search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி கலந்துகொண்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினார்.

    பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் பற்றிய சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    • தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த ‘தீபத் திருவிழா’ குறிப்பிடுகிறது.
    • உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த 'தீபத் திருவிழா' குறிப்பிடுகிறது.

    ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் இத்திருநாள் நமக்கு உள்ளூக்கம் அளிக்கிறது. ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி, நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

    லட்சுமி தேவி நமக்கு அமைதியையும், நல்ல உடல் நலத்தையும், செழிப்பையும் தந்து அருள்புரிவாராக.

    உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை (24ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு சாமந்தி மற்றும் ரோஸ் 45 வாகனங்களிலும் மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்கள் 20 மினிவேன்கள் மூலம் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    பண்டிகையை முன்னிட்டு மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி, ரோஸ் ஆகிய பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ரகத்தை பொருத்து ஒரு கிலோ சாமந்தி ரூ.50-முதல் ரூ.80 வரை மட்டுமே விற்கப்படுகிறது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிலோ ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.600-க்கும், கிலோ ரூ.200க்கு விற்ற ஜாதி ரூ.600-க்கும், கிலோ ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,500-க்கும், கிலோ ரூ.60-க்கு விற்ற ரோஸ் ரூ.140-க்கும் விற்கப்படுகிறது.

    அதிகாலை முதல் விறுவிறுப்பாக தொடங்கிய பூ விற்பனை பின்னர் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. கனகாம்பரம், ரோஸ் ஆகிய பூக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. மல்லி மற்றும் முல்லை ஆகிய பூக்கள் நாள்தோறும் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய பூக்கள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) சாமந்தி-ரூ.50-ரூ.80, மல்லி-ரூ.700, அரளி-ரூ.350, ஜாதி ரூ.600, சம்பங்கி ரூ.70, கனகாம்பரம்-ரூ.1500, முல்லை-ரூ.600, பன்னீர் ரோஸ்-ரூ.120-ரூ.140, சாக்லேட் ரோஸ்-ரூ.140-ரூ.160.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு மூன்று விதமான வரலாறுகள் உள்ளது.
    • மூன்று விதமான தீபாவளி வரலாற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

    தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர். தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்ற உண்மையான வரலாறு நம்மில் பலரும் அறியாத ஒன்று.தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு மூன்று விதமான வரலாறுகள் உள்ளது. அந்த மூன்று விதமான தீபாவளி வரலாற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

    இராமாயணத்தில் இராமன் ராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதை மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார்.அந்த நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த நாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்ற நாளை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விரதம் முடிந்த அன்று தான் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவம் எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.பல வரலாறுகளில் நாம் கீழே பார்க்கப்போகிற இந்த மூன்றாவது வரலாறு தான் மக்களால் அதிகம் பேசக்கூடிய தீபாவளி பண்டிகை வரலாறு ஆகும்.அதிக மக்கள் கூறும் நரகாசுரனை வதம் செய்த வரலாறு. இரண்யாட்சன் என்ற ஒரு அரக்கன் பூமாதேவியை கடத்திக் கொண்டு போய் பாதாளலோகத்தில் மறைத்து வைத்திருந்தான்.

    தீபாவளி பண்டிகை பிறந்த கதை

    நரகாசுரன் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, அவனுடைய தாய், தந்தையரிடம் ஒரு வரம் கேட்கிறான். தன்னுடைய இறப்பை துக்கமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று கேட்கிறான். அதனால் தீபாவளி என்ற பண்டிகை உதயமானது.

    இதனால் தான் நரகாசுரனின் இறப்பை, இந்துக்கள் பட்டாசு வெடித்தும், தீபம் ஏற்றியும், ரங்கோலி கோலமிட்டும், தீபாவளி வாழ்த்துகளுடனும் கொண்டாடுகிறோம்.

    தீபாவளி அர்த்தம்

    தீபம் என்றால் "விளக்கு" என்று பொருள். "ஆவளி" என்றால் "வரிசை" என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

    • தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர்.
    • கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் எதுவும் வாங்கவில்லை. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    புரட்டாசி 3-வது சனிக்கிழமை முதல் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். அன்று முதல் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால் மீன் மார்க்கெட்டுகளில் ஓரளவு கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நாளை (24-ந் தேதி) தீபாவளி பண்டிகையாகும். எனவே வெளியூர்களில் வேலைபார்க்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கடலூருக்கு தற்போது வந்துள்ளனர். தீபாவளி மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதை கடலூர் மக்கள் தவிர்க்கின்றனர். எனவே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் ஆகிய மீன்மார்க்கெட்டுகள் இன்று களைகட்டியது. அதிக அளவில் மக்கள் வந்துள்ளதால் மீன்கள் விலையும் கனிசமாக உயர்ந்து காணப்பட்டது.

    • தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சிவகாசி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையொட்டி நடைபெறும் பட்டாசு விற்பனை நலிவடைந்தது. இதனால் விருதுநகர் மாவட்டம சிவகாசியில் ஆண்டாண்டு காலமாக பட்டாசு உற்பத்தி செய்துவரும் உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மீண்டும் களை கட்டியது. கடந்த 7 மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அதிக அளவில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை கடந்த மாதத்துக்கு முன்பு தொடங்கியது. கடந்த சில நாட்களாக வியாபாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

    தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசி பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூல பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால் பட்டாசு விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையும் மீறி பட்டாசு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது.

    நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.

    ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலம் அடைய செய்யும் என்பதால் பட்டாசுகளின் விலையை பற்றி கவலைப்படாமல் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சில்லரை மற்றும் மொத்த பட்டாசு வியாபாரிகளும் சிவகாசியில் முகாமிட்டு உச்சக்கட்ட வியாபாரத்திற்காக இன்று அதிக அளவில் பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். 7 மாதங்களாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் போனஸ் பெற்றுக்கொண்டு தங்களது சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாட புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஜார்களில் ஜவுளி மற்றும் இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
    • தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும்.

    2 ஆண்டுகளுக்குப்பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்.

    சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

    தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    • ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை பிரதமர் பார்வையிடுகிறார்
    • சரயு நதி கரையில் முப்பரிமாண கிராபிக்ஸ் காட்சிகளை தொடங்கி வைக்கிறார்

    தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்கிறார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.

    6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கி வைக்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


    தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனங்கள் இடம் பெற்ற ராம்லீலா மற்றும் அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம் பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசையுடன் கூடிய லேசர் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


    முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு சந்திப்பு மற்றும் கோயம்பேடு பேருந்து முனையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு சந்திப்பு மற்றும் கோயம்பேடு பேருந்து முனையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வின் போது கூடுதல் கமிஷனர்கள் அன்பு (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.
    • விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள்.

    கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும்போது உள்ளூர் தயாரிப்புகளை கருத்தில் கொண்டு குடிமக்கள் "உள்ளூர்க்கான குரல்" முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோவா முதல்வர் கூறியதாவது:-

    தெற்கு கோவாவில் உள்ள லோலியம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பரிசளித்த தென்னை மரத்தின் இலைகளால் ஆன விளக்கை தாமே பனாஜியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்துள்ளேன்.

    மாநில அரசின் ஸ்வயம்பூர்ணா கோவா முன்முயற்சியின் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கோவா முழுவதிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் சாவந்த் உரையாற்றினார்.

    அது விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம், உள்ளூர் முன்முயற்சிக்கான குரலை ஊக்குவிக்க உதவ வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.

    இந்த பொருட்களை வாங்குங்கள். அவை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவைகளை வாங்கி ஊக்குவியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது.
    • ஆந்திராவிலும் பெரிசாக இல்லை.

    ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.

    சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத்தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!

    பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.

    தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது! தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம்.

    வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத்துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!

    பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!

    கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.

    ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது!

    - எழுத்தாளர் சுஜாதா

    • பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு இன்று மதியம் முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • தொழிலாளர்கள் பலர் நேற்று இரவு பணி முடிந்ததும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், தேனி, கம்பம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதுடன் ஒரு வாரம் வரை விடுமுறையும் அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனைப்பெற்று கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு இன்று மதியம் முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் பலர் நேற்று இரவு பணி முடிந்ததும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய பஸ் நிலையங்களில் பயணிகள் மற்றும் பனியன் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர். நெல்லை, நாகர்கோவில், திருச்சி, கரூர், உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயிலில் அதிகம் பேர் பயணித்தனர். பயணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 350 சிறப்பு பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் உள்ள வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த தன்பாத் ரெயிலை பிடிக்க வடமாநில பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் ரெயில்வே போலீசார் லேசான தடியடி நடத்தி கீழே இறக்கி விட்டனர்.

    ×