search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இந்த ஆண்டு கிலோ 100 ரூபாயை தாண்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைடுத்து அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர். தற்போது தக்காளி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் சில இடங்களில் தக்காளி கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இதேபோல் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் மர்ம நபர்கள் தக்காளியை திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திட்டக்குடி பஸ் நிலையம் பின்புறம் அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்குள்ள சில கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளி திருடு போவது தெரியவந்தது.

    சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்றனர். பின்னர் காலை கடைகளை திறக்க வந்தபோது சில கடைகளின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கடைகளில் புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தக்காளியை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் வளையாபதி, செயலாளர் ரவிச்சந்திரன், தாயுமான், ராமன், சக்திவேல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்குகின்றனர்.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மேலும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. வழக்கமாக 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது கடந்த ஒரு மாதமாகவே 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று அதன் வரத்து மேலும் குறைந்து 28லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மீண்டும் தாறுமாறாக உயரத்தொடங்கி இருக்கிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட இன்று மேலும் அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்படுகிறது.

    இதனால் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலை கிலோ ரூ.200-யை நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்குகின்றனர். மேலும் சமையலுக்கு தக்காளியை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    தக்காளி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றார்.

    • மதுரையில் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வரத்து குறைவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    மதுரை

    மதுரையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது கிலோ 150 ரூபாய் வரை விற்கப்ப டுவதால் தக்காளியை வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி பயன்படுத்தப்படாத உணவு பதார்த்தங்களே இல்லை என்று சொல்லலாம். பிரியாணி முதல் சட்னி வரை தக்காளியை பயன்படுத்தினால் தான் ருசியாக சாப்பிட முடியும் என்பது தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகும்.

    அந்த வகையில் தக்காளியின் மகத்துவம் அன்றாட உணவு பண்டங்களில் முழுமையாக தன்னை ஆக்கிரமிப்பதால் தக்காளியின் தேவையும் அதிகமாக உள்ளது. தற்போது மதுரை மார்க்கெட்டுகளுக்கு மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி கொண்டு வரப்படுவது வழக்கம் .

    மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தக்காளி மதுரைக்கு விற்ப னைக்காக எடுத்து வரப்படும். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் மகசூல் குறைவு காரணமாக தக்காளி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் தேவையும் இருப்பதால் மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் தக்காளியின் அளவும் குறைவாக உள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    விலை ஏற்றத்தை குறைக்க மதுரை மாவட்டத்தில் உள்ள 23 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்க கூட்டுறவு துறை நடவடிக்கை மேற் கொண்டது. ஆனாலும் தக்காளியின் விலை ஏற்றத்தை தடுக்க முடிய வில்லை.

    அந்த வகையில் தொடர்ந்து தக்காளி விலை ஏறு முகத்தில் உள்ளது. மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது வெளி மார்கெட்டுகளில் ரூ.140 முதல் 150 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் இந்த விலை ஏற்றம் பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப் பட்டுள்ளது.

    மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி பயன் பாட்டை குறைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத் தில் பொதுமக்களும் தக்காளியை பார்த்துவிட்டு வாங்கும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதாகவே தெரிவித்துள்ளனர்.

    தக்காளியின் வரத்து மற்றும் விலை ஏற்றத்தை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தக்காளி சேமிப்பு கிடங்குகளில் பதுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்தது
    • பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி யின் விலை ஏறுமுக மாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தி லும் தக்காளி யின் விலை அதிகமாக உள்ளது.

    தக்காளியின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டது. ரேஷன் கடைகளில் தக்காளி சப்ளை செய் யப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகரில் ஒரு சில ரேசன் கடைகளில் சில நாட்கள் மட்டுமே தக்காளி சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு தக்காளி சப்ளை செய்யப் படவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்டு களில் தக்காளி யின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.140 ஆனது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வழக்கமாக வரக்கூடிய தக்காளியை விட மிக குறை வான அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது.

    உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். பூண்டு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 180-க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.200 ஆக உயர்ந்தது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்பனை ஆனது. கேரட், பீன்ஸ் விலைகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.75, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சேனை ரூ.70, மிளகாய் ரூ.80, தக்காளி ரூ.160, இஞ்சி ரூ.280, பூண்டு ரூ.220, சின்ன வெங்காயம் ரூ.120, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியை பொறுத்த மட்டில் அதன் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். முன்பு ஒரு கிலோ தக்காளியை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது 100 கிராம் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
    • தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்தது. இன்று கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு 30 லாரிகளில் தக்காளி வந்து குவிந்தது.

    நேற்று 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து உள்ள போதிலும் தக்காளி விலை குறையாமல் மேலும் அதிகரித்து உள்ளது. உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரையிலும் விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 2 நாட்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 ஐ எட்டி இரட்டை சதம் அடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்வாகவே உள்ளது. அதன் விலை விபரம் வருமாறு:-

    நாசிக் வெங்காயம் 1 கிலோ-ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.110, உருளைக்கிழங்கு-ரூ.35, பீன்ஸ்-ரூ.120, அவரை ரூ.50, வெண்டை ரூ.50, உஜாலா கத்தரிக்காய் ரூ.50, ஊட்டி கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.40, வெள்ளரி ரூ.20, முருங்கை ரூ.40, பாகற்க்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70, முட்டை கோஸ் ரூ.25, முள்ளங்கி ரூ.25, புடலை ரூ.25, கோவக்காய் ரூ.25, இஞ்சி ரூ.270.

    • கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
    • தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    நேற்று முதல் தக்காளி கிலோ 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது.

    சித்தூர், மதனப்பள்ளி, கலகடா, குர்ரம் கொண்டா, வால்மீகிபுரம், முலகலா செருவு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.

    இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவை போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வரும் ஆகஸ்டு மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என தக்காளி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    தக்காளி

    ரூ.120 ஆக நீடிப்பு

    சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .

    பீன்ஸ் ரூ. 105

    உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   

    • தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.
    • ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி பின்னர் கடந்த வாரம் சற்று குறைந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வரும் நாட்களில் வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்து உள்ளது. 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். இந்த மாத தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது முதலே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. இன்று முதன் முதலாக தக்காளி வரத்து 30 லாரிகளுக்கும் கீழ் குறைந்துவிட்டது.

    தக்காளி வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதே நிலை நீடித்தால் ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும். தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாக 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே வருவதால் அதன் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. நேற்று 30 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளியின் வரத்து இன்று மேலும் குறைந்து 23 லாரிகளாக சரிந்துவிட்டது. அதுவும் ஒவ்வொரு லாரியிலும் 10 டன் என்கிற முழு கொள்முதல் அளவில் தக்காளி வரவில்லை. 7 முதல் 8 டன் என்கிற அளவிலேயே வந்துள்ளது. இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மேலும் உச்சத்தை எட்டும்.

    மேலும் வடமாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில வியாபாரிகள் தக்காளியை அதிக அளவில் கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.
    • வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் 1 கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம், கால் கிலோ என வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக ரூ.120 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தக்காளி வியாபாரியான சந்தோஷ் முத்து இது குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள் சமையலில் தக்காளி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.120 க்கு விற்கப்படும் தக்காளியை பாதிக்கு பாதி குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறேன். தரமானதாக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலையை குறைத்து வழங்கி வருகிறேன். இன்று மாலை வரை தக்காளி விற்கப்படும் என்று தெரிவித்தார்.

    இன்று மலிவு விலை தக்காளி பொதுமக்களுக்கு வழங்க 5 டன் வரவழைக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு வழங்கவில்லை.

    கடைகளில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை ரூ.60க்கு கொடுப்பதால் கால் கிலோ, அரை கிலோ என வாங்க வந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் 2 கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் முக்கிய பயிராக தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக பாலக்கோடு, காரிமங்கலம், ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பிரதான தொழிலாக வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் தக்காளி பழத்திற்கு தனி மவுசு உண்டு சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கும் வெளி மாநிலங்க ளான பெங்களூர், கேரளா விற்கும் ஏற்றப்படுகிறது.

    இந்த நிலையில் தக்காளி விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக சென்று முதல் ரகம், இரண்டாம் ரகம் என தரம் பிரிக்கப்பட்டு 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு வாங்கி செல்லும் தக்காளிகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொழுது 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது போன்ற விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி வகைகளை நேரடியாக நுகர்வோர்க்கு விற்பனை செய்வதற்காக தொடங்கப் பட்டது.

    ஆனால் தருமபுரி உழவர் சந்தையில் உழவர்களே இல்லாத வியாபாரிகளின் உழவர் சந்தையாக மாறி உள்ளது.

    விவசாயிடமிருந்து 70 ரூபாய்க்கு வாங்கப்படும் முதல் ரக தக்காளி உழவர் சந்தையில் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கழிவு செய்யப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகள் 94, 96, 98, 100, 106 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    வேளாண்மை துறை வெளியிடும் உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

    வெளிச்சந்தையில் தரமான தக்காளி 100 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் கழிவு செய்ய ப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகளை வியாபாரி களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம்.
    • பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்து ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக சற்று குறைய தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு கீழ் இறங்கியதால் வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த வாரத்தை விட மேலும் குறைய தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைவிட கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.140 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் இன்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடந்து வரும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில வியாபாரிகளும் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.200 வரை விற்க வாய்ப்பு உள்ளது.

    இதேபோல் பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    • கிலோ ரூ.130 க்கு விற்பனை
    • பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனை

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தி zலும் காய்கறி களின் விலை உயர்ந்து காணப்படுவதால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனையானது. அதன் பிறகு சற்று குறைந்து கிலோ ஒரு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று 10 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ 130-க்கு விற்பனை யானது. தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம், வரத்து குறைவு தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். வழக்கமாக பெங்களூரில் இருந்து அதிக அளவு தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்பொழுது ஏற்கனவே வரக்கூடிய அளவைவிட 50 சதவீதம் தக்காளியே விற்ப னைக்கு வருகிறது. இதனால் விலை உயர்ந்து காணப்படு கிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை யானது.

    இதே போல் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இஞ்சி கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனையானது. கேரட், கத்தரிக்காய், பீன்ஸ் மற்றும் மிளகாயின் விலை சற்று குறைந்துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறி களின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ. 60, பீன்ஸ் ரூ.90, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.200, தக்காளி ரூ.130, சின்ன வெங்காயம் ரூ.150, பல்லாரி ரூ.30, உருளைக்கி ழங்கு ரூ.35, தடியங்காய்ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, புடலங் காய் ரூ. 30, மிளகாய் ரூ. 80, வெண்டைக்காய் ரூ.60, சேனை ரூ.70, பீட்ரூட் ரூ.50-க்கு விற்பனையானது.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர் கோவில் காய்கறி சந்தைக்கு, குமரி மாவட்டத்தின் பல வேறு பகுதிகளிலும் நெல்லை மாவட்டங்களிலும் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். தற் பொழுது குமரி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. வெளி யூர்களில் இருந்து மட்டுமே காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. தக்காளியை பொருத்த மட்டில் பெங்களூரில் இருந்து குறைவான அளவில் விற்பனைக்கு வருவதால் விலை உயந்துள்ளது. காய்கறிகள் வரத்து அதி கரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்,

    ×