search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது
    • 41-வது முறையாக அமெரிக்கா ஆயுத உதவி வழங்க இருக்கிறது

    ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு, 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உட்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது. இந்த உதவித்தொகை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிப்ரவரி 2022-ல் உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு, அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் (Drawdown Authority) மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.

    அதிகாரிகளின் அறிவிப்பின்படி, உயர்-மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்பு (HIMARS) மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளுடன், 30 பிராட்லி சண்டை வாகனங்கள் மற்றும் 25 கவச ஸ்ட்ரைக்கர் வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுத தொகுப்பில் அடங்கும்.

    இந்த தொகுப்பில் ஈட்டி மற்றும் அதிவேக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் (HARM Missiles), தடை-நீக்கும் உபகரணங்கள், தகர்த்தல் தளவாடங்கள் (Demolition Munitions) ஆகியவையும் அடங்கும்.

    • கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
    • வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது.

    ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது.

    இதற்கிடையே ரஷிய ராணுவ தலைமைக்கும், அரசுக்கும் எதிராக வாக்னர் குழு திரும்பியது. தங்களது படை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.

    இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றனர்.

    இதையடுத்து வாக்னர் குழுவுக்குரிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டதாக அறிவித்தார். இதனால் வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

    கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள். துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள்.

    வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷியரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    நாட்டு மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷியாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

    அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

    • சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர்.
    • அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

    கீவ் :

    உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர்.

    இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

    ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    • வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதி.
    • கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி.

    வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

    • உக்ரைனுடன் எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் துணை நிற்போம்
    • உக்ரைன் வெற்றியை அடைய உதவுவதிலும் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது

    ரஷிய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அந்நாடு சமீபத்திய உதவியாக, உக்ரைனுக்கு கூடுதலாக 70 ராணுவ வாகனங்களை அனுப்புகிறது.

    110 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($73.5 மில்லியன்) தொகுப்பை உதவியாக அறிவித்த அதிபர் அந்தோணி அல்பானிஸ், "இந்த உதவி, ரஷியாவில் சென்ற வார இறுதியில் நடந்த உள்நாட்டு ராணுவ குழப்பத்திற்கு முன்பே பரிசீலனையில் இருந்தது. இதன் மூலம் 28 'M113' கவச வாகனங்கள், 14 சிறப்பு நடவடிக்கை வாகனங்கள், 28 நடுத்தர டிரக்குகள், 14 டிரெய்லர்கள் மற்றும் 105 மி.மீட்டர் பீரங்கி வெடிபொருட்கள் வழங்கப்படும்.

    ரஷியாவின் நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பதிலும் உக்ரைன் வெற்றியை அடைய உதவுவதிலும் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது'' என்று கூறினார்.

    எனினும், கீவ் கோரிய ஹாகெய் இலகு ரக கவச ரோந்து வாகனங்களோ அல்லது புஷ்மாஸ்டர் காலாட்படை வாகனங்களோ இதில் இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலியா வழங்கும் கூடுதல் ஆதரவை குறித்து பேசுகையில் "பெருமை" என்று கூறிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், "இது ஒரு நீடித்த மோதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே நாங்கள் உக்ரைனுடன் எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் துணை நிற்போம்" என்று கூறினார்.

    ஆஸ்திரேலியாவின் பொருளுதவியின் மதிப்பு இதனுடன் 790 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயருகிறது. இவையல்லாது, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை தலைமையில் சேகரிக்கப்படும் நிதிக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் நிதியுதவியும் வழங்குகிறது.

    மேலும் ஆஸ்திரேலியா, உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 மாதங்களுக்கு அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கவிருக்கிறது.

    இதற்கிடையே, உக்ரைனின் கிழக்கு ராணுவக் கட்டளையின் செய்தித்தொடர்பாளர் செர்ஹி செரெவத்யி, ''பதில் தாக்குதல் மூலம் (வாக்னர் படைகளால் கைப்பற்றப்பட்ட நகரமான) பாக்முட் அருகே குறைந்தது 600 மீட்டர் முன்னேறியுள்ளோம்'' என்றார்.

    • ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்

    உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

    இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

    அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.

    மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் வாக்னர் படை செயலால் ரஷியாவுக்கு பின்னடைவு
    • உயிரிழப்புகள் வேண்டாம் என கருதி பின்வாங்குகிறோம் என வாக்னர் படை அறிவிப்பு

    எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

    இதற்குமுன் இரண்டு முறை ரஷியா ஆட்சி கவிழ்ப்பு சதியை எதிர்கொண்டுள்ளது. அப்போது சோவியத் ரஷியாவாக இருந்தது.

    1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ரஷியா உடைவதற்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமைவாதிகள், சோவியத் ரஷியா உருவாவதற்கு முக்கிய பங்கு வகித்த 15 குடியரசுகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் அதிகார ஒப்பந்தத்தை தடுத்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சதி முறியடிக்கப்பட்டது.

    அப்போது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் ஆகஸ்ட் 19-ந்தேதி கிரிமியாவில் உள்ள டச்சாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றார். சோவியத் ரஷியாவின் ரகசிய போலீசார் அவரை வீட்டுச்சிறையில் அடைத்தனர். மாஸ்கோ நகரில் ராணுவ வீரர்கள், ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டனர்.

    அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ரஷிய மக்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட தொடங்கினர். மாஸ்கோவின் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடத் தொடங்கினர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் போரிஸ் யெல்ட்சின் மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சதி முறியடிக்கப்பட்டது. கோர்பசேவ் நாடு திரும்பிய போதிலும் அவரது செல்வாக்கு குறைந்தும், யெல்ட்சின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கருதப்பட்டார்.

    இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் சோவியத் ரஷியாவில் இருந்த நாடுகள் பிரிந்து சுதந்திரத்தை அறிவிக்க தொடங்கின.

    இரண்டு வருடங்கள் கழித்து 1993-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை பாராளுமன்ற கிளர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பாராளுமன்றம் டாங்கிகள் கொண்டு தாக்கப்பட்டன.

    யெல்ட்சின் சோவித் ரஷியா உடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், அரசியில் நெருக்கடிக்குப்பின் பாராளுமன்ற மன்றத்தில் கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து யெல்ட்சினை நீக்கி, துணை அதிபர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோயை அதிபராக்க முயன்றனர். அப்போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவர்களை தடுத்தனர்.

    அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே மாஸ்கோ மேயர் அலுவலகம் மற்றும் டெலிவிசன் மையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் யெல்ட்சின் ராணுவ உதவியுடன் கிளர்ச்சியாளர்களை துவம்சம செய்தார். அக்டோபர் 4-ந்தேதி ராணுவ ஒயிட் ஹவுஸை தாக்கியது. 18 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், போராளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் 148 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    டிசம்பர் மாதம் பொது வாக்கெடுப்பு மூலம் அதிபருக்கு அதிக அதிகாரம் என்ற அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும், யெல்ட்சின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

    • உயிரிழப்புகளை தவிர்க்க முன்னேறி செல்வதிலலை என வாக்னர் படை முடிவு
    • வாக்னர் படை தலைவர் பெலாரஸ் செல்ல இருப்பதால் கிரிமினல வழக்குகளை ரத்து செய்ய ரஷியா முடிவு

    வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பியது

    வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. அதோடு 50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது.

    ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களிடையே உரையற்றினார். அப்போது வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டார். மேலும், வாக்னர் படை தலைவர் துரோகம் செய்துவிட்டார். முதுகில் குத்திவிட்டதாக தெரிவித்தார். ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுது.

    பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்க முடிவு செய்தது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரஷியாவில் ஏற்பட இருந்த ஆயுத கிளர்ச்சி முடிவுக்க வர இருக்கிறது.

    • ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாக்னர் குழு கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • ரஷியாவின் ரோஸ்டோவ் நகரில் ராணுவ படைகள் தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக வாக்னர் குழு தெரிவித்தது.

    மாஸ்கோ:

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது.

    இதற்கிடையே, ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போது ரஷியாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷிய ராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம்.

    இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள். ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு தேவையான உத்தரவுகள் கிடைத்துள்ளன.

    இதுபோன்ற குற்றச் செயல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு ராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

    இந்தப் போரில் நமது மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவை தேவை.

    ரஷியா உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் கிளர்ச்சி என்பது கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்ற நேரத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது ரஷ்யாவிற்கும், அதன் மக்களுக்கும் ஒரு அடி.

    ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள், தனது தோழர்களுக்கு எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர்கள், ரஷியாவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    • ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
    • வாக்னர் படைகள் ரஷியாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ரஷிய ராணுவ மந்திரியை நீக்க வலியுறுத்தி இந்த கிளர்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.

    நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. வாக்னர் படைகள் ரோஸ்டோன் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணுவ தலைமையகத்தில் இருந்தபடி வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் தனது படைகள் விமானத் தளம் உட்பட நகரத்தில் ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக கூறி உள்ளார். நகரின் முக்கிய தெருக்களில் டாங்கிகள் உட்பட ராணுவ வாகனங்கள் நிறுத்தத்ப்பட்டிருப்பதையும், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதையும் உறுதி செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    வாக்னர் கூலிப்படையினர் ரஷியாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இரு படைகளும் நெருங்கும் சமயத்தில் மோதல் வெடிக்கலாம்.

    இதற்கிடையே, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மீது குற்றவியல் நடவடிக்கையை ரஷிய அரசு தொடங்கி உள்ளது. 

    • வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும் என்று கூலிப்படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. ரஷிய ராணுவ தலைமையை கவிழ்க்கவும் தயாராகி வருகிறது.

    நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். ராணுவ தலைமைக்கு (பாதுகாப்புத்துறை மந்திரி) எதிரான போராட்டத்தில், வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் உள்நாட்டுப் போருக்கான சூழல் உருவாகி உள்ளது.

    வாக்னர் கூலிப்படையினர் ரஷியாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இரு படைகளும் நெருங்கும் சமயத்தில் மோதல் வெடிக்கலாம்.

    இந்நிலையில், வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மீது குற்றவியல் நடவடிக்கையை ரஷிய அரசு தொடங்கி உள்ளது. ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிரிகோசின் மீது பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், வாக்னர் குழு தனது சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் செய்தி நிறுவனம் டி.ஏ.எஸ்.எஸ். செய்தி வெளியிட்டிருக்கிறது. எவ்ஜெனி பிரிகோசினை கைது செய்து குற்றவியல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகளும் கூறி உள்ளன.

    • ராணுவ தலைமையை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என வாக்னர் குழு தலைவர் கூறி உள்ளார்.
    • ரஷிய ராணுவம் எங்கள் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம்.

    உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரஷிய படைகள் குண்டுமழை பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவும் களத்தில் இறங்கி உக்ரைன் படைகளை கடுமையாக தாக்கின. இந்த இரண்டு தரப்பினரையும் உக்ரைன் படைகள் எதிர்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக உக்ரைன் படைகள் எதிர்தாக்குதல்கள் நடத்தி சில பகுதிகளை மீட்டுள்ளன. இது உக்ரைன் படைகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    பல மாதங்களாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் மோதலில் ஈடுபட்டு வந்த வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும். எங்கள் படைகளை ரஷிய ராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    வாக்னர் கூலிப்படையினர் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

    ரஷிய படைகள் கடந்த ஆண்டு உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு சவால் அளித்து வந்தார் பிரிகோசின். ராணுவத் தலைமையை தண்டிக்க தனது படையில் சேரும்படி ரஷியர்களை அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×