என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dead"

    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் ஞானசேகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை சேர்ந்தவர் ஞான சேகரன் (வயது27). இவர் அங்குள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் தற்காலிகமாக மொட்டை அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு முதல் ஞானசேகரன் திடீரென மாயமானார். அவரது துணி மட்டும் கோவில் குளக்கரை படிக்கட்டில் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவில் ஊழியர்கள் இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானசேகரன் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது.
    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காடரம்பாக்கம் பகுதியில் கார் சைலன்சர்களுக்கு கோட்டிங் அடிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி இரவு தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென கோட்டிங் எந்திரம் வெடித்து தீ பரவியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்களான காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் குமார் (வயது26). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி(36), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26),ரஞ்சித் (26) ஆகிய 5 பேருக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டது.

    அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.
    • மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார்.

    போரூர்:

    சென்னை கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது56). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

    இவர் எம்.ஜி.ஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ரூ.1 லட்சம் ஏலசீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து சீட்டு பணம் கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.

    இதனால் சுப்பையா கடந்த 15 மாதங்களாக கட்டிய ரூ.50ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார்.

    ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுப்பையா கடந்த 30-ந் தேதி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செல்வத்தின் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென தீக்குளித்தார். மேலும் அவரை தடுக்க முயன்ற அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரையும் எரியும் தீயுடன் சுப்பையா பிடித்துக் கொண்டார்.

    இதில் இருவரும் உடல் கருகி பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பையா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் ஊழியர் காயத்ரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது.
    • சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் ஜாத்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.

    இதில் கடந்த 2-ந்தேதி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. அப்போது வான வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் ஏராளமான பட்டாசுகளை காலியான இடத்தில் வைத்திருந்தனர்.

    அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் அங்கிருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் சிதைந்தது. ஊழியர் சஞ்சீவி உடல் முழுவதும் கருகினார்.

    அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சாதிக்அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சஞ்சீவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை ஆனைகட்டி அருகே தூமனூரை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜப்பன் சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றார்.

    பின்னர் மாலையில் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தூமனூர், செம்புக்கரை பிரிவு வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த யானை விரட்டி சென்று துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின.
    • விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44) கட்டுமான தொழிலாளி. இவர் தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அடுத்த பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் வந்தபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வந்த கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த நேரத்தில் பின்னால் சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கூரியர் வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மனைவி கண்முன்பே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் கூரியர் வேன் டிரைவர் பண்ருட்டி, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்மரியதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை முருகன் செய்து கொண்டிருந்தார்.
    • சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பை முடப்பாலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் முருகன்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அம்பை அம்மையப்பர் கோவில் சன்னதி தெருவில் உள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக முருகன் சென்று இருந்தார். மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை அவர் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் இடுப்பு பகுதியில் சுவர் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்து வமனை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
    • அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.

    பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.

    இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

    ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

    சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மகள் விகிதா(7). கடந்த வாரம் பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவில் பாலாஜி, அவரது மகள் விகிதா ஆகிய 2 பேரையும் பாம்பு கடித்து சென்று விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
    • பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுவுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் செங்கல் சூளையின் புகை கூண்டு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் (55) என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    மேலும் பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது62). மண்பானை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் வியாபாரம் சம்பந்தமாக ஒரே மோட்டார் சைக்கிளில் புலியூர் நோக்கி சென்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே சென்றபோது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனுசாமியும், அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து தொழிலாளி குடித்திருக்கிறார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார்.

    அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணம் குறித்து இயற்கைக்கு மாறாண மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×