ஆன்மிக களஞ்சியம்

தலைப்பாகை அணியும் அகத்தியர்

Published On 2023-06-26 10:13 GMT   |   Update On 2023-06-26 10:13 GMT
  • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
  • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

காவிரி நீர் அபிஷேகம்!

நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

சூரிய பூஜை காணும் முருகன்

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

பூக்கள் நிரப்பும் விழா

சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

Tags:    

Similar News