நவராத்திரியில் தாம்பூலம் அளிப்பது ஏன்?
- கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
- நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் தேவியை பூஜை செய்து வழிபடும் நவராத்திரி கொண்டாட்டங்கள் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் தொடங்கியது.
வட மாநிலங்களில் துர்கா பூஜையாகவும், தமிழகத்தில் சரஸ்வதி பூஜையாகவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
நவராத்திரியின் போது, வீரத்தை அளிக்கும் பார்வதியையும், தனத்தை அளிக்கும் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்கள் கல்வியை வழங்கும் சரஸ்வதியையும் விரதமிருந்து வழிபடுவதே இந்த பண்டிகையின் சிறப்பாகும்.
கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.
துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை தொடங்கியதையொட்டி, தமிழகத்தில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்கினர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள்.
நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருகிறார்கள்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் உள்ள பிரஜேஸ்வரி கோயிலில் நடைபெற்ற நவராத்திரி தொடக்கவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.