என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
- அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடையில் கேமராவைபொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் கூடிய ரசீது மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.
அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.
- தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
சென்னை:
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், 7-வது மெயின்ரோடு, 1-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சோபா துரைராஜன். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இவரும் கணவருடன் அமெரிக்காவிலேயே வாழ்கிறார். இவரது சென்னை வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே டிசம்பர் 9-ந்தேதி அன்று அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்து 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது.
மீண்டும் 2-வது முறையாக கடந்த ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.
3-வது முறையாகவும் அந்த வீட்டில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டார்கள். இதற்காக கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஷ்பாபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ராமர், வள்ளி, தெய்வானை இணைந்த முருகன், நந்தி உள்ளிட்ட 14 பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டது.
பிரபல சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரிடம் இருந்து, கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து மேற்கண்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும், போலீஸ் விசாரணையில், சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட வீடு தரைதளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் என்ற 3 பகுதிகளை கொண்டது. அந்த வீட்டில் சோபா துரைராஜனின் வயது முதிர்ந்த 4 உறவுப்பெண்கள் மட்டும் தற்போது வசிப்பதாகவும், திரும்பிய திசை எல்லாம், அந்த வீட்டில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்களாக காட்சி அளிப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.
இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோபா துரைராஜன் வீட்டில் இதுவரை கைப்பற்றிய சிலைகள் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத கலைப்பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
- தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது.
பெங்களூரு:
சென்னை - பெங்களூரு இடையே மாடி ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று இந்த ரெயில் (வண்டி எண் 22625) நேற்று காலை 7.25 மணி அளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அந்த ரெயில் காலை 11.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் குப்பத்தை தாண்டி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை அருகே பிசநத்தம் ரெயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதனால் அந்த ரெயில் பெட்டி குலுங்கியது. இதனை சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
இதுபற்றி உடனடியாக பெங்களூருவில் உள்ள மூத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு ரெயிலுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைதொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு-சென்னை சென்டிரல் மாடி ரெயில் (வண்டிஎண் 22626) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது.
பெங்களூரு-சென்னை சென்டிரல் பிருந்தாவன் அதிவிரைவு ரெயில் (12640) மதியம் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல வேறு சில ரெயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
- சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
- உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.
பெங்களூரு:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.
அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.
சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.
பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
- சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் பெட்டிகள் திடீரென கழன்றதால் பரபரப்பு நிலவியது.
- காலை முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னை:
சைதாப்பேட்டை அருகே இன்று அதிகாலை புறநகர் மின்சார ரெயிலின் 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை 5.30 மணி முதல் புறநகர் மின்சார ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு பின் விபத்துக்குள்ளான ரெயில் மீட்கப்பட்டு ரெயில் இயக்கம் சீரானது. கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை இனி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரெயில் சேவையும் சீரானது.
- பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது.
- தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே நாங்கள் பல குற்றச்சாட்டுக்கள் வைத்திருந்தோம். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு பாராட்டுகிறோம்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை.
தொழில்துறை பொறுப்பை டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கி உள்ளனர். அது என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த குடும்பம் தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கி உள்ளார்கள். என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
டி.ஆர்.பாலு தனது நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது, பாராளுமன்ற அவை குறிப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது.
நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்?
பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவரது தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் முதல்வரையும் தான் குற்றம்சாட்டி உள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போடுங்கள்.
விவகாரம் கோர்ட்டுக்கு வரட்டும். ஒருமணிநேரம் ஓடும் அந்த ஆடியோவை கோர்ட்டு ஆய்வு செய்யட்டும். அதில் இருக்கும் பல தகவல்கள் வெளிவரட்டும். தவறு செய்தவர்களை பற்றி தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். அவரை மட்டுமே பகடை காயாக மாற்றிவிடக்கூடாது என்பதால்தான் 3 மற்றும் 4-வது பகுதியை நான் இன்னும் வெளியிடவில்லை.
என் மீது இதுவரை தி.மு.க.வை சார்ந்தவர்களும், அவர்களது நண்பர்களும் ரூ.1,461 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை யார் மீதும் இவ்வளவு பணம் கேட்டு வழக்கு போட்டதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. வழக்கை கோர்ட்டில் சந்திக்கிறேன்.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கலைஞர், பா.ஜனதா எங்கு இருக்கிறது? என்று கேட்டிருந்தார். இன்று ரூ.1,461 கோடி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம். உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
இந்த வழக்குகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்று இருந்தது. இனி வெளியிடப்படும் பட்டியலில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேர் பெயர் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
- தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.
பொன்னேரி:
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது வழக்கம். ரெயிலில் ரூட்டு தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கல்லூரி மாணவர்களிடையே மோதலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களது மோதல் நீடித்தது.
இதையடுத்து பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரெயிலை நிறுத்தினர்.
உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரெயிலில் இருந்து கிழே குதித்தனர். அப்போதும் அவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஓடும் மின்சார ரெயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் காரணமாக மின்சார ரெயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மாணவனின் தாய் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் மனு அளித்து உள்ளார்.
ரெயிலில் கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க ரெயில்வே போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கார் பட்டணம் சக்தி நகர் பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் இருந்த வீரன் நைனாம்பாள் தம்பதியரின் குடிசை வீட்டுக்குள் திடீரென்று புகுந்தது.
- வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது.
அந்தக் கார் பட்டணம் சக்தி நகர் பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் இருந்த வீரன் நைனாம்பாள் தம்பதியரின் குடிசை வீட்டுக்குள் திடீரென்று புகுந்தது. இதனால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்தில் காரை ஓட்டி வந்த கிஷோர் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்