search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
    • கோவையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கோவை:

    வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் என அனைவரும் தீபாவளியை கொண்டாட ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

    இதனால் கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக கோவையில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிங்காநல்லூரில் இருந்தும், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

    இதுதவிர ஏராளமானோர் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தவர்களும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் கோவையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இணைகமிஷனர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவத்தன்று ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு சரக்கு ஏற்றி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து சரக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், கோவை சரகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி, அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் 1800 425 6151 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    • திருவொற்றியூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
    • அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வடபழனியில் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னை:

    வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (22-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அது வருகிற 23-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.

    வருகிற 24-ந்தேதி தீபாவளி அன்று அது புயலாக வலுவடையும். அது 25-ந்தேதி ஒடிசா கடற்கரையையொட்டி மேற்குவங்காளம்- வங்காளதேச கடற்கரையை அடைகிறது.

    இதன்காரணமாக தமிழகத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு புயல் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றின் திசையை மேற்கு நோக்கி மாற்றிவிடும். இதன்காரணமாக மழை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே புயல் காரணமாக தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையூறு வராது.

    இதற்கிடையே சென்னையில் இன்று அதிகாலையில் விடிய, விடிய மழை பெய்தது. அதேநேரத்தில் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் இரவு 2 மணிக்கு பிறகு மழை பெய்யத்தொடங்கியது. அதிகாலை 4 மணி அளவில் மழை வெளுத்து வாங்கியது. காலை 6 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கியது.

    சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, கே.கே.நகர், வளசரவாக்கம், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை, பெரம்பூர், எழும்பூர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, புரசைவாக்கம் என சென்னை நகரம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

    அதேநேரத்தில் திருவொற்றியூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வடபழனியில் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வடபழனி பஸ் நிலைய பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது. அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் சாலையில் ஓடிய வெள்ளத்தில் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    இதேபோல் கே.கே.நகர் ராஜமன்னார் சாலையிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகினார்கள். மேலும் கே.கே.நகர் பொப்புலி ராஜா சாலையிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
    • திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெள்ளி கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெ ல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். 4 மணிக்கு தொடங்கியது. வழக்கத்தைவிட இன்று அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கு மேல்தான் விற்கப்படுவதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணித்து வருகின்றனர்.
    • காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு, கூடுதல் கவனங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்ப்பத்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.

    தி.நகர் பகுதியில் 6 இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சிகளில் கண்காணிக்கும் போது, பழைய குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது.

    தி.நகர் பகுதியில் 17 போலீசார் தங்களது சீருடையில் அணியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் குற்றச்செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனர்.

    தி.நகர், பூக்கடை பகுதிகளில் தலா 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை மற்றும் உதவி மையங்கள், வண்ணாரப்பேட்டை, எம்.சி. சாலையில் 4 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் புரசைவாக்கம் பகுதியில் 1 தற்காலிக கட்டுப்பாட்டு அறை என 11 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

    மேலும், போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில், வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் 5 டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

    பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக முகம் அடையாளம் காணும் வகையில் எப்.ஆர்.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் சுமார் 100 போலீசார் சுழற்சி முறையில், குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ்அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுத்து வருகிறார்கள்.

    தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

    காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 33 போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சுற்றுக் காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சென்னை பெருநகர காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் 6 அகன்ற எல்.இ.டி. திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்போலீசார் பணி அமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை சென்னை பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
    • முன்பதிவு இல்லாமல் நேரடையாக பயணம் செய்யவும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கியுள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வெளியூர் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    6 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு போலீசாருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர்.

    சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் இல்லாமல் பஸ்கள் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு இல்லாமல் நேரடையாக பயணம் செய்யவும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,437 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,537 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    காலையில் இருந்தே பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கினார்கள். மாலையில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க தொடங்கும். இரவு நேர பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்குவார்கள்.

    பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று 10 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. அங்கு சென்று உடனடி பயணத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் புறப்பட்டு செல்வதால் நள்ளிரவு வரை கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    பொதுமக்களுக்கு உதவ ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேலும் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றை விட நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 3,686 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். சென்னையில் இருந்து புறப்படும் 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் முழு அளவில் செல்கின்றன. இதனால் ஆம்னி பஸ் நிலையத்தில் மாலையில் இருந்து கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "நேற்று வழக்கமான 2,100 பஸ்கள் போக கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 1,437 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் மேலும் அதிகரித்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களை இயக்க தயாராக வைத்து இருக்கிறோம்" என்றார்.

    • திருச்சியில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    • தாம்பரத்தில் இருந்து வருகிற 27-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேசுவரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    திருச்சியில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து வருகிற 27-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து வருகிற 26-ந்தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 23-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் செல்லும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக தீயணைப்பு துறை சார்பில் தியாகராய நகரில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

    உஸ்மான் சாலை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் பேரணியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ரவி தொடங்கி வைத்தார்.

    தீயணைப்புத் துறை அதிகாரிகள், வீரர்கள், பள்ளி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பர்கிட் சாலை வழியாகச் சென்ற பேரணி ராமகிருஷ்ணா பெண்கள் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.

    முன்னதாக டி.ஜி.பி. பி.கே.ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாநிலம் முழுவதும் 1,610 கல்வி நிலையங்கள், 1,120 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 6,563 பட்டாசு கடைகளுக்கும், சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே போல், தீயணைப்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.
    • ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது.

    திருப்பூர் :

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம், காதர் பேட்டை உட்பட திருப்பூரின் பிரதான ரோடுகளில் தற்காலிக துணிக்கடை, பலகார கடைகள், நடைபாதை கடை, பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், ஜேப்படி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி'யில் ரோந்து சென்று வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி, என்னதான் போலீசார் பாதுகாப்பு அளித்தாலும் கூட்டத்தை பயன்படுத்தி, கடை உரிமையாளரை திசை திருப்பி பொருட்களை திருடிச் செல்வது, வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்றும், சில்லறை வாங்குவது போன்று நடித்தும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகிறது.வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதேபோல், பொதுமக்களும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், உடனே அருகே உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.குறு, சிறு பனியன் நிறுவனங்களும் திருப்பூரில் ஏராளமாக உள்ளன. காதர்பேட்டையில் ஆண்களுக்கான பர்முடாஸ், இரவு நேர பேன்ட், டி-சர்ட், குளிர்கால ஸ்வெட்டர், பெண்களுக்கான வீட்டு உபயோக ஆடைகள், உள்ளாடைகள், பனியன் ஆடை, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏ-டு இசட் ரகங்கள் ஆண்டு முழுவதும் விற்கப்படுகிறது.ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். ஊரடங்கு முழுமையாக நீங்கிய பின் வர உள்ள இந்த தீபாவளியையொட்டி காதர்பேட்டையில் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,ஆண்டு முழுவதும் காதர் பேட்டையில் குழந்தைகள் ஆடைகள், டி-சர்ட், பேன்ட், பர்முடாஸ் விற்பனை நடக்கும். பெங்களூருவில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆந்திரா, தெலுங்கானா வியாபாரிகளும் வாங்கி சென்றனர். தற்போது பல மாவட்டங்களிலும், நெடுஞ்சாலை ரோடுகளிலும் ஆண்டு முழுவதும் கடை அமைக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.'ஆன்லைன்' வர்த்தகம் வந்த பிறகு காதர்பேட்டையில் வியாபாரம் மந்தமாகிவிட்டது. பொதுமக்கள், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தேவையான ஆடையை வாங்கிவிடுகின்றனர். இதனால் மொத்த வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடை அமைப்போர் மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில்லரை விற்பனை கடைகள் அமைவதால், எங்களுக்கு மொத்த விற்பனை நடக்கிறது. கொரோனா தொற்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் விற்பனை கிடைப்பதில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.வரும் 21, 22, 23 ந் தேதி ஆகிய 3 நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். அதற்காக பெண்கள், குழந்தைகளுக்கான புதுரக ஆடைகளுடன் கடை அமைத்துள்ளோம் என்றார்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் ,தாராபுரம், காங்கயம், உடுமலை உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் உள்ள ஜவுளி, நகை, மளிகை, பட்டாசு, இனிப்பு கடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க ஜவுளி, நகை, மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிகின்றனர். இதனால் கடைவீதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளன.

    • ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய், காட்டுமயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று நடந்த சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

    கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 500 முதல் 750 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • கடந்த வாரத்தை விட அதிகமாக ஆடுகள் வந்திருந்தன.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும்.

    புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. குறைவான அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதாலும், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை வருவதாலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆட்டுச்சந்தைக்கு வழக்கத்தை விட சற்று அதிகமாக ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் சந்தையில் ஆடுகளை வாங்கிசென்றனர். இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஆட்டுசந்தையில் அதிகபட்சமாக 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.

    பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிகமாக ஆடுகள் வந்திருந்தன.

    800 முதல் 1000 ஆடுகள் வரை சந்தைக்கு வந்தது. 5 கிலோ முதல் 30 கிலோ வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாது.

    8 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.

    தீபாவளி பண்டிகையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையாமல் அதிகமாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில், தமிழக ஆடுகளை தவிர, கேரள மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனாபாரி ரக ஆடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. அந்த ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் விற்பனையானது.

    • திருமால், லட்சுமி தேவையை மணந்த நாளே தீபாவளித் திருநாள் என்றும் ஒரு கதை சொல்கிறது.
    • காசியில் ஓடும் கங்கா மாதா, தீபாவளியன்று மட்டும் பாரத தேசத்தில் உள்ள ஆறு, குளம், கிணறு முதலிய எல்லா நீர் நிலைகளிலும் உறைவதாக ஐதீகம்.

    * பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஓணம் கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படி இந்தியாவில் அந்தந்தப் பிரதேசங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள் பல உண்டு.

    ஆனால் தீபாவளி பாரத தேசமெங்கும் பெரும் முக்கியத்துவத்தோடு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தியர்களை ஒருங்கிணைக்கும் பண்டிகைகளில் தீபாவளிக்கு முதன்மையான இடம் உண்டு.

    * தீபாவளி பண்டிகையின் தோற்றம் குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன. நாம் அனைவரும் அதிகம் அறிந்த கதை நரகாசுரன் வதம் செய்யப்பட்ட கதை.

    பூமாதேவிக்கும் திருமாலுக்கும் பிறந்த மகன் நரகாசுரன். தன் தாயாலன்றி வேறு யாராலும் தான் இறக்கக் கூடாது என வரம் வாங்குகிறான் அவன். ஒரு தாய் தன் மகனைக் கொல்லமாட்டாள் என்பது அவன் நம்பிக்கை.

    அப்படி வரம் பெற்ற அவன் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறுகின்றன. உலகம் கடும் துயரில் ஆழ்கிறது.

    கிருஷ்ண அவதாரத்தில் திருமால் கண்ணனாகப் பிறக்க பூமாதேவி சத்யபாமாவாகப் பிறக்கிறாள். அந்த வகையில் நரகாசுரனின் தாயாகிறாள் சத்யபாமா.

    கண்ணன் நரகாசுரனுடன் போர்செய்து அவனை வதம் செய்யும் எண்ணத்தில் தேரில் ஏறுகிறார். அர்ச்சுணனுக்குத் தேரோட்டியாக இருந்த கண்ணனுக்குத் தான் தேரோட்டியாகிறாள் கண்ணனின் மனைவி சத்யபாமா.

    கண்ணன், தான் நரகாசுரனைக் கொல்ல இயலாது என்பதையும் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவன் தாயான சத்யபாமாவால் தான் அவனைக் கொல்ல முடியும் என்பதையும் அறிவார்.

    எனவே நரகாசுரன் எய்த அம்பின் மூலம் தான் மயக்கமடைந்ததுபோல் நடிக்கிறார் அவர். உலகமென்னும் நாடகத்தையே இயக்கும் கண்ணனுக்கு நடிக்கக் கற்றுத்தர வேண்டுமா என்ன?

    கண்ணன் நடிப்பை நிஜமென எண்ணிய சத்யபாமா சீற்றமடைகிறாள். கணவரை மயக்கமடையச் செய்த நரகாசுரன்மேல் வில்லில் நாணேற்றி அம்பெய்கிறாள். அவ்விதம் தன் தாயாலேயே அவன் வதம் செய்யப்படுகிறான் என்பது விஷ்ணு புராணம் சொல்லும் கதை.

    இறக்கும் தருவாயில் நரகாசுரனுக்குப் புத்தி வந்ததாகவும், தான் இறந்த நாளை நன்னாளாகக் கருதி எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிப் புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என அவன் வரம் பெற்றதாகவும் கதை மேலும் வளர்கிறது.

    நமது புராணக் கதைகள் ஒவ்வொன்றும் உட்கருத்தைக் கொண்ட உருவகக் கதைகளே. நரகாசுர வதம் என்னும் கதையின் உட்கருத்து என்ன?

    தீய நினைவுகளே நரகாசுரன். அதைத் தோற்றுவிக்கும் மனமே நரகாசுரனின் தாய். மனம், தான் தோற்றுவித்த தீய நினைவுகளைத் தானே அழிக்க வேண்டுமே அல்லாது வேறு புறச் சக்தியால் அதை அழிக்க இயலாது.

    மன உறுதி என்னும் வில்லில் தெய்வ பக்தி என்னும் அம்பைப் பூட்டி தீய நினைவுகள்மேல் எய்யும்போது, தீய எண்ணங்கள் நாசமாகின்றன. தெய்வ சிந்தனையால் நம் மனம் தூய்மையடைகிறது.

    அவ்விதம் தீய நினைவுகளற்றுத் தூய்மையடைந்த மனத்தில் தோன்றும் ஆனந்தமே தீபாவளிக் கொண்டாட்டம். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்று இந்த நிலையைத்தான் சொல்கிறது திருக்குறள். நிலையான ஆனந்தம் தூய மனமுடையவர்களுக்கு மட்டுமே கிட்டும்.

    இறப்பு நடக்கும்போது வெடி வெடிக்கும் வழக்கமுண்டு. தீபாவளியின் போதும் வெடி வெடிக்கிறோம். எந்த இறப்பின் பொருட்டு வெடிக்கப்படுகிறது இந்த வெடி? தீய எண்ணங்களின் இறப்பையே தீபாவளியன்று வெடிக்கப்படும் வெடி உணர்த்துகிறது.

    கேரளக் கோவில்களில் எல்லா நாட்களிலுமே வெடி வெடித்தல் ஒரு நேர்த்திக் கடனாக அனுசரிக்கப்படுகிறது. நாம் நமது பிறந்தநாளையும் நட்சத்திரத்தையும் சொல்லிக் காணிக்கை செலுத்தினால் நம் பெயரில் ஒரு படக்கம் - வெடி- வெடிப்பார்கள். நம் மனத்தின் தீய எண்ணங்கள் அழிந்ததை அந்த வெடிச்சத்தம் உணர்த்துவதாக ஐதீகம்.

    தீபாவளியன்று நாம் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகிறோம். அதை ஒரு சம்பிரதாயச் சடங்காக மேற்கொண்டால் போதாது. காமம், குரோதம் முதலிய தீய எண்ணங்கள் அனைத்திற்கும் சேர்த்துத் தலைமுழுகுவதாகப் பிரதிக்ஞை செய்துகொண்டு தலையில் தண்ணீர் விட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் சரியான தீபாவளிக் குளியல்.

    * நரகாசுர வதம் என்பது மகாபாரதக் கண்ணன் தொடர்பான தீபாவளிக் கதை. ராமாயண ராமன் தொடர்பாகவும் ஒரு தீபாவளிக் கதை உண்டு.

    ராவண வதம் நிகழ்ந்த பிறகு புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிறார்கள் ராமன், சீதை, லட்சுமணன் முதலியோர். அவர்களை இல்லம்தோறும் விளக்கேற்றி ஆனந்தத்தோடு வரவேற்கிறார்கள் அயோத்தி மக்கள். பின்னர் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நிகழ்கிறது. அந்த நன்னாளே தீபாவளி என்பது வட இந்தியாவில் நிலவும் கதைகளில் ஒன்று.

    அயோத்தி மக்கள் தீபமேற்றி ராமபிரானை வரவேற்றதன் அடையாளமாக இப்போதும் வட இந்தியாவில் தீபாவளியன்று இல்லம் தோறும் தீபங்களை ஏற்றி வைக்கிறார்கள். தமிழகத்தில் கார்த்திகை கொண்டாடப்படுவதுபோல் அங்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றாலே விளக்குகளின் வரிசை என்பதுதான் பொருள்.

    * திருமால், லட்சுமி தேவையை மணந்த நாளே தீபாவளித் திருநாள் என்றும் ஒரு கதை சொல்கிறது. அமுதம் வேண்டி, வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடல் கடையப்பட்டது.

    அப்போது அமுதம் தோன்றுவதற்கும் முன்பாக வேறு பல உன்னதப் பொருட்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. கடுமையான ஆலகால விஷமும் கூட வெளிப்பட்டது.

    தேவர்கள் மேல் கருணைகொண்டு அந்தக் கொடிய விஷத்தைத் தாம் அருந்தினார் சிவபெருமான். அந்த விஷம் தன் கணவரை பாதிக்காமல் இருக்க வேண்டுமே எனப் பதைபதைப்போடு கணவரின் கழுத்தைப் பிடித்தாள் பார்வதி. விஷம் கழுத்திற்குக் கீழ் இறங்காது கழுத்திலேயே நின்றதால், விஷத்தை அருந்திய சிவபெருமான் நஞ்சுண்ட கண்டன் ஆனார்.

    ஐராவதம் என்ற வெள்ளை யானை, உச்சைச்வரஸ் என்ற உயரிய குதிரை, கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் என்றிப்படி அநேகப் பொருட்கள் பாற்கடலில் இருந்து உதித்தன.

    அதே பாற்கடலில் இருந்து கோடி நிலவுகளைச் சேர்த்துச் செய்தாற்போன்று லட்சுமி தேவி தோன்றினாள்.

    அவள் பேரழகைக் கண்டு வியந்தது தேவர் உலகம். தேவர்கள் எல்லோருமே லட்சுமி தேவியை மணம் புரிந்துகொள்ள ஆசை கொண்டார்கள். ஆனால் பெண்ணின் விருப்பப்படி அல்லவா மணம் நிகழவேண்டும்?

    எனவே அவள் கையில் சுயம்வர மாலை கொடுக்கப்பட்டது. அவள் தான் விரும்பிய மணாளனைத் தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    கையில் பூமாலையோடு நாணத்துடன் நடந்து சென்ற லட்சுமி தேவி, அந்த மாலையைத் தான் விரும்பிய திருமாலின் கழுத்தில் அணிவித்தாள். அவள் காதலை ஏற்றுக்கொண்ட திருமால் அவளைத் தன் இதயத்தில் ஏற்றுப் போற்றினார்.

    கணவர் தம் மனைவியை மேலோட்டமாக நேசித்தால் போதாது, அவளுக்குத் தம் இதயத்தில் இடம்கொடுத்துப் போற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது.

    லட்சுமி கல்யாணம் நிகழ்ந்த நன்னாள்தான் தீபாவளி என்கிறது விஷ்ணு புராணக் கதை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்யும் வழக்கமும் இருக்கிறது.

    * சிவ புராணத்திலும் தீபாவளி பற்றிய குறிப்புண்டு. பராசக்தி இருபத்தோரு நாள் கேதாரகவுரி விரதம் இருக்கிறாள். அந்தக் கடுமையான விரதம் நிறைவுற்றதும் பரமசிவன் மகிழ்ச்சி அடைகிறார். சக்தியைத் தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வர வடிவம் கொள்கிறார்.

    திருமால் தன் மனைவி லட்சுமியை இதயத்தில் ஏற்ற நாளைப் போலவே சிவன் தன் மனைவி பார்வதியை உடலில் ஒரு பாதியாக ஏற்ற நாளும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

    * சீக்கியர்கள் பொற்கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தைச் சமணர்கள் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

    புத்த மதத்திலும் தீபாவளிக் கொண்டாட்டம் உண்டு. அரச வாழ்வைத் துறந்து போதி மரத்தடியில் தவம் செய்து ஞானம்பெற்றார் புத்தர்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    தம் தந்தையும் மன்னருமான சுத்தோதனர் அழைப்பின்பேரில் மாபெரும் புனிதத் துறவியாக மறுபடியும் கபிலவஸ்து என்ற தாம் வசித்த பழைய நகருக்கு வருகை புரிந்தார் புத்தர். இப்போது அவர் மன்னரல்ல. ஆனால் உலகம் புகழும் ஒப்பற்ற துறவி.

    தங்கள் மன்னர் புத்தராக மாறி தங்கள் ஊருக்கு வருகைதந்தபோது மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி அவரை வரவேற்றார்கள்.

    விளக்கில்லாத ஏழைகளுக்கெல்லாம் செல்வந்தர்கள் விளக்குகளைத் தானம் செய்து அவர்களை விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்த நன்நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். விளக்குகளைத் தானம் கொடுத்ததை நினைவுகூரும் வகையில் இந்நாளை அவர்கள் தீபதானத் திருநாள் என அழைக்கிறார்கள்.

    * தீபாவளிக்கு புத்தாடை வாங்கி அணியும் வழக்கமிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் புத்தாடை வாங்கி அணிந்தால் அது பொறாமை உணர்வு தோன்ற வழிவகுக்கலாம். ஆனால் தீபாவளி அன்று புத்தாடை அணியும்போது எல்லோருமே புத்தாடை அணிவதால் பொறாமைக்கு வழியில்லை.

    * காசியில் ஓடும் கங்கா மாதா, தீபாவளியன்று மட்டும் பாரத தேசத்தில் உள்ள ஆறு, குளம், கிணறு முதலிய எல்லா நீர் நிலைகளிலும் உறைவதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று நாம் நம் இல்லத்தில் நீராடினாலும் கூட, 'கங்கா குளியல் ஆயிற்றா?' என விசாரிக்கும் மரபு இருக்கிறது.

    தீபாவளியன்று கங்கை நீரில் நீராடுகிறோம் என்ற உணர்வோடு நீராடினால் அந்த நீர் நம் பாவங்கள் அனைத்தையும் போக்கும். நீராடும்போது அத்தகைய உணர்வோடு நீராட வேண்டும் என்பது முக்கியம்.

    நம்பிக்கைதான் நம் ஆன்மிகத்தின் ஆதாரம். ஆன்மிகம் என்பதே உளவியல் சார்ந்த விஞ்ஞானம்தான்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம் விதித்து உத்தரவு வெளியானது.
    • பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில், அபராதம் விதித்து உத்தரவு வெளியானது.

    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம், பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் மற்றும் அபராதம் விதித்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவு வெளியானது.

    இந்த நிலையில் சட்டவிரோதமாக தடையை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1 முதல் 19-ந்தேதி வரையில் இந்த நடவடிக்கைகளின் மூலம் 13 ஆயிரத்து 700 கிலோ பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மடாங்கிரி சந்தை பகுதியில் ஒரு விற்பனையாளரின் கடையில் மட்டும் சுமார் 1200 கிலோ பட்டாசு கடந்த திங்கட்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×