- தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
- சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.
இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.
இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.
தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.
யம தர்ப்பணம்
தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.
மாலை தீபம் ஏற்றுங்கள்
தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
மகாலட்சுமி பூஜை
சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.