search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • பேரையூர் அருகே கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து பேரையூர் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னரெட்டிபட்டியை சேர்ந்தவர் மகாதேவன்(37). இவர் சென்னையில் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். வருடம்தோறும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வதற்காக 15 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும் பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ரூ. 1,500 மதிப்புள்ள பித்தளை வேல் வாங்கி சின்னா ரெட்டிபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்து வேலை கோவிலில் வைத்திருந்தார்.

    மறுநாள் அதிகாலை பார்த்தபோது அந்த வேலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் வேல் கிடைக்காததால் மகாதேவன் பாதயாத்திரை சென்று விட்டார். பாதயாத்திரை சென்றுவிட்டு நேற்று வந்து விசாரித்த போது அல்லிகுண்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் என்பவர் வேலை திருடிச்சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
    • சிறுவாபுரி முருகன் கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருவள்ளூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையிலயே திரளாள பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஜெயா நகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி ஆலயத்தில் புத்தாண்டையொட்டடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பூங்காநகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி, மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவானுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

    சத்திய மூர்த்தி தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்கள், இளைஞர்கள் நள்ளிரவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய இன்றுஅதிகாலை முதலே குவிந்தனர். மலைக் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு சென்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் சங்கர மடத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக தொடர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நாகர்கோவில்:

    புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராத னையும் நடந்தது. புத் தாண்டையொட்டி அதிகாலையிலேயே கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது.

    குடும்பத்தோடு ஏராள மானோர் வந்து நாகராஜரை வழிபட்டு சென்றனர். நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாலூற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.

    வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவி லிலும் சாமி தரிசனத் திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த னர். பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடை ,வாகன பவனியும் நடந்தது.சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்திருந்தனர். தற்பொழுது மார்கழி திருவிழா நடை பெற்று வரும் நிலையில் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அய்யப்ப பக்தர் களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது.

    கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், வெள்ளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு வேல் எடுத்து சென்று புனித நீராடி, தீர்த்து குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர். வானவேடிக்கை நடைபெற்றது. இரவு அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுகாலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊஞ்சப்பாளையம் ஊர் தர்மகர்த்தா முன்னிலையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன.
    • இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

    கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை. இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது.

    அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.

    தல வரலாறு

    சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.

    அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே 'அகத்தியர் தீர்த்தம்' என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும். அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார்.

    'நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக' என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.

    முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் 'பூவனநாதர்' என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.

    சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு 'பூவனநாதர்' என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

    இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம்.

    மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது. பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு 'களாவனநாதர்' என்ற திருநாமமும் உண்டு.

    ஆலய அமைப்பு

    இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது.

    சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன. செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர்.

    அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன. சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன.

    அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.

    இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்கிறார்கள்.

    அமைவிடம்

    தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் வசதிகளும் உள்ளன.

    -பொ.ஜெயச்சந்திரன்

    • குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள்.
    • பிரம்மஹத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.

    மூலவர் – எதிருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)

    அம்மன் – வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி

    தல விருட்சம் – வன்னிமரம், புன்னைமரம்

    தீர்த்தம் – வேததீர்த்தம், மணிகர்ணிகை

    பழமை – 1000 வருடங்களுக்கு முன்

    புராணப் பெயர் – திருமறைக்காடு

    திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம். சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம். சக்தி பீடங்கள் 64 ல் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில். மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.

    இத்தலத்து அம்பாளின் பெயர் "வேதநாயகி" எனவும் தமிழில், "யாழைப் பழித்த மொழியாள்" என்றும் வடமொழியில், "வீணாவாத விதூஷணி" எனவும் வழங்கப்படுகிறது. அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

    இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

    இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.

    63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர். ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம். மனு, மாந்தாதா, தசரதன், இராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட தலம். பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம். புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.

    தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்துதான் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு. இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத இலிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த இலிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி – அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.

    ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது. அதன் அடியில் எண்ணற்ற நாகப்ப்ரதிஷ்டைகள். எதிரில் தீர்த்தமுள்ளது. உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் இராமரைத் தொடர்ந்து வந்த வீரகத்தி தோஷத்தை நீக்கிய வீரகத்தி வினாயகர், குமரன் சன்னிதி ஆகியன உள்ளன. சேர, சோழ, பாண்டிய இலிங்கங்கள் தனித்தனி சன்னிதியாக உள்ளன. புன்னை மரத்தடியில் நசிகேது, ஸ்வேதகேது ஆகியோரின் உருவங்களைக் காணலாம்.

    சுவாமிக்கருகில் அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக உள்ளது. உள்வலமாக வரலாம். முன்மண்டபத்தின் மேற்புரம் வண்ண ஓவியங்கள் உள்ளன. தலவினாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனிபகவான், வீணையிலாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்கை, சோழீஸ்வர இலிங்கம் ஆகியன உள்ளன. இங்குள்ள நடராஜ சபை தேவசபை எனப்படும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் வரிசையாக உள்ளன.

    ஏனெனில் இது ஒரு கோளிலித்தலமாகும். பள்ளியறையை அடுத்து பைரவர், சூர்ய சந்திரர் சன்னிதிகள் உள. உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர் பெட்டிக்குள் பாதுகாப்பாக உள்ளார். உள்வாயிலைக்கடந்தால் உற்சவத்திருமேனிகள் இருபுறமும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுதையாலான துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் மூலவர் தரிசனம்.

    மூலவர் வேதாரண்யேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி. சுவாமிக்குப் பின்னால் – மறைக்காட்டுறையும் மணாளர் – திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுகள் 92 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறைவனை – வேதவனமுடையார் – என்று குறிப்பிடுகிறது.

    பிரார்த்தனை:

    இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மஹத்தி போன்ற பாவங்களும் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

    இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

    இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    நேர்த்திக்கடன்:

    குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

    வழிகாட்டி:

    நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து நேரடி பஸ் உள்ளது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
    • நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலை மார்க்கெட் அருகே கழிவு நீர்நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது பாலத்தை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உட்பட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல பாலம் இல்லாததால் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பொங்கல், மாவிளக்கு பூஜையும், அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.

    • கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • திருவிழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்தி ருவிழா ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திரு விழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கி றது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத் தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத் தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபா ராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகை கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிர சாத், தெற்கு மண்மடம் நித் திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரி யார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக் குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட் டத்திற்கு வரவேற்பு கொடுக் கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்ந்து நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதி யின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர்கொடி யேற்றி வைக்கிறார். வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கி றார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவி லில் இருந்து எடுத்துவரப் பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலைய ரங்கத்தில் சமய சொற்பொ ழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசு வாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.

    தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்களின் குறைதீர்த்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மன் (கிழக்கு) கோவில் உள்ளது. மூவேந்தர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை ஒற்றுமையாக்க தமிழ் மூதாட்டியான அவ்வை மன்னர்களை அழைத்து ஒரே இடத்தில் மூன்று பந்தல் அமைத்து அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றி ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவிய மகிழ்ச்சி பெற்ற சிறப்பு தலமே முப்பந்தல் ஆகும். அவ்வையின் வேண்டுகோளை ஏற்று பராசக்தியின் மறு உருவான இசக்கி என்ற இசக்கியம்மனை இங்கு அமர வைத்து கோவில் கொண்டதால் முப்பந்தல் சிறந்த புண்ணிய தலமானதாக கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.

    பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.

    கள்ளியை, குழந்தையாக மாற்றி...

    அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.

    விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், 'குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா' என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.

    முப்பந்தலில் அமர்ந்தாள் :

    இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, 'இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.

    அவ்வைக்கு தனி சன்னிதி :

    இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. 'இசக்கி' என்ற சொல்லுக்கு 'மனதை மயக்குபவள்' என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர்.

    இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

    இங்கு வந்து அம்மனை வழிபட்டால் தடைபட்டு வரும் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பகைமை விலகும், தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவிலுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு பூஜையும், தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஆடி மாத கொடை விழா இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்று.

    • இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
    • ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

    உற்சவர் - கல்யாண ஜெகந்நாதர்

    அம்மன் - கல்யாணவல்லி, பத்மாசனி

    தல விருட்சம் - அரசமரம்

    தீர்த்தம் - ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்

    முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ர தரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. "தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்".

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஆதி ஜெகநாதர் கோவிலும் ஒன்றாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

    பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

    சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

    பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

    கோவில் திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.

    • இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.

    அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.

    இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார்.

    வயிற்று நோய்கள்

    மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.

    அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    தலவிருட்சம்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்திரன், பெருமாள், சூரியன், பிரம்மன், அக்னி தேவன், பகிரதன், ரோமரிஷி சித்தர், ஆகியோர் எழுந்தருளி உள்ள‌னர். கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது.

    கோவில் தீர்த்தமாக அக்னி தீர்த்தம், காவிரி நதி தீர்த்தம் உள்ளது. அக்னி தீர்த்தம் இருந்த இடத்தில் தற்போது சிறிய கிணறு வடிவில் அக்னி தீர்த்த கிணறு உள்ளது. அக்னீஸ்வரர், அழலாடியப்பர், தீயாடியப்பர், வன்னிவனநாதர், திருக்காட்டுப்பள்ளி உடையார் என்றும் அழைக்கப்படுகிறாா்.

    ரோமரிஷி சித்தர்

    பண்டைய கால சித்தர்களில் ஒருவரான ரோமரிஷி என்பவர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரரை வழிபட்டு சித்தி அடைந்துள்ளார். கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ரோமரிஷி சித்தர் இறைவனை மலர் கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரகம் அமைந்துள்ளது. இதைப்போல பிரம்மதேவன் மகா சிவராத்திரி தினத்தன்று மூன்றாம் காலத்தில் எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வழிபட்டு இறையருள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

    ரோமரிஷி சித்தர் வழிபடுவது போல் சிவலிங்கம் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இங்குள்ள அக்னீஸ்வரர் ரோமரிஷி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தட்சிணாமூர்த்தி

    இந்த கோவிலில் உள்ள அம்பாள் சவுந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கு தனியாக சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளான தட்சிணாமூர்த்தி, திருமால், லட்சுமி, வலம்புரி விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், ரோமரிஷி சித்தர் வழிபடும் சிவலிங்கம், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, அகோர வீரபத்திரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

    இந்த கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழே உள்ள துவாரத்தின் வழியாக கர்ப்பக்கிரகத்தை சுற்றியுள்ள பிரகாரத்தில் புடைப்புச்சிற்பமாக காணப்படும் யோக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    துர்க்கை அம்மனுக்கு வழிபாடு

    கர்ப்ப கிரகத்தின் பிரகாரத்தில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு அவ்வப்போது நடைபெறும். இந்த கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இறைவன், இறைவியை திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திர நாள் என்பதால் இங்கு பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும்.

    குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் அய்யப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெறும். மார்கழி மாத முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் அய்யப்ப பஜனை நடைபெறும். இக்கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

    அக்னி தீர்த்த சிறப்பு

    இந்த கோவில் தீர்த்தமாக தற்போது திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மிகச் சிறிய அளவில் அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. அக்னிதீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மாத மக நட்சத்திரம், பங்குனி மாத உத்திராட நட்சத்திரம், வைகாசி மாத பவுர்ணமி திதி ஆகிய நாட்களில் நீராடி அகனீஸ்வரரை வழிபடுபவர்கள் இந்த பிறப்பில் எல்லா செல்வங்களும், மறு பிறப்பில் நற்பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் தீர்ந்து பெருமையுடன் வாழ்வார்கள் என்பது அக்னி தீர்த்த சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

    கோவிலில் நடைபெறும் விழாக்கள்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் அனைத்து மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பாகும். சித்திரை மாதத்தில் முதல் நாளில் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி. வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்கு சந்தன காப்பு அபிஷேகம். சித்திரை சதயத்தன்று நாவுக்கரசர் குருபூஜை, வைகாசி மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்தர் குருபூஜை.

    ஆனி மாதம் மகத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை, உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் திருமஞ்சனம் மற்றும் சாமி புறப்பாடு. ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று துர்க்கை அம்மனுக்கு மகா சண்டியாகம். ஆடி அமாவாசை நாளில் சாமி புறப்பாடு மற்றும் ஆடி 18-ந் தேதி சுவாமி புறப்பாடு, தீர்த்தவாரி. ஆடிப்பூரத்தன்று அம்மன் எழுந்தருளல், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் உள்ள அனைத்து மூர்த்தங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம்.

    ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா. புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் தினசரி கொலு அலங்காரம், நிறைவுநாளில் லட்சார்ச்சனை, பஞ்சமுக அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை. ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா. ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். கார்த்திகை மாதத்தில் சோமவார வழிபாடு. திருக்கார்த்திகை நாளில் அகன்ற தீபம் ஏற்றுதல். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா. தை மாதத்தில் உத்திராண்ய புண்ணிய காலத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி. தை அமாவாசை மற்றும் தைப்பூசத்தன்று சாமி புறப்பாடு, தீர்த்தவாரி. தை கடைசி வெள்ளி அன்று 108 திருவிளக்கு பூஜை, மாசி மாதம் மகத்தில் சாமி புறப்பாடு, பங்குனி உத்திரத்தை ஒட்டி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    கோவிலுக்கு செல்லும் வழி

    அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் ரெயிலில் தஞ்சை வந்து அங்கிருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சையை அடைந்து மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து கோவிலை அடையலாம்.

    ×