search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம்"

    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். 

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
    • கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.

    எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
    • சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.12 வரை விற்கப்பட்டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை ஆனது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சென்னையில் முக்கிய தெருக்களில் தள்ளுவண்டி மூலம் வியாபாரிகள் பலர் கூவி, கூவி வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து வெங்காய வியாபரிகள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வெங்காயம் உற்பத்தி வழக்கத்தை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.

    • சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
    • தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    • விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.
    • தங்களது வாழ்வாதாரத்தைகாப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு சீசன் காலங்களிலும் வெங்காய விளைச்சல் அதிகமாகி வருகிறது .இதன்காரணமாக விலைவீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைவது தொடர்கதையாகிவிட்டது.

    விளைச்சல் குறைந்தால், விலை அதிகமாகி, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. விளைச்சலுக்கு, நுகர்வுக்கும் இடையே சீரான தன்மை இல்லாததே இதற்கு காரணம்.

    இம்முறை, வெங்காய விளைச்சல் ஓரளவுக்கு இருந்தாலும், விவசாயிகள் வேறு விதமாக பாதிக்கப்பட்டு, கடும் வேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

    அதாவது, பூஞ்சை நோய் காரணமாக, வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகளை கடும் துரயத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி அதகபாடி பகுதி வேளான் வட்டாரத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது.

    முந்தைய அறுவடையில் வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியினை சந்தித்த காரணத்தால், இந்தவருடம் வழக்கத்தைவிட குறைவான நிலப்பரப்பிலேயே வெங்காயம் நடவு செய்துள்ளனர்.

    இவை, தற்போது அறுவடை செய்யப்படுகிறது. முந்தைய அறுவடையில் அதிக விளைச்சலால் விலை வீழ்ச்சியினை சந்தித்த சின்ன வெங்காயம் கேட்பாரற்று கிடந்த நிலையில், இந்த வருடம் நியாயமான விலை கிடைக்கும் என விவசாயிகள் கணித்திருந்தனர்.

    தற்போது சின்ன வெங்காய மகசூல் பெரும் ஆபத்தான கட்டத்தை நோக்கி செல்கிறது. இந்த நோய் தாக்கம் காரணமாக, வெங்காயத்தின் இயல்பான வடிவம் மாறி, மிகுந்த எடையிழப்பு ஏற்படுகிறது. இதனால், போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒரு கிலோ வெங்காயம் தரத்திற்கு ஏற்ப 10 முதல் 15 ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் வாங்கி செல்வதாகவும் பலலட்ச ரூபாய் செலவு செய்து முதலீடு வராததால் வெங்காயத்தை வெட்டாம லேயே கண்ணீரை வரவழைப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    எனவே, அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அதற்கான ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும். தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனடியாக களஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், சின்னவெங்காயத்தையும், தங்களது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார்.

    ஜோலாப்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.

    மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.

    வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு வெறும் 2 ரூபாயே கிடைத்தது. இந்த விளைவிக்க கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன். இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயி துக்கராமிடம் வெங்காயத்தை வாங்கிய வியாபாரி கலீபா கூறுகையில், "ரசீதுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் செயல்முறையை நாங்கள் கணினி மயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக துக்காராமுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலை கொடுக்கப்பட்டது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெங்காயம் தரம் குறைந்ததாக இருந்தது. இதற்கு முன்பு அவர் 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர்ரக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மற்றொரு முறை அவரது வெங்காயத்துக்கு கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தரம் குறைந்த வெங்காயத்தை கொண்டு வந்ததால் கிலோ 1 ரூபாய்க்கே எடுக்க முடிந்தது" என்றார்.

    • தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
    • 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    இந்தநிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

    கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக, புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஏழு நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரிப்பால் மதுரையில் 10 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும்.
    • வெங்காயம் விலையும் வீழ்ச்சி அடைந்தது.

    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காய்கறி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று அறுவடை பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    நாட்டு காய்கறிகளான தக்காளி, கத்தரி, வெண்டை, பாகற்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக விளைச்சல் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருகிறது. நாட்டு காய்கறிகள் அதிக வரத்து காரணமாகவும், முகூர்த்த நாள் இல்லாததாலும் காய்கறிகளின் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும் காய்கறிகளின் விலை வழக்கமான விலையை விட குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோவுக்கு ரூ.140 முதல் 160 வரை விற்கப்பட்டன. அப்போது தக்காளியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    அதன் பிறகு படிப்படியாக வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலையும் குறைந்தது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்றைய நிலவரப்படி ரூ.10-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி பறிப்பதில் விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளிலேயே தக்காளியை அழுக விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட் களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் தக்காளியும் மாலை நேரங்களில் வீடு திரும்பும் போது சில வியாபாரிகள் குப்பைத்தொட்டியில் கொட்டும் அவலமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல சிறிய வெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மதுரை மார்க்கெட்டுகளில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட பல்லாரி மற்றும் சிறிய வெங்காயம் தற்போது கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மற்ற காய்கறிகளான கத்தரி கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும், மிளகாய் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், மல்லி 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இஞ்சி 60 ரூபாய்க்கும், கறிவேப்பிலை 30 ரூபாய்க்கும் விற்பனை–யாகிறது. மலை காய்கறி–களான பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி ஆகியவை 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. எஸ்.முருகன் கூறுகையில், தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளன. ஒரு சில நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

    • கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ. 20 ஆகும் நிலையில் அதனை விட குறைந்த விலைக்கு விற்றால் நஷ்டம் அடைய நேரிடும் என்பதால் பலா் விற்பனையை தள்ளிப்போட்டனா்.
    • ஒரு கிலோ ரூ. 13 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் காா்த்திகை பட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்தனா். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை தீவிரமடைந்த போது சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் சரிந்தது.

    ஒரு கிலோ ரூ. 13 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ. 20 ஆகும் நிலையில் அதனை விட குறைந்த விலைக்கு விற்றால் நஷ்டம் அடைய நேரிடும் என்பதால் பலா் விற்பனையை தள்ளிப்போட்டனா். அறுவடை முடிந்தவுடன் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனா்.

    வைகாசி பட்ட நடவுக்காக கணிசமான விவசாயிகள் விதை வெங்காயம் வாங்குவதில் ஆா்வம் காட்டினா். எனவேகிலோ ரூ. 20 க்கு விலை போனது. தற்போது, வைகாசி பட்ட நடவு பணி முடியும் நிலையில் உள்ளது. இதனால் விதை வெங்காயத்திற்கான தேவை குறைந்துவிட்டது. தற்போது கா்நாடகா மாநில வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளது.ஒரு கிலோ ரூ.10க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இருப்பு வைத்தால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது விலை வீழ்ச்சி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது.
    • கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த இரு ஆண்டாக ஊரடங்கால்பெரும்பாலான விவசாயிகள் வைகாசிப்பட்டத்தில்சின்ன வெங்காயம் சாகுபடியில் கவனம் செலுத்தினர். பலரும் பட்டறை அமைத்து, இருப்பு வைத்திருந்தனர். தேவைக்கும் அதிகமாக சின்ன வெங்காயம் சந்தைக்கு வந்ததால் விலை, கடும் வீழ்ச்சியடைந்தது. அதன் எதிரொலிதற்போது வரை நீடிக்கிறது.

    வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. வெளிச்சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் தற்போது, 15 ரூபாய்க்கும் குறைவாகவே மொத்த வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல்விதை வெங்காய விலையும் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது.

    இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுசாமி கூறுகையில், இம்முறை சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிக அளவு விவசாயிகள் நடப்பாண்டு வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடவில்லை. ஏறத்தாழ 50 சதவீதம் அளவுக்கு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் விற்பனை வணிகத்துறையினர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் சின்ன வெங்காயத்தை சந்தைப்படுத்த கர்நாடக வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். எனவேசின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.

    2 மாதங்களுக்கு முன் அறுவடை தொடங்கியதிலிருந்து வெங்காயத்தின் விலை சரியத்தொடங்கியது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் கிணற்றில் உள்ள நீரை கணக்கீடு செய்து அதற்கு தகுந்த அளவிலான பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

    இதில் குறிப்பிடத்தக்க பயிராக சின்ன வெங்காயம் உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன் இதன் விலை ரூ.60ல் இருந்து ரூ.120 வரை விற்பனையானதால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர்.

    2  மாதங்களுக்கு முன் அறுவடை தொடங்கியதிலிருந்து வெங்காயத்தின் விலை சரியத்தொடங்கியது. தற்போது நிலவரப்படி ஒரு கிலோ மட்டும் வாங்கினால் 20 ரூபாய்க்கும், மொத்தமாக வாங்கும்போது 100 ரூபாய்க்கு 6 கிலோவும் விற்பனையாகிறது. கொள்முதல் விலை இதை விட குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் சாகுபடிக்கு நடவு தொடங்கி அடியுரம் இடுதல், களையெடுத்தல், மருந்து தெளித்தல், இறுதியாக அறுவடை செய்தல் வரை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு  விலை நிலவரத்தை கணக்கீடு செய்து லாபம் எதிர்பார்த்திருந்தோம். 

    ஆனால் தற்போது தீபாவளிப்பண்டிகைக்கு கூட விலை அதிகரிக்காமல் நாளுக்கு நாள் விலை சரிந்து வருவது கவலையாக உள்ளது என்றனர். வியாபாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்  வெங்காயம் விலை சூடு பிடிக்கவில்லை. மொத்தமாக வாங்கி இருப்பு வைத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
    ×