search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது.
    • எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

    மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர்.

    அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.

    ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

    ஆலய வரலாறு

    ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு உடுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டது. இக் கோவிலில் காலை மதியம் மற்றும் அந்தி நேர பூஜைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிஷேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் 09.02.2005 இல் நடைபெற்றது.

    • காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது.
    • காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்

    கோவை நாதேகவுண்டன் புதூரில் திரிசூல வடிவில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குறித்து தர்மராஜா சுவாமிகள், அன்னதானமடாலயம் நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கூறியதாவது:

    காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது. காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது உண்மை. காலபைரவருக்கு முதன்முறையாக கோவை ஆலாந்துறை அருகில் உள்ள நாதேகவுண்டன்புதூரில் திரிசூல வடிவில் முதன்முறையாக கோவில் அமைக்கப்படுகிறது.

    இங்கு 9 அடி உயரத்தில் ஐம்பொன்னில் காலசம்காரீஸ்வர பைரவர் சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் இக்கோவிலில் அஷ்ட பைரவர், விநாயகர் பெருமான், சிவபெருமான், மதுர காளியம்மன், சனீஸ்வர பகவான், 27 நட்சத்திர சுவாமிகள், 12 ராசிகள் சுவாமிகள் மற்றும் 9 நவக்கிரக சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த கோவில் அமைக்கும் திருப்பணிகளை ஸ்ரீமத் தர்மராஜா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது. தற்போது மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மேற்கண்ட இடத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த கோவில் அமைவதற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்குமாறு ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும்.
    • இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.

    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.

    கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார். கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புனித தீர்த்தங்கள்

    இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

    தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.

    • இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.
    • பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

    மூலவர் -காளமேகப் பெருமாள்

    தாயார் -மோகன வல்லி

    தலவிருட்சம் -வில்வம்

    தீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.

    தல வரலாறு:

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.

    இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    மோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.

    பங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

    இத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

    பெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் "ஆப்தன்' என்று அழைக்கப்படுகிறார். "நண்பன்' என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.

    அழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்.

    • வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம்.
    • ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு.

    இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.

    இறைவி : மரகதாம்பிகை.

    தல மரம் : பனை மரம்

    தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்

    வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும்.

    பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் 'விரிஞ்சிபுரம்' என்றானது. அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது. விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார்.

    சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, 'ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்' என்றார். நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

    அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது. பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான்.

    சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும். பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

    எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

    இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.

    அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும்.

    வழித்துணை நாதர் : மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு 'வழித்துணை நாதர்' என்றும் பெயர் வந்தது.

    போக்குவரத்து வசதி :

    தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். 

    பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.

    • நண்பகல் 12.30 மணியளவில் அடைக்கப்படும் நடை பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும்
    • 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நண்பகல் 12.30 மணியளவில் உச்ச பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கும். 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.

    சம்பவத்தன்று மாலை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்த பக்தர் ஒருவர் மாலை நடை திறப்பதற்கு முன்பாக மண்டைக்காட்டிற்கு வந்தார்.வெளியே காத்து நின்ற அவரை அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

    இதனை பார்த்த லட்சுமி புரம் மருத்துவர் காலனியை சேர்ந்த பிரமுகர் பிரதீப் (வயது 43) என்பவர், நடை திறக்கும் முன் அவரை எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என கேட்டு கோவில் காவலாளி குமார தாசிடம் தகராறு செய்தார்.பின்னர் குமாரதாசை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோவில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவில் காவலாளி குமாரதாசை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது.
    • 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவிமருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது

    1000-ம் ஆண்டுக்குமேல் பழமையான கோவிலாகும். இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தியாகராஜர் சன்னதி எதிரில் 'திருத்துறைப்பூண்டியில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தரங்கம்பாடியில் வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது.
    • இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையோரமாக அமைந்துள்ளது, தரங்கம்பாடி என்ற ஊர். இங்கு பழம்பெருமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் சுந்தரரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும். கடல் அலைகள் இசைபாடுவதுபோல் அமைந்த இடம் என்பதால் 'தரங்கம்பாடி' என்ற பெயர் வந்தது.

    இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது. கடல் அலைகள் கோவிலுக்கு நெருக்கமாக வந்து செல்லும். இந்த ஆலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காண முடியாத அண்ணல் (லிங்கோத்பவர்) ஆக உள்ளனர். விநாயகருக்கும் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை தற்போது பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. ஆலயத்தின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளது.

    இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்த கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது. மூலவரை மாசிலாமணீசுவரர் என்றும், மாசிலாநாதர் என்றும் கூறுகின்றனர்.

    2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக கோவில் அமைக்கப்பட்டது.மூலவருக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் அம்பாள் வீற்றிருக்கிறார். ஆலய பிரகாரத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. சந்திரன், சூாியன், பைரவர் திருமேனிகளும் காணப்படுகின்றன.

    • இந்த திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு.
    • ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன் அபிஷேகம் காண்கிறார்.

    முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு. போகர் என்னும் தலைசிறந்த சித்தரால் நவபாஷாணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சிலை. இதற்கு செய்யப்படும் அபிஷேக நீர் அருமருந்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    நவபாஷாண சிலையைச் செய்ய, சுமார் 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம், போகர். இந்த சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் அனைத்தும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் முருகப்பெருமானின் தலை முதல் அடி வரை முழுவதுமாக அபிஷேகம் செய்யப்படும். மற்றவை அனைத்தும் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்பட்டு விடும்.

    ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன், அபிஷேகம்- அலங்காரம் காண்கிறார். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டு விட்டால், அடுத்த அபிஷேக நேரம் வரை, முருகப்பெருமானுக்கு மாலை சாற்றுவது, பூக்களால் அச்சனை செய்வது என்று எதுவும் செய்யப்படுவது இல்லை.

    முருகப்பெருமானின் புகழ் பாடியவர்களில் முக்கியமானவர், அருணகிரிநாதர். இவர் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் சென்று, அதில் இருந்து மீள முடியாமல் மனம் வருந்தினார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தடுத்தாட்கொண்டு காப்பாற்றி, தன்னைப் பற்றி பாடல்கள் பாடும்படி செய்தார். முருகப்பெருமானைப் பற்றி, அருணகிரிநாதர் பாடிய பாடல்கள், 'திருப்புகழ்' என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.

    பழனி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. முருகனால் புகழ்பெற்று விளங்கிய அருணகிரிநாதரின் மீது, சம்பந்தாண்டான் என்ற புலவன் பொறாமை கொண்டான். ஒரு முறை பிரபுடதேவராய மன்னனுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க யாராலும் முடியவில்லை. அப்போது சம்பந்தாண்டான் நயவஞ்சகமாக, தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை பறிந்து வந்தால்தான், மன்னனின் நோயை குணப்படுத்த முடியும் என்றான். அருணகிரிநாதரால் மட்டுமே இது முடியும் என்று கூறினான்.

    அதைக் கேட்டதும் அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலமாக தன்னுடைய உடலில் இருந்து உயிரை ஒரு கிளி மீது செலுத்தி, விண்ணுலகம் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக சம்பந்தாண்டான், கோபுரத்தின் மீது இருந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி ரூபத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருள் செய்து, கிளி உருவத்தில் இருந்த அவரை தன்னுடைய தண்டத்திலேயே இருத்திக்கொண்டாராம்.

    • உண்டியல் காணிக்கை ரூ.6.50 லட்சம் வசூல் வந்துள்ளது
    • வீரமாகாளியம்மன் கோவில்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் நேற்று உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் பள்ளி மாணவிகள் வரவழைக்கப்பட்டு உண்டியல் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 493 ரொக்கப் பணமும், 32 கிராம் தங்கம் மற்றும் 68 கிராம் வெள்ளி நகைகள் உண்டியலில் இருந்து தெரியவந்தது. இந்த பணியின்போது செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் யசோதா உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனது.
    • 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் உள்ளது, ஜடோலி சிவன் கோவில். இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனதாக கூறுகிறார்கள். 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் நுழைவுப் பகுதியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    தென்னக கட்டிடக்கலை பாணி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மூன்று பிரமிடுகளால் ஆனது போல் கோவிலின் மேற்புற அமைப்பு இருக்கிறது. முதல் பிரமிடின் மேற்பகுதியில் கணபதி உருவமும், இரண்டாம் பிரமிடு மேற்பகுதியில் ஆதிசேஷன் உருவமும் காணப்படுகிறது.

    இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் முக்கிய தெய்வமாக வழிபடப்படும் சோலொனி தேவி என்னும் இந்து தெய்வத்தின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. இந்த இடம் முழுவதையும் அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. யுங்ட்ரங் திபெத்திய மடம், சோலொன் தேவி கோவில், கூர்க்கா கோட்டை மற்றும் ஜடோலி சிவன் கோவில் ஆகியவை சோலன் நகரின் முக்கிய சுற்றுலா தளங்களில் சில.

    ஹிமாச்சல்பிரதேஷ்,சோலோனின் பிரபலமான புனிதத் தலங்களில் ஒன்றாக ஜடோலி சிவப்பரம்பொருள் திருக்கோவில் அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்களை அற்புதமான வடிவமைப்பு கொண்ட இத்திருக்கோவில் ஈர்க்கிறது. இத்திருக்கோவிலின் கலை மற்றும் கட்டடக்கலை அற்புதத்தை அங்கு செல்லும் எவரும் புறக்கணிக்க முடியாது.

    ஆசியக் கண்டத்தில் உள்ள சிவபெருமானின் மிக உயரமான கோவில்.சோலனில் உள்ள ஜடோலி திருக்கோவில். ஜடோலி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தெய்வீக சந்நிதி. இந்தக் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.அதன் நுழைவாயிலுக்கு பல நூறு படிக்கட்டுகள் ஏறிச் செல்லவேண்டும். கோவிலின் பெயர் 'ஜடோலி'. இச்சொல், சிவப்பரம்பொருளின் ஜடாமுடியைக் குறிக்கிறது.அதாவது 'நீண்ட ஜடா ' என்பதன் அர்த்தத்திலிருந்து பெறப்பட்டது.

    இந்த கோவில் கட்டடக்கலை பலரும் வியந்து போற்றும் சிறப்பாகும். திராவிடர் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலில் மூன்று விமானங்கள் உள்ளன, மிக உயர்ந்த விமானம் சிகரம் என்றும், இரண்டாவது மிக உயர்ந்த விமானம் விமான என்றும், மூன்றாவது உயரமான விமானம் திரிசூல் என்றும் அழைக்கப்படுகின்றன. விநாயகர் திரிசூல் விமானத்திலும் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் விமானத்திலும் உள்ளனர்.

    கோவிலின் மூன்று சிகரங்களில் பிரமிடுகளிலும் செதுக்கப்பட்ட பல பிரபலமான தெய்வங்களும் உள்ளன. சிவப்பரம்பொருள் கோவிலுக்குள் ஒரு குகை உள்ளது, அங்கு பார்வையாளர்கள் சென்று இறைவனின் ஆசீர்வாதம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் சிவப்பரம்பொருள் தங்கியிருந்த இடம் இதுதான் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். குகையில் அன்னையின் திருமேனியும் உள்ளது.

    கோவிலிலிருந்து சில மீட்டர் தொலைவில், கருப்பு நிற சிவலிங்கத் திருமேனியும் வெண்விடையின் திருமேனியும் உள்ளன. ஜடோலி சிவன் கோவிலில் மரம் மற்றும் கற்களால் ஆன ஒரு பெரிய சிவன் சிலை உள்ளது. கோவிலின் கூரையில் தங்கத்தால் ஆன ஒரு மிக நீண்ட கம்பியும் உள்ளது. ஜடோலி கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று உள்ளது.இதனை 'ஜல் குண்ட்' என்று அழைக்கிறார்கள். உள்ளூர்வாசிகள்.திருக்கோவிலுக்கு வருபவர்கள்,அதிலிருந்து நீர் எடுத்து அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    • வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
    • மூலவர் திருப்பெயர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.

    தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு உள்ள விழுப்புரம் மாவட்ட வானூர் வட்ட திருவக்கரை அருள்மிகு சந்திர மௌளீஸ்வர் கோவிலில் 7 நிலை ராஜ கோபுரம் பிரதானமாக அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. காளிசன்னதியின் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் சன்னதி, காளிசன்னதியின் இடதுபுறம் கிளி கோபுரம் (நடு கோபுரம்), முன்புறத்தில் திருநந்தி, அதற்கு வலப்புறமாக திருகல்யாண மண்டபம் (நூற்றுக்கால் மண்டபம்) அமைந்துள்ளது. நடு கோபுரத்தினை தாண்டி உள்ளே கருவறையில் மூலவ லிங்கம். ஐந்தோ நான்கோ முகம் இல்லாமல் மாறுபட்டு மும்முகலிங்கமாக காட்சி அருளுகிறார். முன் மண்டபத்தில் இருபுறத்தில் பத்து அடி உயரத்தில் இரண்டு சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர்.

    மூலவர்

    மூலவர் திருப்பெயர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.சந்திரனை முடியிலே சூடியிருப்பவர் என்பது இதன் பொருளாகும். சதுரபீடத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் மூலவர் அழகிய மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான லிங்கம் அமைந்துள்ளது. மேற்குபாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், ஆகியோரின் இலக்கியக் குறிப்புகளும் வக்கிராசுரன் முதலியோர் வழிபட்டுள்ள சான்றுகளும் கிடைக்கின்றன.

    அம்பாள்

    அம்பாள் உலகை ரட்சிக்கும் அமிர்தேஸ்வரி எனவும்,அழகுமிகு கோலம் கொண்ட வடிவாம்பிகை எனவும் வணங்கப்படுகிறாள். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

    குண்டலிணி முனிவர்

    கருவறையின் தென்திசையில் குண்டலினி முனிவர் எனும் சித்தர் ஜீவசமாதி உள்ளது. குண்டலினி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் நிறுவப்பட்டு உள்ளது. வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன. வடதிசையில் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் தனித்து மூர்த்தியாய் நின்றருளுகிறார். வரதராஜ பெருமாள் சன்னதி பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது. இதன் வடதிசையில் மேற்கு நோக்கி நவக்கிரக சன்னதி உள்ளது. அருள்மிகு வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள சன்னதிகள் அனைத்தும் நேர்நேராக அமையாமல் வக்கிரகதியில் அமைந்துள்ள கோவில் திருவக்கரை எனப்படுகிறது.

    வக்கிராசுரனும் துர்முகியும்

    வக்கிராசூர அரக்கன் சிவனை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்து, தவவலிமையால் சாகா வரம் பெற்றான். வலிமை பெற்றதாலே எளியாரை சீண்டும் குணம் வந்தது. தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன் திருமாலிடம் வக்கிராசூரானை சம்ஹாரம் செய்ய வேண்டினார். பெருமாளும் சூரனுடன் போரிட்டு தனது சுதர்சனத்தை வக்கிராசுரன் மீது பிரயோகித்து வதைத்தார். வக்கிராசுரனின் தங்கை துன்முகி அவனைப் போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய பார்வதிதேவியே சென்றாள். ஆனால் துன்முகி கருவுற்றிருந்தால் பார்வதி துன்முகியின் வயிற்றை கிழித்து, சிசுவை தனது வலதுகாதில் குண்டலமாக்கிக் கொண்டு துன்முகியை வதம் செய்தாள். வக்கிரசூரனின் தங்கையை அழித்ததால் பார்வதி இங்கு வக்கிரகாளியாக சம்ஹாரக் கோலத்தில் அருள்புரிகிறாள். வக்கிரகாளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிரலிங்கம்' உள்ளது.

    வக்கிரகாளி சம்காரம்

    பண்ணியதால் ஓங்காரமாக இருந்த காளியை ஆதி சங்கரர் சாந்தம் செய்து இடதுபாதத்தில் ஸ்ரீ சக்ரராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்தாக கூறப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வக்கிரகாளியின் திருவுரு, சுடர் விட்ட பரவும் தீக்கதிர்களைக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக்கிரீடம் வலது காதில் சிசு-பிரேத குண்டலம், எட்டுத்திருக்கரங்கள் வலக்கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்த தலை மாலை. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.

    இந்த சன்னதியை வலம் வர நினைப்பவர்கள் ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலாலும் சங்கராபரணி நதியின் கரையாக அமைந்தாலும் வற்கரை - வக்கரை என மருவி திரு அடைமொழி சேர்ந்து திருவக்கரை ஆயிற்று.

    தல மரமாக வில்வமும் தீர்த்தமாக பிரமதீர்த்தம், சந்திரதீர்த்தம், சூரியதீர்த்தம் குறிப்பிடப்படுகிறது. "வராகநதி " யெனப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் வாழ்ந்த மரங்கள்,அவற்றின் பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றத்தோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன.

    மூர்த்திகள்

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்கரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    இக்கோயிலில் பவுர்ணமி இரவு 12மணிக்கு ஜோதிதரிசனமும், அமாவாசை தினத்தன்று பகல் 12 மணிக்கு ஜோதிதரிசனமும் நடைபெறும். சிவன் கோவிலாக இருந்தாலும், காளியும் குடி கொண்டிருப்பதால் இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாகவும் புகழ்ப்பெற்று திகழ்கிறது. மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். பிரதோஷம், மாதாந்திரபவுர்ணமி, அமாவாசை, சித்ராபவுர்ணமி உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகைதீபஉற்சவம், தைபூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை இத்தலத்து முக்கிய விழாக்கள் ஆகும்.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வழியில், பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் திருவக்கரை உள்ளது.

    ×