search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந் தேதி வருகிறது.
    • காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

    நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. முன்னதாக நவம்பர் 9-ந் தேதியே (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

    அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ந் தேதியில் இருந்து ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ந் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந் தேதியும், 13-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந் தேதியும், 14-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந் தேதியும், 15-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந் தேதியும், 16-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ந் தேதியும், 17-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ந் தேதியும், 18-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ந் தேதியும் பயணம் செய்ய முடியும்.

    வட இந்திய ரெயில்களுக்கான முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது 2 நாட்கள் மாறுதல் இருக்கலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

    இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி விடுமுறையாக மாற்றும் மசோதா நிறைவேற்றம்
    • தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும் என்றார் மேயர்

    அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் முக்கியமான பண்டிகையும், தீப ஒளிகளின் பண்டிகை என அழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்தியர்களின் இந்த பல நாள் எதிர்பார்ப்பிற்கு ஒரு இனிப்பான செய்தியாக, அங்கு இனிமேல் தீபாவளி பண்டிகை ஒரு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்துக்கள்:-

    நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், நேற்று அங்குள்ள சிட்டி ஹாலில் செய்திருக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பில், தீபாவளியை நியூயார்க் நகர பொது பள்ளி விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநில சட்டமன்றமும், மாநில செனட்டும் நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். இது இந்திய சமூகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும். மேலும், இது நியூயார்க்கின் வெற்றியாக கருதலாம்'' என்றார்.

    நியூயார்க் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்மணியான நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார்," இரண்டு தசாப்தங்களாக தெற்காசிய மற்றும் இந்தோ-கரீபியன் சமூகம் இந்த தருணத்திற்காக போராடி வருகிறது. இன்று, மேயரும் நானும், உலகத்தின் முன் நின்று, இனி எப்போதும் தீபாவளிக்கு நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறை என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். தீபாவளி பண்டிகை விடுமுறை சட்டத்தில் இணைக்கப்பட உள்ளது," என கூறினார்.

    அங்குள்ள காங்கிரஸின் ஆசிய-பசிபிக் அமெரிக்க காகஸ் எனும் அமைப்பின் முதல் துணைத்தலைவரான கிரேஸ் மெங், "இந்த பள்ளி விடுமுறைக்காக நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம், இப்போது எங்கள் முயற்சிகள் நனவாகும். மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் விடுமுறை நாட்களை போலவே, இந்த முக்கியமான அனுசரிப்பை அங்கீகரித்து பாராட்ட எங்கள் பள்ளி அமைப்பு வந்துள்ளது" என கூறினார்.

    கடந்த மாதம், தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸில் மெங் அறிமுகப்படுத்தினார். இதன்படி, "தீபாவளி தின சட்டம்" எனும் சட்டத்தின் கீழ், அமெரிக்காவில், கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினங்களில், இனி தீபாவளி தின விடுமுறை, 12-வது விடுமுறையாக மாறும்.

    நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் கூறுகையில், "இந்த நகரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள் மூடப்படும் என்பதை விட நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நமது மனம் திறக்கப்படும். குழந்தைகளுக்கு தீபாவளி பற்றியும் வரலாறு பற்றியும் கற்றுத் தரப்போகிறேன்" எனவும் கூறினார்.

    அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.

    • கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர்.
    • கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும்.

    கணவன்- மனைவி இடையே அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் விரதம் இது. கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்சி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் க்ருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும்.

    முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம். கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும்.

    எப்போதும் குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவனுக்கு செய்த அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இந்த விரதத்தை கடை பிடிக்க ஒரு கலசத்தில் கேதாரேஸ்வரரை அழைக்க செய்ய வேண்டும்.

    அத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்க வேண்டும். பிறகு பூஜை செய்த 21 முடிச்சு உள்ள சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு 21 சுமங்கலி பெண்களுக்கு 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்குதல் வேண்டும். அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவ பார்வதி அருள் கிட்டும் என்கிறது கந்த புராணம்.

    • தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
    • சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.

    இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.

    இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.

    தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.

    யம தர்ப்பணம்

    தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.

    மாலை தீபம் ஏற்றுங்கள்

    தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

    மகாலட்சுமி பூஜை

    சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.

    • முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.
    • முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இலங்கையில் இவ்விரதம் இந்த வருடம் 04.11.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகி ஐந்தாவது தினமான 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. ஆனால் கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளில் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 08.11.2013 அன்று சூரன்போருடன் நிறைவு பெறுவதாக ஜோதிடம் கணிக்கின்றது.

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மூலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    கந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்பெறுகின்றன.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மூலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மூலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறும்பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

    அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

    தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

    தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர். இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை"யை பார்ப்போம்.

    பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

    மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

    அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

    அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.

    முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

    பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

    கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

    ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மூலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.

    • இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.
    • நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு வாரம் வரை பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

    பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தனர்.

    இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    தொழிலாளர்கள் திரும்பியதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.

    பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளித்தன. இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் வந்து விட்டனர். இதனால் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர். பனியன் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் கடந்த ஒரு வாரம் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் சற்று குறைந்து இருந்தது.

    இன்று தொழிலாளர்கள் திரும்பியதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    • இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    • அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டம் மந்தாகினி நதிக்கரையில் புந்தேல்கணிட் பகுதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். கடந்த 3 நாட்களாக இங்கு கழுதை சந்தை நடைபெற்றது.

    இந்த சந்தையில் சுமார் 15 ஆயிரம் கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ரூ.1000 முதல் ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இந்த கழுதைகளை வாங்கவும், விற்கவும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். நேபாளத்தில் இருந்தும் வியாபாரிகள் கழுதைகளை கொண்டு வந்தனர்.

    வியாபாரிகள் பலர் தங்கள் கழுதைகளுக்கு இந்தி நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர். இந்தி நடிகர் ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டு இருந்த கழுதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையானது. உயர்ரக கழுதை ஒன்றுக்கு சல்மான்கான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த கழுதை ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்றது. ஷாருக்கான் பெயரிடப்பட்ட கழுதை ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கழுதைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த கழுதை சந்தையில் ரூ.2 கோடி வரை விற்பனையாகி உள்ளது.

    வட மாநிலங்களில் கட்டிடப் பணிகளில் செங்கல், மணல், கருங்கற்கள் போன்றவற்றை சுமந்து செல்லவும், சலவை தொழிலுக்கு துணை மூட்டைகளை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே குதிரைகளை விட கழுதை உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக கழுதை சந்தையில் விற்பனை அமோகமாக நடந்தது.

    இதுகுறித்து கழுதை சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முன்னாலால் திரிபாதி கூறுகையில், "கழுதை சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு கழுதைக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறோம். இந்த சந்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு படையெடுத்த அவுரங்கசீப்பின் பல குதிரைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. எனவே குதிரைகளுக்கு மாற்றாக அவர் கழுதை வியாபாரிகளை வரவழைத்து சந்தையை தொடங்கினார். அதன் பிறகு கழுதை சந்தை இதுவரை நடந்து வருகிறது" என்றார்.

    • பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது.
    • சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    சிவகாசி :

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர்.
    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பி சென்றது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்வந்தனர். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏராளமானவர்கள் வந்தனர்.

    இந்நிலையில் தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கபட்டது. இதனால் தென்காசி பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ் முழுவதும் நிரம்பி சென்றது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அனைத்து ெரயில்களிலும் மக்கள் போட்டி போட்டு முன்பதி வில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் மேற்கொண்டனர்.

    • 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • நீர், நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறாக்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆறாக்குளம் கிராம மக்கள் கூறியதாவது :-

    பட்டாசு வெடிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிப்பால் ஜீவராசிகள் மக்களிடமிருந்து விலகி சென்று விடும். நீர்,நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. பறவை இனங்கள் இல்லாவிட்டால் வேளாண்மை பாதிக்கும். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி வீடு தோறும் தீபங்களை ஏற்றி வீட்டிலும்,கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி உற்றார்,உறவினர் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி மனம் விட்டு பேசி மகிழ்ந்து மதியம் குடும்பத்தினர்,நண்பர்களுடன் விருந்து உண்போம். ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த தான,தர்மங்கள் செய்திடுவோம்.குழந்தைகள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.
    • நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 6 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். பஸ் இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டதால் பிரச்சினை எதுவும் உருவாகவில்லை.

    இதே போல பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது. நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நேற்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,513 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை வந்து சேர்ந்தனர். இன்று 3 ஆயிரம் அரசு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    இதன் மூலம் 1½ லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். தொடர்ந்து நாளை மற்றும் இந்த வாரம் முழுவதும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் 28, 30-ந்தேதிகள் முகூர்த்த நாளாக இருப்பதால் பஸ் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஓசூர், திருப்பத்தூர், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பகல் நேர பயணம் மேற்கொண்டு சென்னைக்கு இரவுக்குள் வந்து சேருகின்றனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பஸ்களில் இருக்கைகள் காலியாக உள்ள நிலையில் வெளியூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரக்கூடிய பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    ×