search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • பூட்டை உடைத்து ஒன்றரை சவரன் தாலி-ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ தரணீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இதன் அருகே பொன்னியம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளது. இக்கோவில்களுக்கு அருகே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,முக்கரம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மாம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில், இக்கோவில்களின் அர்ச்சகர்கள் நேற்று இரவு கோவில்களை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பூஜை செய்ய கோவிலுக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத தரணீஸ்வரர் திருக்கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி மற்றும் பொன்னியம்மன் கோவிலிலிருந்த உண்டியல், ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.30,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயின் நிலத்தில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு வைத்திருந்த சுமார் 35 லிட்டர் டீசலை கீழே கொட்டி விட்டு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகளை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றில் கிராம மக்கள் மற்றும் விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.
    • சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

    குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 12 சிவாலயங்களுக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதனை இப்பகுதியில் காண்போம்.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:-

    மார்த்தாண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது மதுரை திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் எனவாய்மெழி கதையாக கூறப்படுகிறது. முன்சிறை கிராமத்துடன் ராமாயணத்தை இணைக்கும் வாய்மொழிச் செய்திகளும் உள்ளது. அதாவது ராவணன், சீதையை சிறைவைத்த முதல் இடம் (முன்சிறை) என்று சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலின் மூலவரை சூலபாணி என்று கூறுவார்கள். பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை, முருகன் சிறைபிடித்து வைத்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில்:-

    நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் அமைக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த கோவிலில் நந்தி இல்லை. திக்குறிச்சி ஊருக்கு ஒருமுறை வந்த காளை ஒன்று ஊர் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லால் எறிந்து அதை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மிரண்டு விரட்டியவர்களை எதிர்த்தது. இதையறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்த காளையை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது கோவிலில் இருந்த நந்தியும் மாயமாகி விட்டது என்றும், அதன்பிறகு இந்த கோவிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    திற்பரப்பு மகாதேவர் கோவில்:-

    பன்னிரு சிவாலயங்களில் 3-வது கோவில் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவரான சிவன், வீரபத்திரர், ஜடாதரர் என அழைக்கப்படுகிறார். வீரபத்திரரும் காளியும் சேர்ந்து தட்சனை வதம் செய்தபிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் வழிபடுவது வழக்கம். திற்பரப்பு அருவி பாயும் பகுதியில் ஒரு குகை உள்ளது. இங்கு காளி புடைப்பு சிற்பமாக இருக்கிறாள்.

    திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்:-

    இந்த கோவில் வெயில் அறியாத ஊரில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. நந்தி ஓடையில் (முன்பு நந்தியாறு) கரையில் சோலையாக அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவே உள்ளது. இந்த ஊர்த் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக் கோவில் சிவலிங்கம் மிதப்பதுபோல் கனவு கண்டார். அடுத்தநாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும், ஊர்மக்கள் கண்டனர். பின்னர் மன்னர் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்படடது.

    நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இது தொடர்பாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இந்த ஊருக்கு வந்தது. அது ஊர் மக்களைப் பயமுறுத்தியது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே சிறிய குழியில் அமர்த்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. கோவில் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.

    பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்:-

    இந்த பகுதி காடாக இருந்தபோது காணிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தைக் கண்டார். இது ஊர் மக்களுக்குத் தெரிந்து அங்கே ஒரு கோவில் கட்டினர். அதனால்தான் தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

    திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில் :-

    இந்த கோவில் தலப்புராணம் மகாபாரதத்துடன் தொடர்புடையதாகும். பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கிதவம் செய்த அர்ஜுனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையதாகும். குமரி மாவட்ட கோவில்களில் பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கும் ஒரே கோவில் இதுதான்.

    பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் :-

    இந்த கோவிலில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. ஆகும். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் இந்த கோவிலைக் கட்டினான் என்று தலப்புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தை மதுரைைய ஆண்ட திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழிச் செய்தியாகும். இங்குள்ள அம்மன் கோவில் வாசலின் எதிரே உள்ள தூண்களில் திருமலை நாயக்கரும், அவரது தம்பியின் சிற்பமும் உள்ளது.

    மேலாங்கோடு காலகாலர் கோவில் :-

    இந்த கோவிலின் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனைநோக்கி தவம் இருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, புத்தியுள்ள ஒரு ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோவிலுக்குள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனைக் குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்படுகிறார்.

    திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில் :-

    ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக நடந்து வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். இந்த அதிசயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தைப் பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் என அழைக்கப்பட்டார். கி.பி. 16-ம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் சடையப்பர் கோவில் என அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் மூலவர் லிங்க வடிவம் கொண்டவர். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது. இந்த கோவிலின் கல்வெட்டு ஒன்று மூலவரை ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருப்பவர் என்றும், நம்பூதிரிகள் மூலவரை பரிதிபாணி என்றும் கூறுகின்றனர்.

    திருவிதாங்கோடு சிவன் கோவிலைப் பிற 11 சிவாலயங்களிலிருந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில் இருந்தும் பிரித்துக் காட்டும் அம்சம் இங்குள்ள சிற்பங்கள்தான். சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்களிலும் நடக்கிறது.

    திருப்பன்னிபாகம் மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் தொடர்பான கதை மகாபாரதம் அர்ஜூனன் தபசுடன் தொடர்புடையது. அர்ஜுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ஜுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றான வராக அவதாரக் கதையுடனும் இந்த கோவில் புராணத்தை இணைத்துக் கூறுகிறார்கள்.

    நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:-

    இந்த கோவில் கருவறை மூலவரை அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றனர். கி.பி. 16, 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கருதலாம்.

    சிவாலய ஓட்டம் தொடர்பான மகாதேவர் கோவிலின் முன்பு இருக்கும் குளத்தின் முன் சங்கரநாராயணர் கோவில் உள்ளது. இதன் கருவறையில் லிங்க வடிவ சங்கரநாராயணர் இருக்கிறார். இந்த கோவில் மண்டபத் தூண்களிலும், நமஸ்கார மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. இவை அரச குடும்பத்தினரின் சிற்பங்கள். இந்த சிற்பங்களின் அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது.

    • மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
    • 18-ந்தேதி இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாப்பட உள்ளது.

    திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் திருநெல்வேலிக்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் வீரவ நல்லூர். இவ்வூருக்கு வடமேற்கில் ஏறத்தாழ ஆறு கி.மீ. தொலைவில் பொருநை ஆற்றங்கரையில் திருப்புடை மருதூர் கிராமம் உள்ளது. கடனா ஆறு என்ற ஆறு இப்பகுதியில் பொருநை ஆற்றில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு சற்று அருகில் நாறும்பூநாத சாமி கோவில் உள்ளது. மருதமர காட்டுப் பகுதிக்குள் அற்புதம் நிகழ்த்தி ஆண்டவன் வெளிப்பட்ட திருத்தலம்.

    ஒரு சமயம் கொடிய வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தன் படை பரிவாரங்களோட மன்னன் ஒருவன் வந்திருந்தான். நீண்ட நேரம் எங்கும் அலைந்தும் எதுவும் அகப்படாத நிலையில் மருத மரங்கள் நிறைந்திருந்த வனத்துக்குள் படை பரிவாரங்களோடு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.

    அந்த சமயத்தில் அழகிய புள்ளிமான் ஒன்று மின்னல் போல் துள்ளி குதித்து ஓடி ஒளிந்தது. அதனைப் பிடிக்க எண்ணிய மன்னன் தனது வில்லிலிருந்து கூரான அம்பை குறி பார்த்து எய்தான். அம்பால் தாக்கப்பட்ட மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே நின்று சென்று மாயமாய் மறைந்து போனது. இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு. அருகே கிடந்த கோடரியால் மருத மரத்தை வெட்டினான். அந்த வேலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் லிங்க வடிவில் வெளிப்பட்டான் .

    இந்த அதிசய காட்சியை கண்ட மன்னன் பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கினான். மன்னன் இறைவன் தன்னை ஆட்கொண்டு அந்த மருதவனத்தில் வெளிப்பட காரணமான பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் கட்ட மனதில் உறுதி கொண்டான். அவ்விடத்தில் ஒரு கலைக்கோயில் ஒன்று உருவானது. திருப்புடைமருதூரில் கருவறையில் காணும் நாறும்பூநாத சுவாமி பீடத்திலிருந்து சற்று ஒருக்களித்து இடப்பக்கம் தலை சாய்த்து இருக்கிறார்.

    அது உண்மையிலேயே பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சித்தர் வேண்டிய ஒன்றாகும். கருவூர் சித்தர் நாறும்பூ நாதரை தரிசிக்க தாமிரபரணியின் அக்கறையில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த நேரம் ஆற்றிலே பெரும் வெள்ளம் சுழிப்போடு ஓடிக்கொண்டிருந்தது. எனவே கரையில் நின்றவாறு "நாறும் பூ நாதா! உன்னை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். தாமிரபரணியில் வெள்ளம் புரண்டோடுகிறது. இக்கரையில் இருக்கிறேன் உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா" என்று உரக்க குரல் கொடுத்து நாறும் நாதரை அழைத்தார்.

    பக்தனின் குரலுக்கு செவி சாய்க்கும் நாறும்பூநாதர் தன் தலையை சிறிது திருப்பி "உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமப்பட வேண்டாம். பொருநையில் இறங்கி உள்ளே நடந்து வர தானே தயங்காமல் திருமுக தரிசனம் கிடைக்கும்" என்று அசரீரியாக ஒலித்தார். அவ்வாறே அவரும் செய்தார். அன்று முதல் கருவூராருக்காக சாய்த்த தலை நிமிராமல் வரும் பக்தர்களுக்காக மக்கள் குறையை தலை சாய்த்து கேட்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து தரும் வள்ளலாக திகழ்கிறார்.

    முதலாம் உள்சுற்றில் அருள்மிகு நாறும்பு நாதர் சன்னதியும் இதற்கு வலப்பக்கமாக அருள்மிகு கோமதி அம்பாள் சன்னதியும் திகழ்கின்றன. சுவாமி சன்னதி வாயில் நுழைந்ததும் அதிகார நந்தி பலிபீடம் உள்ளது. முன் மண்டபம் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என்ற அமைப்பில் சுவாமி சன்னிதி அமைந்துள்ளது . முக மண்டபம் எதிரே பிரதோஷ நந்தியும் பலிபீடமும் மகா மண்டபம் நடராஜர் சன்னதியும் தென்புறம் வாசலும் உள்ளன.

    அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர்கள் அனுக்ஞை விநாயகர் பாலசுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தூண்கள் ஒவ்வொன்றும் அதி அற்புதமான நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் உள்ளன. கோஷ்டங்களில் தட்சணாமூர்த்தி, கபர்தீஸ்வரர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, துர்க்கை அருகில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். சுவாமி சன்னதியை போலவே முக மண்டபம் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என்ற அமைப்பில் அம்மன் சன்னதி கட்டப்பட்டுள்ளது.

    நாறும்பூநாதர் எவ்வாறு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாரோ அதைப்போலவே அம்பாளும் உளிபடா திருமேனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆற்றுக்குள் இருந்து அம்பாள் திருமேனி வெளிவந்தது. இதனை ருத்ராட்ச திருமேனி என்று அழைக்கிறார்கள். உள் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. கருவூர் சித்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாயன்மார்கள் வரிசையில் கருவூர் சித்தரையும் நிறுவியுள்ளனர்.

    மேலும் சப்தகன்னியர், காசி ராமேஸ்வர லிங்கங்கள், திருத்தியலிங்கங்கள், சதுரலிங்கம், கணபதி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், கிருஷ்ணர், ஜுரகரேஸ்வரர், கன்னிமூலை கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், சகஸ்ர லிங்கம், சரஸ்வதி, சனீஸ்வரர், நடராஜர், பைரவர், சந்திரன், சூரியன், பிரம்மதண்டம் ஆகிய சன்னதிகள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் கீழ் பகுதி சிற்ப வேலைப்பாடு கூடிய கலைநயத்தில் தூண்கள் அமைந்துள்ளது.

    வடபுறம் கொடுங்கை அமைப்போடு கூடிய கூத்தாடும் தேவருக்கான சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆலயம் உருவாகக் காரணமாக இருந்த பிரம்மதண்டம் கருவறை அருகே இடது புறத்தில் நிறுவப்பட்டு உள்ளது. கருவறையை சுற்றி ராமேஸ்வரலிங்கம் காசிலிங்கம் என்ற பெயர்களில் பல சிறிய சிவலிங்கங்கள் உள்ளது. இத்திருக்கோயிலின் நடராஜர் புனுகு வாசனை திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. திருக்கோவிலின் கோபுரத்தில் பல மூலிகை வர்ணம் பூசிய ஓவியங்களும் மிகுந்த கலை நுட்பம் உடைய வேலைப்பாடுகளும் கொண்ட மர சிற்பங்களும் அமையப்பட்டுள்ளது.

    திருப்புடைமருதூர் பஞ்ச க்ரோச தலங்களில் ஒன்றாகும். குரோசம் என்றால் "காசிக்கு இணையான"என்ற பொருள். இதனை 'தட்சனகாசி' என்றும் குறிக்கப்படுகிறது. தேவர்களுக்காக தோன்றிய அமுதக் குடத்தை மானுடர்களும் பயன் பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன். பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி ஐந்து தலங்களை உண்டாக்கியதால் பஞ்சகுரோசத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் ஆகும்.

    திருநெல்வேலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் காசிக்கு நிகரான இந்த பஞ்ச க்ரோச தலங்கள் அமைந்துள்ளன. இவை சிவசைலம் சிவசைலப்பர் கோயில், ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில், கடையம் வில்வவனநாதர் கோயில், 'பாபநாசம் பாபநாசம் கோயில் என்பவற்றோடு திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலும் சேர்ந்து பஞ்சக்ரோசத் தலங்கள் ஆகும். சூரியன் வழிபடும் தலமாகவும் இது அமைந்துள்ளது. மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக மகாசிவராத்திரி அன்று காலை 6.15 க்கு மேல் 7.00 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் இத்திருக்கோயிலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தீராத நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று விரும்புவார்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் படி பாயாசம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். தாங்களும் அந்த படிப்பாயா சத்தினை உண்டு தங்கள் பிராத்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் திருமணத் தடை நீக்கம், புத்திர தோஷம் நீக்கம், தீராத பிணிகள் நீங்கும் ,குடும்ப அல்லல்கள் நீங்கிடவும், குடும்பத்தில் செல்வம் பெருகவும் கல்வி திறக்கவும் வியாபார அபிவிருத்திக்காகவும் இங்கு வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறினால் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம் கைவளையல்கள் போட்டு தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிப்பாயாசம் படைக்கும் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுகிறார்கள். இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை தைப்பூச திருவிழா பிரம்மோற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது.

    இறுதி நாளில் தீர்த்தவாரி நடந்து விழா நிறைவடைகிறது. புராண சிறப்பு வாய்ந்த திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுவாமி அருகிலேயே கோமதி அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் என்பது முக்கியமானது. மேலும் தினமும் காலை 7 மணிக்கு நெய்வேதியம் ஆனவுடன் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று பாயசத்தின் ஒரு பகுதியை தாமிரபரணி ஆற்றுக்கு சமர்ப்பித்து விட்டு வரும் அற்புத நிகழ்வு நடைபெறும் இடமாகும்.

    தினமும் ஆறு கால பூஜை நடைபெறும் திருப்படைமருதூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயில் ஆகும். அதிகாலை திருவனந்தல், 7:00 மணி சுமாருக்கு உதயமார்த்தாண்டம் என்னும் பூஜையும், ஏழரை முதல் 8 மணி வரை விளாபூஜையும், பின்னர் கால சந்தியும் உச்சிக்காலமும் சாயரடசை பூஜையும் அர்த்த ஜாமமும் நடைபெறுகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சோமவாரமும் பிரதோஷமும் மக்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்யும் நாட்களாக அமைகின்றன.

    வருகிற 18ந்தேதி இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. பக்தர்கள் இதில் கலந்து கொள்வதற்கு வசதியாக வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து அன்று மாலை 4மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
    • பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார்.

    வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.

    சுவாமி : மகரநெடுங்குழைக்காதன்.

    அம்பாள் : குழைக்காதநாச்சியார்.

    தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.

    விமானம் : பத்ர விமானம்.

    தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.

    தேவர்கள் பூமாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.

    விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.

    வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.

    சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.

    வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங்குழைக்காதனை பாடியுள்ளார். "கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.

    நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

    கோவில் முகவரி :

    அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,

    தென்திருப்பேரை,

    தூத்துக்குடி மாவட்டம்.

    • மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது.
    • கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    மூலவர் - வேதகிரீசுவரர் (மலைமேல்), பக்தவசலேசுவரர் (தாழக்கோவில்)

    அம்மன் - சொக்கநாயகி (மலைமேல்), திரிபுரசுந்தரி (தாழக்கோவில்)

    தல மரம் - வாழை மரம் (கதலி)

    தீர்த்தம் - சங்குத் தீர்த்தம்

    புராண பெயர் - கழுகுன்றம், திருக்கழுகுன்றம்

    ஊர்- திருக்கழுக்குன்றம்

    மாவட்டம்- காஞ்சிபுரம்

    வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் "வேதகிரி" எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு கோவிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோவில், தாழக்கோவில் என்றழைக்கப்படுகின்றன.

    மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன.

    திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

    குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது.

    குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும், திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

    ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

    நேர்த்திக்கடன்: சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

    கோவில் திறக்கும் நேரம்

    மலைக்கோவில் தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்,

    திருக்கழுக்குன்றம்,

    திருக்கழுக்குன்றம் – 603109,

    செங்கல்பட்டு மாவட்டம்.

    • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவாகும்.
    • பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லக்கொண்டம நாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. இந்த கோவிலில் ஏராளமான நகைகள் இருந்ததாகவும், அதனை கள்வர்கள் திருடிச் சென்றபோது அதனை திப்பு சுல்தான் மீட்டு தந்ததாகவும் செவிவழிச்செய்தி உலவுகிறது.

    15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர்கள் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவாகும். இங்கு சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், விஷ்ணு, துர்க்கை, விஸ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் நுழைவு வாயிலின் உட்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் தீபம் போடும் கம்பமும் அமைந்துள்ளது. இது, தென்கலை கோவிலாகும். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. தினமும் 3 கால பூஜை நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், கோடைக்காலத்தில் கூட தண்ணீர் வற்றாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

    ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பெருமாள் கிணற்றுக்கு சென்று மண்டூக மகரிஷிக்கு வரம் கொடுத்து வருகிறார். ஆடி மாதம் இக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார், அன்னம், சிம்மம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 7-ம் நாளில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆடி பவுர்ணமி நாளில் திருத்தேரோட்ட உற்சவம் உண்டு. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்து பல்லக்கில் பெருமாள் உற்சவம் நடைபெறும் நாட்களில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு செல்வர். வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருள்பவராக பெருமாள் வீற்றிருக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டால் கடன் நிவர்த்தி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இந்த கோவில் மிகவும் தொன்மையானது
    • கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும், பொன்னிநதி பாயும் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது நல்ல சேவு அய்யனார் கோவில். இப்பகுதி மக்களுக்கு குலதெய்வமாகவும், எல்லைதெய்வமாகவும், காவல்தெய்வமாகவும் நல்லசேவு அய்யனார் உள்ளார். இந்த கோவில் மிகவும் தொன்மையானது. கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    செவிவழியாக வந்த செய்தியை சிலர் கூறினாலும் எந்த ஆண்டு, யாரால் கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளிக்கும், தோகூருக்கும் இடையில் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் நேமம் கிராமத்தில் அமைந்துள்ளது.

    வெண்பொங்கல் பிரசாதம்

    நல்லசேவு அய்யனாருக்கு வெண்பொங்கல் பிரசாதம் செய்து படைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நல்லசேவு அய்யனார் இப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வழிபாட்டுக்காரர்கள் இளங்காடு, நேமம், ராஜகிரி, திருச்சென்னம்பூண்டி, புதுஆற்காடு, பழைய ஆற்காடு, அழமேல்புரம்பூண்டி, நாகாச்சி, மேட்டுப்பட்டி, கோமாகுடி, சிறுமயங்குடி, பழமார்நேரி, கள்ளப்பெரம்பூர், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், திருவாரூர், திருச்சி, நாகை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த கோவிலில் உள்ள நல்லசேவு அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 1956-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தநிலையில் இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

    யானை, குதிரை சிலைகள்

    இந்த திருப்பணிக்குழுவினர் கோவிலில் வழிபாடு செய்பவர்களிடம் நன்கொடையை பெற்று பழமை மாறாமல் புனரமைப்பு செய்ததுடன், பரிவார தெய்வங்களுக்கு புதிய சன்னதிகளும் கட்டப்பட்டன. கோவிலுக்கு எதிரே யானை, குதிரை சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நல்லசேவு அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளாக உள்ள விநாயகர், பால தண்டாயுதபாணி, மலையாள கருப்பு, அகோர வீரபத்திரர், மதுரைவீரன், முனியாண்டவர், நாகர்கள், பட்டவர்கள் ஆகிய தெய்வங்கள் இந்த கோவிலில் உள்ளன. மேலும் மணியுடன் கூடிய மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் குடமுழுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகா குடமுழுக்கும், அதைத்தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராமப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை அறங்காவல் குழுவினர் செய்தனர்.

    கோவிலின் சிறப்புகள்

    இந்த கோவிலில் வருடம்தோறும் குறிப்பிட்ட மாதங்களில் கோவிலுக்குள் உள்ளே இருக்கும் சாமிகள் மீது சூரியபகவான் வசம் செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9.20 மணி வரை விநாயகர் மேல் சூரியபகவான் வசம் செய்தார். செப்டம்பர் மாதம் 13-ந் தேதி (திங்கட்கிழமை) தண்டாயுதபாணி மேல் காலை 9 மணி முதல் 9.21 மணி வரை சூரியபகவான் வசம் செய்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நல்லசேவு அய்யனார் சன்னதி முன் சூரியஒளி விழுந்தது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை நல்லசேவு அய்யனார் மேல் சூரியபகவான் வசம் செய்தார்.

    வேண்டிய வரங்கள் கிடைக்கும்

    ஆடிமாதம், தை மாத வெள்ளிக்கிழமைகளில் பொங்கலிட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும். கார்த்திகை மாதம் சோமவார மண்டகப்படி செய்யப்பட்டு வருகிறது. ஆடிமாதம் 18-ந் தேதியும், 28-ந் தேதியும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து பொங்கலிட்டு முடிகாணிக்கை, காதுகுத்துதல் என தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு செல்வார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களின் வசதிக்காக உணவுக்கூடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காவிரிநதியில் நீராடிவிட்டு விளக்கேற்றி பிரகாரத்தை சுற்றி வந்து சாமியை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தைபேறு கிடைக்கும். நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த கோவிலில் அனைத்து சாதியினரும் வழிபாடு செய்யலாம். எந்த வகையான கட்டுப்பாடுகளும் கிடையாது.

    • இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.
    • மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள்.

    உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களை தன்பக்கம் ஈர்க்கும் சக்தி தஞ்சை மண்ணுக்கு உண்டு. தஞ்சையிலும், தஞ்சையை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏராளமான பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன.

    தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் உலகமே வியக்கும் பெரியகோவிலை கட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் கட்டிட கலையிலும், கலை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. அதேபோல் தஞ்சை மண்ணில் உள்ள சக்தி தலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை ஆகும்.

    தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் அமைந்து உள்ளது உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில். தஞ்சை நாடார்கள் உறவின் முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு சொந்தமானது இக்கோவில்.

    இந்த கோவிலில் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும், நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பவளாகவும் அருள்பாலித்து வருகிறாள், உஜ்ஜையினி மாகாளியம்மன்.

    மூலவர் சன்னதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள். மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் அமைந்து உள்ளன.

    பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள் உஜ்ஜையினி மாகாளி அம்மன். இந்த அம்மன் கோவிலின் மூலக்கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி பகுதியில் உள்ளது.

    பிரசித்திப்பெற்ற தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலில் தற்போது 3-வது குடமுழுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி யானை, குதிரை, கரகாட்டம், கோலாட்டம், மேள, தாளத்துடன் 2 ஆயிரம் பெண்கள் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, வெள்ளை விநாயகர் கோவில் வழியாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

    குடமுழுக்கை முன்னிட்டு கோவிலில் 6 கால யாகசாலை பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    47 அடி உயர கோபுரம்

    மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பிறகு தஞ்சை மாநகரில் 47 அடி உயர கோபுரத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் உஜ்ஜையினி மாகாளிஅம்மன், சான்றோர்(நாடார்) குல பேரரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த வரலாறு வண்ணப்படங்களுடன் வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

    அரசன் விக்கிரமாதித்தனுக்கு அருள்புரிந்த அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் :

    சான்றோர்(நாடார்) குல அரசன் விக்கிரமாதித்தனுக்கு அன்னை உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள் புரிந்த வரலாற்றை இங்கே பார்ப்போம்!.

    மன்னன் விக்கிரமாதித்தனின் நல்லாட்சியில் குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்கு திருப்தியில்லை. கன்னிகாபுரம் என்கிற சிறிய ராஜ்ஜியத்துக்குள் கிணற்று தவளைபோல் வாழும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. தனது பிரம்மாண்டமான கனவுகளை சாத்தியப்படுத்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

    இதனையடுத்து தனது தம்பி பட்டியை அழைத்த விக்கிரமாதித்தன், பட்டி...'நமது தலைநகரம் இன்னும் விஸ்தாரமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆறும், மலையும், வனமும் சூழ்ந்த வளமான பகுதியாக இருக்க வேண்டும். அப்படியொரு இடத்தை நீ போய் தேர்ந்தெடுத்து வா' என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

    அதன்படி பட்டி, நாலா திசைகளுக்கும் சென்றான். ஒரு நாள் விஷாலி மலையடிவாரத்தில் சிப்ரா நதியை ஒட்டி ஒரு பெரும் வனப்பகுதியை கண்டான். அந்த அடர்ந்த வனத்தில் பெரும் மலையடிவாரத்தின் கீழ் அம்மன் கோவில் அழகுற அமைந்திருந்தது. கருவறையில் பத்ரகாளியம்மன் கொலுவிருந்தார்.

    அங்குள்ள ஒரு ஆலமரத்தின் மீது உள்ள கிளைகளில் வட்ட வடிவமாக ஏழு உரிகள் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தன. அந்த உரிகள் மிகச் சரியாக தாமரைக் குளத்துக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்தன. அதன் நேர் கீழே தாமரைக்குளத்தின் நடுவில் மிகக் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது. கோவில் கருவறைக்கு சென்ற பட்டி, அம்மனை வழிபட்டு கோவிலை சுற்றி வந்தான். அப்படி வந்தபோது ஒரு பெரிய பாறையொன்றில் வீரனோ, சூரனோ, புத்திமானோ. பலவானோ... யாராயிருந்தாலும், எந்த குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்த தைரியசாலி இந்த தாமரை குளத்தில் குளித்து அம்மனை தொழுது, ஆலமரத்தின் மேலே இருக்கும் ஏழு உரிகளையும் ஒரே வீச்சில் துண்டித்து, அந்த உரிகள் கீழே விழும் முன்பாகவே குளத்தின் நடுவில் இருக்கும் கூரிய வேலின் மீது தனது உடலை பாய்ச்சுகிறானோ அத்தகைய அபூர்வனுக்கு தேவி காளியம்மனே காட்சியளிப்பார்.

    அப்படி தரிசனம் கண்டவன் பெரும் சக்கரவர்த்தியாக ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களையும் வென்று தேவியின் இந்தப் பூவுலகை அரசாளுவான். இது உறுதி என்று செதுக்கப்பட்டு இருந்தது. அதை படித்த பட்டி உடனடியாக கன்னிகாபுரம் திரும்பி விக்கிரமாதித்தனிடம் சகலத்தையும் தெரிவித்தான். கூடவே பத்ரகாளியம்மன் வீற்றிருக்கும் அந்தப் பிரதேசமே புதிய தலைநகரம் அமைக்க சிறந்த இடமென்றும் கூறினான். உடனே விக்கிரமாதித்தன் பட்டியுடன் அந்த இடத்துக்குப் புறப்பட்டு வந்தான்.

    தாமரை குளத்தில் மூழ்கி குளித்து காளியம்மனை மனதார தொழுதான். பின்னர் தனது வாளுடன் மரத்தின் மீது ஏறியவன் பாறையில் செதுக்கியிருந்தபடி செய்தான். அப்போது பத்ரகாளியம்மன் அங்கே தோன்றி விக்கிரமாதித்தனை தாங்கி பிடித்து காப்பாற்றினாள். தேவியின் தரிசனம் கண்ட பட்டியும், விக்கிரமாதித்தனும் பரவசம் அடைந்தனர். அவர்களது உன்னத பக்தியினால் மனம் மகிழ்ந்த காளியம்மன் அவர்களை வாழ்த்தி விக்கிரமா... உனது பணிவும், பக்தியும், வீரமும் என்னை மகிழ செய்து விட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றார்.

    தாயே! பராசக்தி! நீங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த திருக்கோவிலின் பிரதேசத்திலேயே எனது தலைநகரை அமைத்துக் கொண்டு ராஜ்ஜியம் ஆள ஆசைப்படுகிறேன். வரமளிக்க வேண்டும் தாயே! என்று வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று வரமளித்த பத்ரகாளியம்மன், நீண்ட நெடிய காலம் தர்மபரிபாலனம் செய்வாயாக என்று வாழ்த்தி மறைந்தார். விக்கிரமாதித்தன் அந்த நகருக்கு உஜ்ஜையினி மாகாளிப்பட்டணம் என்று பெயர் சூட்டி, தனது குடிமக்களை அங்கே வரவழைத்து குடியமர்த்தி அங்கிருந்தே தனது ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கினான்.

    இப்படி அளப்பரிய சக்தி தரும் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவிலின் அசல் வரலாறு புத்தகத்திற்கு பூஜை செய்து அதில் இருந்த அம்மன் உருவத்தை சிலையாக வடிவமைத்து தஞ்சையில் வைத்து வழிபடுகின்றனர்.

    • கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
    • அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    கொங்கு வளநாட்டின் குறும்பு நாடாகிய பதியினில் இயற்கை எழில்வளம் நிறைந்த ஊத்துக்குளியில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது வெற்றி வேலாயுதசாமி எனும் திருப்பெயருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். ஊத்துக்குளி எனும் பெயர் பெறக் காரணமே கண்கண்ட தெய்வமாய் கதித்தாசலபதி முருகப்பெருமான் தன் சக்தி ஆயுதமான வேலினால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடையது இத்திருத்தலமாகும்.

    இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

    வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

    மூர்த்தியினாலும், ஸ்தலத்தினாலும் பெருமை வாய்ந்தது. தென்னகத்தில் மலைமீது திருவிழா கண்டு மர சிற்பத்திலான திருத்தேர் மலைக்கோவிலை சுற்றி வலம் வருவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அருணகிரிநாதரின் தனிப்பாடல்களிலே கொண்டைச்செருக்கிலே எனத் தொடங்க பதியினில் மங்கை கதித்தமாமலை என பாடப்பட்டது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

    முருகப்பெருமான் மலை மீது வீற்றிருந்து 336 திருப்படிகளாலும், விரைவில் தரிசனம் கிடைக்கப்பெறும் வகையில் தார் சாலையும் அமைந்து அமைதியும் சாந்தமும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சுற்றுச் சூழலிலே உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.

    திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளதால் பக்தர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை. 

    முகவரி :

    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,

    ஊத்துக்குளி , திருப்பூர் - 638 751

    தொலைபேசி எண்: 04294-262052

    • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நைமிசாரண்யமும் போற்றப்படுகிறது.
    • இங்குள்ள பெரிய ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    முற்காலத்தில் முனிவர்களும், யோகிகளும், வடநாட்டில் உள்ள நைமிசாரண்யம் என்ற இடத்தில் தவம் செய்ததாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யம், 16 கிலோமீட்டர் தூரம் அடர்ந்து, விரிந்து கிடக்கும் காட்டுப் பகுதியாகும். இங்கு வன வடிவில் இறைவன், பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நைமிசாரண்யமும் போற்றப்படுகிறது.

    நைமிசாரண்யத்தில் இருந்துதான் சூதமுனிவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களை சவுகனர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. நான்கு யுகங்களில் நான்கு முதன்மை தீர்த்தங்கள் அல்லது நான்கு புனித தலங்கள் இங்கு இருந்ததாக கூறப்பட்டுள்ளன.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் தவ வலிமைமிக்க முனிவர்கள் சவுகனர் தலைமையில் ஒன்று கூடி, பன்னிரண்டு ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியை நடத்த விரும்பினர். வேள்வி நடத்துவதற்கான சிறந்த இடத்தைத் தேர்வு செய்து தரும்படி பிரம்மாவிடம் வேண்டினர். பிரம்மா ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதை ஒரு வளையமாக்கி, கீழே உருட்டினார். 'அந்த தர்ப்பை வளையம் எங்கு விழுகிறதோ, அதுவே தவம் செய்வதற்கு ஏற்ற இடம்' என்று தெரிவித்தார். பிரம்மதேவன் உருட்டி விட்ட தர்ப்பை வளையம், கோமதி ஆற்றங்கரையில் வந்து விழுந்தது. அந்த இடமே 'நைமிசாரண்யம்' ஆகும்.

    இந்த இடமே வேள்வி செய்ய உகந்த இடம் என்று கருதிய முனிவர்கள், வேள்விக்கான பணியைத் தொடங்கினர். 'நேமி' என்பதற்கு 'சக்கரம்' அல்லது 'சக்கர வளையம்' என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் 'காடு'. நேமி சார்ந்த ஆரண்யம் என்பதே நைமிசாரண்யம் என்றானது. இங்கு முனிவர்கள் தொடங்கி நடத்திய வேள்வியின் முழுப் பலனையும், திருமாலுக்கு வழங்குவது என்று முடிவு செய்தனர். வேள்வியில் தோன்றிய அவிர்பாகத்தை திருமாலுக்கு வழங்க, அதை அவர் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் அருள்புரிந்தார்.

    இந்த கருத்தை பின்பற்றியே இங்குள்ள மக்கள் இறைவனை, ஆரண்ய வடிவில் (காடுகள் உருவில்) வணங்குகின்றனர். ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர், அதன்பின் அஸ்வமேத யாகம் செய்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. அதைப்போல சீதை கடைசியில் பூமிக்குள் மறைந்த இடமும் இதுதான். ஆதிசங்கரர் இங்கே வந்து தியானம் செய்துள்ளார். கிருஷ்ண பக்தரான, கண் பார்வையற்ற சூர்தாஸ் வாழ்ந்த இடம் இது. சவுகன ரிஷி மகாபாரதத்தை மற்ற ரிஷிகளுக்கு விளக்கிக்கூறிய இடமாகவும் இது அறியப்படுகிறது. முப்பத்துமுக்கோடி தேவர்களும் தவம் செய்த இடம் என்ற பெருமைக்குரியதாகவும் நைமிசாரண்யம் உள்ளது.

    இத்தலத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், 'தேவராஜன் ஸ்ரீஹரி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். தாயாரின் பெயர் ஸ்ரீ ஹரி லட்சுமி என்பதாகும். புண்டகவல்லி என்ற பெயரும் அவருக்கு உண்டு. இத்தலத்தின் தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கோமதி தீர்த்தம். விமானம் ஹரி விமானம். இறைவனுக்கு சங்கரநாராயணன் என்ற பெயரும் உள்ளது. சக்கர நதிக்கரையில், சக்கரத்தாழ்வார், லட்சுமி, சீதை ஆகியோருக்கு கோவில்கள் உள்ளன. விநாயகருக்கும் தனிச் சன்னிதி இருக்கிறது.

    ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள், 18 புராணங்கள், ஆறு சாஸ்திரங்களும் கூட இங்கு இருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் போன்றோர் இத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். தற்போது இங்குள்ள ஆலயத்தில், ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகள் இல்லை. சக்கர தீர்த்தம் மற்றும் கோமதி நதி ஆகிய இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. கோமதி நதிக்கு 'ஆகாச கங்கை' என்ற பெயர் உண்டு. இந்த நதிதான் பிரம்மதேவனால் பூமியில் முதன்முதலில் படைக்கப்பட்ட நதி என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த தீர்த்தத்தில் நீராடினால் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பதினான்கு உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் உள்ளடக்கியதாக கோமதி தீர்த்தம் இருக்கிறது.

    நைமிசாரண்யத்தில் உள்ள பிரதான தீர்த்தமாக, சக்கர தீர்த்தம் திகழ்கிறது. இந்த தீர்த்தத்தை, மகாவிஷ்ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் உருவாக்கியதாக கூறப்படுகிறது. வட்ட வடிவத்தில் உள்ள தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அதை பக்தர்கள் புனித நீராக கருதி கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து புனித தீர்த்தங்களின் நீரும், இந்த சக்கர தீர்த்தத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    நைமிசாரண்ய சிறப்புகள்

    * இங்குள்ள பூதேஸ்வரர் மகாதேவ் கோவில், புராதனம் மிகுந்தது. இவ்வாலய சுவரில், அனைத்து இந்து தெய்வங்களின் படங்களும் உள்ளன. சிவலிங்கத் திருமேனிக்கு பின்புறம் உள்ள சுவரில் மகாவிஷ்ணுவின் சிற்பம் இருக்கிறது. கணேசன், கார்த்திகேயன், சூரியன், மகிஷாசுரமர்த்தினியாக துர்க்கா தேவி, பிரம்மா ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

    * ஸ்ரீ லலிதாம்பிகைக்கு ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. உயரமான பீடத்தில் புதிய சிலை உள்ளது. வெளியே சுற்றிவரும் போது முக்கோண வடிவில் யாக குண்டத்தைக் காணலாம். அருகிலேயே பழமையான லலிதா சிலை அமைந்த சன்னிதியும் இருக்கிறது. தட்சனின் யாகத்தில் கோபத்துடன் தன்னை மாய்த்துக் கொண்ட பார்வதியின் உடலில், இதயம் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.

    * இங்கு ஒரு பெரிய ஆலமரம் அமைந்துள்ளது. இது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் அமர்ந்துதான் வியாசர், நான்கு வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முனிவர்களுக்கு விவரித்ததாக கூறுகிறார்கள். இதனால் இதனை 'வியாசஸ்காடி' என்று அழைக்கிறார்கள்.

    * திரேதா யுகத்தில் அகி ராவணன், மகி ராவணன் என்ற அசுரர்கள், ராம -லட்சுமணர்களை பாதாள லோகத்துக்கு கொண்டு சென்றனர். அனுமன் அவர்களைக் கொன்று ராம-லட்சுமணனை தோளில் சுமந்து வந்தார். பாதாளத்தில் இருந்து அனுமன் வெளிவந்த இடம், நைமிசாரண்யம் என்று சொல்லப்படுகிறது. இங்கு ராமரையும், லட்சுமணனையும் தன்னுடைய தோளில் தாங்கிய நிலையில் அனுமன் கோவில் உள்ளது.

    அமைவிடம்

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் நைமிசாரண்யம் திருத்தலம் அமைந்துள்ளது. அங்கிருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. சீதாபூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், சண்டிலா ரெயில் நிலையத்தில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், சீதாப்பூர்-கைரபாத் சாலைகளின் சந்திப்பிலும் இவ்விடம் அமைந்துள்ளது.

    மரு.நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

    • காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கொல்லன் விளை. இங்கு புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வார்கள். இன்று காலையும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது பணிகளுக்காக கோவில் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

    இதற்கிடையில் சாலை யில் கிடந்த பெண் தலை யில் காயம் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர்.

    தக்கலை போலீசார், மருத்துவக் குழுவுடன் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், காயத்துடன் கிடந்த பெண்ணை பரிசோ தித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    தொடர்ந்து பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பெண் வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×