ஆன்மிக களஞ்சியம்

ஆனைக்கு அருளிய ஆதி மூலம்!

Published On 2023-06-27 10:52 GMT   |   Update On 2023-06-27 10:52 GMT
  • முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம்.
  • யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார்.

திருமாலுக்கு மலர்கள் சமர்ப்பிப்பதைத் திருத்தொண்டாகக் கொண்டிருந்தது கஜேந்திரன் என்ற யானை. அந்த யானை ஓர் நாள் திருமாலுக்காக குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்தது.

அப்போது அதன் காலை ஓர் முதலை கவ்விப் பிடித்து கொண்டது. அதன்பிடியில் இருந்து தப்பிக்க யானை செய்த கடும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம். இந்த யானையின் வேதனையைப் புரிந்து கொண்ட மற்ற யானைகளும் கஜேந்திரனை காக்க முடியாமல் குளத்தின் கரையில் கூடி, கதறிப் பிளிறியபடி இருந்தன. கஜேந்திரன் தன் நிலையை உணர்ந்து தன்னைக் காப்பாற்றக் கூடியவர் திருமாலே என்று அறிந்து கொண்டது. உடனே ஆதிமூலமே என்று கூவி அழைத்தது.

யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார். கருடனை கூட அழைக்காமல் மின்னல் வேகத்தில் புறப்பட்ட அவர் தான், போய் சேர்வதற்குள் கஜேந்திர யானைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சக்ராயுதத்தை ஏவி விட்டார். அந்த சக்ராயுதம் முதலை தலையை அறுத்தது. இதனால் யானை தப்பியது.

இப்படி யானைக்கு மின்னல் வேகத்தில் அருளிய ஆதிமூலத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கருட சேவையில் காட்சி அளிக்கிறார்.

Tags:    

Similar News