search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.
    • இது செவ்வாய்க்குரிய தலமாகும்.

    நவக்கிரக வரிசையில் மூன்றாவதாக, செவ்வாய்க்குரிய தலமாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் எட்டாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்கோளூர்". 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

    மூலவர் பெயர் : வைத்தமாநிதி பெருமாள் (கிடந்த கோலம்)

    உற்சவர் பெயர் : நிஷேபவித்தன் (நித்தியபவித்திரர் - நின்றகோலம்)

    தாயார்கள் : குமுதவல்லி நாச்சியார், கோளூர்வல்லி நாச்சியார்.

    விமானம் : ஸ்ரீகர விமானம்

    தீர்த்தம் : நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி.

    கோவில் வரலாறு

    முற்காலத்தில் ஒருசமயம் குபேரன் அழகான செல்வச்செழிப்பு கொண்ட அழகாபுரியை அரசாண்டு வந்தான். அப்போது ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க குபேரன் கைலாயம் சென்றிருந்த வேளையில், சிவபெருமான் தனது பத்தினியான பராசக்தியோடு அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுசமயம் சென்ற குபேரன் பராசக்தியின் அழகில் மயங்கி ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அதைக்கண்டு வெகுண்ட உமையவளோ மிகுந்த கோபத்துடன், நீ தவறான எண்ணத்தில் என்னைப் பார்த்ததால் அந்த ஒரு கண்ணின் பார்வையை இழந்து, உன் செல்வங்களை இழந்து, விகார தோற்றுத்துடன் திரிவாய் என குபேரனுக்கு சாபமிட்டாள். அடுத்த நிமிடமே நவநிதிகளும் குபேரனை விட்டு அகல, ஒரு கண் பார்வையும் மறைந்து, விகாரமான தோற்றத்தை பெற்றான் குபேரன்.

    இப்படி குபேரனை விட்டு விலகிய நவநிதிகளும் தாங்கள் தஞ்சமடைவதற்கு தகுந்த தலைவன் இல்லையே என்று தவித்தபடி தாமிர பரணிக்கரையில் தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி திருமாலை நினைத்து வழிபட, அவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி திருமால் காட்சியளித்து, நவநிதிகளையும் தன்னோடு சேர்த்தபடி பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளித்தார். நிதிகளை தன் பக்கத்துல் வைத்து அதற்கு பாதுகாப்பளித்து, அவற்றின் மீது சயனம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்தை பெற்றார்.

    தன் தவறை உணர்ந்த குபேரனும் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, சிவபெருமானோ பார்வதியிடம் மன்னிப்பு கேட்கும்படி திருவாய் மலர்ந்தார். அதன்படி பார்வதியிடம் மன்னிப்பு கேட்ட குபேரனிடம், உன் நவநிதிகளும் பெருமாளிடம் தஞ்சம் புகுந்துள்ளன, எனவே தாமிரபரணிக்கரையில் உள்ள பெருமாளை வழிபட்டு அருள் பெறுவாய் என்று விமோசனமளித்தாள். உடனே குபேரனும் தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூர் பகுதிக்கு வந்து, பெருமாளை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.

    இறுதியாக குபேரனின் தவத்தை மெச்சிய பெருமாள், குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் அருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். அந்த நிதிகளை பெற்று மீண்டும் அழகாபுரி சென்று ஆட்சிபுரிய தொடங்கினான் குபேரன்.

    தர்மகுப்தன் செல்வம் பெற்ற வரலாறு

    முற்காலத்தில் தர்மகுப்தன் என்பவர் எட்டு பிள்ளைகளை பெற்று மிகவும் வறுமையோடு வாழ்ந்து வந்தார். தரித்திரம் அவரை பல வகையில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் அவர் தன் குரு பரத்பாஜரை சந்தித்து, வணங்கி தன் நிலை விவரித்து வருந்தினான். அதற்கு குரு அவனிடம், "நீ முற்பிறவியில் செல்வந்த அந்தணராக பிறந்திருந்தாய், அப்போது உன் ஊர் அரசன் உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று கேட்டதற்கு உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை கூறினாய், அந்த செல்வத்தை கொண்டு பிறர் ஒருவருக்குக்கூட நீ உதவி செய்யவில்லை, அந்த வினைப்பயனை தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என எடுத்துரைத்தார்.

    ஆகவே உன்னுடைய முற்பிறவி பாவம் நீங்க, நீ தாமிரபரணி நதிக்கரையில் குபேரனின் நவநிதிகளையும் ஏற்று அருள்புரிந்த வைத்தமாநிதி பெருமாளை சரணடைந்தால், உன் பாவங்கள் விலகி அருள்பெறலாம் என்று உபதேசித்தார். குருவின் உபதேசத்தை ஏற்று இங்கு வந்த தர்மகுப்தன், இங்கு பெருமாளை நோக்கி தவம்புரிந்து, வைத்தமாநிதி பெருமாளின் காட்சிபெற்று தன் முன்வினை பாவங்கள் நீங்கி, செல்வங்களை பெற்றான் என்றும் கூறப்படுகிறது.

    திருக்கோளூர் பெயர் காரணம்

    கோள் என்றால் புரம் கூறுவது என்று அர்த்தம். புரம் கூறுவது தகாத செயலாக கூறப்படும் போது, அந்த கோளுக்கு முன் திரு சேர்த்து திருக்கோளூர் என்று அழைக்கிறார்களே என்னவாக இருக்கும் என அறிய முற்பட்ட போது, அதற்கும் ஒரு செவிவழி புராணக்கதை கூறப்படுகிறது.

    ஒருமுறை தர்மதேவதை இந்த இடத்தில் வந்து அதர்மத்திற்கு பயந்து ஒளிந்து கொண்டதாம். அப்போது இங்கு வந்த அதர்மம், தர்மதேவதையிடம் சண்டையிட இறுதியில் தர்மதேவதையே வென்றுவிட, அதர்மம் இங்கிருந்து வெளியேறிய போது, குபேரனிடம் சென்று உன்னுடைய நவநிதிகள் அனைத்தும் இந்த தலத்தில் தான் நிரந்தர வாசம் புரிகின்றன எனக்கோள் சொல்லியதாகவும், அதனால் தான் இத்தலம் "திருக்கோளூர்" என்று அழைக்கப்பட்டதாகும் தெரியவருகிறது.

    குபேரனிடமிருந்த நவநிதிகள்

    சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மகாபதுமநிதி இவை ஒன்பதும் குபேரனிடமிருந்த ஒன்பது வகை செல்வங்கள் ஆகும்.

    மூலவர் வைத்தமாநிதி பெருமாள்

    கருவறையில் ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார், வைத்தமாநிதி பெருமாள்.

    கோளூர்வல்லி தாயார்

    பெருமாள் சன்னதிக்கு வலப்புறம் தனி சன்னதியில் பூமகளாகிய ஸ்ரீ தேவியின் அம்சமாகிய கோளூர்வல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

    குமுதவல்லி தாயார்

    பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி சன்னதியில் நிலமகளாகிய பூ தேவியின் அம்சமாகிய குமுதவல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்

    உற்சவர் நிஷேபவித்தன்

    இங்கு உற்சவர் நிஷேபவித்தன் என்னும் திருநாமம் கொண்டு, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் காட்சித்தருகிறார்.

    மதுரகவியாழ்வார் சன்னதி சிறப்பு

    பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்பவர் மதுரகவியாழ்வார் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈசுவர ஆண்டு, சித்திரை திங்கள் வளர்பிறையுடன் கூடிய சதுர்த்தி திதியில் அந்தணர் குலத்தில் இத்திருக்கோளூர் தலத்திலே அவதரித்தார். இவர் பெரியதிருவடி என்று சிறப்பித்து கூறப்படும் கருடனின் அம்சமாக பிறந்தவராவார். இவர் வேத சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இனிமையான சொற்களால் கவிகளை இயற்றியதால் மதுரகவி என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

    இவர் வடநாட்டு புண்ணிய தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில். ஒருநாள் இரவு பேரொளி ஒன்றினைக் கண்டு வியப்படைந்தார். அவ்வொளியை மறுநாளும் அவர் காணவே, அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அதனை பார்த்தவாறே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். அயோத்தி, பூரி, அகோபிலம், திருப்பதி ஆகிய புண்ணிய தலங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்ததால் ஆழ்வாரும் தெற்கு நோக்கி நடந்து கொண்டே இருந்தார்.

    இறுதியாக அந்த ஒளி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூரில் (ஆழ்வார்திருநகரி) சென்று மறைந்தது. அங்கு வந்த மதுரகவியாழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் சிறப்பு உள்ளதா என்று கேட்க, அவ்வூர் மக்களும் இங்கு 16 வயது பாலகனாக ஒருவர் ஒரு புளிய மரத்தடியில் தவம் செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

    மதுரகவியாழ்வாரும் அங்கு சென்று அப்பாலகனுக்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்கும் பொருட்டு அவர் மீது ஓர் கல்லை எடுத்து எறிந்தார். அப்பாலகன் தான் நம்மாழ்வார்.

    தன் மீது கல் விழுந்ததால் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார் அந்த பாலகரான நம்மாழ்வார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க விரும்பி.,

    "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் பெருமையையும் ஞானத்தையும் புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார். இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

    செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

    தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

    மதுரகவியாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலை மையப்படுத்தி பாடாது, நம்மாழ்வாரையே மையப்படுத்தி பாடியிருக்கிறார். இவரது பாசுரங்கள் குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை எல்லாம் ஓலைச்சுவடியாக பதிந்தார். பின் நம்மாழ்வார் முக்தியடைந்துவிட, தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைக்க, அவ்விக்ரகத்தை எடுத்துக்கொண்டு மதுரகவியாழ்வார் பல தலங்களுக்கும் சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

    நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுர கவியாழ்வார் மதுரையுள் சென்றார். அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளாக பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர். அப்பலகை அந்த பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, இரண்டே வரியுள்ள, ஒரு பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். சங்கப்பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நம்மாழ்வாரின் பெருமைகளை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாமே பாடலாக இயற்றினார்கள்.

    இதில் வியப்பு என்ன என்று கேட்டால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் ஒரே பாடலையே நம்மாழ்வார் குறித்து எழுதியிருந்தனர். இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி இறுதியில் வைகுண்டம் சேர்ந்தார். இவ்வாறு மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர் என்ற சிறப்பை பெறுகிறார். இவரது பிறந்த தலமான இங்கு இவருக்கு தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது.

    திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

    திருக்கோளூர் என்றாலே 'தேடிப் புகும் ஊர்' என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அத்தகைய இந்த ஊருக்கு முன்னர், ராமானுஜர் வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், 'புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே' என்று கேட்கிறார்.

    அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, 'அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே', 'அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே' எனத் தொடங்கி 'துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே' என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்' என்று சாதுர்யமாக பதில் அளிக்கிறார்.

    அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தின் பெருமைகளை விவரிக்கிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இத்தகைய ஞானம் இருக்குமானால் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.

    இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' நமக்கு பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

    கோவில் அமைப்பு

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், மொட்டை கோபுரத்தை கொண்டது. இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது. முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

    அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநாயமாக கருவறை அமையப்பெற்றுள்ளது. வெளித்திருச்சுற்றில் தென்புறம் கோளூர்வல்லி தாயார் சன்னதியும், மேற்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் சன்னதியும், தொடர்ந்து வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.

    முன்பக்கம் மதுரகவியாழ்வாருக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதியும், கோவில் யானை வளர்ப்பிற்கு தனி இடமும் என இக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

    • மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.
    • கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது.

    ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

    ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

    ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

    பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

    இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்.

    புராண வரலாறு

    அனைத்து ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

    அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், 'அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்' என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான்.

    மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

    கோயில் அமைப்பு

    சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில், 5 தனித்தனி சன்னநிதிகளில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. 4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது.

    அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

    பலன்கள்

    ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம். இங்குள்ள ஐந்து வீட்டு சுவாமிகளை மனமுருக தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும், அற்புதங்கள் நிகழும் என்பது இந்த கோவிலின் பக்தர்களின் அசராத நம்பிக்கை

    திருவிழாக்கள்

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.

    இந்த பிரசாதத்தை நமது வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானை அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்தால், ஒருபோதும் அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. இதுமட்டுமின்றி, மாதாந்திர வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதிய வேளையில் மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அய்யாவின் பேரருளால் உணவருந்தி, மன நிம்மதியுடன் செல்வர். மேலும், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் சிறப்பானது.

    அன்னதானம்

    சாதி மத பேதமின்றி, இந்த கோவில் நடத்தப்படும் அன்னதானம்" என்ற சமபந்தி விருந்து ஆலயத் தின் "தனிச்சிறப்பு" . இங்கு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கல்ந்துகொண்டு உணவருந்தி மகிழ்வர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.

    திருமணிக்கட்டி சிறப்புகள்

    சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும், பூஜை முடிந்ததும், மூலஸ்தானத்தில், திருமணிக்கட்டி பொட்டு வைத்து, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தில் வழங்கப்படும், திருமணிக்கட்டி பிரசாதத்தை, கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை பூசிக் கொள்வது வழக்கம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள்.

    இதன் மூலம் நோய் குணமாவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண்பொட்டு இட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த பொட்டு வைத்திருப்பவர்களை கண்டாலே, அவர்கள் ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம்.

    இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இதனால், தீராத நோய்களும் தீர்ந்து வருகிறது.

    கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு இயந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும்.

    பூஜை கால அட்டவனை

    ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையின்போது, கோவிலில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள்.

    வழிபாட்டு நேரம்

    தரிசன நேரம்: காலை 7-8.30 மணி வரை மதியம் 11-12 மணி வரை மாலை 5.30- 7 மணி வரை.

    • தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.
    • திருவரகுணமங்கை என்னும் இத்தலம் தற்காலத்தில் நத்தம் என்றே வழங்கிவருகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படும் நவ திருப்பதிகளில் இரண்டாவதாக சந்திரனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவரகுணமங்கை". தற்போது இந்த ஊர் நத்தம் என்று அழைக்கப்படுகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

    மூலவர் பெயர் : விஜயாசன பெருமாள் (வெற்றி ஆசனத்தில் அமர்ந்த கோலம்)

    உற்சவர் பெயர் : எம்இடர்கடிவான்

    தாயார்கள் : வரகுணமங்கை, வரகுணவல்லி (மூலவருடன் சேர்த்து திருக்கோலம்)

    விமானம் : விஜயகோடி விமானம்

    தீர்த்தம் : அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம், தாமிரபரணி.

    கோவில் வரலாறு

    முற்காலத்தில் உரோமச முனிவர் என்பவர் தன் சீடன் சத்தியவான் உடன் இங்கு எழுந்தருளினார். அப்போது சத்தியவான் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அவ்வேளையில் தீர்த்தக்கரையின் மறுபக்கம் ஒரு மீனவன், மீன்களைப் பிடித்து கரையில் உலர்த்திக் கொண்டிருந்தான். இதனைப்பார்த்த சத்தியவான் அதனை கொடும் பாவமாக கருதினான். இப்படி இரக்கமேயின்றி உயிர்களைக் கொலை செய்கிறானே இவனுக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும் என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.

    அப்போது மீன்களைப் பிடிப்பதற்காக மீண்டும் குளத்தில் வலையை வீச முற்பட்ட அந்த மீனவனை, பின்னால் இருந்து விஷப்பாம்பு ஒன்று தீண்டிவிடுகிறது. இதனால் அவன் அந்த இடத்திலேயே வாயில் நுரை தள்ளி இறந்துவிடுகிறான். அவன் இறந்த சில நிமிடங்களிலேயே விண்ணுலகத்தில் இருந்து வந்த ஒரு விமானம், அந்த மீனவனை ஏற்றிக்கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றது. இதனைக் கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்த சத்தியவான் உடனடியாக கரையேறி, உரோமச முனிவரிடம் சென்றான். அவரிடம் தான் பார்த்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் கூறிவிட்டு., அத்தோடு 'பிற உயிர்களை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவனுக்கு எப்படி சொர்க்க பதவி கிடைக்கும்' என்று முனிவரிடம் கேட்டான்.

    உடனே உரோமச முனிவர் தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் கண்டுணர்ந்து, சத்தியவானிடம் 'இந்தப் பிறவியில் மீனவனாய் இருந்தவன், போன பிறவியில் விதர்ப்ப நாட்டை ஆண்ட மன்னன் ஆவான். அவன் தர்மத்தின் வழியில் நின்று, அநேக நல்ல காரியங்களை செய்திருந்தாலும், கூடாத நட்பின் சேர்க்கை காரணமாக தவறான சில பாவச்செயல்களையும் செய்ததால் இப்பிறவியில் மீனவனாக பிறந்தான். அவன் செய்த புண்ணிய காரியங்களால் இந்தப் பிறவியில் இந்த வரகுணமங்கை தலத்தில் பிறந்து முக்தி அடையும் பேறு பெற்றான் என்று விளக்கிக்கூறினார். இத்தலத்தில் உயிர் நீத்தவர்கள் அனைவரும் முக்தி அடைவார்கள் என்று இத்தலத்தின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

    வேதவித்து முக்தி பெற்ற வரலாறு

    முற்காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் என்னும் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, 'ஆசனதை' என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். 'சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை உச்சரித்து தவம் இயற்றுவதற்கு ஏற்ற இடம்' என்று கூறினார்.

    வேதவித்தும் ஆசனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து உச்சரித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமால் வேதவித்திற்கு காட்சியளித்து, வேண்டிய வரம் கேள் என திருவாய் மலர்ந்தருள, அதற்கு தங்கள் திருவடிகளை பற்றும் அருளன்றி வேறேதுவும் வேண்டாம் என வேண்டி நின்றார். அவ்வாறே பெருமாளும் வேதவித்துக்கு முக்தியருளினார்.

    எனவே இங்கு வந்து முறைப்படி வழிபட்டால் முக்தி அடையலாம் என்பது திண்ணம்.

    அக்னி பகவானுக்கு சாப விமோசனம் அளித்த வரலாறு:

    முற்காலத்தில் ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அக்கினி தேவனும் அந்த சண்டையில் ஈடுபட்டு ஏராளமான அசுரர்களை அழித்தான். அப்போது தாரகன், கமலாட்சன், காலதம்ஷ்ட்ரன், பராசு, விரோசனன் முதலான அரக்கர்கள் தேவர்களுக்குப்பயந்து கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர். இருப்பினும் தேவர்கள் அசரும்போதெல்லாம் வெளியே வந்து அவர்களை தாக்கிவிட்டு, மீண்டும் கடலுக்குள் சென்று ஒளிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் அக்கினி தேவரை அழைத்து, "அசுரர்களுக்கு அரணாகத்திகழும் சமுத்திரத்தின் நீர் வற்றிப்போகும் படி செய்" என்று கட்டளையிட்டார். ஆனால் சமுத்திரத்தில் அநேக கோடி உயிர்கள் வாழ்வதால், அந்த நீரை வற்றச்செய்வதில் விருப்பம் இல்லாத அக்கினி பகவான், இந்திரனின் கட்டளையை நிறைவேற்ற முடியாது என்று பணிவுடன் கூறினார். ஆனாலும் வெகுண்ட தேவேந்திரன் அக்கினிதேவனை பூவுலகில் மனிதனாக பிறக்கும்படி சாபமளித்தார்.

    இந்திரனின் சாபப்படி பூவுலகில் இந்த திருவ ரகுணமங்கை பகுதியில் மனிதனாகப்பிறந்த அக்கினிதேவன், இங்குள்ள பெருமாள் மீது அதிக பக்தி செலுத்தினார். திருவர குணமங்கை தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அதில் நீராடி தினமும் பெருமாளை வணங்கி வந்தார். இதனால் மகிழ்ந்த பெருமாள், இந்திரனுக்கு காட்சியளித்து சாப நிவர்த்தியருளினார் என்பதும் வரலாறு.

    பிரம்மனின் ஆணவம் அடக்கி, உரோமச முனிவருக்கு அதிக ஆயுளை அருளுதல்:

    படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு ஒருமுறை தனக்கு தான் அதிக ஆயுட்காலம் இருக்கிறது என்ற கர்வம் ஏற்பட்டது. இதனை அறிந்த திருமால் அவரின் ஆணவத்தை அடக்க திருவுள்ளம் கொண்டார்.

    பிரம்மாவின் ஆயுட்காலம்

    பூவுலகில் கிருஷ்ணபட்சம் என்பது 15-நாட்களை கொண்டது. இந்த 15-நாட்கள் தேவலோகத்தினருக்கு ஒரு இரவு பொழுது ஆகும். அதுபோல சுக்லபட்சம் என்பது 15-நாட்களை கொண்டது. இந்த 15-நாட்கள் தேவலோகத்தினருக்கு ஒரு பகல் பொழுது ஆகும். இந்த இரண்டு பட்சங்களும் சேர்ந்த 15+15=30 நாட்கள் பூவுலகத்தினருக்கு ஒரு மாத காலம் ஆகும். தேவலோகத்தினருக்கு இந்த 30 நாட்களை சேர்த்தால் தான் ஒரு நாள் ஆகும். இப்படி 360-நாட்கள் சேர்ந்தால் அது தேவர்களுக்கு ஒரு வருடம்என்று கணக்கிடப்படும். இப்படி 12,000 தேவ வருடங்கள் சேர்ந்தால் அது ஒரு சதுர்யுகம் என்று கணக்கிடப்படும்.

    கிருதயுகம், திரதாயுகம், துவாபராயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் தோன்றி மறையும் காலம் ஒரு சதுர்யுகம் என்று கணக்கிடப்படும். அது மனிதர்களின் கால கணக்குப்படி மொத்தம் 43,20,000 ஆண்டுகள் ஆகும். இதைப்பத்து பங்காக பிரித்தால் அதில் நான்கு பங்கு கிருதயுகத்தின் காலம். அதாவது 17,28,000-ம் ஆண்டுகள். மூன்று பங்கு திரேதாயுகத்தின் காலம். அது 12,96,000 வருடங்கள் ஆகும். இரண்டு பங்கு 8,64,000 ஆண்டுகள் துவாபராயுகத்தின் காலம்.

    மீதி ஒரு பங்கு 4,32,000 ஆண்டுகள் என்பது கலியுகம். ஆக சதுர்யுகங்கள் என்பது 43,20,000 ஆண்டுகளாகும். இவ்வாறு 1000 சதுர்யுகங்கள் சேர்ந்தால் அது தான் பிரம்மாவின் பாதி நாள். இதுவே கல்ப காலம் எனப்படுகிறது. 1000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு பகல் பொழுது, 1000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு இரவு பொழுது என சேர்த்து 2000 சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. ஒரு பிரம்மாவின் ஆயுட்காலம் முடிவடையும் போது பிரளயம் ஏற்பட்டு, பிரம்ம சிருஷ்டி முடிவுறும் என்பது கணக்கு.

    இதனால் தான் பிரம்மாவுக்கு தனக்கு மட்டுமே நீண்ட ஆயுள் என்ற கர்வம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் தன் மேனி முழுவதும் அதிக உரோமங்கள்(முடி) கொண்ட உரோமச முனிவர் திருமாலை குறித்து இந்த திருவரகுணமங்கை பகுதியில் தவமியற்றியதாகவும், அந்த தவத்தை மெச்சிய பெருமாள், அவருக்கு காட்சியளித்து, ஒரு பிரம்மனின் ஆயுட்காலம் முடியும் தருணத்தில் உன் உடம்பில் இருந்து ஒரு உரோமம் உதிரும், இப்படி உன் உடம்பிலுள்ள உரோமங்கள் உதிரும் வரை உரோமச முனிவரின் ஆயுட்காலம் நீண்டுகொண்டே இருக்கும் என்று வரமளித்தார்.

    இவ்வாறு இத்தலத்தில் தான் பிரம்மனின் ஆணவத்தை அடக்க, உரோமச முனிவருக்கு அதிக ஆயுளை பெருமாள் அருளியதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

    மூலவர் விஜயாசனர்:

    கருவறையில் விஜயகோடி விமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க, வெற்றி ஆசனத்தில் பெருமாள் அமர்ந்த கோலத்தில், சங்கு, சக்கரம், ஏந்தியபடி, அபய வரத முத்திரைகள் காட்டி கிழக்கு முகமாக, இருபுறமும் பூகளும், நிலமகளும் வீற்றிருக்க சேர்த்தியாக அற்புத காட்சியளிக்கிறார் விஜயாசன பெருமாள்.

    வரகுணமங்கை தாயார்

    ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் இரண்டு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில், கருவறையில் விஜயாசன பெருமாளுக்கு வலதுபுறம் காட்சித்தருகிறாள் வரகுணமங்கை தாயார்.

    வரகுணவல்லி தாயார்:

    பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் இரண்டு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில், கருவறையில் விஜயாசன பெருமாளுக்கு இடதுபுறம் காட்சித்தருகிறாள் வரகுணவல்லி தாயார். இங்கு கருவறையில் தாயார்கள் இருவரும் பெருமாளோடு சேர்த்தியாக இருப்பதால், தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.

    உற்சவர் எம்இடர்கடிவான் சிறப்பு

    இங்கு உற்சவர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்குகிறார் என்பதால் நம்இடர்களை களையும் பெருமாளை எம்கடர்கடிவான் என்று சிறப்பித்து அழைக்கும்படியாக திருநாமம் கொண்டு காட்சித்தருகிறார்.

    தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்தை கொண்டது.

    இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது. அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநயமாக பெருமாள் சன்னதியும், கருவறையை சுற்றிவர பிரகாரமும் அமையப்பெற்றுள்ளது

    இதுதவிர முன்பக்கம் தனி சன்னதியில் யோக நரசிம்மர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. வெளித்திருச்சுற்றில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.

    கோவில் சிறப்புக்கள்

    இந்த தலத்தை நம்மாழ்வார் ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு தாயார்கள் இருவரும் கருவறையில் பெருமாளோடு சேர்த்தியாக இருப்பதால், இவர்களுக்கு இங்கு தனி சன்னதி இல்லை.

    திருவரகுணமங்கை என்னும் இத்தலம் தற்காலத்தில் நத்தம் என்றே வழங்கிவருகிறது. நத்தம் கோவில் என்று கேட்டால் தான் இப்போது தெரியும். இங்குள்ள யோக நரசிம்மருக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி, நீராஞ்சனம் சமர்பித்து வழிபடுவது இங்கு சிறப்பம்சம் ஆகும்.

    திருவிழாக்கள்

    இங்கு மாசி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். திரு விழாவின் இறுதியாக இத்தல பெருமாள் திருவைகுண்டம் தாமிரபரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். சித்திரை மாதம் திருவைகுண்டம் கள்ளர்பிரானுக்கு நடை பெறும் பத்து நாட்கள் திருவிழாவின் ஐந்தாம் திருநாளுக்கு, இத்தல பெருமாள் எழுந்தருளி கருடசேவை காட்சியளிப்பார். வைகாசியில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள், இத்தல பெருமாள் ஆழ்வார்திருநகரி எழுந்தருளி கருடசேவை காட்சியருளுகிறார். இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து திருவிழாக்கள் ஆகியவையும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.

    • இது ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.
    • இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும்.

    சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

    கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.

    இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார்.

    தலவரலாறு

    ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி யாகம் வளர்த்தனர். யாகத்தின் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளில் சாந்தமானவர்கள் யாரோ அவருக்கு வழங்க முடிவுசெய்தனர். அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பிரம்மா, சிவனிடம் சென்றார். அவர்கள் பிருகு முனிவரை கண்டும் காணாததுபோல் இருந்தனர். வைகுண்டம் சென்ற பிருகு முனிவர் திருமாலின் சாந்தகுணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைத்தார். திருமால் அதைத் தடுக்காமல் பிருகுவின் பாதத்தை வருடினார்.

    இதைப் பார்த்த மகாலட்சுமி கோபத்துடன், 'சுவாமி! முனிவர் உங்கள் மார்பில் உதைக்கும் போது, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்' எனக்கூறி கணவரை பிரிந்து பூலோகம் வந்தார். பூலோகத்தில் கும்பகோணத்தில் உள்ள ஹேமபுஷ்கரணியில் 1008 தாமரை இதழ்களில் அழகிய குழந்தையாக அவதரித்தாள். அந்த நேரத்தில் அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஹேம மகரிஷி, குழந்தையை எடுத்து அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கோமளவல்லிக்கு திருமண வயது வந்ததும், அவள் திருமாலை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தாள். கோமளவல்லியின் தவத்துக்கு மகிழ்ந்து திருமால் வைகுண்டத்திலிருந்துதான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமள வல்லியை திருமணம் செய்துக்கொண்டார்.

    மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. கோமளவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால், பெண்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    தாயாரை மணந்துக்கொள்ள வைகுண்டத்தில் இருந்து இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமியின் சன்னிதி, தேரின் அமைப்பில் இருக்கிறது. இந்தத் தேரில் குதிரை, யானை, தேர் சக்கரங்கள் எல்லாம் கல்லினால் ஆனவை. பார்ப்பவர்கள் பரவசப் படுத்தும் வகையில் இக்கோவில் கோபுரம் 150 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணவகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் திறந்திருக்கும். பின்னர் அந்த வாசல் மூடப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

    திருமால், தாயாரை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஆகவே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். ஆகையால் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில் ஆலயம் வடிவமைப்பு உள்ளது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடக்கிறது.

    மகப்பேறு கிட்டாத தம்பதியர், இந்தத் திருக்கோவிலில் பெருமாள் சன்னிதியில் உள்ள, சந்தான கிருஷ்ணன் விக்கிரத்தினை பூஜை செய்வதன் மூலம் புத்திரபாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    தனிச்சிறப்பு

    கோவிலின் மைய ஆலயம் குதிரைகள் மற்றும் யானைகளால் வரையப்பட்ட தேரின் வடிவத்தில் உள்ளது. இது, இருபுறமும் திறப்புகளுடன், தேரில் சொர்க்கத்தில் இருந்து சாரங்கபாணி இறங்குவதைக் காட்டுகிறது. கோவிலின் மேற்கு பகுதியில் ஹேமரிஷி முனிவரின் சிற்ப பிரதிநிதித்துவம் உள்ளது. மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது. வெளிப்புற நுழைவாயிலிலிருந்து, கருவறைக்கு ஒரு துளையிடப்பட்ட சாளர மையம் உள்ளது.

    கோவிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு, சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். முனிவர் ஹேமரிஷி, லட்சுமி மற்றும் திருவிழா படங்கள் கருவறைக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற் பாதியில் திறக்கப்படுகிறது.

    இங்கு சயனகோலத்தில் இருக்கும் இறைவனின் திருப்பெயர் ஆராவமுதன். அமுதமே அருந்தினாலும் கொஞ்சத்திலேயே நமக்குத் திகட்டிவிடும். ஆனால், இந்த பெருமாளின் திருவருள் என்னும் அமிர்தத்தை எவ்வளவுதான் அருந்தினாலும், திகட்டவும் செய்யாது; பெருமாளை அனுதினமும் தரிசிக்கவேண்டும் என்ற நம் ஆர்வமும் தீரவே தீராது. எனவேதான், பெருமாளுக்கு இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

    இந்த உலகில் நாம் மறுபடியும் பிறவி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால், ஆராவமுதனையும், சாரங்கம் ஏந்தி நின்று காட்சி தரும் சாரங்கபாணியையும் தரிசித்து நல்லருள் பெறுவோம்.

    • அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது.
    • இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார். இவருக்கு அருகில் பூரணி, பொற்கலையும் உள்ளனர். அதோடு பைரவர், சுந்தரேஸ்வரர், விநாயகர், நவக்கிரகங்களும் உள்ளன.

    கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை. அழகுமுத்து அய்யனார் கோவில் பின்புறம், அழகர் சித்தர் கோவில் உள்ளது. 366 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர் ஒருவர், தவம் புரிந்து மக்களின் நோய்களை போக்கியதாகவும், பின்னர் அங்குள்ள கிணற்றில் இறங்கி ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கிணற்றை சுற்றி தற்போது கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த கிணற்றுக்கு மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு ஒளியில் சித்தர் காட்சி தருவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    முன்காலத்தில் தென்னம்பாக்கம் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. அங்கு அய்யனார் மட்டும் ஆலமரத்தடியில் காட்சி தந்துள்ளார். அய்யனாருக்கு ஊருக்குள் இருந்து ஒரு பூசாரி வந்து, தினமும் ஒரு கால பூஜை மட்டும் செய்து வந்துள்ளார். அந்த நிலையில்தான் அங்கு அழகர் சித்தர் வந்துள்ளார். அவரைக் கண்ட மக்கள், அவரிடம் தங்களின் குறைகளைச் சொல்லி அதற்கு ஆறுதல் தேடியுள்ளனர். மக்களின் குறைகளையும் சித்தர் நிறைவேற்றி வைத்துள்ளார். சித்தர் மறைந்த பிறகு, மக்கள் தங்களின் கோரிக்கை என்னவோ, அதை ஒரு பொம்மையாக செய்து சித்தர் கோவிலின் முன்பாக வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள். இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    • சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார்.
    • குண்டம் இறங்கும் விழா பிரசித்தி பெற்றதாகும்.

    ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும்.

    வரலாறு

    இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, "பாரியூர்" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

    கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு.

    கொங்குநாட்டில் பூ மிதித்தல் எனும் குண்டம் இறங்கும் விழா அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், கணக்கம்பாளையம் பகவதியம்மன், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் ஆகிய அம்மன்கள் புகழ்பெற்றவர்கள்.

    அவர்களில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனும் ஒருவர். பாரியூர் ஆலயத்தில் அமைந்துள்ள 45 அடி நீளம் ஐந்தடி அகலம் கொண்ட குண்டம் பிரசித்தி பெற்றதாகும். கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது, காஞ்சிக் கூவல் நாடு. இதில் அடங்கிய பழைமையான ஊர் பாரியூர் ஆகும்.

    மூலவர், சில வடிவங்களின் அமைப்புகள் பலநூறு ஆண்டுகள் பழைமையானவை என்பதை உணர்த்துகின்றது. இதனைக் கற்கோயிலாக 1942-ல், கோபி புதுப்பாளையம் முத்து வேலப்பர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார். இதேபோல, 1990-ல் இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கோபி-புதுப்பாளையத்தைச் சார்ந்த அடியார் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கினார்.

    72 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, ஆலயமே கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஆலயம் 240 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டு, விசாலமாக தெற்கு முகமாக அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. வடக்கு வாயில், தடப்பள்ளி வாய்க்கால் அமைந்துள்ளது. அருகே கல்யாண விநாயகர் அமைந்துள்ளார்.

    ஆலய வளாகத்தில், வன்னி விநாயகர், வரசித்தி விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன. சப்தகன்னியர், பொன் காளியம்மன், விநாயகர், குதிரைவாகனம், அதையொட்டி முனியப்ப சுவாமி, பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். இவரை தீய சக்திகள் அழிக்கும் கடவுளாக வணங்குகின்றனர்.

    ஆலயத்தில் நடுநாயகமாக, கொண்டத்துக் காளி சன்னிதி அமைந்துள்ளது. சிங்க வாகனத்தில் அம்மன் அமைந்த நிலையில் உள்ளார். அதைச் சுற்றி கலைநயம் மிக்க 28 தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் அமைந்துள்ளது. உள்ளே மகாலட்சுமி, சரசுவதி, ராஜ ராஜேஸ்வரி, பத்திரக்காளி சிலா வடிவங்களும் அமைந்துள்ளன.

    கருவறை முன்புறம் பிரம்மகி, சாமுண்டி வடக்கிலும், மகேசுவரி, கௌமாரி கிழக்கிலும், வராகி தெற்கிலும், வைஷ்ணவி, மகேந்திரி மேற்கிலும், கஜலஷ்மி அதனருகே கொண்டத்துக் காளி சிலையும் அமைந்துள்ளன.

    கருவறைக்குள் கொண்டத்துக் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் வலது காலை குத்திட்டு, இடது காலை அசுரனை அழுத்தியபடி, வலது கரங்களில், சூலம், உடுக்கை, வாள், கிளி தாங்கி, இடது கரங்களில், தீச்சட்டி, கேடயம், மணி, கிண்ணம் ஆகியவற்றைத் தாங்கியும் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறாள்.

    காளியாக இருந்தாலும், அன்னை யின் வடிவம் சாந்தரூபியாகக் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவளே சேரன் படைத்தளபதிக்கு வீரவாள் வழங்கி வரம் தந்தவள். கருவறை அருகே, அருள்மிகு சின்னம்மன் காட்சி தருகின்றாள்.

    காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

    திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள்

    இந்த திருகோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெரும். பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்த பூ மிதிப்பர். குண்டத்திற்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரில் எழுந்தருள்வாள். திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே. மேலும் நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல் விமர்சிகையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் "வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.
    • இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    வைணவ திவ்ய தேசங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் பெருமாள் மோகன அலங்காரத்தில்(நாட்சியார் திருக்கோலம்) எழுந்தருள்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருள்வார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்க மன்னாரை கரம் பிடித்தார். அதனால் இங்கு நடைபெறும் எண்ணெய் காப்பு உற்வசத்தில் கள்ளழகர், கண்ணன், பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் காட்சி அளிப்பார்.

    அதன்படி நேற்று 5-ம் நாள் எண்ணெய் காப்பு உற்சவத்தில் பெரிய பெருமாள் கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீராட்ட மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டு, திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு தங்க தோளுக்கினியானில் புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தார்.

    • தல விருட்சமாக நாகமரம் உள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த 1957-ம் ஆண்டுக்கு பின் குடமுழுக்கு நடைபெறவில்லை.

    ரெங்கநாதர் என்றால் நம் நினைவுக்கு திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் தான் நினைவுக்கு வரும். வைணவ திருத்தலங்களில் முக்கிய இ்டம் வகிக்கும் ஸ்ரீரங்கத்தை போல தஞ்சை மாவட்டத்தில் சின்ன ஸ்ரீரெங்கம் என்று அழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் சின்னஸ்ரீரெங்கம் என அழைக்கப்படும் ரெங்கநாதர் கோவில் உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்று வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

    திருபுவனம் ரெங்கநாதர் கோவில் சுமார் 1200 ஆண்டுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது ஆகும்.

    திருப்பணிகள்

    மேலும் சோழ பேரரசன் ராஜராஜன் தனது சகோதரிக்கு வழங்கிய 7 நாடுகளில் நடுநாயகமாக இந்த ஊர்(திருபுவனம்) இருந்திருக்கிறது.

    சோழர் காலத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரி வெட்டப்பட்டு இந்த ஆலயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வூர் பாண்டிய மன்னர்களின் வசமானது.

    1350- ம் ஆண்டு இந்த கோவிலில் கருங்கல்லால் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறகு இந்த கோவில் படையெடுப்புகளால் சிதைவுக்கு உள்ளானது.

    சாமி சிலைகள்

    நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 1958-ம் ஆண்டு கரந்தை தமிழ்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் என்ற நூலில் இக்கோவில் பற்றி வித்வான் கோவிந்தராஜன் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 1960-ம் ஆண்டு மே மாதம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சரஸ்வதி மஹால் தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் நாகசாமி ஆகியோர் ரெங்கநாத பெருமாள் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அங்கு தொல்லியல் ஆய்வு மேற்கொண்டபோது 9 அடி அளவில் சயன கோலத்தில் பெருமாள், 4 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் சீனிவாச பெருமாள் சிலை, 2½ அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், ராமபிரான், சீதாபிராட்டியார் திருமேனிகளும், ராமானுஜர், திருமங்கையாழ்வார், கூரத்தாழ்வார், திருமேனிகளும், சக்கரத்தாழ்வார் பீடமும், விஷ்வக்சேனர் திருமேனியும் கண்டெடுக்கப்பட்டன.

    ஐம்பொன்சிலைகள்

    கடந்த 2013- ம் ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவில் திருப்பணி தொடங்கப்பட்டது. அப்போது அடித்தளம் தோண்டியபோது பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மூலவர் சிலை மற்றும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஐம்பொன் சிலைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மற்ற விக்ரகங்கள் அனைத்தும் தற்போது ஒரு தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் பிதிஷ்டை செய்யப்பட்டு இன்று வரை மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    முற்பிறவி பாவங்கள்

    தூணில் இருந்தாலும் துரும்பில் இருந்தாலும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் ரெங்கநாதப்பெருமாள் திருபுவனத்தில் அமர்ந்து எட்டு திசையிலும் இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். மேலும் திருமண தடை நீங்கவும், மனகசப்பினால் பிரிந்த தம்பதியர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். முந்தைய பிறவியில் தாங்களோ அல்லது தங்கள் மூதாதையர் செய்த பாவத்தால் துன்பப்படும் பக்தர்கள் திருபுவனம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வை பெறலாம் என கூறப்படுகிறது.

    கோவில் குளம்

    தற்போது சபாிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தினசரி காலையும், மாலையும் பாடல்கள் பாடி வழிபட்டு செல்கிறாா்கள்.

    திருபுவனம் ரெங்கநாதப்பெருமாள் கோவில் தல விருட்சமாக நாகமரம் உள்ளது. இங்கு தீர்த்தமாக பிராமணர் குளம், தேவர் அடியாா் குளம் ஆகிய 2 குளங்கள் உள்ளன. இந்த கோவிலில் கடந்த 1957-ம் ஆண்டுக்கு பின் குடமுழுக்கு நடைபெறவில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று 3 நாட்கள் விழா நடக்கும். மற்றும் அனைத்து ஏகாதசி நாளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகைக்கு மறுநாள் பெருமாள் கார்த்திகை என சிறப்பு பூஜை நடக்கும். அஷ்டமி, திருவோணம் நாட்களில் விஷேச பூஜைகள் நடைபெறும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலையில் 4 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும்.

    புதுப்பிக்க கோரிக்கை

    திருபுவனம் ரெங்கநாதர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன. வரலாறு பேசும் இந்த கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவி வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருபுவனம் ரெங்கநாதர் கோவில் தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சாலியமங்கலம் அருகே வலது புறத்தில் ஒரத்தநாடு செல்லும் வழித்தடத்தில் உள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து அம்மாப்பேட்டை, நீடாமங்கலம் செல்லும் பஸ்களில் சென்று சாலியமங்கலத்தை அடைந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருபுவனம் ரெங்கநாதர் கோவிலை அடையலாம்.

    • இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
    • சூரியனுக்குரிய தலமாக விளங்கும் “திருவைகுண்டம்”.

    பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள், தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவைகுண்டம்".

    108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

    மூலவர் பெயர் : வைகுண்டநாதர் (நின்ற கோலம்).

    உற்சவர் பெயர் : கள்ளர்பிரான் (சோரநாதர்).

    தாயார்கள் : வைகுந்தநாயகி, சோரநாயகி.

    விமானம் : இந்திர விமானம்.

    கோவில் விருட்சம் : பவள மல்லி.

    தீர்த்தம் : தாமிரபரணி, கலச தீர்த்தம்.

    கோவில் வரலாறு

    முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை அறிந்து வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பி வைத்தார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜெயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த பிரம்மன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பி வைத்தார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த, தாமிரபரணி பாயும் இந்த திருவைகுண்டமே தவத்திற்குரிய சிறந்த இடம் என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி அவருக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசூரனை வதம்செய்து அவனிடமிருந்த நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மன் அகம் மகிழ்ந்து, தனக்காக எப்படி வைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ, அவ்வண்ணமே இங்கு நித்யசேவை சாதித்து அடியவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என விண்ணப்பம் செய்ய பெருமாளும் இங்கு வைகுண்டநாதராக நித்யசேவை சாதிக்கிறார். இதனால் இத்திருப்பதியும் "திருவைகுண்டம்" என்றே சிறப்பிக்கப்படுகிறது. பிரம்மன் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவி பூசித்ததாலும், இங்கு தாமிரபரணி " கலச தீர்த்தம்" என்று சிறப்புப்பெற்றது.

    பாண்டியர் காலத்தில் கோவில் எழும்பிய வரலாறு

    முன்னர் பிரம்மனால் பூஜிக்கப்பட்ட வைகுண்டநாதர் எழுந்தருளியிருந்த சிறிய கோவில், பிற்காலத்தில் சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்த போது, தற்போது கோவில் உள்ள பகுதிகளில் அரண்மனைப் பசுக்கள் மேய்வது வழக்கம், இப்பசுக் கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டபதி புதையுண்ட இடத்திற்கு நேர் மேலே உள்ள துவாரத்தில் தினமும் தனது பாலைச் சொறிந்தது.

    இதைக் கண்ட பசு மேய்ப்பவர் அரசரிடம் தெரிவித்தார். அரசனும் தன் படை சூழ இங்கு வந்து பூமியை பயபக்தியுடன் தோண்ட, அங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் சாளக்கிராம மாலையணிந்து,சங்கு, சக்கரம் மற்றும் கதை தாங்கி அபயமுத்திரையுடன் காட்சி தந்தார். இதன் பின்னர் தான் பாண்டிய மன்னன் இக்கோவிலை பிரம்மாண்டமாக கட்டியதாக வரலாறு கூறுகிறது.

    கள்ளராக மாறிய பெருமாள் திருவிளையாடல்

    முற்காலத்தில் திருவைகுண்டம் நகரில் காலதூசகன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் பிறர் பொருளை திருடும் குணம் கொண்டவன் என்றாலும் பெருமாள் மீது பக்தி கொண்டவன். இவன் திருடச்செல்லும் முன், தான் திருடும்பொழுது யாருடைய கண்ணிலும் படாமலும் யாரிடமும் பிடிபடாமலும் இருக்க வேண்டும் என்று திருவைகுண்டநாதரை வேண்டிக்கொள்வான். அதன்படி திருடிய பொருளில் பாதியை பெருமாள் சன்னதியில் சேர்த்துவிட்டு, மீதியிருப்பதை தன் நண்பர்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும், கலைஞர்களுக்கும் தர்மம் செய்துவந்தான். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக திருவைகுண்ட தலத்தில் கலச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தினமும் சேவித்து வாழ்ந்து வந்தான்.

    இவ்வாறு இருக்க ஒரு நாள் நள்ளிரவில் மணப்படை அரண்மணையில் பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்து தப்பிவந்தான் காலதூசகன். ஆனால் இவனது சகாக்கள் அரண்மனை காவலாளிகளிடம் பிடிபட்டனர். இவர்களின் மூலம் விபரங்களைத் தெரிந்து கொண்ட அரசன் கால தூசகனை சிறைபிடித்து வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான். இதை அறிந்த காலதூசகன் திரு வைகுண்டநாதரை சரணடைந்து தம்மிடம் உள்ள பொக்கிஷங்களை கோவில் கைங்கரியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாக வேண்டிக் கொண்டான்.

    சரணடைபவர்களை காப்பதை தன் சங்கல்பமாகக் கொண்ட பெருமாள், காலதூசகனின் தூய பக்திக்கு செவி சாய்த்து, பெருமாளே காலதூசகன் வேடம்புனைந்து அரசவைக்குச் சென்றார். அரசரும் கள்வர் வேடத்திலிருந்தவரை நோக்கி திருடிய உம்மை பார்க்கும் பொழுது எனக்கு கருணையே ஏற்படுகிறது நீ யார்? எனக் கேட்டார். கள்ளராக வந்த பெருமாள் அரசரை நோக்கி, அரசரே உன் தவறை நீ உணரவில்லை அரசாங்கத் தின் செல்வங்கள் யாவும் உம்மாலும் உம்மை சுற்றியுள்ளவர்களாலும் வீணடிக்கப்படுகிறது.

    பணத்திற்கு நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. அதாவது தர்மம்,அரசன்,திருடன்,அக்னி ஆகியோராவர். இவர்களில் அரசன் என்பவன் தர்மத்தைக் கடைபிடித்து குடிமக்களைக் காக்கவேண்டும். நீவிர் அவ்வாறு செய்யத்தவறியதால் அதை உமக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நடத்தினோம் என்றும் நான் உலகைக் காக்கும் வைகுந்த பெருமாள் என்றும் கூறி அரசருக்கு காட்சியளித்து ஞானத்தையும் நல்ல புத்தியையும் எடுத்து ரைத்தார்.

    இவ்வாறு கள்ளனை காத்து அருள் புரிந்ததால் திருவைகுண்டபதி, கள்ளபிரான் (சோரநாதன்) என்றும் அழைக்கப்பட்டார். இன்றும் இங்குள்ள உற்சவர் பெருமாள் "கள்ளர்பிரான்" என்றே அழைக்கப்படுகிறார்.

    மூலவர் வைகுண்டநாதர்

    கருவறையில் இந்திரவிமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தியபடி, அபயமுத்திரை காட்டி கிழக்கு முகமாக காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் இங்கு பாலால் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.

    வைகுந்தநாயகி தாயார்

    இங்கு ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் வைகுந்தநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் வலப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.

    சோரநாதநாயகி தாயார்

    இங்கு பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் சோரநாதநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் இடப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.

    பழமையான சந்தன கருடன்

    பெருமாள் சன்னதியின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கியபடி ஒரு சன்னதியில் பழைய கருடவாகனம் உள்ளது. மிகவும் பழைமையான இக்கருடனுக்கு சந்தனம் பூசி காப்பு செய்துள்ளார்கள். இவரை இங்கு தரிசிப்பது சிறப்பு.

    உற்சவர் கள்ளர்பிரான் சிறப்பு

    இங்கு உற்சவரான கள்ளப்பிரான், ஸ்ரீ தேவி, பூ தேவி என இருதேவிகளும், இருபுறமிருக்க காட்சியளிக்கிறார். சாமுத்திரிகா லட்சணப்படி செல்வ செழுமை கொண்டவர் கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அதுபோலவே இங்கு கள்ளர்பிரானின் கன்னத்தில் குழி விழுந்து காணப்படுகிறது. கள்ளர்பிரானை வடிவமைத்த சிற்பி இவரின் அழகில் மயங்கி, கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டாராம். அதனால் ஏற்பட்ட அக்குழியே நிரந்தரமாக தங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

    கோவில் சிறப்புக்கள்

    இந்த தலத்தை நம்மாழ்வார் திருவாய்மொழியின் 3571 மற்றும் 3575 ஆகிய பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும், ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும், கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சம்.

    ஆக நவதிருப்பதிகளுள் சூரியன் தலமாக விளங்கும் இங்கு பெருமாளை, சூரியனை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இத்தலத்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளன, அதில் ஒரு கல்வெட்டில் திருவரங்கப்பெருமான் பல்லவராயர் என்பவர் தான் இங்கு வைகுந்தநாயகி தாயாரை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டுப்படி இங்குள்ள பெருமாளின் திருநாமம். "திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளபிரான்" என்று சிறப்பித்து கூறுகிறது.

    மற்ற கோவில்களில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள், இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு. கி.பி.1801-ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட போது கோவிலை கோட்டையாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இத்தென்பாண்டி நாட்டின் வைணவ தலங்கள் அனைத்தும், இத்திருவைகுண்டம் கோவிலை மையமாக வைத்தே நிர்வகிக்கப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்டது
    • விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அர்ச்சகர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 490 கோவில் களில் பணிபுரியும் அர்ச்ச கர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்குவ தற்கான தொடக்க விழா நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார்.

    விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு புத்தாடை களையும் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். அப்போது மேயர் மகேஷ் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் கோவில்கள் மேம்பாட்டிற்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் கும்பாபிஷே கத்திற்காக ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு கோவில் பணி யாளர்களுக்கான சம்ப ளத்தை உயர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் 100 கோவில்களை புனர மைக்க ரூ.5 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கோவில்களில் புனரமைப்பு பணி நடை பெற்று வருகிறது. பறக்கைப் பகுதியில் கூருடைகண்டன் சாஸ்தா கோவில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் பகுதியில் உள்ளது.வயல் வரப்பு வழியாக சென்று தான் அந்த கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.

    இந்த கோவிலில் வயல் அறுவடை மற்றும் நடவு பணியின்போது மட்டுமே பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த கோவிலை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வாரம் 2 நாட்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவில் அர்ச்சகர்களும் பணியாளர்களும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் அந்த அரசு தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவில் பணியாளர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் கவுன்சிலர்கள் கலா ராணி, ரோசிட்டா மராமத்து பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.
    • கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம் என்பது விசேஷ தகவல். சூரிய பகவான் அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது.

    அதுவே பிற்காலத்தில் மருவி திருக்கொடியலூர் என்றானது என்றும் கூறப்படுகிறது.

    சனீஸ்வரர் பிறந்த இந்த திருக்கொடியலூரில் சனியினுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக ஐதீகம். திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.

    இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி.

    இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.

    உலகத்தின் நீதிபதி சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவின் பிறந்த தலம் இந்த திருக்கொடியலூர்.

    சுவாமியினுடைய வலதுபுறம் சனீஸ்வர பகவானும், இடது புறத்தில் எமதர்மராஜனும் காட்சியளிக்கின்றனர். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், பிறந்த சிறு குழந்தைக் நீண்ட ஆயுள் வேண்டி இந்த தளத்தில் வழிபட்டால் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார் என்று ஒரு ஐதீகம்..

    இந்த தலத்தில் பரிவார தேவதைகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

    ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான் இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகியதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான்.

    ஆனால் இத்தலத்தில் பிறந்த சனீஸ்வர பகவானும் தர்மத்தின் ராஜாவான எமதர்மராஜாவும் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள்.

    ஆலய அமைப்பு:

    ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இறைவனுக்கு இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர்,

    லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள்.

    மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

    இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை. ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும்

    நீங்குகிறது.

    இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.

    • இந்த கோவில் நெல்லை மாவட்டம் பணக்குடியில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலுக்கு என்று தலவிருட்சம் கிடையாது.

    வட இந்தியர்கள் சோட்டா நாராயணன் என அலைக்கும் பெருமாள் அமைந்திருக்கும் ராமலிங்க சுவாமி திருக்கோவில் குறித்து இங்கே காண்போம்.

    நெல்லை மாவட்டத்தில் பணக்குடியில் அமைந்துள்ளது ராமலிங்க சுவாமி திருக்கோவில். ராமபிரான் இந்த சிவலிங்கத்தை பூஜித்ததால் இவர் ராமலிங்க சுவாமி என அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். இங்கு மூலவர் லிங்க வடிவில் காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலுக்கு என்று தலவிருட்சம் கிடையாது. இக்கோவிலின் கட்டிடக்கலை முற்கால பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குரிய கல்வெட்டுகள் ஏதும் இங்கு இல்லை.

    இக்கோவிலின் மூலவர் இங்கு கிழக்கு முகம் பார்த்து அமர்ந்துள்ளார். சிவகாமி அம்பாளும் இங்கு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பாகும். மகா மண்டபத்தில் மூலவரின் எதிரே நந்தி அமைந்துள்ளது. இதே மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

    கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பலிபீடம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ளது. இக்கோவிலின் உட்பிரகாரத்தின் முகப்பில் இடது புறம் விநாயகரும், வலது புறம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்கள்.

    இக்கோவிலில் உள்ள மணிமண்டப தூண்களில் பாண்டிய அரசனின் அரசியல் செல்வங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தின் தென்பாக்கத்தில் சுரதேவர், சரஸ்வதி சப்த மாதர்கள் விநாயகர் கன்னி விநாயகர் தட்சணாமூர்த்தி ஆகியோரின் திரு உருவங்கள் அமைந்துள்ளன.

    மேற்கு பாகத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சாஸ்தா திருவுருவங்கள் அமைந்துள்ளன. காலபைரவர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். இக்கோவில் தீர்த்தம் தெப்பக்குளம் ஆகும். இந்தக் குளம் கோவிலின் முன்புறம் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. ஆனால் ஆனால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி விமானங்கள் உள்ளன. இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தென் பகுதியில் நம்பி சிங்கப்பெருமாள் என்ற வைணவ தளம் உள்ளது. வட இந்தியர்கள் அதிகமாக வரும் இந்த கோவிலில் இங்குள்ள பெருமாள் சிறிய உருவில் காட்சியளிப்பதால் வட இந்தியர்கள் சோட்டா நாராயணன் என்று அழைக்கிறார்கள்.

    இக்கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. 10 மணிக்கு உச்சிகால பூஜையும், 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறு மணிக்கு சாய்ரக்ச பூஜையும் 8.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவும், தெப்பத் திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பும் சைவ சமயத்தின் மேன்மையும், மக்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைந்து சிறப்பாக காணப்படுகிறது.

    ×