என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
- பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அந்தந்தப் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.
- இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தலா 2 ராக்கெட்டுகளை மட்டுமே ஏவியது. தொடர்ந்து நடப்பாண்டு 3-வது ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராகி வருகிறது.
குறிப்பாக சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ரகத்தில் 1-ஏ, 1-பி, 1-சி, 1-டி, 1-இ, 1-எப், 1-ஜி என 7 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் 2013-ம் ஆண்டு ஜூலை, 2014-ம் ஆண்டு ஏப்ரல், அக்டோபர், 2015-ம் ஆண்டு மார்ச், 2016-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.
இதில் 2016-ம் ஆண்டு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து தற்போது அதனுடைய ஆயுட்காலம் நிறைவடைந்து உள்ளது. இதற்கு மாற்றாக இஸ்ரோ என்.வி.எஸ்-2 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டும் செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 29-ந்தேதி காலை 11.15 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, கூடுதலாக, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3-வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்த ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை, வருகிற 2025-ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இலக்கை எட்ட இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
- பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் தகவல்கள், சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது.
48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது.
இந்த 2 திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்தறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'திருக்கோவில்' செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.
மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. படிப்படியாக மற்ற கோவில்களின் விவரங்களும் இணைக்கப்படும்.
பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு சென்றடைகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை செயல்படுத்தி இருக்கின்றோம்.
இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக, 3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.
திருச்செந்தூர் உள்பட அனைத்து கோவில்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்கின்ற முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் எங்களது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். கோர்ட்டுக்கு செல்வதாக அந்த கோவிலின் வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் அங்கு நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லலாம் என்று காத்திருக்கிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் அங்கு என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ அவைகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இயக்குநர் (தலைமையிடம்) ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர்.
- 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் கோர்ட்டு முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். பின்னர், இந்த 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர். இந்த ஆவணம், மத்திய அரசு மூலமாக ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம்.
- ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது.
இறைவன் ஒளிமயமானவன். அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது.
ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.
ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆக, முழுமுதற் கடவுளாம் சிவனை - ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜ யோக தியானம் எனப்படுகிறது.
மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும்; புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட- துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்.
ஆனாலும் பலரால் மறந்துபோய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளிய முறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மாகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் ஜோதிர்லிங்க தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத அனுபவம் கிடைக்கும்.
12 ஜோதிர்லிங்கங்கள்
காசி விஸ்வநாதர் (வாரணாசி- உத்தரபிரதேசம்)
பாரதத்தின் அனைத்து தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி.
பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப் படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. இந்த தலம் கர்மத்தின் தீய கணக்கினை அழிக்கக்கூடியது எனவும்; அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடிய சிவலிங்கத்தை சிவனே படைத்ததாகவும் கூறப்படுகிறது. உலகத்தையே படைக்கும் காரியத்தைச் செய்வித்ததால் அங்குள்ள லிங்கமே விஸ்வநாத் என்றழைக்கப்படுகிறது.
மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம்- ஆந்திரா)
இங்குள்ள மூலவர் எட்டு அங்குல உயரத்தில் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் ஜோதிர்லிங்கம் என்ற பெயரில் 11 வேறு கோவில்களும் உள்ளன. இக்கோவிலுக்குப் பின்னால் சிறிய குன்றின்மேல் பார்வதி கோவில் ஒன்றும் உண்டு. இத்தேவி இங்கு மல்லிகாதேவி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சிவனின் பெயர் அர்ஜுனன். எனவேதான் இங்குள்ள மூலவரை மல்லிகார்ஜுனர் என்றழைக்கிறோம்.
ஓங்காரேசுவரர் (மத்தியப் பிரதேசம்)
இங்குள்ள சிறப்பு யாதெனில், இங்கே ஓங்காரேசுவரர் மற்றும் பரமேஷ்வர் என்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அமலேஷ்வர் என்கிற வேறு பெயரும் உண்டு. இக்கோவிலுக்கு சற்று தூரத்தில் நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு சற்று தூரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து விடுகிறது. இடைப்பட்ட தீவுப் பகுதியில்தான் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்தோடும்போது ஒன்று நர்மதா எனவும், மற்றொன்று காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. இத்தீவில் தான் மகாராஜா மாங்கதன் இறைவனை வேண்டி நின்றதாகவும், அதற்கு இறைவன் காட்சியளித்து அருள்புரிந்ததால் அவரது பெயரே இத்தீவிற்கும் சூட்டப்பட்டு மாங்கத தீவு என்றழைக்கப்படுகிறது.
சோமநாதர் (குஜராத்)
ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம். இந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திர பகவான், சிவனை வேண்டி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இறைவனும் அவரது தவத்தை மெச்சி வரம் அளித்தார். எனவேதான் இந்த லிங்கம் சந்திரன் பெயரால் (சோமன்-சந்திரன்) வழங்கி வருகிறது. இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் மூலமே மனிதர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். மேலும் மேலும் மனம் நிறைந்த பலன்களை அடைந்து, மரணத்திற்குப்பின் சொர்க்கத்தையும் அடைவதாகக் கூறப்படுகிறது. அரபிக்கடல் ஓரத்தில் இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
இராமநாதசுவாமி (இராமேஸ்வரம்- தமிழ்நாடு)
பாரதத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இராமேஸ்வரம்.
ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. பிரதான மூர்த்தி இராமநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். இந்த லிங்க மூர்த்திக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, இத்தலத்திலுள்ள மண்ணை எடுத்து கங்கையில் கரைப்பது விசேஷம். எனவேதான் வடநாட்டு யாத்ரீகர்கள் நிறைய பேர் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள 22 தீர்த்தங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் நீராடவில்லையெனில் இராமேஸ்வர யாத்திரை நிறைவு பெறாது என்றே கூற வேண்டும். இறுதி தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அக்னி தீர்த்தம் என்ற பெயரில் வங்கக்கடல் விளங்குகிறது.
நாகேஸ்வரர்
இங்கு மூலவர் நாகேஸ்வரர் என்றும்; பார்வதி தேவி நாகேஸ்வரி என்றும் பூஜிக்கப்படுகின்றனர். இன்று இந்த ஜோதிர்லிங்கம் பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில், கவர்னர் மாளிகைக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. ஒரு நடைபாதை பாலத்தின் மூலமே இக்குகையைச் சென்றடைய முடியும்.
கேதார்நாத் (உத்தரகாண்டம், உத்தர பிரதேசம்)
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களிலும் இயற்கையின் எழில் சூழ்ந்த அழகுமிக்க தலம் கேதார்நாத் ஆகும். மந்தாகினி நதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இத்தலத்தைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி. இந்த இமாலய மலைத் தொடரிலிருந்துதான் மந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. இங்குள்ள கேதாரேஷ்வர் மற்றும் பத்ரி நாராயணரை பக்தி சிரத்தையுடன் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள் விலகிப் போகும்; எண்ணங்கள் பூர்த்தியாகும் என சிவபுராணம் கூறுகிறது. மேலும் இந்த யாத்திரையின்போது மரணம் எய்துவோருக்கு மோட்சம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.
கேதார்நாத்திற்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் மிக அவசியமாக நேபாளத்திலுள்ள பசுபதிநாத் மூலவரையும் சென்று தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். ஏனெனில் பரமனின் தலைப்பாகம் பசுபதி நாத் என்றும்; பாதப்பகுதி கேதார்நாத் என்றும் கூறப்படுகிறது.
மகாகாளேஸ்வர் (உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)
உஜ்ஜயினி என்றும் அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி விசாகத்தின்போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.
இரு பிரிவுகளாக வளர்ந்து நிற்கிறது மகாகாளேஸ்வர் கோவில். மேல் தளத்தில் ஓங்காரேஸ்வர் சிவலிங்கம் பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்ப்பகுதியில் மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவனைத் தரிசனம் செய்வதால் ஒருவருக்கு கனவில்கூட துக்கம் ஏற்படாது என்றும்; எந்தெந்த ஆசைகளுடன் பூஜை செய்கின்றனரோ அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.
வைத்தியநாதேஸ்வரர் (பரளி, மகாராஷ்டிரா)
ஒளரங்காபாத்திற்கு அருகில் பாபானி ரெயில் நிலையத்தருகில் பரளி வைத்திய நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது கைலாசத்திலிருந்து ராவணனால் கொண்டு வரப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த லிங்கம் சிறு மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இக்குன்றில் எவரது சடலம் எரியூட்டப்படுகிறதோ, அவர்கள் நேரடியாக மோட்சம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பெருவாரியான மக்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை இங்கே கொண்டு வந்து தகனகிரியை செய்தனர். இந்த வழக்கம் சென்ற நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. எனவே இந்த தலம் தகன பூமியின் பேரால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதைப் பின்பற்றி பாரதத்தின் பிற நகரங்களிலும்கூட தகன பூமியில் சிவபெருமானின் கோவில் (சுடலை காப்பவர்) அமைத்துள்ளனர்.
குகமேசம் (கிருஷ்ணேஷ்வர்- மகாராஷ்டிரா)
வடமொழியில் குஷ்மேஷ்வர் என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் பெயர் கிருஷ்ணேசுவரர் ஆகும். ஒளரங்காபாத் மற்றும் தௌலதாபாத் நிலையங்களுக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளுக்கருகில் இக்கோவில் அமைந்துள்ளது.
திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்ட்ரா)
நாசிக் ரோடு அருகில், பிரம்மகிரி மலையில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகப்பெரிய நிலப்பரப்பில், நாலாபுறமும் மிக உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது. உள்பிராகாரத்தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிரதிமைகள் என்று கூறப்படுகின்றன. இந்த ஜோதிர்லிங்கங்களைத் தொட்டு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் அமிர்தகுண்டம் என்னும் பெயரால் புஷ்கரணி (திருக்குளம்) உள்ளது.
பீமா சங்கர் (அருணாசலபிரதேசம்)
இக்கோவில் பழைய அஸ்ஸாமில் தென்புறத்திலுள்ள- தற்போதைய அருணாசல பிரதேசத்தின் தேஜி நகரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பீமாசங்கர் மற்றும் பிரம்மா குண்டம் (பரசுராம் குண்டம்) என்னும் இரண்டு புகழ் பெற்ற தீர்த்தங்கள் உள்ளன.
கும்பகர்ணனின் மகனான பீம சூரன் அனைவருக்கும் பெருந்துன்பம் விளைவித்தான். அப்போது சிவன் தோன்றி சூலத்தால் பீம சூரனை வதம் செய்தார். அந்த சாம்பலிலிருந்து அநேக காரியங்களுக்குப் பயன்படும் மருந்து வகைகள் உற்பத்தியாயின என்றும்; "பூதம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்ட வல்லது என்றும் கூறப்படுகிறது.
"தேவர்கள், முனிவர்கள், மக்களுடைய பாதுகாப்பின் பொருட்டு, யுத்தம் செய்யாதோருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடிய இந்த மண்ணில், தாங்கள் அவசியம் இருந்து காத்தருள வேண்டும்' என்கிற பிரார்த்தனையின்பேரில் பீமாசங்கர் என்னும் பெயரில் ஈசன் இங்கு கோவில் கொண்டார்.
- மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது.
- சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.
இந்தியாவிலிருக்கும் முக்கியமான சிவபெருமானின் 12 தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்களை இங்கே காணலாம்.
1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - சோமநாதம் (குஜராத்)
சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மகாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார்.
அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோவிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோவில் சேதமடைந்து பிறகு ராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோவில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.
2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோவில் - ஸ்ரீசைலம் (ஆந்திரா)
கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத்தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோவில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோவிலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோவிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோவிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.
3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோவிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப்படுகின்றன. கோவிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோவிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)
நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோவில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோவிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோவில் - வாரணாசி எனும் காசி (உத்தரப்பிரதேசம்)
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கிறது. வாரணாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோவிலைக் கட்டினார். கோவிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோவிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது.
விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கின்றன.
6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் -இமயம் (உத்தரப்பிரதேசம்)
ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோவிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், திரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கிறது.
7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோவில் - நாகநாதம் (மகாராஷ்டிரா)
த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள்.
சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோவிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். எரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோவிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.
8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - குண்ருனேசம் (மகாராஷ்டிரா)
மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார்.
பொறாமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கப்படுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும்போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார்.
தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் - திரியம்பகம் (மகாராஷ்டிரா)
நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.
10. ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் பழமையான கோவிலாகும் இந்தக் கோவிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.
11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோவில் - பீமசங்கரம் (மகாராஷ்டிரா)
திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவபெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள்.
கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.
12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - பரளி (மகாராஷ்டிரா)
சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு ராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை.
ராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி ராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க ராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். ராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. ராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார்.
மண்ணில் புதைந்த லிங்கத்தை ராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த ராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோவிலைச் சுற்றி 22 கோவில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.
- வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம்.
- நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார்.
சிவபெருமானின் வாகனம் நந்தி. அவர் பக்தர்களால் நந்திதேவர் எனத் தனிக் கடவுளாகவும் போற்றப்படுகிறார். சிவனை நோக்கியபடி சிவாலயங்களில் நந்திதேவர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
ராவணனுக்கு நந்தியின் சாபம் இருந்தது. அதனாலேயே அவன் அழிந்தான்.
தன் வழிபடு கடவுளான சிவபெருமானை அவர் வீற்றிருக்கும் இமயமலையோடு பெயர்த்து எடுத்துச் செல்ல முயன்றான் அவன். அப்படிச்செய்வது தகாது என நந்தியம்பெருமான் ராவணனுக்கு அறிவுறுத்தினார்.
அந்த அறிவுரையைக் கேட்காத ராவணன் நந்தியைக் குரங்கு முகம் கொண்டவன் எனக் கேலி பேசினான். கடும் சீற்றம் கொண்டார் நந்தி தேவர்.
`என்னைக் குரங்கோடு ஒப்பிட்ட நீ குரங்குகளையே எதிரிகளாகப் பெற்று குரங்குகளாலேயே அழிவாய்` எனச் சாபமிட்டார்.
அதன்படி சுக்கிரீவன் தலைமையில் சீதையை மீட்பதற்காக ராம லட்சுமணர்களோடு எண்ணற்ற குரங்குகள் வந்து போரிட்டதையும் சுக்கிரீவன் என்ற குரங்கு ராவணன் மூக்கைக் கடித்ததையும் ராம ராவண யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டதையும் ராமாயணம் பேசுகிறது. பலித்தது நந்தி சாபம்.
சோழ நாட்டில் ஆதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்தவன் நந்தனார் என்று இன்று போற்றப்படும் நந்தன். புலைப்பாடியில் பிறந்த நந்தன் தீவிர சிவ பக்தனாகவும் விளங்கினான்.
அவன் ஒருசமயம் அருகேயுள்ள திருப்புன்கூர் கோவிலுக்குச் சென்றான். அங்கே கோவில்கொண்டுள்ள சிவலோக நாதரைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க விழைந்தான்.
ஆலயப் பிரவேசத்திற்கு அவனைப் போன்றோர்க்கு அருகதை இல்லாத காலம். தேரடியில் நின்றே உள்ளம் உருகும் பக்தியோடு சிவதரிசனம் செய்ய முற்பட்டான்.
ஆனால் என்ன சங்கடம்! கோவில் வாயிலில் பெரிய நந்தி ஒன்று அவன் சிவனைக் காண இயலாதவாறு வழிமறைத்து நின்றது. `சற்றே இந்த நந்தி விலகாதா, நான் சிவதரிசனம் செய்யும் பேறு பெற மாட்டேனா?' என அவன் உள்ளம் ஏங்கியது.
அந்த ஏக்கத்தை உணர்ந்தார் சிவலோக நாதர். அவர் தன் வாகனமான நந்தியைப் பார்த்து, `சற்றே விலகியிரும் பிள்ளாய்! நம் சன்னிதானம் மறைக்குதாம்' என்று கூறினார்.
இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட நந்தியும் நந்தன் தரிசனம் செய்ய வசதியாகச் சற்றே விலகி அமர்ந்தது. இந்தச் சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நந்தன் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் நந்தன் சிவனைப் பார்க்க ஏங்கியதை அழகிய கீர்த்தனையாகப் பாடியுள்ளார்.
`வழிமறைத்திருக்குதே...மலைபோலே ஒரு
மாடு படுத்திருக்குதே...
தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்
கோவில்வர மாட்டேனே ஐயே...
ஓரடி விலகினால் போதும் இங்கே நின்று
உற்றுப் பார்க்கச் சற்றே விலகாதோ மாடு...'
திருப்புன்கூர் ஆலயத்தில் சிவ சன்னிதியின் முன் சிறிது விலகி அமர்ந்திருக்கும் நந்தியை இப்போதும் தரிசிக்கலாம்.
வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம். எல்லா ஆலயங்களிலும் நந்தி அமர்ந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் திருவல்லம் ஆலய நந்தி இறைவனுக்குப் புறமுதுகு காட்டியவாறு நின்ற நிலையில் உள்ளது.
ஒருமுறை இறைவன்மேல் மிகுந்த பக்தி கொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவர், சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வந்தபோது அவரை ஓர் அரக்கன் வழிமறித்துப் பெரும் தொல்லை கொடுத்தான்.
இது பொறுக்காத அர்ச்சகர் வருத்தத்தோடு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் நந்திக்குக் கண்ஜாடை காட்டினார். நந்திதேவர் உடனடியாக அசுரனை அடித்துத் துரத்தினார்.
அவன் மறுபடி வருகிறானா எனக் கண்காணிக்கவே நந்தி அந்த ஆலயத்தில் இப்போதும் கூட இறைவனுக்குப் புறமுதுகு காட்டி நிற்பதாகக் கூறப்படுகிறது.
விருத்தாசலத்திற்கு அருகே உள்ளது பெண்ணாடம் என்ற அழகிய சிற்றூர். இங்குள்ள கோவிலில் கொழுந்தீசராக சிவ பெருமான் காட்சி தருகிறார்.
ஒருமுறை பெண்ணாடத்தில் பெருமழை பிடித்துக் கொண்டது. ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து பெண்ணாடம் தீவுபோல் ஆகியது.
மக்கள் எங்கும் செல்ல இயலாமல் வெள்ளப் பெருக்கால் சிறைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஊர்த் தெய்வமான கொழுந்தீசரிடம் மனமுருகி வேண்டினார்கள்.
கருணை கொண்ட இறைவன் நந்தி தேவரிடம் கட்டளை இடவே நந்தி வெள்ளம் முழுவதையும் பருகி மக்களைக் காப்பாற்றினார்.
அந்த நாளிலிருந்து நந்தி வெள்ளத்தைப் பருக வசதியாக இக்கோவிலில் வாயிலை நோக்கியபடிதான் வீற்றிருக்கிறார்.
நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார். திருச்சி போன்ற இடங்களில் பெரிய நந்தி சிலைகள் தனியேயும் காணப்படும்.
ஆனால் பெங்களூருவில் பசவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு சிறப்பு. இங்கு நந்தியே மூலவராக இருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நந்தி கோவில், ஒரு குன்றின்மேல் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்தப் பிரதேசத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டதாம். ஒரு மாடு கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தவே விவசாயிகள் அந்த மாட்டைத் தடியால் அடித்துத் தாக்கினர்.
அங்கேயே காலை மடக்கி அமர்ந்த மாடு, அமர்ந்தபடியே கல்லாகி விட்டதாம். அத்துடன் நில்லாமல் அந்தக் கல் சிலை எல்லோரும் பார்த்திருக்கும்போதே கிடுகிடுவென வளரவும் தொடங்கியதாம்.
செய்வதறியாத மக்கள் அச்சத்தோடு சிவனை வணங்கித் துதிக்க, வானில் ஓர் அசரீரி ஒலித்தது. நந்தியின் காலடியில் உள்ள திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் சற்றுநேரம் வைக்குமாறு சொல்லிற்று அசரீரி.
அசரீரியின் கட்டளைப்படிச் செய்யவே சிலையின் வளர்ச்சி நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக மக்கள் அங்கே அந்த நந்திக்குக் கோவில் அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோவிலின் தல வரலாறு.
சைவ சமயத்தில் முதல் குருவாக விளங்குபவர் சிவனின் வாகனமான நந்தி தேவர். சிவாலயங்களில் சிவ சன்னிதியின் முன் சிவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் இவரைச் சித்தர் என்றும் கூறுவதுண்டு.
மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நந்தியின் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே நந்தி வழிபாடு என்பது பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை உடையது.
சிவபெருமான் தாந்திரிக ஞானத்தைத் தம் மனைவியான பார்வதி தேவிக்குக் கற்பித்தார். அன்னை பார்வதியிடமிருந்து அந்த ஞானத்தைப் பெற்றார் நந்தி தேவர். அதைத் தன் சீடர்களுக்கு அவர் கற்பித்தார்.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், திருமூலர், வியாக்ர பாதர், பதஞ்சலி ஆகியோரெல்லாம் நந்தி தேவரின் சீடர்கள். அந்தச் சீடர்கள் குருவின் கட்டளைப்படி தாந்திரிக ஞானத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் சென்று பரப்பினார்கள்.
பிரதோஷ காலங்களில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் நந்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசித்தால் பக்தர்களின் தோஷமெல்லாம் விலகி அவர்கள் வாழ்வில் சந்தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
நந்தி சிவலோகத்தின் தலைமைக் காவலர். சிவனைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களைத் தடுக்க நந்திக்கு அதிகாரம் உள்ளது. எனவே அவர் அதிகார நந்தி எனவும் பெயர் பெறுகிறார்.
பார்வையாளர்களைத் தடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆலயங்களைக் காக்கும் அதிகாரமும் நந்தி தேவருக்கே உரியது.
அதனால்தான் திருக்கோவில் மதில் சுவர்களில் நான்கு புறங்களிலும் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் ஆயலத்தில் பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் உள்ளது. தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி தான் அந்த நந்தி வாகனத்தைச் செய்து கொடுத்தவர்.
தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம் போன்ற பல சாஸ்திரங்களைத் தோற்றுவித்தவர் நந்தி தேவர்தான். இவரை நந்திகேசுவரர் என்ற முனிவராகவும் கருதுவதுண்டு.
நடனக்கலையில் விருப்பமுள்ளோரும் இசை பயில்வோரும் நந்திதேவனை வழிபட்டால் கலைகளில் சிறந்தோங்க முடியும்.
நந்திமலை எனப் பெயர்பெற்ற ஒரு மலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நந்தி கோவில் இந்த மலையில் உண்டு.
நந்தி மத்தளம் வாசிப்பதில் கை தேர்ந்தவர். நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ் மீட்ட சிவபெருமான் நடனமாடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் வாகனம் நந்தி என்பது மட்டுமல்ல, சிவனது கொடியில் காட்சி தருபவரும் நந்திதான்.
தஞ்சைப் பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அதில் ஒட்டுவேலை எதுவும் கிடையாது.
ராமாயணத்தில் வரும் அனுமன் நந்திகேஸ்வரரின் அவதாரமே என்ற கருத்தும் உண்டு.
மதுரையில் ஆவணி மூல வீதியில் மாக்காளை என்று சொல்லப்படும் சுதையால் அமைந்த பிரமாண்டமான நந்தி சிலை ஒன்று உண்டு. இத்தகைய நந்தியை சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் தரிசிக்கலாம்.
வாகனமான நந்தி வேறு. வாகனத்தில் அமரும் சிவன் வேறு என நாம் பொதுவாக நினைப்போம். அந்தக் கருத்து அவ்வளவு சரியல்ல.
தானும் நந்தியும் வெவ்வேறல்ல, ஒருவரே என சிவபெருமான் நந்தி புராணத்தில் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறார்.
எனவே நந்தியை வணங்குவது என்பது சிவபெருமானை வணங்குவதே ஆகும்.
நம் முன்னேற்றத்தில் நேரும் தடைகளை யெல்லாம் விலக்கும் நந்திதேவரை வணங்கி நந்தி அருளையும் சிவன் அருளையும் ஒருசேரப் பெறுவோம்.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார்.
அதன்படி புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய கலாசாரத்துறை இணை மந்திரியாக இருந்த அவருக்கு தற்போது சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
- நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.
மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.
வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.
இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.
வன்மீகநாதன் பெயர் எப்படி?
ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.
அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.
சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்
நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.
உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.
இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.
இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.
புற்று மண்ணே அருள் பிரசாதம்
இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.
இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.
ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.
சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.
வளர்ந்து வரும் பெரிய நகரம்
சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.
இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.
தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.
- புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
- சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளுக்கு சாராயம் கடத்தி செல்லப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியமான காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மற்றும் கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு விளைநிலங்கள், ஆற்றோரம் வழியாக மூட்டை கட்டி தலை சுமையாகவும் சாராயம் கடத்தப்படுகிறது.
புதுவையில் இருந்து கடத்தப்படும் சாராயத்தில் கூடுதலாக போதை ஏறவும், சரக்கின் அளவை அதிகரிக்கவும், மெத்தனால் மற்றும் வேதிப் பொருட்களை கலக்கின்றனர். மேலும் ஆர்.எஸ். பவுடர் வாங்கி வந்தும் சாராயம் தயாரிக்கின்றனர்.
பின்னர் அந்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து அதற்கு 'பாண்டி ஐஸ்' என்று அடைமொழி வைத்து விற்பனை செய்கிறார்கள்.
புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
கேனில் விற்கப்படும் சாராயத்திற்கு கோனிமுட்டி என்றும், மதுபாட்டிலில் விற்கப்படும் சாராயத்திற்கு ஷீல்டு என்றும் பெயர் வைத்துள்ளனர்.
சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது. ரூ.30 மற்றும் ரூ.60-க்கு சாராயம் கிடைப்பதால் குடிமகன்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி குடிக்கின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பே கள்ளச்சாராயம் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
மதுபானங்களை விட விலையும் குறைவாக இருப்பதால் குடிமகன்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். வயல் வெளிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 பேரும், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்பட்டிருக்காது.
காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் சாராயம் விற்றனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்றனர்.
- கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
- சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது.
தாம்பரம்:
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் நோக்கி நேற்று 2 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தது.
அந்த கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது. லாரியில் இருந்து புகை வந்ததால் டிரைவர் உடனடியாக நிறுத்திவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள சித்த ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 2 கன்டெய்னர் லாரிகளும் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் பணத்துடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரிகளுக்கு தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம், குரோம்பேட்டை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பழுது சரி செய்யப்படாததால் பழுதான கன்டெய்னர் லாரியை மட்டும் ராட்சத கிரேன் வாகனம் உதவியுடன் கட்டி இழுத்து மீண்டும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரூ.535 கோடி பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்