ஆன்மிக களஞ்சியம்

ராமனுக்கு நிகரான புகழ் ஆஞ்சநேயரும் உண்டு

Published On 2023-07-26 06:30 GMT   |   Update On 2023-07-26 06:30 GMT
  • சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.
  • வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும்.

தசரத மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். ராம சகோதரர்கள் பிறந்தனர்.

இதன் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். அவளும் கர்ப்பவதியாகி ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.

இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.

ராமதூதர் அனுமனுக்கு என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்! ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார்.

சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.

திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது.

நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.

ராமதாசர், ராமாயணம் எழுதிக் கொண்டிருந்த போது தனது சீடர்களுக்கு, அதைப் படித்துக் காட்டுவார். அப்போது யாரும் அறியாமல் அனுமன் அங்கு வந்து அமருவார். ஓரு முறை அசோகவனத்தில் வெள்ளை மலர்களை அனுமன் பார்த்ததாக ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அனுமன், ""நான் வெள்ளை மலர்களை பார்க்கவில்லை, சிவப்பு மலர்களை தான் பார்த்தேன்'' என்றார்.

ராமதாசர் அதை மறுத்தார். ""பார்த்த நானே சொல்லும் போது திருத்திக் கொள்ள வேண்டியது தானே'' என அனுமான் வாதிட, வழக்கு ராமனிடம் சென்றது. அவர், ""ஆஞ்சநேயா! நீ பார்த்து வெள்ளை மலர்களைத் தான்'' என தீர்ப்பளித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொன்னார்.

""அசோகவனத்தில் நீ இருந்த போது, உனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. அதனால் அந்த மலர்களும் சிவப்பாக தோன்றின. நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும்' என்றார்.

சஞ்சீவி மலை

இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன்.

துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!

விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.

ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

Tags:    

Similar News