என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை
- புதின்தான் போரைத் தீவிரப்படுத்துகிறார் என நேட்டோ தலைவர் குற்றச்சாட்டு
பிரஸ்சல்ஸ்:
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் அது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த கருத்தை நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கும் கூறியிருக்கிறார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய வெளியறவு கொள்கை தலைவர் ஜோசப் போரெல், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரோ குலேபா ஆகியோரை நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பேசிய ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், 'இந்த ஏகாதிபத்திய வெற்றிப் போரைத் தொடங்கியவர் ரஷிய அதிபர் புடின். அவர்தான் போரைத் தீவிரப்படுத்துகிறார். ரஷியாவின் போருக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்க சீனா திட்டமிட்டு இருக்கலாம் என்றும் நாங்களும் அதிகமாக கவலைப்படுகிறோம்' என்றார்.
அதேசமயம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்சினையை எழுப்பியதாகவும், போரில் எந்த நாட்டிற்கும் சீனா ஆயுதங்களை வழங்காது என்று சீனா உத்தரவாதம் அளித்ததாகவும் போரெல் கூறினார்.
- உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
- போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் அறிவித்தது.
டோக்கியோ:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்ற பேசிய அவர், உக்ரைன் இன்னும் ரஷிய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷிய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை. எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
- ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர்
- நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க உள்ளதாக நட்பு நாடுகள் கூறி உள்ளன. இதனால் வரும் நாட்களில் போர் தீவிரமடையலாம்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று திடீரென உக்ரைன் வந்தார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்த அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார். உக்ரைனுடன் அமெரிக்கர்கள் துணை நிற்பதாகவும், உலகம் உங்களுடன் நிற்கிறது என்றும் ஜோ பைடன் கூறினார். ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
உறுதியளித்தபடி ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்தவேண்டும் என நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழுத்தம் கொடுக்கிறது. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க மேற்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
- உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.
- ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்றார் கமலா ஹாரிஸ்.
பெர்லின்:
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் சுமார் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள முனிச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்திருக்கிறது. உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. கொலை, பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட சித்ரவதைகளை ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது நிகழ்த்தியுள்ளது.
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷிய ராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகிறோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள், ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் அதிபர் மேக்ரானும், பிரதமர் மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்
- உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காணமுடியும் என்றார் பிரான்ஸ் அதிபர்.
பாரிஸ்:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம்.
உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும். ஏர்பஸ் மற்றும் சப்ரான் உள்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.
இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.
- பிரதமர் மோடியால் (ரஷிய அதிபர் புதினை) சமாதானப்படுத்த முடியும்.
- உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது.
வாஷிங்டன் :
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார காலத்துக்கு மேல் நீடிக்காது என்றுதான் உலக நாடுகள் எதிர்பார்த்தன.
ஆனால் ரஷியாவை உக்ரைன் இன்னும் உக்கிரத்துடன் எதிர்த்து போர் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளை செய்து வருகின்றன.
இந்தப்போர் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது. பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், "உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறதா அல்லது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சமாதானப்படுத்த இன்னும் நேரம் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜான் கிர்பி பதில் அளிக்கையில் கூறியதாவது:-
உக்ரைன் போரை நிறுத்துவதற்கு இன்னும் ரஷிய அதிபர் புதினுக்கு நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் அதற்கு நேரம் உள்ளது என்று கருதுகிறேன். பிரதமர் மோடியால் (ரஷிய அதிபர் புதினை) சமாதானப்படுத்த முடியும். என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரோ அதைப் பிரதமர் மோடி பேசட்டும். நாங்கள் போர் இன்று முடிவுக்கு வர முடியும் என கருதுகிறோம். அது முடிவுக்கு வரவேண்டும். உக்ரைன் போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என ரஷியா தாக்குதல்களை நடத்தியது.
- ரஷியாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷிய படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது.
ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி தாக்குதல் நடத்திய ரஷியா, பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என முன்னேறி ஆக்ரோஷமாக தாக்குதல்களை நடத்துகிறது. இதில் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷியா இன்றும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மொத்தம் ரஷியா தரப்பில் 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார். ரஷியாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது. உக்ரேனிய எரிசக்தி அமைப்பை அழித்து, உக்ரேனியர்களுக்கு மின்சாரம், லைட், தண்ணீர் சப்ளை கிடைக்காமல் செய்வதற்காக மற்றொரு முயற்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்தார்.
- உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது என அதிபர் ஜோ பைடன் கூறினார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போரால் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற தாக்கங்கள் நீடித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் சண்டையை கைவிடாமல் உள்ளன.
இதற்கிடையே, கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. டோனெட்ஸ்க் பகுதியில் பாக்முத், வூலெடார் மற்றும் பிற பிரிவுகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளது.
போரை நீட்டித்துச் சென்று எங்களை தோற்கடிக்க ரஷியா விரும்புகிறது. கடும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ரஷியாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் முக்கிய நட்பு நாடான போலந்திற்குச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் செல்லும் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஏ.பி.எப். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் ரஷியா போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது.
- ஜெர்மனி, அமெரிக்காவின் முடிவுகளை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
வாஷிங்டன் :
கிரீமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டபோது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப்போன ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.
உலகமே எதிர்பார்க்காத நிலையில், இந்தப் போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது. இன்னும் நீளுகிறது. வல்லரசு நாடான ரஷியாவை போரில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பக்க பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்ரைனை ரஷியாவால் வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாமல் போனது.
தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீனமான 'லெப்பேர்டு-2' ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுகுறித்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, "உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பது சரியான கொள்கை ஆகும். நாங்கள் மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை கையாள்கிறோம். எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்" என தெரிவித்தார்.
உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பும் முடிவை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், உக்ரைனுக்கு அதிநவீன 'எம்-1 ஆப்ராம்ஸ்' ரக பீரங்கிகள் 31-ஐ அனுப்பும் முடிவை வெளியிட்டார்.
வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்தபோது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அதிகரிப்பதை ரஷியா மீதான தாக்குதலாக பார்க்கக்கூடாது. இது உக்ரைன் மண்ணைப் பாதுகாக்க அந்த நாட்டுக்கு உதவுவதுதான். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஆகாது. ரஷியாவுக்கு எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறினார்.
ஜெர்மனியும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்பும் நிலையில், பிற மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இது வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான படியாக அமைகிறது. இன்று சுதந்திர உலகம், ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளன" என குறிப்பிட்டார்.
ரஷியா எதிர்ப்பு
ஆனால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவை ரஷியா எதிர்த்துள்ளது.
இதுபற்றி அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனட்டாலி ஆன்டனோவ் கருத்து கூறுகையில், "ஆப்ராம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் முடிவு, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான மற்றொரு அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்தார்.
ஜெர்மனிக்கான ரஷிய தூதர் செர்ஜி நெச்சேவ் கருத்து தெரிவிக்கையில், "மிகவும் ஆபத்தான இந்த முடிவு, மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்கிறது" என குறிப்பிட்டார்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
- ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகின.
- உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
- ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.
'டாங்கிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை அனுப்புவது எந்த விதத்திலும் மோதலில் ஈடுபடுவதாக ஆகாது என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறுகின்றன. ஆனால், இதை நாங்கள் ஏற்கவில்லை. ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது. போர் விரிவடைவதையும் காண்கிறோம்' என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
- எஸ்டோனியா தூரகத்தில் உள்ள தூதரை பிப்ரவரி 7ம் தேதிக்குள் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது
- ரஷியாவுடனான தூதரக உறவுகளை குறைக்க உள்ளதாக லாட்வியா நாடு அறிவித்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷியாவுக்கும் எஸ்டோனியாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நாடுகள் ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், தற்போது தூதர்களை திருப்பி அனுப்பும் அளவுக்கு சென்றுள்ளது. ரஷியா தனது நாட்டில் உள்ள எஸ்டோனியா தூதரகத்தில் உள்ள தூதரை பிப்ரவரி 7ம் தேதிக்குள் வெளியேறும்படி உத்தரவிட்டு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்டோனியா, அதே 7ம் தேதிக்குள் ரஷிய தூதர் தனது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என சம்மன் அனுப்ப உள்ளது. இவ்வாறு ஒருவருக்கொருவர் நாடுகளிலிருந்து தூதர்களை வெளியேற்றும் உத்தரவால், தூதரகப் பணிகள் பொறுப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்.
இதேபோல், அண்டை நாடான எஸ்டோனியாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லாட்வியா நாடு, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷியாவுடனான தூதரக உறவுகளை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "எஸ்டோனியா அரசு ரஷியாவுடனான முழு அளவிலான உறவுகளையும் வேண்டுமென்றே அழித்துவிட்டது" என்று குற்றம்சாட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்