ஆன்மிக களஞ்சியம்

கார்த்திகை தீபம்

Published On 2023-05-23 10:16 GMT   |   Update On 2023-05-23 10:16 GMT
  • கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு.
  • வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

கார்த்திகை தீப திருவிழா மிகப் பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை அகநானூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களில் நக்கீரர், அவ்வையார் போன்றோரின் பாடல்களால் அறிய முடிகிறது. சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானின் திருமயிலைத் திருப்பதிகத்திலும் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

இவ்விழாவை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று தொடங்கி தினமும் வீட்டு வாசலில் வரிசையாக விளக்கேற்றி வைத்து தமிழ்நாடு முழுவதம் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு நடத்துபவர்களும் உண்டு.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும் விளக்கு என்றாலே அதைத் தீபலட்சுமியின் அம்சமாகவே கருதி மங்களங்கள் பொங்கச் செய்யும் மாபெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். விளக்கின் ஜோதியில் நெருப்பு சிவபெருமான்; நெருப்பின் வெப்பம் அம்பிகை; ஒளி முருகன்; ஜோதி விஷ்ணுவும் சூரியனும் என்பது ஐதீகம்.

இந்த தீபத் திருவிழா தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மற்ற எந்த தலத்திலும் இல்லாதபடி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மண் அகல் விளக்கை ஏற்றினால் வீரிய விருத்தி மிகும். இரும்பு அகல் கெட்ட சகவாசங்களை அகற்றும். வெண்கல விளக்கு பாபங்களைப் போக்கும். பித்தளை விளக்கிலும் தீபமேற்றலாம். எவர்சில்வர் விளக்கு கூடாது. வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

Tags:    

Similar News