search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • பிரெஞ்சு நடிகை கேத்தரின், கவிதை வாசித்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய திரைப்பட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நிகழ்வுகளில் பரபரப்பான செயல்கள் அரங்கேறுகின்றன.

    அவ்வகையில், பிரான்சில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    கேன்ஸ் திரைப்பட விழாவின் இயக்குனர் தியரி ப்ரீமாக்ஸ், கடந்த வாரம் பேசும்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில், பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ், உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினர் அல்லது திரைப்பட நிறுவனங்களின் மீது கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு திரைப்படவிழாவிலும் அந்த தடை அமலில் உள்ளது என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு கடந்த திரைப்பட விழாவில், உக்ரைன் பெண் ஒருவர் ரஷிய படைகளுக்கு எதிராக சிவப்புக் கம்பளத்தின் மீது திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார். மேலாடை முழுவதையும் கழற்றினார். மார்பில் உக்ரைன் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தார். அத்துடன், எங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நிறுத்து என்ற வாசகத்தை மார்பில் எழுதியிருந்தார்.

    • உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை.
    • உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை.

    ஹிரோஷிமா :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.

    உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 'ஜி-7' நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.

    அதன்படி 'ஜி-7' உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம்.

    உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

    எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
    • வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது. ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கின. மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    அவ்வகையில் நேற்று இரவு உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.

    கீவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாடு திரும்பினார்.
    • உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என்றார்.

    கீவ்:

    ரஷியாவுக்கு எதிரான போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரீஸ் நகருக்குச் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
    • அதன்பின், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார்.

    பாரீஸ்:

    ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்க்களத்தில் விரைவாக இயங்கக்கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.

    இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர்.

    உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் வலியுறுத்தினார்.

    • உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
    • போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர்

    பாரிஸ்:

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு உரையாற்றினார்.

    இதையடுத்து, பல மாதங்களுக்குபின், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரஷியப்படைகள் கடுமையாக தாக்கின.

    இந்த தாக்குதலில் அர்மன் சோல்டின் (22), என்ற பிரான்ஸ் பத்திரிகையாளர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உக்ரைன் போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது.
    • பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.

    எனவே ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது. அதன்படி இந்த திட்டமானது உளவு டிரோன்களை பெருமளவில் வாங்குவதற்காகவும், ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் அங்குள்ள சில தனியார் டிரோன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

    அங்கு அந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கவும், போர் குறித்த உளவு தகவல்களை சேகரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள்.

    இந்த திட்டம் குறித்து நிலையில் அந்த நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறை மந்திரி மைக்கைலோ பெடோரோவ் கூறுகையில், `இந்த டிரோன் ராணுவம் திட்டத்துக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் ரூ.26 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மேலும் 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.

    இது தவிர 60 போர் டிரோன் ஆபரேட்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் 14 மாதங்களைக் கடந்துள்ளது.
    • இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது.

    போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதில், ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து நாசமானது.
    • உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதா? என்பது இன்னும் தெரியவில்லை.

    மாஸ்கோ:

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது.

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சமீப காலமாக இந்த போரை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 2 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியாவின் முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது நேற்று டிரோன் மூலம் தாக்குதல் நடந்தப்பட்டது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

    இந்த டிரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கிரீமியா பிராந்தியத்தின் கவர்னர் மிகைல் ரஸ்வோசாயேவ் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் வினியோகம் தடைபடாது என்பதையும் அதில் அவர் தெரிவித்தார்.

    உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதா? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே இது குறித்து ரஷியாவின் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரஷிய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு இலக்கையும் தாக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின.
    • ரஷியாவின் 11 ஏவுகணைளை உக்ரைன் விமானப்படை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

    உமான்:

    உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சமாதான பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், ஓராண்டைக் கடந்தும் சண்டை நீடிக்கிறது.

    இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷியா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின. இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மற்றொரு பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவ் மீது முதல் முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ் மீது பறந்த 11 ஏவுகணைகள் மற்றும் 2 ஆளில்லா விமானங்களை உக்ரைன் விமானப்படை இடைமறித்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
    • அணு ஆயுதப் போரினால் யாரும் வெற்றி பெற முடியாது என்ற எச்சரிக்கை செய்தியை பதிவு செய்துள்ளார்

    பீஜிங்:

    ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசி உள்ளார்.

    இந்நிலையில், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வைக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று கூறிய அவர், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அணு ஆயுதப் போரினால் யாரும் வெற்றி பெற முடியாது. அணுசக்தி பிரச்சினையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதியாக இருப்பதுடன், நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உண்மையிலேயே தங்கள் சொந்த நாட்டின் எதிர்கால நலன் மற்றும் மனிதகுலத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையை கூட்டாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

    • இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார்.
    • காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், போரில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடும் நபர்களுக்கு ரஷிய அரசு தண்டனை வழங்கி வருகிறது.

    அந்த வகையில், உக்ரைன் போர் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும் முன்னாள் பத்திரிகையாளருமான விளாடிமிர் காரா-முர்சாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன. விளாடிமிர் காரா முர்சாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

    காரா முர்சா, மார்ச் 2022-ல் அரிசோனா பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியபோது உக்ரைன் போருக்கு எதிராக பேசி உள்ளார். இதேபோல் பிற நாடுகளிலும் பேசியிருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட காரா முர்சா, சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார். "புதினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக பல வருடமாக போராடிவருகிறேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். நம் நாட்டில் இருள் விலகும் நாள் வரும்" என்று காரா முர்சா கூறினார்.

    காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர். அதில் இருந்து உயிர்தப்பிய அவர், ரஷிய அரசு மீது குற்றம் சாட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் ரஷிய அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை.

    2015-ல் கிரெம்ளின் அருகே படுகொலை செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்சோவுக்கு நெருக்கமானவர் காரா-முர்சா என்பது குறிப்பிடத்தக்கது.

    ×