23 ஆலய பெருமாள்களும் ஒரே இடத்தில் காட்சி தரும் கருடசேவை
- முதலில் இங்கு 12 கருட சேவை தான் நடந்தது. பின்னாளில் 23 கருட சேவையாக அதிகரித்துள்ளது.
- வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.
தஞ்சையில் அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப்போன மக்களுக்காக, திருமாலை நினைத்து பராசர முனிவர் தவம் இருந்தார்.
அவருக்கு காட்சி தந்த நாராயணர், அரக்கர்களை அழித்தார்.
தஞ்சகாரனை அழித்த ஸ்ரீநரசிம்மர் தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீர நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ளார்.
தண்டகாசுரனை வராக மூர்த்தமாக வந்து அழித்தவர் தஞ்சை மாமணிக் கோவிலான ஸ்ரீநீலமேகப் பெருமாள் திருக்கோவிலில் உள்ளார்.
அருகிலேயே ஸ்ரீமணிகுன்றப் பெருமாள் கோவிலும் உள்ளது.
அருகருகே அமைந்துள்ள இந்த மூன்று ஆலயங்களையும் சேர்த்து, ஒரே திவ்விய சேத்திரமாகப் போற்றுகின்றனர்.
இங்கே நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, தஞ்சை மாவட்ட மக்கள் ஒன்று திரள்வார்கள்.
வைகாசியின் பூச நட்சத்திர நாளில், கொடியேற்றத்துடன் துவங்குகிற பிரம்மோற்சவ விழா, வம்புலாஞ்சோலை அமிர்த புஷ்கரணியில், தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும்.
பிரம்மோற்சவம் முடிந்த ஒரே வாரத்தில் இங்கே கருடசேவை நடைபெறும்.
அப்போது, அருகில் உள்ள ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள், கரந்தை ஸ்ரீகிருஷ்ணர், வேலூர் ஸ்ரீவரதராஜர், படித்துறை ஸ்ரீவெங்கடேச பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 23 ஆலயங்களின் பெருமாளும் ஒரே இடத்தில் அணிவகுத்து கருடசேவையில் காட்சி தருவார்கள்.
இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முதலில் இங்கு 12 கருட சேவை தான் நடந்தது. பின்னாளில் 23 கருட சேவையாக அதிகரித்துள்ளது.
வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.