என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94689"

    திருமங்கலம் பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    திருமங்கலம்

    கடந்த சில நாட்களாக  அக்னி வெயில் கொளுத்தி வந்த  அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென மதுரை மாவட்டத்தில் பல இடங்க ளில் பலத்த மழை பெய்தது.

    திருமங்கலம், சாத்தங்குடி, கப்பலூர்,மேலக்கோட்டை, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதிபட்டனர்.

     மேலும் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசியது.கோடை காலத்திலும் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.

    இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.
    • சூறை காற்றுடன் பெய்த பலத்த மழையில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவகாசி 11, விருதுநகர் 20.8, ராஜபாளையம் 20, காரியாபட்டி 30.2, வெம்பக்கோட்டை 23.2, கோவிலாங்குளம் 19.8. மாவட்டத்தில் 175 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

    • திருமங்கலம் அருகே மரம் விழுந்து அரசு பள்ளிகட்டிடம் சேதமடைந்துள்ளது.
    • இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் மழைக்கு மரங்கள் கீழே விழுந்தன. திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இருந்த பழமையான மரம் நேற்று பெய்த மழைக்கு பெயர்ந்து பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது.

    இரவு நேரம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. இதனால் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் எதும் ஏற்படவில்லை.

    இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது. கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை ஊழியர்கள் அகற்றினர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழையால் சாலையோர கடைக்காரர்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து கனமழை பெய்தது.

    கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

    மழையின் காரணமாக சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டிபன் கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    • ‘சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது.
    • புயல் கரையை கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.

    'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இந்த புயல் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலம், செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அது இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகும்வரையில் அந்த பருவமழைக் காலம் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாக தெரிவித்த ஆய்வு மையம், இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 49 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    • மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி குருப், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களுடன் கலுங்கில் இருந்த அடைப்பை தண்ணீர் வெளியேறும் வகையில் கிராமத்தினர் உதவியுடன் சரி செய்யபட்டது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவறுத்தப்பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளைச் சுற்றி உள்ள தண்ணீர் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
    • டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    தஞ்சையில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் 85 சதவீதம் அளவுக்கு அறுவடை முடிந்து விட்டது. மீதமுள்ள பயிர்கள் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் அமைந்துள்ளன.

    இது தவிர ஈரப்பதம் காரணமாக சாலையில் காய வைக்கப்பட்டு இருந்த நெல்மணிகளும் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தார்பாய் போட்டு மூடி வைத்திருந்தாலும் மழை நீர் ஊடுருவி ஈரப்பதத்தை அதிகரித்து விட்டது.

    தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். ஈரப்பதம் தொடர்பாக அறிக்கை தயார் செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

    எனவே உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் குறுவை அறுவடை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    இதேபோல் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி இளம் நெற்பயிர்களும் தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்படையும் எனவும் தெரிவித்தனர்.

    • மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
    • குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி. நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நேற்று மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தெருக்களில் புகுந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.

    மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.

    உடைந்த ராஜகால்வாய்க்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளம் குறைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கே.சி.சி. நகரில் தண்ணீர் வடிந்தது.

    குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. வெள்ளம் வடிந்ததால் கே.சி.சி. நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள காட்சி. * * * ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு கார் தலைகுப்புற கிடக்கும் காட்சி.

    • நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 21 மில்லிமீட்டரும், கயத்தாறில் 19 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், சங்கரன்கோவில், சிவகிரி பகுதியிலும், நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியிலும் மழை பெய்தது.

    எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது. மெயினருவி, ஐந்தருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் சிறிதளவே காணப்பட்டது.

    ×