என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman death"

    • முடிவைதானேந்தலை சேர்ந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்
    • நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைதானேந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி விமலா (வயது42).

    கார் மோதி விபத்து

    கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்.

    அவர்கள் வாகைக்குளம் அருகே உள்ள வர்த்தக ரெட்டிபட்டியில் சென்ற போது நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை விமலா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்றுகாலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணிபட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது.

    இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர்
    • அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்

    தூத்துக்குடி:

    சிவகளை அருகே உள்ள நயினார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுடலைவடிவு என்ற தேவராஜ் (வயது 56). இவரது மனைவி சண்முகத்தாய் (52) கடந்த அக்டோபர் 30-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இவரது மறைவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி தேவராஜ் வீட்டில் சண்முகத்தாயின் இறப்பு விஷேச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். விஷேச நிகழ்ச்சி முடிந்த மறுநாள் தேவராஜ் மகள் சுடலைகனி மற்றும் கோகிலா என்ற சிறுமியும், உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுடலைகனி மற்றும் கோகிலா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    நேற்று மதியம் சிவகளை வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நயினார்புரத்தில் உள்ள தேவராஜ் வீட்டிற்கு சென்று அங்கு சுடலைகனி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், கவுன்சிலர் பிச்சையா, விவசாய சங்கம் தலைவர் மதிவாணன், தி.மு.க. பெருங்குளம் நகர செயலாளர் நவநீதமுத்துக்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, ஸ்ரீவை. வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், மாநில ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் ஊடக பிரிவு மரியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார்.
    • வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
    • தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் முத்துராமலிகாபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது97). இவர் முதலில் ராமசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் அன்னலட்சுமி (75) என்ற மகள் உள்ளார்.

    ராமசாமி 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் சிவராமச்சந்திரன் என்பவர் சந்தேகம் அடைந்து மாரியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாரியப்பனும், வேலுச்சாமி மகன் சக்தி குமார் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    அவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது பற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என்றும், அவர்கள் ராணுவத்தில் பணியாற்றி இறந்த தங்களது உறவினர் ராமசாமி என்பவரின் பென்ஷனை பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதனால் தாயும், மகளும் இறந்து 2 நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

    தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இதேபோல், சந்தனகிரி பகுதியில் மாரியம்மன், விநாயகர் உள்ளது. இதன் அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம், வேப்பமரம் ஆகியவை நேற்று பெய்த மழையில் கோவில் கலசத்தின் மேல் சாய்ந்தது. இதில் கோவில் சுவர் இடிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

    இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.ஆத்தூர் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேரம் காப்பாளர் அலுவலகமும் மழையால் சேதமடைந்தது.

    இதேபோல் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். நேற்று மாலை தலைவாசல் பகுதியல் மழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக, செல்வி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஆடுகளுடன் ஒதுங்கியுள்ளார்.

    அப்போது, தொடர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு ஆடு உடல் நசுங்கி பலியானது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
    • திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.

    கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கி கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.

    ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கி கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம் பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர்.
    • விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் கோட்டை மாநகரில் 22 வயது இளம்பெண் மற்றும் 17, 16 வயதுடைய சிறுவர்கள் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை இறந்துவிட்டார்.

    தாய் ராஜேஸ்வரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் மைசூரை சேர்ந்த மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெருமாநல்லூரில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மனோஜ் கடந்த சில மாதங்களாக காங்கயம் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றி வந்துள்ளார். ராஜேஸ்வரியின் உறவினர்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ராஜேஸ்வரி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறினார்.

    சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த கோரி பலமுறை பெருமாநல்லுார் மற்றும் காங்கயம் போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ராஜேஸ்வரி சாவில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது
    • கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மகா தேவன். இவரது மனைவி கலா(வயது50).

    இவர் அதே பகுதி மெட்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி வழக்கம் போல வீட்டு வேலை பார்க்க சென்ற கலா பின்னர் திரும்பி வர வில்லை. அவர் மாயமாகி இருந்தார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இதுபற்றி மகாதேவன் மதுரவாயல் போலீசிலும் புகார் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கலா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதி திறந்து கிடந்ததால் அதில் கலா தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மாயமான 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

    • பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள்(வயது 38). இந்த தம்பதி ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் உள்ளது.

    இவர்களுக்கு பீலா என்ற மகளும், பெல்வின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பிலோமினாளும், ரூபனும் வழக்கம்போல் தூங்க சென்றனர்.

    நேற்று காலையில் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் கார்த்தி நேசன் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ரூபன் கோழிப்பண்ணை ஆரம்பிக்க கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இறந்த பிலோ மினாளின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
    • பாம்பு கடித்து இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் வாசுதேவன் விவசாயி ஆவார். இவரது மகள் பார்கவி (வயது23) நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 2 மணி அளவில் பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்தச் சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
    • உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

    தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.

    அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×