என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth"

    • இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம்.
    • இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

    கும்பகோணம்:

    அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழும தலைவர் அன்வர்கபீர் தலைமையில் நடைபெற்றது.

    தாளாளர் அப்துல்கபூர் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்து கொண்டு 881-க்கும் பட்டயங்களை வழங்கி பேசியதாவது:-

    உலகம் முழுவதும் இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப படிப்புகளை அரசு செய்து தருகின்றது.

    பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்.
    • கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வரத்தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம், கீழக்கரை நகரில் ஒதுக்குப்புறமான இடங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் ஏராளமான போதை ஊசிகள் கிடக்கின்றன.

    இந்த ஊசிகள் போதை தரும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஏற்ற பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி வருகின்றனர்.

    தற்போது இளைஞர்கள் பலர் போதை மாத்திரை களையும், அது கிடைக்காத இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளையும் பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    இந்த மரங்களின் இடையில் நடமாட்டம் தெரியாததால் போதை ஊசி மற்றும் மருந்து களுடன் செல்லும் நபர்கள் அங்கு தங்கள் கை நரம்புகளில் போதை ஊசிகளை ஏற்றிக்கொண்டு அரை மயக்கத்தில் பகல் முழுவதும் கிடக்கின்றனர்.

    இதுபோன்ற நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மன அமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது.

    இது போன்ற மாத்திரை களை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில் எவ்வாறு இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பது மர்மமாக உள்ளது.

    கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வதை விட போதை ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் பலர் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை ஊசி மருந்து விற்பனை செய்பவர்களையும், அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.
    • இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சரோஜ், நிதிராம், மற்றும் சவுமியரஞ்சன்,ஆகிய 3 பேரும் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பாலமுருகனிடம் கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள். இதற்காக அங்கு ஒரு கீற்று கொட்டகையில் தங்கியிருந்து வந்தனர். வேலை முடிந்ததும் இரவு சாப்பிட்டு விட்டு கீற்று கொட்டகையில் 3 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கர்ச்சிப் கட்டிக் கொண்டு வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.

    இதையடுத்து சரோஜ் உள்பட 3 பேரும் எழுந்து கதவை திறந்த போது திடீரென அந்த கும்பல் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்காமல் 3 பேரும் அலறினர். அப்போது அந்த கும்பல் சத்தம் போட்டால் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சரோஜ் இதுபற்றி தாங்கள் வேலை பார்க்கும் என்ஜினீயர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    இதுகுறித்து சரோஜ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வடமாநில வாலிபர்களை தாக்கிய கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை

    மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார்.

    ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் ஜவுளி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பைப் குமார் (42), திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா(43) ஆகியோரை கைது செய்தனர்.

    கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் வாலிபர் புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • புதுப்பெண் வீட்டுக்கு சென்ற வாலிபர் தகராறில் ஈடுபட்டார். மேலும் பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    குழித்துறை:

    அருமனை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    சென்னை என்ஜினீயருக்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது. இளம்பெண் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அங்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இதனால் பெண்ணின் திருமணமத்திற்கு சேலம் வாலிபரும், பெங்களூருவில் அவருடன் பணிபுரிந்தவர்களும் வந்தனர். மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

    இந்நிலையில் சேலம் வாலிபர், புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புதுப்பெண்ணிடம் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஏன்? என்று புதுப்பெண் கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை எனவும், பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை என்றால் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன புதுப்பெண், சேலம் நண்பரின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். மேலும் இதுபற்றி கணவரிடமும் கூறினார்.

    இதற்கிடையே சேலம் நண்பரின் போனை புதுப்பெண் எடுக்காததால் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் மார்த்தாண்டம் வந்தார். இங்கு புதுப்பெண் வீட்டுக்கு சென்ற அவர், தகராறில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    இதனால் பயந்து போன பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சேலம் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    இந்திய ராணுவத்தில் (Agniveer) திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்ப முள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இளை ஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக 15.3.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
    • சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை.

    ஈரோடு:

    சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய மர்ம நம்பர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறிவிட்டு போனின் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீ சார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ரேக்காக சென்று சோதனையிட்டனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    இதனையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் இருக்கும் பகுதியை போலீசார் ட்ராக் செய்தனர்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என தெரிய வந்தது. அவரை பிடிக்க ஈரோடு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சுற்றித்திரிந்த சந்தோஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் சந்தோஷ்குமார் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி தெரிந்து உள்ளார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

    அவ்வப்போது கிடைக்கும் வேலையை பார்த்து சுற்றி வந்துள்ளார். சந்தோஷ் குமார் ஏற்கனவே 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை இதேபோன்று சென்னை காவல் கட்டு ப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று புரளியை கிளம்பி இருந்தார்.

    அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது வீட்டில் சாப்பாடு சரியில்லை. ஜெயில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் இவ்வாறு போன் செய்து செய்து மிரட்டல் விடுத்ததாக கூலாக பதில் சொன்னார்.

    இந்நிலையில் 3-வது முறையாக மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த முறை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது,

    சும்மா பொழுது போக்குக்காக போன் செய்து மிரட்டியதாக மீண்டும் கூலாக கூறினார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து டவுன் போலீசார் அசோக்குமார் மீது 506 (1), கொலை மிரட்டல் விடுப்பது, 507 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய ல்பட்டது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் சந்தோஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

    • சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
    • ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர். 

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
    • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.

    அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.

    இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி-மேகலா தம்பதியின் மகன் அசோக்குமார் (வயது25).

    இவர் அடிக்கடி குடித்து விட்டு எந்தவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அசோக்குமார் சம்பவத்தன்று பி.அய்யம்பட்டியில் உள்ள அவரது உறவினர் கலா வீட்டிற்கு சென்றார். அங்கு கலாவின் மாமனார் குழந்தைவேல் என்பவருடன் சேர்ந்து ஊருக்கு வெளியே சென்று ஒன்றாக மதுக்குடித்துள்ளனர்.

    அப்போது குழந்தைவேலின் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, வண்டியை எடுத்து கொண்டு பங்கில் பெட்ரோல் போட்டு வருமாறு அவர் அசோக்குமாரிடம் கூறினார். உடனே தருமபுரி-கடத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டு அசோக்குமார் மீண்டும் குழந்தைவேல் இருக்கும் இடத்திற்கு திரும்பி சென்றார்.

    அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் வண்டியை சரிவர ஓட்ட முடியாமல் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்தபோது அசோக்குமார் எடுத்து சென்ற வண்டி குழந்தைவேலுடையது என்றும், அந்த வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து குழந்தைவேலுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அடித்து உதைத்த வாலிபர் தன்னுடைய உறவினர் என்றும், தான்தன் வண்டியை பெட்ரோல் போட கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே வெளியே சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கலாவிடம் விசாரித்தபோது அசோக்குமார் அப்போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார். ஆனால், தனது மகன் மீண்டும் வீடுதிரும்பி வராததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் மேகலா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    திருடன் என தவறாக நினைத்து கிராம மக்கள் வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×