ஆன்மிக களஞ்சியம்

அமாவாசை வழிபாடு

Published On 2023-07-27 09:45 GMT   |   Update On 2023-07-27 09:45 GMT
  • முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
  • துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

புண்ணிய நதியில் நீராடல்

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.

அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெற முடியும்.

திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதா நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும் ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.

பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால் வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது, அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.

சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு செல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனித வாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது, இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.

கொடிய பாவங்கள் நீங்கும்

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.

அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நாமதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.

பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையாளம்.

Tags:    

Similar News