ஆன்மிக களஞ்சியம்

சோமநாதபுரம்: சோமநாதர் கோவில்

Published On 2023-05-15 11:09 GMT   |   Update On 2023-05-15 11:09 GMT
  • பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது.
  • துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருஷோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார்.

சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், மேற்கே அரேபியன் கடலும், வடக்கே கச்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடா எல்லைகளாக, அமைந்துள்ள சௌராட்டிர தேசத்தில், 'வேராவல்' எனும் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013 அன்று ஜீனகாட் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து, 15-08-2013இல் புதிதாக அமைக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் எனும் மாவட்டத்தில், பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

புராணக் கதைகள்: பிரபாசப்பட்டின கடற்கரையில் சோமநாதர் கோவில்

சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியிடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்த்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி "புருஷோத்தமன்" என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் செய்து சோமநாதரை வழிபட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

பெயர்க் காரணம்: சோமநாதர் கோவில், நுழைவாயில்

சந்திரனே முதன்முதலில் இங்கு சிவலிங்கத்திற்கு பொற்கோவில் கட்டி வருடம் முழுவதும் அமிர்தத்தை பொழிந்து திருமுழுக்கு வழிபாடு செய்த காரணத்தால் இந்த ஜோதிர்லிங்கத்திற்கு 'சோமநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. எனவே இவ்விடத்தை சோமநாதபுரம் என்றும் அழைப்பர். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணர் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்கள் என்று கூறப்படுகின்றது.

சோமநாதபுர ஆலயத்தை இடித்தவர்கள் விவரம்

உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.

முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனரின் கட்டளைப்படி சோமநாதபுரம் கோயிலை, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னன், இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோவில் இடிக்கப்பட்டது.

கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான கலீபாவின் அனுமதியுடன், இசுலாமிய கொள்கைக்கு எதிராக உள்ள உருவ வழிபாட்டு இடங்களை அழிக்கு பொருட்டு சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.

24.02.1296ல் குஜராத்தை ஆண்ட இராசாகரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான், குஜராத் பகுதி மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் 'காம்பத்' அரசை ஆண்ட இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் (திருநங்கை) தன்னுடன் தில்லிக்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த திருநங்கைக்கு, மாலிக் கபூர் என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி. கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் அப்பகுதியில் இருந்த கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1375ல் ஜினாகாட் சுல்தான், முதலாம் முசாபர்ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.

கி.பி. 1451ல் ஜினாகாட் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.

கி.பி. 1701ல் மொகலாயர் மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.

சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி சீரமைத்தல்

முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீ புர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்.

மூன்றாம் முறையாக கி.பி. 815 -இல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்.

நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் (ஜீனாகாட்டு) நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.

ஐந்தாம் முறையாக கி.பி 1308 -இல் சூதசமாவம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் என்பவர் 1326-1351 -க்குள் கோயிலில் லிங்கத்தை பிரதிட்டை செய்தார்.

ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோவில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.

ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்ட துவங்கினர். முதலில் சோமநாதபுரம் கோவில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் புனரமைக்க தொடங்கும் விழாவை (பூமி பூஜை விழா) நடத்தி, மே மாதம், 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், கோவில் அத்திவாரக்கல் நடப்படும் விழா நடைப்பெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயத்தை இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் ஜனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோவிலின் கட்டிடக் கலை அம்சங்கள்

சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோவில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News