search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக திருப்பூர் சத்யாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

    இதேபோல் இன்று காலை செரிப் காலனி, தோட்டத்து பாளையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

    • கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது.
    • மழை பெய்ய தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வியர்வை மழையில் நனைந்தபடி சாலையில் நடந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்த தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது விழுப்புரம் நகரம் வழுதரெட்டி, சாலா மேடு, நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, முகையூர், திருக்கோவிலூர், அரசூர், திருவெண்ணைநல்லூர், அரியூர், அகரம், விக்கிர வாண்டி, கண்டமங்கலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டங்களில் மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயில் அதிகமாகவே இருந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூழல் மாறி வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. பின்னர் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது . சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதற்கிடையே பல்லடம் பகுதியில் உள்ள, அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காந்தி ரோடு பகுதியில் மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது:-

    மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது.

    இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வெளியே வர முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் உடனிருப்பவர்கள்,மற்றும் பார்வையாளர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வளாகத்திற்குள் புகுந்துள்ள வெள்ள நீரில் சாக்கடை கழிவுகளும் கலந்துள்ளதால் சுகாதாரமற்ற சூழ்நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த திடீர் மழையால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியும், மற்றொருபுறம் பொதுமக்கள் அவதியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது.
    • நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த வெள்ளி வாயல் ஊராட்சியில் உள்ள மழை நீர் கால்வாய்வழியாக அருமந்தை, வழுதிகை மேடு, விச்சூர், ஞாயிறு, திருநிலை, முல்லைவாயல், கிராமங்களில் இருந்து மழை நீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது. இதனால் மழைநீர் செல்வது தடைபட்டு ஊருக்குள் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெள்ளிவாயல் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கால்வாய் அருகில் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

    • மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    இந்த கன மழையால் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.

    நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்த நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மழை நீர் வடிகால் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலையின் உயரத்தை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டதால் மழை நீர் முழுமையாக வடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளனார்.

    விடிந்து காலை 8 மணி ஆகியும் நீரினை வெளியேற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.
    • தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டைகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவமழை காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இதை தவிர்க்கும் வகையிலும், தேங்கிய மழைநீர் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கி உள்ளது.

    இந்திட்டத்தின் படி கல்குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக சப்ளை செய்யப்படும்.

    தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டைகளில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினமும் 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கல்குட்டைகளில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதனால் மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும்.

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    • மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    • தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிய தண்ணீரை சுத்தப்படுத்தி சப்ளை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிக்கராயபுரம், மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கடந்த சில நாட்களாக பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் பகுதியில் விட்டு,விட்டு பலத்த மழைகொட்டி வருகிறது. இதனால் கல்குவாரிகளில் கூடுதலாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் சிக்கராயபுரம் மற்றும் மலையம்பாக்கத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீர் பகுதியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கல்குவாரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு நெடுஞ்சாலை துறை சார்பில்,ரோடு போடப்பட்டு ரோட்டினிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

    போதிய வடிகால் வசதியின்றி அமைக்கப்பட்டுள்ளதால், மழைகாலங்களில் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அங்குள்ள வணிக வளாகங்களுக்கோ, குடியிருப்புகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீர் வடிகால் வசதி செய்து, அங்கு தண்ணீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கி போனது.
    • கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் செயல்ப டுத்தப்பட்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் காணாமல் போய்விட்டது. வருங்காலங்களில் வறட்சியை சமாளிக்க மீண்டும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது,

    இயற்கை கொடுக்கும் மழைநீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி களை, திட்டமிட்டுச் செயல்ப டுத்த அரசு அறிவித்தும் அதிகாரிகள் முன் வராத காரணங்களால் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் ஆதாரங்களும் சரிவர அமையாததால், குடிநீருக்காக மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

    நாளடைவில் அதிகாரி கள் மழைநீர் சேகரிப்பு திட்டங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால், குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால், மழைநீரைச் சேமிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    எனவே, கிராமங்கள் தோறும் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும், மழைக் காலம் தொடங்கும் முன் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.
    • .8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை மிகவும் முக்கிய பாதையாகும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. நீளமுள்ள 60 முதல் 70 அடி வரை அகலத்தில் நான்கு வழி சாலையாக உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதை ஆய்வு செய்து 2008-ம் ஆண்டில் அணுகு சாலை, வடிகால் நடைபாதையுடன் ஆறுவழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பகுதியில் 6 வருவாய் கிராமங்கள் உள்ளன.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம் கிராமத்தில் பெரும்பாலானவருக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தி சாலை விரிவாக்கம் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

    இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் வேகமாக நடக்கிறது. பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.

    5 அடி அகலம், 5 அடி ஆழத்தில் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. ஆங்காங்கே 200, 300, 500 மீட்டர் நீளம் என 4 கி.மீ. நீளத்தில் வடிகால் கட்டப்படுகிறது. ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியில் மழைநீர் வடிகாலுக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது.

    மேலும் கட்டப்படும் வடிகாலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் சேரும் வகையில் சாலையின் குறுக்கே 9 இடங்களில் நீர்வழித் தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இதே வேகத்தில் பணிகள் நடந்தால் நான்கு வழி சாலை அடுத்த ஆண்டு ஆறு வழி சாலையாக மாறும்.

    நிலம் கையகப்படுத்தும் இடங்களில் வடிகால் கட்டி வருகிறோம். இரு திசைகளில் வடிகால் பணி முடிந்ததும் சாலை விரிவாக்கம் செய்யப்படும். 8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும்.
    • மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கடந்த, 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர குப்பைகள் மழைநீருடன் கலந்து மழைநீர் கால்வாயில் அடைப்பு களுடன் ஆங்காங்கே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார்படி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    அவருடன் நகராட்சி ஆணையாளர் வசந்தி, உடன் இருந்தார்.

    பின்னர் நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் சாலை மேடாக உள்ளதால் கால்வாய்கள் பல இடங்களில் மிகவும் பள்ள மாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

    இதற்காக 100 கோடி ரூபாயும், மீதமுள்ள பாதாள சாக்கடைக் கால்வாயை அமைக்க 75 கோடி ரூபாயும், சாலை அமைக்க 30 கோடி ரூபாயும், புதிய பஸ் நிலையம் அருகில் திருமண மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்ட 50 கோடி ரூபாயும் என மொத்தம் 255 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க ப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர் மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×