search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வாகனத்தில் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாளான இன்று (2-ந் தேதி) காலை 5 மணிக்கு சிறப்பு பூஜை, 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா, 8 மணிக்கு கலச பூஜை, அபிஷேபகம், பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான நாளை (3-ந் தேதி) காலை 9.05 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளிச் செய்து தேர் திருவிழா நடைபெறுகிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தொடங்கி வைக்கின்றனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • இந்த தேர் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
    • சிவ...சிவ... கோஷம் விண்ணதிர திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா் தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் திருப்பூர் மாவட்டம் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி லிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், புறப்பாடு நடைபெற்றது.நேற்று 1-ந்தேதி காலை 5மணிக்கு பூர நட்சத்திரத்தில் அதிர்வேட்டு, மேளதாளம் மற்றும் பஞ்ச கவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் உற்சவர் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர்.

    பின்னர் ஏராளமான பக்தர்கள் ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 4மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று 2-ந்தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ ,சிவ பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் கோவை சிரவையாதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவணமாணிக்க வாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. நாளை 3-ந்தேதி காலை 8மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி காலை 8மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நடக்கிறது. மேலும் ஸ்ரீசுப்ரமணியர் (சிறிய தேர்), கரிவரதராஜ பெருமாள் (சப்பரம்), சண்டிகேஸ்வரர் (சிறிய தேர்) வலம் வருதல் நடக்கிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.தேரோடும் வீதிகளில் திருத்தேரில் அசைந்தாடி வரும் அம்மையப்பரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, பக்தி இன்னிசை, கம்பத்தாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    • குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    பூந்தமல்லி:

    தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் நவகிரக ராகு தலங்களில் ஒன்றாக காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரமோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர். பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக தேர் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஆங்காங்கே கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலில் கடைசியாக தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

    • தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடை கொண்டது.

    தஞ்சை பெரியகோவில் தேர் 19 அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டது. மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டது. முதல் அடுக்கில் 1½ அடியில் 40 பொம்மைகளும், 2-ம் அடுக்கில் 2½ அடியில் 56 பொம்மைகளும், 3-ம் அடுக்கில் 1½ அடியில் 56 பொம்மைகள் உள்பட மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் 4 திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த பொம்மைகள் சிவன் கோவிலுக்கு ஏற்ற ஐதீக அடிப்படையிலும், தஞ்சையில் புகழ்பெற்ற சிற்பங்களையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

    தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சாதாரணமாக 40 டன் ஆகும். தேர் அலங்காரத்திற்கு பின் 43 டன் எடையாகும்.

    தஞ்சை பெரியகோவில் தேர் 14 இடங்களில் நின்று செல்லும்

    தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தொடங்குகிறது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகள் அலங்கார சப்பரத்திலும், தியாகராஜருடன் அம்மன் திருத்தேரிலும், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார சப்பரத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதியில் வலம் வருகிறது.

    4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. மேலராஜவீதியில் சந்துமாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும், வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில் (ராணி-வாய்க்கால் சந்து எதிரில்), ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்), குருகுலசஞ்சீவி கோவில் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது. கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை (மாரியம்மன் கோவில் அருகில்), விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்), மணிகர்ணிகேஸ்வரர் கோவில் (தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை அருகில்), வரதராஜ பெருமாள் கோவில் (நிக்கல்சன் கூட்டுறவு வங்கி எதிரில்), தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கமலரத்ன விநாயகர் கோவில் (கனரா வங்கி அருகில்), காசி விஸ்வநாதர் கோவில் (இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது.

    • பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
    • நாளை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்தி ருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் உத்திரம் தினத்தன்று மூலவர் ஆதிநாதர் விக்ரகம் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டிவேர் சப்பரம், உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்தி லும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 5 மணிக்கு கோஷ்டி நடைபெற்றது. காலை 7.15 மணிக்குள் சுவாமி பொலிந்து நின்ற பிரான் திருத்தேரில் எழுத்தருளினார். 8 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதியம் தேர் நிலைக்கு வந்தடைந்தது. நாளை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவில் மணிகண்டன், எம்பெருமானார் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் காரிமாறன், கலைக்காப்பக தலைவர் ரெங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார், ஶ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அலுவலர்கள் இசக்கி, முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.
    • பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர்.

    உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து கோவிலில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்களுடன் தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.

    அங்கு 3 அடுக்குகள் கொண்ட 19 அடி உயரம், 18 அடி அகலம், 40 டன் எடை கொண்ட தேரில் தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளினர். காலை 6.50 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'தியாகேசா, ஆரூரா' என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை முன்னே நடந்து செல்ல விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே சென்றது. பின்தொடர்ந்து தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் சென்றது. நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர் சப்பரங்கள் தேரை பின் தொடர்ந்தன. கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.

    தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.

    இன்று நடந்த தேரோட்டத்தை தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

    தேரோட்டத்தையொட்டி 1000-க்கு மேற்ப்பட்ட போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை (திங்கட்கிமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத்தெரு.

    நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரேஸ்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.

    அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷம் ேதாறும் அபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் விநாயகர், ராஜராஜசோழன், பெருவுடையார்-பெரியநாயகி, அம்பாள், முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

    • தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும்.
    • அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது.

    தேர் தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து புறப்படுகிறது. தேரை 1-ந்தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.

    இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

    தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தேரில் உள்ள மணிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. நாளைக்குள்(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும்.

    தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். பக்தர்களின் தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் உடைத்து வழிபட ஏதுவாகவும் 14 இடங்களில் தேரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    தேரோட்டம் நடைபெறுவதற்காக சாலை சீர் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

    • மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும்.
    • தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் ஒன்று, 4 ஆயிரம் திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட கோவில் என பல்வேறு சிறப்புகளை கொண்டது இக்கோவில்.

    ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் உள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை போல் உள்ளது சிறப்பம்சமாகும். இதில் உள்ள குதிரைகள், யானைகள் ஆகிய சிற்பங்களும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இந்த கல்தேரை காண வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. சாரங்கபாணி சாமி கோவில் தேர் திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையான சிறப்பு பெற்ற தேராகும். அடிப்பாகம் 25 அடி அகலம், மேல் தட்டு 35 அடி அகலம் கொண்டது. உயரம் 30 அடி ஆகும். தேர் அலங்கரிக்கப்படும் போது அதன் உயரம் 110 அடியாக இருக்கும்.

    தற்போது சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி தற்போது தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 200 டன் சவுக்கு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேர்ச்சீலை, குதிரைகள் உள்ளிட்டவற்றை தேரில் வைத்து அலங்கரிக்கப்பட உள்ளது.

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
    • தெப்பத்திரு விழா நாளை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வாகன வீதி உலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையடுத்து சாமியும், அம்பாளும் அம்மன் தேருக்கு எழுந்தருளினார்கள். அறம் வளர்த்த நாயகி அம்மன் இந்திரன் தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் தேரும் பின்னர் இந்திரன் தேரும் இழுத்துச் செல்லப்பட்டது.

    தேரோட்டத்தை மேயர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் பெண்கள், ஆண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டு தேர் மதியம் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருள செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவையொட்டி தெப்பகுளத்தின் நடுவில் உள்ள மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    ×