search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98745"

    • கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.
    • கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இந்தப்பகுதியில் கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மொத்த பலசரக்கு கடைகளை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ரூ.66 கோடி வரை 3 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைகளுக்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அங்குள்ள ரசீதுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கூறி அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர்கள், மகாத்மா காந்தி நகர் வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் எந்த தகவலையும் கூற மறுத்ததோடு, 3 பேரையும் சந்திக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை.

    இதை கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரை விடுவிக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கீழமாசியில் கடை வைத்து வியாபாரம் செய்ய மொத்த முதலீடு ரூ.50 லட்சம் தான். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.66 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஜி.எஸ்டி. தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் எஸ்டி மேட் பில் என கூறப்படும் ரத்தான பில்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர்.
    • இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் பழைமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக பொன்னியம்மன் உள்ளது. பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றிலும் மதிர்சுவர் அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். இந்நிலையில் கோவிலின் அருகில் குடியிருக்கும் குமார், ரமேஷ் ஆகியோர் மதில் சுவர் கட்டுமான பணிகளை தடுத்து, கட்டுமான பணி செய்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் அங்கு விரைந்து வந்தார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர். கோவிலுக்குள் சென்று வருவதற்கு 2 வழிகள் வைக்க வேண்டும். இல்லை என்றால் மதில் சுவர் கட்டவே கூடாது என்று கூறினார்கள். கோவிலின் பாதுகாப்பிற்காகவே மதில் சுவர் அமைக்கப்படுகிறது.

    எனவே, ஒரு வழியே போதும் என்று பொதுமக்களும், தி.மு.க. பிரமுகர் பெருமாளும் அவர்களிடம் கூறினார்கள். இதில் சமாதானம் அடையாத குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தி.மு.க. பிரமுகர் பெருமாளை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். 2 வழி வைக்கவில்லை என்றால் மதில் சுவர் கட்டக்கூடாது. மீறி கட்டினால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, அங்கு பணி செய்த கட்டுமான ஊழியர்களை விரட்டினர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தி.மு.க. பிரமுகர் பெருமாள் தலைமையில் மரக்காணம் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகாரளிக்க அனுமதி கேட்டனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணைக்கு அவர் சென்றுள்ளதாக பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். 

    இதனை அடுத்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு இங்கு வரவேண்டுமென கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாளை துணை போலீஸ் சூப்பிரண்டு கூனிமேட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்துவார் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தி.மு.க. பிரமுகர் பெருமாள், கூனிமேடு கிராம மக்களுடன் சேந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
    • தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  

    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு வரி கட்டுவதற்காக சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அந்தத் தரப்பினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.

    உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் சாக்கடை நீர் ,கழிவு நீர், மழை நீர் நீண்ட நாட்களாக தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
    • இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ,இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேற்கு தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் சாக்கடை நீர், கழிவுநீர், மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் இதனை கடந்து செல்ல முடியாமலும் சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவுவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும், இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர். அந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபால கிருஷ்ணன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தினை அகற்றவேண்டும். புதிய சாலை அமைக்கவேண்டும் என கூறினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக தபால்நிலையம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்பதால் அந்த இடத்தை வேறு எந்தப்பணிக்கும் ஒதுக்கக்கூடாது என கூறினார். இது குறித்து கேள்வி கேட்ட பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம், யாரும் பேசக்கூடாது, ஊராட்சி மன்றத்தலைவர் மட்டும்தான் பேசவேண்டும் என அவர் கூறியதாகத்தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்காடு ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியட் சீசர், இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. சமரச பேச்சு
    • கட்டுமான பணிக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமடி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக சிறிய கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் தங்கவோ, உடைகள் மாற்றவோ அறைகள் இல்லாததால் அதற்கான அறைகள் கட்டுவதற்காக கணபதிபுரம் பேரூராட்சியில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு செயல் அலுவலர் அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஆலயம் கட்டுவதற்காக அனுமதி வழங்க செயல் அலுவலர் ஒத்துழைப்பதாக கூறி நேற்று மாலை திடீரென சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் செயல் அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராஜாக்கமங்கலம் இன்ஸ் பெக்டர் கண்ணன் தலை மையிலான போலீசார் விரைந்து வந்து அங்கு கூடி நின்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் நாகர் கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அவசர கூட்டம் நடத்தி அதில் சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமான பணிக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனை யடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து அங்கு நின்றவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கணபதிபுரம் பேரூராட்சி பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு காணப்பட்டது.

    • வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
    • நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணைகளில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் லெப்பைக்குடிகாடு பொதுமக்கள் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரியும், பேரூராட்சி, கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார்பில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பேரூராட்சித் தலைவர் வரும் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததின் பெயரில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் கலைந்து சென்றனர்.


    • 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம்.
    • எங்கள் நிலங்களை அடமானம் வைத்து குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமாக ஏராள மான நிலங்கள் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலை சுற்றியுள்ள களப்பாகுளம், சீவலராயனேந்தல், ராம நாதபுரம், ஆட்கொண்டார் குளம், வடக்குபுதூர், செந்தட்டி, வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு உரியவை என அறிவிப்பு வெளியானது.

    மேலும் இந்த நிலங்களில் பத்திர பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது என சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், சங்கரன் கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அவர்களும் பத்திரப்பதிவை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே அந்த நிலங்களில் பல ஆண்டு களாக வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் தெற்கு சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவில் துணை ஆணையர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:-

    நாங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம். இது எங்களுக்கு பாரம்பரியமாக சொந்தமாக உள்ளது. எங்களுக்கு பணம் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் எங்கள் நிலங்களை அடமானம் வைத்து அதன் மூலம் திருமணம், குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

    இந்த நிலங்களின் பெயரில் எந்தவித ஆதாரம் இன்றி அனுபவமின்றி கோவில் நிலங்கள் என ஆட்சேபனை தெரிவித்து பத்திரப்பதிவு நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பண்டிகாவனுர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தி விநாயகர் நகரில் சுமார் 50 ஆண்டுகளாக 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் இந்த ஊராட்சியில் இருந்து மஞ்சங்கரணை ஊராட்சியில் சுடுகாட்டை பயன்படுத்தி வருவதால் பல்வேறு பிரச்சனை ஏற்படுவதாக கூறி தங்களுக்கு தாங்கள் பகுதியிலே சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைத்து தரக்கோரி பல்வேறு மனு அளித்தும் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்பு அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர் மனுமீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் விரைவில் தாங்கள் பகுதிக்கு சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என நரிக்குறவர் இன மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.
    • 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு ட்பட்ட அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களது குடியிருப்பின் அருகில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அத்து மீறி இடத்தை ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் மிரட்டல் விடு த்ததாகவும் கூறப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இடம் சம்பந்தமான பிரச்சனையை வருவாய்த்துறையில் புகார் அளியுங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×