search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • தீபாவளிக்காகவே இனிப்பு கடைகளில் ஏராளமான இனிப்பு வகைகளை செய்து வைத்துள்ளார்கள்.
    • பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் மனதில் பட்டென்று நினைவுக்கு வருவது இனிப்பு பலகாரங்கள், பட்டாசு, புத்தாடை இந்த மூன்றும்தான்.

    தீபாவளி தினத்தன்று இரண்டு நாள்களுக்கு முன்பே வீடுகளில் அதிரசம், பணியாரம், முறுக்கு உட்பட விதவிதமான பலகாரங்களை செய்ய தொடங்குவார்கள். நெய் மற்றும் எண்ணெய் வாசனை மூக்கை துளைக்கும்.

    பலகாரங்களை விரும்பி அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கு வயிற்று கோளாறுகளும் ஏற்படும். அதற்காக கடைகளில் தீபாவளி லேகியம் தனியாக விற்கப்படும்.

    இப்போது கிராமங்களில் ஒருசிலர் பலகாரங்களை செய்தாலும் 90 சதவீதம் பேர் வீடுகளில் பலகாரம் செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் வேலைப்பளு மற்றும் இந்த தலைமுறையினருக்கு பலகாரங்கள் தயாரிக்கும் முறையே தெரிவதில்லை.

    கடைகளில் விரும்பிய இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிட்டு பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள். தீபாவளிக்காகவே இனிப்பு கடைகளில் ஏராளமான இனிப்பு வகைகளை செய்து வைத்துள்ளார்கள். ஒரு கிலோ முறுக்கு குறைந்தபட் சம் ரூ.160 முதல் கடைகளுக்கு ஏற்ப விற்கிறது.

    சென்னை அடையார் ஆனந்த பவனில் தீபாவளிக்காக முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் 100 கிராம் வீதம் 12 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.900.

    இனிப்பு வகைகள் ரூ.650 முதல் ரூ.1400 வரை உள்ளது. இனிப்பு வகைகளை விட உலர் பழங்கள் வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    கிப்ட் பாக்ஸ் இனிப்பு வகைகள் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனைக்கு வந்துள்ளது.

    ஜவுளிக்கடைகளில் இந்த ஆண்டு ஜவுளிகள் விற்பனை அதிகரித்து உள்ளன. தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    ஜெயச்சந்திரன் ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டைவிட 20 சதவீதத்துக்கும் மேல் ஜவுளி விற்பனை அதிகரித்து உள்ளது.

    தீபாவளி என்றாலே பெண்கள் சேலைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான ஏராளம் சேலை ரகங்கள் மார்க்கெட்டுக்கு வந்து குவிந்துள்ளன. இதனால் அவர்களும் விரும்பி வாங்கி செல்கிறார்கள்.

    இளைய தலைமுறையின் ஜீன்ஸ்பேன்ட் மற்றும் வெஸ்டர்ன் மாடல் உடைகளை அதிக அளவில் வாங்குகிறார்கள் என்றார்.

    பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.

    கடந்த ஆண்டைவிட 40 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. சிறுவர்களை கவரும் வகையில் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிராகன்பிளை மற்றும் புதிய வகை மத்தாப்பு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரவெடிகளுக்கு தடையிருப்பதால் உற்பத்தி மிக மிக குறைந்து விட்டது.

    ஜவுளி, பட்டாசு, இனிப்பு ஆகிய 3 வகைகளின் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதால் கோடிக்கணக்கில் விற்பனை யாகும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • தீபாவளி விற்பனைக்காக 10 முதல் 15 சதவீதம் வரை கறிக்கோழி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • கறிக்கோழியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தற்போது விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்காக ஆடு, கோழிகள் விற்பனைக்காக குவிக்கப்படுகிறது. சென்னையில் 20 ஆயிரம் ஆடுகள் 2 நாட்களும் வெட்டுவதற்கு தயாராக உள்ளன. கறிக்கோழிகளும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 3 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதி முழுவதும் கறிக்கோழி விற்பனை தடையில்லாமல் நடைபெற அனைத்து முன் ஏற்பாடுகளையும் வியாபாரிகள் இப்போதே செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் பா.ஞானசெல்வம் கூறியதாவது:-

    சென்னை மாநகரம் முழுவதும் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கோடி முதல் 1½ கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படும். வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) 1 கோடி கிலோ கோழிக்கறி விற்பனையாகும்.

    தீபாவளி விற்பனைக்காக 10 முதல் 15 சதவீதம் வரை கறிக்கோழி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    புரட்டாசி முடிந்து ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. விரதம் இருந்தவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் அசைவ உணவு சாப்பிடுவார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை விற்பனை அமோகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    20 சதவீதம் கூடுதலாக கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 2 நாட்களுக்கும் சேர்த்து சென்னைக்கு 1½ கோடி கறிக்கோழிகளை குவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 3 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையாகும் என்று கருதுகிறோம். அதனை கணக்கிட்டு கறிக்கோழி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    கறிக்கோழியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தற்போது விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு மேலும் ரூ.20 வரை கூடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூலக்கடை எஸ்.ஆர்.தேவர் சிக்கன் கடை உரி மையாளர் ராமநாதன் கூறுகையில், புரட்டாசி மாதத்தில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. புரட்டாசி முடிந்த மறுநாளே கிலோவிற்கு ரூ.40 கூடி தற்போது ரூ.240க்கு விற்கப்படுகிறது.

    பண்டிகை நாளில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • தி.நகரில் 4 முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • எல்.இ.டி. திரைகள் மூலமும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    தி.நகரில் 2 ஆயிரம் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். `பேஸ்டேக்' கேமராக்கள் உதவியுடன் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தி.நகரில் போத்தீஸ் சந்திப்பு, ரங்கநாதன் தெரு சந்திப்பு, பஸ் நிலையம், ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதி உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் பார்வையில் கொள்ளையர்கள் ஊடுருவினால் உடனே அவர்களை கேமரா காட்டி கொடுத்துவிடும். இது தவிர எல்.இ.டி. திரைகள் மூலமும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சோரா, உதவி கமிஷனர் பாரதிராஜன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    • ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள்.
    • கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 'பிக்பாக்கெட்' மற்றும் 'செயின்' பறிப்பு கொள்ளையர்கள் ஒருசில இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் சிறுமி ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதேபோன்று வணிக பகுதிகள் பலவற்றிலும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள கே.வி.குப்பம், திருச்சி ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் ஆகிய வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்கள் தவிர சென்னையை சேர்ந்த கொள்ளையர்களும் தீபாவளி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

    தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பிக்பாக்கெட் திருடர்களும் தீபாவளி கூட்டத்தில் புகுந்து கைவரிசை காட்டி வருவதும் தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக ஆந்திராவில் இருந்து ஊடுருவி உள்ள கொள்ளையர்கள் டிப்-டாப் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் கூட்ட நெரிசல் மிகுந்த கடைகள் மற்றும் வணிக பகுதிகளில் ஊடுருவி கைவரிசை காட்டுவார்கள். இவர்கள் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பெண்கள் தோள்களில் தொங்க விட்டுள்ள பைகளில் வைத்திருக்கும் 'மணிபர்ஸ்' உள்ளிட்ட பொருட்களை குறிவைத்து கைவரிசை காட்டுவதில் கில்லாடிகள்.

    எனவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகள் மற்றும் வணிக வீதிகளுக்கு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையோடும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த கொள்ளையர்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து பொதுமக்கள் போலவே நடித்து கைவரிசை காட்டுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களின் அருகில் உள்ள லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் பதுங்கி இருந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களை குறிவைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து உஷாரான கொள்ளையர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை மற்றும் கேளம்பாக்கம், சிறுசேரி, பனையூர், மதுரவாயல் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு சென்று பதுங்கி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி தீபாவளி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு ஊடுருவி இருக்கும் கொள்ளையர்கள் தங்களுக்குள் தனித்தனி பாணிகளை பின்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களோடு பேச்சு கொடுத்து கொண்டே அவர்களிடம் கைவரிசை காட்டுவது, கூட்ட நெரிசலில் டிப்-டாப் உடையுடன் ஊடுருவி கைவரிசை காட்டுவது என புதுப்புது யுக்திகளை கொள்ளையர்கள் பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் உஷார்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து கொள்ளையர்களின் புகைப்படங்கள் அடங்கிய எச்சரிக்கை போர்டுகளையும் போலீசார் பொது இடங்களில் வைத்துள்ளனர்.

    இதையடுத்து தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வணிக பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு உள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ரெயில், பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்பு 2 நாட்கள் வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் நாளை(21-ந் தேதி) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சிறப்பு ரெயில்கள் உட்பட தென் மாவட்டங்கள் உட்பட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் விற்று தீர்ந்துவிட்டது. காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே செல்கிறது.

    தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் அரசு பஸ்களில் பயணம் செய்வதையே தற்போது அதிகளவில் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை(21-ந்தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை 3நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,518 பஸ்கள் இயக்கப்படும் என்று கடந்த 10-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்து இருந்தார்.

    அதன்படி பஸ்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1437 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை மறுநாள்(22-ந் தேதி) வழக்கமான பஸ்களுடன் 1586 சிறப்பு பஸ்களும் 23-ந் தேதி வழக்கமான பஸ்களுடன் 1,195 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது.

    மேலும் இந்த 6 பஸ் நிலையங்களுக்கும் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து பயணிகள் நெரிசலில் சிக்கி கொள்ளாமல் எளிதாக சென்றிட வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 24மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் உதவி மையம் மூலம் எந்தெந்த பிளாட்பாரத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் புறப்படும் என்பதும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளது.

    நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் தாம்பரம், பெருங்களத்தூர் இடையே வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுத்திடும் வகையில் போக்குவரத்து போலீஸ் சார்பாக சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட் எதிரே இ-சாலையில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் அனைத்தும் பி- சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று பின்னர் அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும். தனியார் கார் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் வெளியூர் செல்பவர்கள் ஈ.சி.ஆர் மற்றும் ஒ.எம்.ஆர் சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக சென்று என்.எச் 45 சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு உள்ளனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ரெயில், பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் ரெயில், ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிவடைந்து உள்ளன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் சுமார் 60 ரெயில்களில் 2.2 லட்சம் பேர் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் 35 ஆயிரம் பேர் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய உள்ளனர். ஏற்கனவே வருகிற செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரெயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்து விட்டன. ரெயில்கள் தேவை அதிகரித்து உள்ளதால் திருநெல்வேலி, தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என்றார்.

    • பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
    • முதலுதவி அளிப்பது எப்படி? என்று டாக்டர் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

    தீபாவளியை களைகட்ட செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம் போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும், ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகின்றன என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    'காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சில நேரங்களில் வெடிக்கக்கூடும். அந்த தீப்பொறி பட்டு கண்கள் பாதிக்கப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். பட்டாசு விபத்துகளால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படாது. ஆனால் உடல் பாகங்களில் சேதம் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

    பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பட்டாசு விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் கூறியதாவது:-

    * பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

    *பெரியவர்களின் துணையுடன் மட்டுமே சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக்கூடாது. பருத்தி ஆடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம்.

    * பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    * கம்பி மத்தாப்புகளை கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.

    *எந்தப் பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக்கூடாது.

    * சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை போட்டு வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொளுத்தக்கூடாது.

    *நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசை கொளுத்த வேண்டும்.

    * பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    முதலுதவி அளிப்பது எப்படி?

    *பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தை சுத்தமான பருத்தி துணியை கொண்டு மூடி, காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    * வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் அருண்ராஜ்

    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பட்டாசு களை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசு களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அள வில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு களை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.மருத்துவமனைகள், வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதி கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப் பதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடு மாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைவருக்கும் இதயங்க னிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • தீபாவளி ஆஸ்தானத்தால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 24-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

    ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாகக் காண்ட மண்டபத்தில் அமைக்கப்படும் சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து வைக்கிறார்கள். இவர்களுடன் சேனாதிபதியான விஸ்வக்சேனரையும் கொண்டு வந்து மலையப்பசாமியின் இடப்பக்கத்தில் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கிறார்கள். அதன்பிறகு மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்புப்பூஜைகள், ஆரத்தி, பிரசாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இத்துடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவு பெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட், பழம் மார்க்கெட் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்படும்.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் மிகவும் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாகும். சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று சில்லரை விலையில் விற்பனை செய்வது வழக்கம்.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளதாக அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர இருப்பதால் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட், பழம் மார்க்கெட் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மார்க்கெட்டுக்கு வந்து பூ, பழம் வாங்கலாம் என்றும் பூ மார்க்கெட் மற்றும் பழம் மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
    • ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சாதாரணமாக ரூ.5000-க்கு விற்பனையாகும் ஆடுகள் இன்று ரூ.7000 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

    ஆனால் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரூ.400-க்கு விற்கப்படும் கோழி ரூ.300 மற்றும் அதற்கு கீழ் விற்பனையானது. வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு கோழிகளை விற்றுச்சென்றனர். இதேபோல் சேவல்களும் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.

    கட்டுசேவல்கள் ரூ.2000 முதல் ரூ.10000 வரை விற்கப்பட்டது. மொத்தத்தில் இன்று மட்டும் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

    முன்னதாகவே மணப்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சந்தை நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவு வியாபாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவாகவே ஆடுகள் விற்பனையாகின.

    நேற்று இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சந்தைப்பகுதி சகதிகாடாக இருந்தது. இதனால் சாலையோரங்களிலேயே வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக தீபாவளிக்கு முன்னதாக பண்ணை அமைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்குவது வழக்கம். அதனை சந்தையில் வைத்து வழங்கி அவர்களுக்கு உணவும் வழங்கினர். இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆட்டுச்சந்தைக்கு 200 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். இன்று சுமார் 1000 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் கிடா எனப்படும் கருப்பு நிற ஆடு ரூ.25ஆயிரம் வரை விற்பனையானது.

    மற்ற ஆடுகள் ரூ.10ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டி ரூ.2000 முதல் விற்பனையானது. பழனி, தொப்பம்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். மார்க்கெட்டில் இன்று சுமார் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-

    பசுமை பட்டாசுகள்

    * சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

    * பட்டாசுக்கள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கி உள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    சமையலறையில்...

    * குடிசைப் பகுதிகளிலும், மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்க கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

    * தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.

    * பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்த பின்னர் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    ஆபத்தை விளைவிக்கும்

    * பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாட கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    * பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே இவ்வாறு செய்யக் கூடாது.

    * பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

    குழந்தைகள்

    * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள். எக்காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வான வெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்க கூடாது.

    கால்நடைகள் மிரளும்

    * கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம். அதை தவிர்க்க வேண்டும்.

    * தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

    * பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுபத்தி கொளுத்தி வைக்க கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுபத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு மேலும் கூறும்போது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அவசர உதவி எண்-112, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சு எண்-108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். கடந்த ஆண்டு உரிமம் இன்றி பட்டாசுகளை விற்பனை செய்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும் 92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    • தீபாவளி பண்டிகை 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிளில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    * சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

    * எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது.

    * குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.

    * பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

    * ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் (ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

    * பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.

    * பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    * கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்வோரை தாக்கி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது.

    * விதிமுறைகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு விற்றால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

    * பட்டாசு பொருட்கள் பஸ், மோட்டார் சைக்கிள், ரெயில் போன்றவற்றில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    * நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

    * மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    * பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மட்டும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×