ஆன்மிக களஞ்சியம்

அருள்மிகு விஜய விநாயகர்

Published On 2023-05-23 12:05 GMT   |   Update On 2023-05-23 12:05 GMT
  • ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
  • காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபிதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம், சந்தன காப்பு மாலை ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி அன்று நடைபெற்று வருகிறது.

பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும் தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.

இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாசலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.

அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும். இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில் குடை மற்றும் வெண்சாமரங்களுடன் தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ பவனி வருவர்.

பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர் இவ்அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.

இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இரவு நான்கு கால பூஜைகளும் வில்வத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.

அருள்மிகு அபிதகுசாம்பாள் சன்னதி

இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.

அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.

காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றை பெறலாம்.

Tags:    

Similar News