என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
    • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

    இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

    • தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு
    • தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டது

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவனம், நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் சங்கர் உள்பட முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    முக்கிய வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டு கடைவீதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

    • டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
    • ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சப்பா ளையத்தில் கருப்பண்ணார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்வாக வேல் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இக்கோவில் பரம்பரை தர்ம கர்த்தாவாக கனகராஜ் என்பவர் இருந்து வருகிறார்.

    நீதிமன்றத்தில் அனுமதி

    இந்த நிலையில் இந்த ஆண்டு கருப்பண்ணார் கோவிலில் வேல் எடுக்கும் திருவிழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இதையடுத்து வேல் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். ஆனால் இக்கோவிலில் பரம்பரையாக வேல் எடுக்கும் கனகராஜ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் வேல் எடுக்க அனுமதி பெற்ற மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வேல் எடுப்பதற்கும், திருவிழா நடத்துவதற்கும் பாதுகாப்பு கோரினர்.

    பேச்சுவார்த்தை

    அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், நீதிமன்ற உத்திரவின் படி மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழா நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாரப்பன் தரப்பினர் வேல் எடுத்து திருவிழாவை தொடங்கினர். பின்னர் கனகராஜ் தரப்பினரும் தனியாக வேல் எடுத்துக் கொண்டு கருபண்ணார் கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் கனகராஜ் தரப்பினர் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாரப்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கனகராஜ் தரப்பினர் வேலை கோவிலுக்கு வெளியே ஊன்றிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
    • இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் புகார் கூறிய இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர். இதில் ஒரு தரப்பினர் சுவாமியை சப்பரத்தில் வைத்து, குறிப்பிட்ட நபரின் டிராக்டரில் தான் வைக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர் தரப்பினர் மறுத்தனர். பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படாததால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருவிழா நடத்த தற்காலிகமாக தடை விதித்து தாசில்தார் உத்தரவிட்டார். இந்த சமாதான கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய். வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும்.
    • அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந்

    தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    24-ந் தேதி காலை நஞ்சை இடையாறு ராஜா சுவாமி கோவிலில் இருந்து மணிவேல் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி வெள்ளாளர் தெரு, வெங்கமேடு, பாலாஜி நகர், காவிரி நகர், நாவல் நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 25-ந் தேதி ஜேடர்பாளையம் ரோடு, மேற்கு வண்ணத்துறை ரோடு, காலேஜ் ரோடு, மகா லட்சுமி நகர், வெங்கமேடு, சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    26-ந் தேதி மாலை பக்தர்கள் மற்றும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க, அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகாபகவதிஅம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 27-ந் தேதி மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், அதனை தொடர்ந்து ஊர்வலமாக மாவிளக்கை கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெற்றது. நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.

    இரவு ஒயிலாட்டமும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

    • படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையில் வந்து வழிபட்டனர்
    • கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்து வந்தனா். கோத்தகிரியில் பழமை வாய்ந்த பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் நேற்று திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்துகொண்டு ஹெத்தையம்மன் திருவிழாவினை கொண்டாடினா்.

    படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

    பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால் கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல, படுகா் இன மக்கள் வாழும் ஜெகதளா, காட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வரும் நாள்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளது.

    • உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அனுப்பர்பாளையம் :

    சேவூரில் உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு ஆண்டுதோறும் ஜீவசமாதி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 3-ந் தேதி செவ்வாய்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து தினசரி சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமிக்கும், முசாபரி தோட்டத்தில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதியிலும் காலை,மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக திருக்கோவிலில், பொங்கல் வைத்து மாவிளக்குகளை பெண்கள்எடுத்து வந்தனர்.

    அதை தொடர்ந்து சாமிக்கு பால் , தயிர், தேன், பஞ்சாமிர்தம் , இளநீர் உட்பட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஜீவசமாதியில் பக்தர்கள் அலகு குத்தி, ராஜவீதி, கோபி சாலை, வடக்கு வீதி, வழியாக திருவீதி உலா வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவீதி உலாவில், தாமரைக்குளம் தங்கராஜ் குழுவினர் பத்ரகாளியம்மன், கருப்பராயன் வேடமணிந்து ஆடி வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    இதன்படி, நேற்று அய்யனாராப்பன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு பச்சை பூஜை நடைபெறுகிறது. இதில் சேலம், எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா். 

    • மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வார ஞாயிறு அன்று, முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    போதமலை அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். மலைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.

    விழாவையொட்டி, நேற்று இரவு கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார். அதன்பிறகு கோவில் முன்பு ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் 46-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

    பலியிட்ட ஆடுகளை அதிகாலை வரை சமைத்து ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சுமார் 2500 கிலோ இறைச்சி சமைத்து, பச்சரிசி பொங்கலுடன் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து விழாக்குழுவினர் மக்கள் நோய்நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கவும். குடும்ப பிரச்னைகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றனர். 

    ×