- தமிழ்நாட்டில் பல விநாயகர் தலங்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
- காணிப்பாக்கம் விநாயகர் மிக, மிக சக்தி வாய்ந்தவர்.
இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ளனர். அந்த கடவுளர்களுக்கு ஏற்ப ஆலயங்களும், வழிபாடு முறைகளும் இருக்கின்றன.
ஆனால் எல்லா ஆலயங்களிலும் இடம் பெற்றிருப்பவர் விநாயகர் மட்டுமே. அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும் சரி, விநாயகர் நிச்சயம் நுழைவாயிலேயே அமர்ந்திருப்பார்.
அவரிடம் ஆஜராகி வணக்கம் போட்ட பிறகே ஆலயத்தில் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். எனவேதான் விநாயகரை 'முழு முதல் கடவுள்' என்றும் `எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்' என்றும் போற்றுகிறோம்.
விநாயகரை எல்லாருக்குமே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம், நாம் தொடங்கும் எந்த ஒரு செயலையும், இடையூறுகள், எதிர்ப்புகளைப் போக்கி வெற்றி பெற செய்வார்.
எனவே தான் மக்கள், எந்த ஒரு செயலை தொடங்கும் போது விநாயகரை வழிபட தவறுவதில்லை.
கல்வி, வீடுகட்டுதல், கடை ஆரம்பித்தல், விவசாயம் செய்தல், திருமணம், சீமந்தம், புனித நீராட்டு.. இப்படி எல்லா மங்கல நிகழ்ச்சிகளிலும் விநாயகரைத் தான் முதலில் வழிபடுவது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாக உள்ளது.
விநாயகர் வழிபாட்டில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், அவரை நாம் மனதார அழைத்தால் போதும், அவர் மகிழ்ச்சி அடைந்து, துள்ளி குதித்து ஓடி வந்து உங்களுக்கு உதவிகள் செய்வார். நீங்கள் கேட்டதையும் தருவார். கேட்காததையும் தருவார்.
மற்ற வழிபாடுகளுக்கு செய்ய வேண்டியது போல விநாயகரை வணங்கவும், வழிபடவும் அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு கைப்பிடி அருகம்புல் சார்த்தி, தோப்பு கரணம் போட்டு விட்டாலே போதும், அவர் அருள் உங்களுக்கு நிரம்ப கிடைக்கும்.
மற்ற கடவுளர்களிடம் மக்களுக்கு பயபக்தி இருக்கும். ஆனால் விநாயகரிடம் பயபக்தி மட்டுமின்றி, நம் குடும்பத்தில் ஒருவர் போல பாசமும் ஏற்பட்டு விடும். அதற்கு காரணம், விநாயகர் ஒருவர் தான் நம் இடத்துக்கு ஏற்பவும், நம் செயல்களுக்கு ஏற்பவும், அந்தந்த பெயர்களுடன் ரொம்ப எளிமையாக மாறி அமர்ந்து அருள் பாலிப்பார்.
அவருக்கு இந்த பெயர் தான் சூட்ட வேண்டும் என்றெல்லாம் வரைமுறையே கிடையாது. மலை உச்சியில் இருந்தால் உச்சிப்பிள்ளையார், முச்சந்தியில் இருந்தால் முச்சந்தி விநாயகர், மரத்தடியில் இருந்தால் மரத்தடி விநாயகர் என்று பெயர் அமைந்து விடும்.
மார்க்கெட் விநாயகர், பாஸ்போர்ட் விநாயகர், நாட்டிய விநாயகர், கூப்பிடு விநாயகர், கிரிக்கெட் விநாயகர், ஸ்னடல் விநாயகர், வேடிக்கை விநாயகர், தேன் விநாயகர், பொல்லா பிள்ளையார், தூது விநாயகர், விகட விநாயகர், சக்கர விநாயகர், டிரவுசர் விநாயகர், மொட்டை விநாயகர், குத்து விநாயகர், கர்ப்ப விநாயகர், பத்து தலை விநாயகர், செல்வ விநாயகர், சக்தி விநாயகர், நவசக்தி விநாயகர், வினை தீர்த்த விநாயகர், வீர விநாயகர், ஆனந்த் விநாயகர், கொள்ளை விநாயகர், சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், அச்சம் தீர்த்த விநாயகர், வழித்துணை விநாயகர், சாவி விநாயகர், பஞ்சமூக விநாயகர்..... இப்படி விநாயகரின் விதம் விதமான பெயர்களை சொல்லி கொண்டே போகலாம்.
தமிழ்நாடு முழுவதும் இப்படி விநாயகர் பல நூறு பெயர்களில் பல விதங்களில் அருள் பாலித்து கொண்டிருக்கிறார். உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒரே கடவுளுக்கு இப்படி பல ஆயிரம் பெயர்கள் இல்லை.
நாம் மட்டுமே அதுவும் விநாயகருக்கு மட்டுமே இப்படி பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தோம். பெயர்கள் பல ரூபத்தில் இருந்தாலும் விநாயகர் ஒருவரே.
நாம் அவர் மீது கொண்டுள்ள பாசத்தால் நம் தேவைக்கு ஏற்ப உருவத்தையும் பெயரையும் மாற்றிக்கொள்கிறோம். கொஞ்சம் மஞ்சளையோ, அல்லது சானியையோ உருட்டி பிடித்து வைத்து விட்டால், அது தான் நமக்கு விநாயகர். இவ்வளவு விரைவாக,
எளிமையாக வேறு எந்த ஒரு கடவுளையும் வணங்க முடியாது. இத்தகைய விநாயகருக்கு உலகம் முழுவதும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாட்டில் நிறைய விநாயகர் கோவில்கள் இருக்கின்றன.
விநாயகருக்கு பெரிய கோவில்கள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மரத்தடி போதும். சூப்பராக அமர்ந்து நமக்கு அருள் பாலிப்பார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பல விநாயகர் தலங்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. தமிழகத்தில் விநாயகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளன.
அதே போல நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பல புகழ் பெற்ற விநாயகர் கோவில்கள் உள்ளன. அவற்றுள் முதன்மை தலமாக காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ஆலயம் உருவாகியுள்ளது.
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் இந்த தலம் உள்ளது.
காணிப்பாக்கம் விநாயகர் மிக, மிக சக்தி வாய்ந்தவர். அவரை நம்பி யார் ஒருவர் கை தொழுகிறார்களோ... நிச்சயமாக அவர்கள் கை எல்லா துறைகளிலும் ஓங்கும்.
இதை ஒவ்வொரு நாளும் காணிப்பாக்கம் விநாயகர் நிருபித்துக் கொண்டிருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காணிப்பாக்கம் விநாயகர் பற்றியும், அவரது சிறப்புகள் பற்றியும் மாலைமலர் இந்த தொகுப்பு உங்களுக்குத் தருகிறது. படியுங்கள்.... காணிப்பாக்கம் விநாயகர் உங்கள் கவலைகளைப் போக்கி வெற்றிகளை அருள்வார்.