ஆன்மிக களஞ்சியம்

ஆலயங்களில் தைப்பூச வழிபாடு

Published On 2023-10-26 12:06 GMT   |   Update On 2023-10-26 12:06 GMT
  • வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள்.
  • இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது.

1. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை.

வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது.

அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

2. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம்.

இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள்.

அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார்.

அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

3. இலங்கையில் நல்லூர் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள்.

வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள்.

இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

4. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம்.

இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார்.

இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள்.

இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5.திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம்.

எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

6. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது.

வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம்.

இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

7. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான்.

இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

8. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும்.

இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர்.

பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது.

'பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது' என்பது பழமொழி.

9.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே.

சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர்.

வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

10. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர்.

இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத்துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதிவழி ஆலயம் வருவார்கள்.

இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள்.

ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.

Tags:    

Similar News