் அவற்றுக்குரிய சிறப்புகளை அறிந்து அவற்றை சீரமைத்து தினசரி வழிபாட்டுக்குரிய வகையில் இந்து சமய அறநிலைத்துறையும் மற்றும் ஆன்மீக பெரியோர்களும் செய்து வந்துள்ளனர்.

    ஜோதிட வல்லுனர்கள்

    சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சைக்கு அருகில் பல்வேறு சிவன் கோவில்களை எழுப்பி உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. அந்த வகையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வன்மீக நாதர் கோவில். ஒன்பத்துவேலி கிராமத்தின் வடகிழக்கில் சோமகலா அம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    ஒன்பத்துவேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுனர்களும், கணித மேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்துவேலியாகும். தற்போதும் நவாம்சம், நவநீதிகள், நவபாஷாணம், நவ மூலிகைகள், நவசாரம், நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் என்பதாக ஒன்பது வகையான நவ சாதனங்கள் ஆன்மிக ரீதியாக பொங்கி பொழியும் தலம் என்பதால் ஜோதிடர்களும், குறிப்பாக எண்கணித ஜோதிடர்களும், நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீகநாதசுவாமி கோவில் ஆகும்.

    நினைவாற்றல் பெருகும்

    இங்கிருந்து வான்வெளிநட்சத்திர கோள் தரிசனங்களை பெறுதல் நல்ல நினைவாற்றலை பெற்றுத்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதசாமி என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். அம்பாள், சோமகலா அம்பாள். இவர் சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர்.

    வன்மீக நாத சாமி கோவிலின் தல விருட்சம் நெல்லி மரம். நெல்லிமரத்தின் அடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றிற்கு அபிஷேகம் நடந்து வருகிறது. முற்காலத்தில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து குதிரையில் ஒன்பத்துவேலிக்கு வந்து முன்னிரவில் வானில் நட்சத்திர தரிசனங்களை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    பிறந்த நாளில் வழிபாடு

    ஒன்பத்து வேலி வன்மீகநாத சாமி கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி வந்த செய்தியாக அறியப் படுகிறது. ஒன்பத்துவேலியில் அருள்பாலிக்கும் வன்மீகநாதர், வான் மேகநாதர் என்றும் அழைக்கப்படுகிறாா்.

    பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீகநாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.

    9-ந் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும். 9 என்பது செவ்வாய்க்கு உரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீகநாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும். இக்கோவிலில் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நடந்தது.

    18 கை வனதுர்க்கை

    இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை உள்ளது. வனதுர்க்கையை எலுமிச்சை தோலில் விளக்கேற்றி வழிபட்டு வர பில்லி சூனியம், செய்வினை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் வேறு எங்கும் 18 கை உடைய வனதுர்க்கை சன்னதி இல்லை, இத்திருக்கோவிலில் மட்டும் 18 கை வனதுர்க்கை உள்ளது. 18 கை வனதுர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பூஜை நடந்து வருகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து ஒன்பத்துவேலி வன்மீகநாதா் கோவிலுக்கு வர வரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பஸ்சில் பயணித்து பாம்பாலம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய பஸ் வழித்தடத்தில் பயணித்து கோவிலுக்கு செல்லலாம்.

    • தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206-வது தேவாரத்தலம் ஆகும்.
    • இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது

    மூலவர் - திருமுருகநாதஸ்வாமி, திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்

    அம்மன் - முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை, ஆவுடை நாயகி, மங்களாம்பிகை

    தீர்த்தம் - சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

    கோவில் வரலாறு:

    புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206-வது தேவாரத்தலம் ஆகும்.

    சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார்.

    இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள். "இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது".

    இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

    கோவில் அமைப்பு:

    நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.

    கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    கோவிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவிழா: மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

    இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    ×