என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99375"
கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதைதொடர்ந்து, தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் மூவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக இருந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியானது.
பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.
கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில் ராமநகரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார்.
இதேபோல், ஜமகன்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கண்ட இரு சட்டசபை தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களின் வெற்றியை பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.#AnithaKumaraswamy #Ramanagaramassemblybypolls #Karnatakabypolls
திண்டுக்கல்:
நிலக்கோட்டையில் வருகிற 11-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
நிலக்கோட்டை தொகுதியில் மட்டுமின்றி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளார். அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என அ.தி.மு.க.வினர் நினைத்து வருகின்றனர். 20 தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது.
யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை வாங்கிக் கொண்டு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அ.ம.மு.க. வேட்பாளர்களை தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடுவதில் தடை ஏற்படுத்தவோ, வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத வகையில் அனைத்து கட்ட முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஆண்டிப்பட்டி தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான திப்பரேவு அணைத் திட்டம் செயல்படுத்தவில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினையை முன் வைத்து 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.
இதில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அ.தி.மு.க. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தர இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடி, கூடுதல் செலவுக்கு ரூ.1000 கோடி என மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை இனி தினகரனால் மட்டுமே தரமுடியும். ஆட்சி மாற்றம் வரும் என்பதால் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துகின்றனர். பொதுவாக தேர்தல் என்றாலே ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு மரண பயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.
மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை எடப்பாடி அரசு இதுவரை எதிர்க்கவில்லை. அ.ம.மு.க. வில் துணை பொதுச்செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தற்போதும் ஒன்றாகவே உள்ளோம்.
இவ்வாறு பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan
ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவிலில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் முன்பு இருந்த கட்சிக்கே மீண்டும் வந்துள்ளார். அவர் விலகியதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கூட்டணி ஆட்சி மீது பா.ஜனதாவினர் தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு பா.ஜனதாவினரே காரணம். தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அவர்கள், மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். பா.ஜனதாவினர் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி இருக்காது என்று கூறி வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தாலும், அதுவும் தோல்வி அடையும். பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.
பிரதமர் மோடிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் பா.ஜனதா ஆதரவாளர்களாக இருக்கக்கூடும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறாது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ளார். இது அவர் நாட்டு மக்களை நேசிப்பதை காட்டுகிறது. கர்நாடகத்தில் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு முந்தைய ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு அனுமதிக்க மாட்டேன். ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்.
ஹாசனாம்பா கோவிலில் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவு தவறானது. பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பின்னர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகருமான அம்பரீசுக்கும், நடிகை ரம்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகை ரம்யா மண்டியா மாவட்ட அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக நடிகை ரம்யா நியமிக்கப்பட்டார். அவர் சமூகவலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கடந்த 31-ந்தேதி குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதுதொடர்பான படத்தையும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி வெள்ளை நிற உடையுடன் காட்சி அளித்தார். அதற்கு நடிகை ரம்யா, இது என்ன பறவையின் எச்சமா? என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க நடிகை ரம்யா மறுத்துவிட்டார்.
இதற்கிடையே நடிகை ரம்யா 2014-ம் ஆண்டுக்கு பிறகு மண்டியா சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் இதுவரை அவர் வாக்குப்பதிவு செய்யவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வாக்களிப்பது நமது கடமை என தேர்தலின் போது மட்டும் கருத்து கூறுகிறார். ஆனால் அவர் வாக்களிக்க வருவதில்லை என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகியான சிவக்குமார் ஆராத்தியா என்பவர், நடிகை ரம்யா மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அக்கா... வணக்கம்... ஞாபகம் இருக்கா அக்கா. மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தல் நாளை (அதாவது இன்று) நடக்கிறது. நீங்கள் மண்டியா மாவட்டத்தின் மகள். அக்கா இந்த தேர்தலில் ஓட்டுப்போட நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சி (பா.ஜனதா) வேட்பாளருக்கு ஓட்டுப்போட கண்டிப்பாக மண்டியாவுக்கு வாருங்கள். நீங்கள் பெங்களூருவில் இருந்தாலும், வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தாலும் வந்து ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள் என நையாண்டி கலந்த கிண்டலுடன் அவர் கூறினார். இது கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.
இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
கருணாநிதி, ஏ.கே.போஸ் இருவரும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் மரணம் அடைந்ததால் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. அந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 11-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகே தமிழ்நாட்டில் 20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அட்டவணையை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைதேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. வுக்கு தற்போது சட்டசபையில் 97 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் தி.மு.க.வின் பலம் 117 ஆக உயரும். இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கு சவால்கள் நிறைந்த பலப்பரீட்சை களமாக மாறியுள்ளது. இந்த பலப்பரீட்சையில் தி.மு.க. எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்தே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வின் எதிர்காலம் அமையும். எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.வின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும்.
தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க. வாக்குகளின் சிதறல்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வாக்குகளை டி.டி.வி.தினகரன் கணிசமாக பிரிப்பார் என்று தெரிகிறது. இதன் மூலம் 20 தொகுதிகளின் வெற்றி - தோல்வியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாக டி.டி.வி.தினகரன் திகழ்கிறார்.
சில தொகுதிகளில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தினகரன் கட்சி சில தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதுவும் தமிழக அரசியலின் போக்கை மாற்றுவதாக அமையும். இதனால் தினகரன் கட்சி பெறும் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
20 தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த மும்முனை போட்டி 20 தொகுதிகளிலும் கடும் பலப்பரீட்சையை உருவாக்கும்.
2016-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்த போது இந்த 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி இருந்தது. திருவாரூர் தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இடைத்தேர்தலில் 19 தொகுதிகளையும் அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி சரித்திர சாதனை படைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. #ADMK #DMK #TTVDhinakaran #20ConstituencyElection
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும் அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும்.
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. அதற்காகத்தான் தொகுதி பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. தற்போது நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டமான கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடியில் இருந்து தான் நான் கிராமங்களை தத்து எடுப்பதற்கு நிதி ஒதுக்கி வருகிறேன்.
கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி நினைவு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடிய தியாகிகள் அதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். துப்பாக்கியை காட்டிய போதும் நெஞ்சை திறந்து காட்டி வீரத்துடன் போராடினார்கள். துப்பாக்கி குண்டுக்கும் தடியடிக்கும் சிறை தண்டனைக்கும் பலர் உயிர் இழந்தனர்.
தன் உயிரை தந்து குமரி தாய் தமிழகத்துடன் இணைய பாடுபட்ட அந்த தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இன்று. அனைத்து தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்துவது நமது கடமை.
தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் பங்காளி சண்டை எதுவும் கிடையாது. நாங்கள் அ.தி.மு.க.வையும் பலமுறை விமர்சித்து உள்ளோம். அதைபோலதான் தி.மு.க.வையும் விமர்சனம் செய்கிறோம். இதில், அரசியல் எதுவும் கிடையாது. நடந்த தவறுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தி.மு.க.வுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #DMK
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
அவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்த 18 தொகுதிகளும் கடந்த ஓராண்டாக பிரதிநிதி இல்லாமல், மக்கள் பணி எதுவும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் அங்கு தேர்தலை நடத்த தாமதித்தால் அது அந்த தொகுதி மக்களை எல்லாம் வஞ்சிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி தேர்தல் ஜனநாயகத்தையும் சிதைப்பதாகிவிடும்.
எனவே, டிசம்பர் மாதத்திற்குள் இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #ElectionCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்