search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi Byelection"

    • அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.க.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கிய நிலையில் வரும் 21-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    • 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    • 1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

    பதில்:- ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்பது எங்கள் கட்சி எடுத்த முடிவு. அவரது கட்சி முடிவு அல்ல.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல வாக்காளர்களை தினமும் அழைத்து சென்று பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்திய காட்சியை பார்த்திருப்பீர்கள்.

    தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவே இல்லை. அது மாநில அரசுக்கு துணை நிற்கிறது. போலீசார் துணை நிற்கிறார்கள். அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பண பலம், படை பலத்தை பயன்படுத்தி, அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில்தான் வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் குறைவாக வாங்கினோம்.

    எங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்து விட்டது. இனி ஏன் அங்கு போட்டியிட வேண்டும். போட்டியிட்டால் விடவா போகிறார்கள். ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள்.

    பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பார்கள். பண மழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. எனவேதான் அ.தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 36 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் பாடுபட்டார்கள்.

    கொட்டகையில் அடைத்து வைத்திருந்தால் அங்கு நானே நேரில் வந்து வாக்கு சேகரிப்பேன் என்று சவால் விட்டேன். உடனே அந்த வாக்காளர்களை பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக சுற்றுலா அழைத்து சென்றார்கள். அப்படி இருக்கும்போது அங்கு எப்படி சுதந்திரமாக தேர்தல் நடக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட மாட்டார்களா?

    பதில்:- தொண்டர்கள் எப்படி உற்சாகம் இழப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதால் அவர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.

    கேள்வி:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதே போல் சட்டமன்ற தேர்தலிலும் எல்லா இடத்திலும் தி.மு.க. வரும் என்று சொன்னார்கள். ஆனால் அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிகளை பொருத்தவரை 2 தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.

    இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம். அதில் அமைச்சர் தொகுதியில் 2 இடங்களில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

    அப்படியென்றால் இனி வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. அங்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஜெயிக்கவில்லையா?

    1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். எனவே மாறி மாறிதான் வெற்றி வரும். எல்லா தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி தோல்வி மாறி மாறிதான் வரும்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
    • எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.

    இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது பற்றி மட்டும் தான் பேச முடியும்.

    எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். என்டிஏ, நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார் என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுகிறது.
    • தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தார்கள்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபரிடம் கூறியதாவது:- 

    இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமே அதில் செயலாற்றுகிறது. அத்தனை விதிமீறல்களும் அரங்கேறுகிறது. எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. சொல்லும் காரணங்களில் நான் உடன்படுகிறேன்.

    ஆனால் இதே அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் என்னென்ன முறைகேடுகளை செய்ததது என்பதனை மக்கள் மறக்கவில்லை. எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுகிறது. மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில்தான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சிக்கு என்று தனி சின்னம் கேட்போம். அதில் முதலில் நாங்கள் கேட்க போவது புலி சின்னம் தான். இந்த சின்னத்தை எங்களுக்கு தர தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்து விட்டது. புலி, தேசிய சின்னம் என்பதால் தரமுடியாது என்று கூறுகிறது. அப்படியென்றால் தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தார்கள்.

    ஒருவேளை புலி சின்னம் கிடைக்காத பட்சத்தில் விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம். ஆனால் முன்பு வைத்து இருந்த கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம். எனவே வேறு ஒரு விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம்.
    • தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குகள் 13-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம்தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொது தொகுதியாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 32 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்றார்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று இருப்பதால், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கடும் போட்டி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தது.

    இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.விற்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தே.மு.தி.க. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அங்கு தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம். அல்லது, அ.தி.மு.க. போன்று போட்டியில் இருந்து விலகி கொள்ளலாம்.

    தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    இருப்பினும் தற்போதைய நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
    • 26-ந்தேதி மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது.

    இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    மேலும் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


     

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர்.
    • தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார். அதோடு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் 7 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகளை உற்சாகமாக தொடங்கி பணியாற்றி வருகின்றனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர். இதனால் வேட்பாளரை இறுதி செய்வதில் அ.தி.மு.க. தலைமையில் இழுபறி நீடிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் பா.ம.க.வின் உயர்மட்டக்குழு கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதி பேரவை தலைவர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே சமயம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைந்தவுடன், இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 தினங்களாகியும், பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை வெளியிடாமலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிட உள்ளது என்று அறிவிக்காமலும் மவுனம் காத்து வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க., தனது வேட்பாளரை நிறுத்த தயாராக உள்ள போதும், தேர்தல் பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகிறது.

    • தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்குள்ள தனி அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களுடைய வேட்பு மனுவை முன்மொழிய வருகை தருபவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலுவல கத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. 

    • தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
    • அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது.

    இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும் தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் "தேர்தல் பணிக்குழு" பின்வருமாறு நியமிக்கப்படுகிறது.

    அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நாளை மாலை விக்கிரவாண்டியில் உள்ள "ஜெயராம் திருமண மண்டபத்தில்" நடைபெறவுள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என கூறப்பட்டுள்ளது.


    • விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

    * விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    * விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ×