மணக்குள விநாயகருக்கு பிரியமான அருகம்புல்
- அருகம்புல்லும், தாமரையும்மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
- ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர்.
மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல்லும், தாமரை மலருமாகும். இவற்றை விற்பனை செய்ய கோவில் முன்பு பல கடைகள் உள்ளன. மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் பற்றி ஒரு கதை உள்ளது.
இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன்.
தேவர்கள் பயந்து அலறியபடி ஸ்ரீவிநாயகப் பெருமானிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.
விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடய திருமேனி பெரும் வெப்பத்தால் தகித்தது.
ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு எழுந்த அந்த உஷ்ணத்தை போக்க சந்திரன் தம் ஒளிக்கதிர்களால் குளிர்ச்சியை ஏற்படுத்தினார்.
சித்தியும், புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார்.
வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பலவிதமாக பணிவிடைகள் செய்தனர். ஆனாலும் விநாயகர் உடலில் ஏற்பட்ட வெப்பம் அகலவில்லை.
கடைசியாக மகிரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக படல் படலாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.
பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சித்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு பிரியமானது. அவர் அணியும் மலர்களில் முதலிடமும் பெற்றது.
பல பிறவிகளை கடந்த ஆத்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசுவயிற்றுக்குள் சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இதற்கு அருகம்புல் காரணமாக இருப்பதால் அது விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.
குண்டலின் யோகத்தில் அருகு
ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது `அருகு' இந்த தன்மையால்தான் அது `அருகு' என்றே அழைக்கப்பட்டது.
அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சஹஸ்ராம் என்ற இடத்தில் சென்று முழு நிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி.
ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் களைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது.
விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேறச் செய்வார் என்பது யோக நூல்களின் கருத்து. எனவே மணக்குள விநாயகரை தரிசிக்க செல்லும்போது மறக்காமல் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள்.
கஜபூஜை
மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானையை வைத்து பக்தர்கள் அடிக்கடி கஜபூஜை நடத்துக்கிறார்கள். கஜபூஜை செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.
இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது. லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்லக்கூடிய ஒரு நிலை இன்று உள்ளது. மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயலில் முன் லட்சுமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும். பல குழந்தைகள் லட்சுமியை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.