search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21 அன்று தொடங்கப்படும்.
    • டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.

    டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

    தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.

    ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21ம் தேதி அன்று தொடங்கப்படும். அதன்படி, டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் பட்டாசுகளை வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ல்லி காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களையும் அமைத்துள்ளோம்.

    அக்டோபர் 16-ம் தேதி வரை 188 விதிமீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிகள் வாங்க கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

    பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

    சென்னையில் முக்கிய வர்த்தக மையமாக திகழும் தி.நகரில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோல், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது.

    கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

    இந்த நிலையில் தீபாவளி விற்பனைக்காக இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எந்தவித தொந்தரவும், செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசுக்கு பிறப்பித்து உள்ள உத்தரவில், தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்' என்று கூறப்பட்டு உள்ளது.

    • தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.3 ஆயிரம், மதுரை, கோவைக்கு-ரூ.2500, திருச்சிக்கு ரூ.1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் கடைசி நேர பயணம் மற்றும் குறித்த நேரத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஆம்னி பஸ்சை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 21-ந்தேதி பயணத்துக்கு ஆம்னி பஸ்களில் முழுவதும் முடிந்து விட்டன. சில பஸ்களில் மட்டும் ஒரு சில இருக்கை மட்டுமே காலியாக உள்ளன. ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. வருகிற 22, 23-ந்தேதிகளில் அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.3 ஆயிரம், மதுரை, கோவைக்கு-ரூ.2500, திருச்சிக்கு ரூ.1500 முதல் 2000 வரை கட்டணமாக உள்ளது. திருநெல்வேலிக்கு செல்லும் சில ஆம்னி பஸ்களில் ரூ.3500-க்கும் கட்டணம் உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே அனைத்து தரப்பினரும் பயணம் செய்யும் வகையில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது, கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு ஏறத்தாழ 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது அது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது என்றார்.

    • பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • இவர்களுக்கு சுமார் 30 ஆண்டுக்கு பின் தீபாவளி போனஸ் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செலவடை கிராமம் பச்சாகவுண்டனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் தினமும் விவசாயிகள் சுமார் 700லிட்டர் பாலை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இங்கு சேகரிக்கும் பால் சேலம் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் சங்கம் உருவாக்கியதில் இருந்து முதல் முறையாக 30ஆண்டுக்கு பின்னர் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. சங்கத்தில் உள்ள லாப தொகையில் இருந்து 83 ஆயிரம் ரூபாயை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளனர். இந்த போனஸ் வழங்கியதால் மேலும் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், துணைத் தலைவர் சின்னண்ணன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மலர், ரத்தினம், வெங்கடாஜலபதி, குமார், கண்ணன், செயலாளர் ஜெயக்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது
    • இந்தியாவின் ‘நம்பர்-1 டீலரான ‘வசந்த் அன் கோ’ நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் 'நம்பர்-1 டீலரான 'வசந்த் அன் கோ' நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது. இந்த நிலையில் 'வசந்த் அன் கோ' தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னையை தொடங்கியுள்ளது.

    இந்த விற்பனையில். அனைத்து முன்னணி வீட்டு உபயோக பொருட்களும் மிக குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதி யுடன் கிடைக்கும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்க ளுக்கு பரிசு போட்டி மூலம் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    32 'இன்ச்' எல்.இ.டிடிவி.. 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' ஆகிய ரூ.49 ஆயிரத்து 140 மதிப்புள்ள 3 பொருட்கள் தள்ளுபடி விலையில் ரூ.29 ஆயிரத்து 990-க்கு கிடைக் கும். 32 'இன்ச்' எச்.டி. 'ஸ்மார்ட்' டி.வி. உடன் 32 ''இன்ச்' எச்.டி. எல்.இ.டி டி வி.யை ரூ.10 ஆயிரத்து 990 க்கு வாங்கலாம். 32 'இன்ச்' எல்.இ.டி. டி.வி. சிறப்பு விலையாக ரூ.8 ஆயிரத்து

    990-க்கு கிடைக்கும். இதனை மாத தவணையாக ரூ.749 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    1.5 டன் 4 ஸ்டார் 'ஸ்பிலிட்' 'ஏ.சி.' சிறப்பு விலையாக ரூ.35 ஆயிரத்து 990-க்கு வாங்கலாம். மாத தவணை யாகரூ.3.ஆயிரத்து 83 செலுத் தியும் பெறலாம். 7 கிலோ 'பிரண்ட் லோடு' 'வாஷிங் மெஷின்' சிறப்பு விலையாக ரூ.32 ஆயிரத்து 990-க்கு பெறலாம். 'பிரஷர் 'குக்கர்' மற்றும் 'அயர்ன் 'பாக்ஸ்' ரூ.1,111 மட்டும் கொடுத்து வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு போன்றவைகளும் எளிய தவணை முறை வசதியுடன் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் 'ஸ்மார்ட் போன்' வாங்கு பவர்களுக்கு 'புளுடூத் ஹெட் செட்', 'பவர் பேங்', 'ஹெட் போன்' போன்றவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

    பழைய செல்போன் எந்த நிலையில் இருந்தாலும் ரூ.750-ல் இருந்து 'எக்சேஞ்ச்' செய்துகொள்ளலாம். ரூ.55 செலுத்தி 55 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.65 செலுத்தி 65 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.75 செலுத்தி 75 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.85 செலுத்தி 85 'இன்ச்' எல்.இ.டி.டி.வி.களை தவணை முறையில் வாங்க லாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் 'பர்னிச்சர்' வாங்கி னால் உடனடி தள்ளுபடி யாக ரூ.2 ஆயிரம் கிடைக் கும். 'கிரெடிட்', 'டெபிட்' கார்டுகளுக்கு 'கேஷ் பேக்' மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகை வழங்கப்படும்.

    முன்பணம் இல்லாமல் குறிப்பிட்ட ஏ.சி., எல்.இ.டி. 'டி.வி., 'பிரிட்ஜ்', 'வாஷிங் 'மெஷின்', 'வாட்டர் பியூரி பையர்', 'மைக்ரோவேவ் 'ஓவன்', செல்போன், 'டிஸ் வாஷர்', 'ஏர் பியூரிபையர்', 'ஏர் கூலர், 'ஹோம் தியேட்டர்' எடுத்துச்செல்லலாம். வட்டி இல்லாமல் ஏராளமான தவணைமுறை வசதிகள், 36 மாதம் வரை வட்டியில்லா தவணை முறை வசதி ஆகியவையும் வழங்கப்படும்.

    எங்களின் 45 ஆண்டு கால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்க வைத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை வழக்க மாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்போதும் மிக குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

    மேற்கண்ட தகவல் 'வசந்த் அன் கோ' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 24-ந்தேதி நடக்கிறது
    • கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்குகிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்தக் கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திருப்பதியில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல் கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்க ரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொ டர்ந்து அலங்கார தீபாராத னையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.
    • 100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும். சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பகுதிகளுக்கு 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.

    அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கீழ்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு செல்லும் அரசு பேருந்துகள் வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை அருகில் நிறுத்தப்படும். மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட், இ-ரோட்டில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, பி-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

    மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.

    100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

    கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் இ.வி.ஆர். சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள தனியார் வாகனங்கள் இ.வி.ஆர். சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது மெயின் ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதேபோல் வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் ஈ.சி.ஆர், மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக என்.எச். 45 செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது.
    • 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

    சர்வதேச சந்தையில், 2021ல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது.

    அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது.

    இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    பின்னர், தமிழகத்தில் மே 21-ந்தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று, மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன.

    இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    எனவே, மத்திய அரசு, வருகிற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வெட்டுவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
    • ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குறைந்த அளவில் ஆடுகள் வந்துள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுக்கு மறுநாள் திங்கட்கிழமை வருகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவு சாப்பிடாமல் விரதம் இருந்தவர்கள் ஐப்பசி மாதத்தில் அசைவ உணவை உட்கொள்வார்கள்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை மக்கள் அதிகம் எடுத்துக்கொள்வார்கள். தீபாவளி அன்று மாலை 4 மணிக்கு மேல் அமாவாசை வருகிறது. அதனால் பெரும்பாலானவர்கள் ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

    பண்டிகை தினத்தில் குறைந்த அளவில் தான் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனால் இந்த தீபாவளி ஞாயிறோடு இணைந்து வருவதால் ஆடு, கோழி இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் ஆடுகள் வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதில் புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 6 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுவது வழக்கம்.

    சைதாப்பேட்டையில் 1000 ஆடுகளும், வில்லிவாக்கம், கள்ளிகுப்பம் ஆகிய 2 கூடங்களிலும் சேர்த்து 1000 ஆடுகள் வெட்டப்படுகின்றன. தீபாவளி பண்டிகை தினமான ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்களிலும் 20 ஆயிரம் ஆடுகள் வரை வெட்டுவதற்கு வியாபாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வெட்டுவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குறைந்த அளவில் ஆடுகள் வந்துள்ளன.

    இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சபீர் அகமது, செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி தினத்தை விட ஞாயிற்றுக்கிழமை தான் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமை அமாவாசை வருவதால் 60 சதவீதம் ஆட்டிறைச்சி விற்பனை ஞாயிற்றுக்கிழமையும் 40 சதவீதம் திங்கட்கிழமையும் நடக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் சுமார் ரூ.10 கோடி அளவிற்கு மொத்தம் மற்றும் சில்லறை ஆட்டிறைச்சி விற்பனை 2 நாட்களும் சேர்த்து நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஆடுகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளன. 20 ஆயிரம் ஆடுகளை இந்த பண்டிகைக்கு வெட்ட திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த காலங்களை போல ஆட்டிறைச்சி விற்பனை தற்போது நடை பெறுவது இல்லை. பண்டிகை காலங்களில் வீடுகளில் சமையல் செய்வது குறைந்து விட்டது. ஓட்டல்களில் பிரியாணி ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.

    ஆன்லைன் வழியாக புக்கிங் செய்து விடுவதால் வீட்டிற்கே பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைத்து விடுகின்றன. இதனால் ஆட்டிறைச்சி விற்பனை குறைந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பாறை கால்நடை சந்தை நேற்று காலை கூடியது.
    • பகல் முழுவதும் நடைபெற்ற மாட்டுச்சந்தை இரவிலும் விடிய, விடிய நீடித்தது. இதில் ரூ.1 கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையானது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பறையில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலையில் மாட்டு சந்தை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறும்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் தங்களது ஆடுகள் மற்றும் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதேபோல் கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி 10 மணி வரை ஆட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தையிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும்.

    தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பாறை கால்நடை சந்தை நேற்று காலை கூடியது. பகல் முழுவதும் நடைபெற்ற மாட்டுச்சந்தை இரவிலும் விடிய, விடிய நீடித்தது. இதில் ரூ.1 கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையானது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஆட்டுச்சந்தை கூடியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆட்டின் விலை அதிகமாக இருந்ததோடு விற்பனை மிகவும் மந்தமான நிலையிலேயே காணப்பட்டது. வழக்கமாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும் ஆடுகள் எல்லாம் இன்று நீண்ட நேரமாக விற்பனையாகாமல் இருந்தது.

    வழக்கமாக தீபாவளிக்கு முன்பு நடைபெறும் சந்தையில் சுமார் ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். ஆனால் இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பலரும் ஆடுகளை மீண்டும் கொண்டு சென்றனர்.

    ஆனாலும் தொடர்ந்து வியாபாரிகள் சந்தைக்கு வந்த வண்ணம் இருப்பதால் ஆட்டுச்சந்தை களை கட்டியுள்ளது. கடந்த வாரம் மணப்பாறை ஆட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வார சந்தை ஏமாற்றத்தையே அளித்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாயில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    • அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • மேலப்பாளையம் கால்நடை சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும்.

    இந்த கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதற்காக முந்தைய நாள் இரவிலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்து விடுவார்கள்.

    இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் சிவந்திப்பட்டி, இட்டேரி, வள்ளியூர், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், செய்துங்கநல்லூர், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தையில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

    இந்த நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.

    அங்கே சிறிய ஆட்டுக்குட்டிகள் 3000 முதல் விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கு கால்நடை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கூறும் போது, இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் ஆடுகளை மிக குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்கிறார்கள். நாங்கள் காலையிலேயே இங்கு வந்து விட்டோம். இதுவரை ஆடுகள் விற்பனை செய்யாமல் இங்கே நிற்கிறோம் என தெரிவித்தனர்.

    ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது, இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக உள்ளது. ஆடுகள் ரூ‌.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறைச்சி வியாபாரம் நன்றாக இருக்கும். எனவே விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கிறோம் என தெரிவித்தனர்.

    ×